ஜப்பான்- ஒரு கீற்றோவியம்-தமிழ்செல்வன் இரத்தினம்

ஜப்பான் ஒரு கீற்றோவியம் வாங்க

சுற்றிலும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவுகளின் நாடு தான் ஜப்பான். உதய சூரியன் உதயமாகும் நாடு. ஜப்பான் நாட்டுக் கொடி இதனை பிரதிபலிக்கும். ஜப்பான் என்றால் எல்லோருக்கும் நினைவில் வருவது கார் நிறுவனங்களின் பெயர்கள். நம்மை அறியாமலே நமக்கு குறைந்தது ஒரு பத்து இருபது ஜப்பானிய மொழிப் பெயர்கள் தெரியும். இந்தியாவை விட பரப்பளவில் மிகச் சிறிய நாடு தான் ஜப்பான். ஆனால் அதன் கட்டமைப்பு என்பது இன்று அனைவரும் வியக்கும் வண்ணம் இருக்கிறது. மொழி, பண்பாடு, கலை, அறிவியல், அரசியல், போர்த்திறம், திரைத்துறை, கட்டிடக் கலை, மென்பொருள் நிறுவனங்கள் என அமெரிக்காவிற்கு நிகராக தன்னை உருமாற்றிக் கொண்டுள்ளது நவீன ஜப்பான். அறிவியல் தொழில்நுட்பம் தந்த வாய்ப்பை ஜப்பான் முழுமையா அந்நாட்டு மக்களின் ஒத்துழைப்போடு பயன்படுத்திக் கொண்டது என்றே சொல்லவேண்டும்.

கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளுக்கு மேலாக ஜப்பானிய மொழியை பயின்று வருகிறேன். அதனால் தான் என்னவோ இந்த புத்தகத்தை பார்த்த உடனே வாங்கிவிட்டேன். ஜெயமோகன் அவர்கள் எழுதியதில் நான் படிக்கும் முதல் புத்தகம் கூட. பயணங்கள் என்பது சென்றோம் வந்தோம் என்றில்லாமல் நம் மனதிற்கு நெருக்கமாக இருக்க வேண்டும். சென்று பார்த்த இடங்கள் திருப்பி வந்த பின்பும் கனவிலும் நினைவிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். கல்லூரி பருவம் தாண்டி ஒரு முறை அங்கு சென்ற போது இது போன்ற ஒரு அனுபவத்தை நான் எழுதியது உண்டு. இவ்வாறு சென்ற பயணத்தை மீள் பார்வையிடுவது போன்றது தான் பயணக் கட்டுரைகள். நாமும் ஆசிரியர் உடன் சேர்ந்தே பயணிப்பது போன்ற உணர்வினை இந்தக் கட்டுரைகள் நமக்குத் தரும்.

ஏழு நாள் ஜப்பானில் அவர் சென்ற இடங்கள் அதன் தனித்துவமான அடையாளங்கள், ஜப்பானிய பண்பாட்டின் தனித்துவமான தொல் எச்சங்கள், இந்தோ-ஜப்பானிய ஒற்றுமை வேற்றுமை என பல கோணங்களில் ஜப்பானின் சுற்றுலாத் தலங்கள் தொடர்பான தரவுகளை தருகிறார் ஜெயமோகன் அவர்கள்.

ஷின்கான்சென் புல்லட் ரயில் பார்த்து வியப்பது முதல் அங்குள்ள பாலங்கள் கட்டப்பட்ட விதம் பற்றியும் விரிவாக எழுதி உள்ளார். பெரும்பாலும் ஆலயங்கள் தான் ஜப்பானில் தற்போது சுற்றுலாத் தலங்கள். அதில் குறிப்பிடத்தக்க ஆலயம் இட்சுகுஷிமா (itsukushima). கடலை ஒட்டிய இந்த ஆலயத்தின் முகப்பே வியக்கத்தக்க அளவில் உள்ளது. மற்றுமொன்று ஹோகொகுஜி (Hokokuji) ஆலயம், அதன் மூங்கில் தோட்டம் குறிப்பாக இங்கு தரப்படும் பசுந்தேநீர் (Greentea) என வித்தியாசமான அனுபவங்களை பகிர்கிறார் ஆசிரியர்.

ஜப்பானின் தனித்துவமான ஒன்று பௌத்த ஜென் தத்துவங்கள். பௌத்த சமயம் ஜப்பானில் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. புத்தரின் சிலைகள் ஜப்பானில் எல்லா இடங்களிலும் காணலாம். ஷிண்டோ மதம் பல்வேறு காலகட்டங்களில் எப்படி ஜென் தத்துவங்களை உள்ளடக்கி தன்னை உருமற்றிக் கொண்டது என்பதை ஓவ்வொரு இடங்களிலும் குறிப்பிட்டு உள்ளார் ஜெயமோகன் அவர்கள். புத்தர் கடவுள் இல்லை. அவர் ஒரு விடுதலை பெற்ற மனிதர். பெளத்தர்கள் புத்தரை வழிபடுவதில்லை, மரியாதை செலுத்துகின்றார்கள் அல்லது நினைவு கொள்கின்றார்கள் என்பதே உண்மை. புத்தர் இந்தியா சீனா ஜப்பான் மலேசியா சிங்கப்பூர் இலங்கை போன்ற கிழக்கு ஆசிய நாடுகள் அனைத்திலும் போற்றப்படுகிறார் அவர் பிறந்த இடம் நேபாளம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானில் இன்னொரு தனித்துவமான ஒன்று அதன் உணவு வகைகள். பெரும்பாலும் கடல் உணவகங்கள் தான் அங்கு அதிகம். ஷோபா (fried noodles) ராமென் (soup noodles), சுஷி (Raw fish dishes), உதோன் (noodles), தெம்புறா (Tempura) போன்ற உணவுகள் பற்றியும் குறிப்பிட மறக்கவில்லை. மேலும் சீனா உணவுகள் சுவையிலிருந்து இவை எவ்வாறு வேறுபட்டு உள்ளது என்றும் கூறியுள்ளார்.

