விஷ்ணுபுரம் விழா- லோகமாதேவி

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

2021 க்கான விஷ்ணுபுர விருது விழா கோவையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு நடப்பது உறுதியானதும்  எதிர்பார்ப்பும் மகிழ்ச்சியுமாக நானும் மகன்களும் விழாவில் கலந்து கொள்வது குறித்து பேசிக்கொள்ள  துவங்கினோம்

இந்த முறை இளையவன் தருணும் டேராடுனிலிருந்து  விடுமுறையில் வந்திருந்தான். சரண் மேற்படிப்புக்கான திட்டங்களுடன்  இருப்பதால் இன்னும் சில வருடங்களுக்கு விழாவில்  கலந்து கொள்ள முடியாதென்பதால் மூவரும் வெள்ளி மாலையே கோவை செல்ல முடிவு செய்து, ராஜஸ்தானி அரங்கின் அருகிலேயே விடுதி அறை ஒன்றை ஏற்பாடு செய்தோம்.

விழா தேதி  நெருங்க  நெருங்க நோய் தொற்றினால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்த பட்டுவிடுமோ என்னும் அச்சம் இருந்தது. அடிக்கடி செய்திகளை பார்த்து அப்படி எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டேன். விழா நாயகரான விக்கிரமாதித்யன் அவர்களின் கவிதைகளையும் பிற விருந்தினர்களின் படைப்புகளையும் மூவருமாக கலந்து  வாசித்து விவாதித்துக்கொண்டிருந்தோம்.

கல்லூரி திறந்து வகுப்புகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. அனைத்து சனிக்கிழமைகளும் வேலை நாளாக இருந்தாலும்,  விழா நடைபெறவிருந்த சனி கிறிஸ்துமஸ் தினம் என்பதால் விடுப்பு எடுப்பது குறித்து கவலை இல்லாமல் இருந்தேன். ஆனல் எதிர்பாரா விதமாக விழாவிற்கு இரு நாட்கள் முன்பு சரணுக்கு நல்ல காய்ச்சல் தொடங்கியது.மருத்துவமனை சென்று அது கவலை படும்படியான காய்ச்சல் இல்லை என்பதை உறுதிசெய்தேன்.  எனினும்  வெள்ளிக்கிழமை கல்லூரியில் மனம் ஏதோ இனம்புரியாத சங்கடத்தில் இருந்தது.

கல்லூரி முடிந்து வீடு வந்து  தான் நலமாக இருப்பதாகவும் ஆனால் காய்ச்சலுடன் விழாவிற்கு  வருவது நோய்தொற்று சமயத்தில் சரியாக இருக்காது என்பதால் வரவில்லை என்றும் சொன்ன  சரணை அரைமனதுடன் வீட்டில் விட்டுவிட்டு நானும் தருணுமாக கோவை  வந்தோம்.

வெள்ளி இரவு ராஜஸ்தானி