சாமுராய் வீரர்கள் வாழ்க்கை, மூங்கில் ஓவியங்கள், ஜப்பானிய தோட்டக் கலை, அதன் மூன்று படிநிலைகள், மூங்கில்கள் கொண்டு வரையப்படும் கீற்றோவியங்கள், பற்றியும் அது போன்று இந்திய பண்பாட்டில் பேணப்படும் சில சடங்குகள் சம்பிரதாயங்கள் அவற்றுக்கு உள்ள தொடர்பு பற்றியும் குறிப்பிடுகிறார். உதாரணமாக நம்மூரில் குழந்தைகள் பெற வேண்டி மரத்தில் தொட்டில் கட்டுதல் போல அங்கு Nizo-do சிலைகள் வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது. இறந்த குழந்தைகள் நினைவாகவும், வீட்டில் இருக்கும் குழந்தைகள் நலம் பெற வேண்டியும் இந்த சிலைகள் வைக்கப்படுகிறது. இந்திய கதக்களி போன்றே ஜப்பானில் நோ (Nou) நாடகம் இருக்கிறது என்கிறார்.

ஜப்பானில் இந்தியர்கள் இருவருக்கு நினைவிடம் இருக்கிறது என்ற தகவல் என்னை ஆச்சரியம் அடைய வைத்தது. ஒன்று ஆர். பி. பால் , நீதிபதியாக இருந்த இவர் இந்தியாவில் இருந்து கிழக்கு ஆசிய நாடுகளின் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கும் பொறுப்பு வகித்தவர். இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் படைவீரகள் மீது சுமத்திய குற்றச்சாட்டை ஏற்காது அது தவறு என கம்பீரமாக அதற்கான காரணத்தை விளக்கி அங்குள்ள மக்களின் மனதில் நின்றார். இன்னொருவர் கேரளத்தை சார்ந்த மாதவன் நாயர். நாயர் ஜப்பானில் பொறியியல் மற்றும் மருத்துவம் பயின்றவர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜப்பான் சென்ற போது அவருக்குத் துணையாக ஜப்பானில் இருந்து இந்திய சுதந்திர போராட்டத்திற்கு குரல் எழுப்பினார். அவருக்கு ஜப்பானின் உயரிய விருதான order of the sacred treasure வழங்கப்பட்டது. மேலும் அவரது சுயசரிதை An Indian Freedom Fighter From Japan Memorirs of A.M.Nair, 1982 இல் வெளியிடப்பட்டது. இவர் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் என்பதால் இந்தியாவில் கேரளாவில் அதிக அளவில் இந்த புத்தகம் படிக்கப்பட்டது.

ஜப்பானின் அடையாளம் என்றால் அது மௌண்ட் ஃபூஜி (Mt. Fuji) , Fuji சான் என்று அழைக்கப்படும் அளவுக்கு உயரியதாக ஜப்பானில் கருதப்படுவது இந்த உயர்ந்த எரிமலை. (சான் என்றால் திரு/உயர்திரு போன்ற இணைச்சொல்). இதன் பல்வேறு அடுக்குகள் அங்கு சென்ற போது கண்ட காட்சிகள், சூரிய உதயம் மறைவு போன்ற தருணங்களிலும் காலநிலைக்கேற்ப அதன் காட்சிகள் வெவ்வெறு கோணங்களில் மாறும் என்று குறிப்பிடும் போது நமக்கே சென்று பார்க்க வேண்டும் என்று தோன்றும்.

இந்த புத்தகம் முழுமையாக ஜப்பானின் வரலாற்றை காலநிலையை அரசியல் அமைப்புகள் பற்றியும் வாழ்வியலையும் முழுமையாக விவரிக்கும் புத்தகம் அல்ல. இருப்பினும் இது அதற்கான ஓர் வழியை நமக்குக் காட்டுகிறது. ஜப்பான் செல்ல விரும்புபவர்கள் ஜப்பான் மீது நாட்டம் கொண்டவர்கள் இந்தனை தவறாமல் படிக்க வேண்டும் என்பது என் கருத்து.

-தமிழ்செல்வன் இரத்தினம்

முந்தைய கட்டுரைதாக்குப்பிடிப்பியம் -வி.கெ.என்
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி பற்றி…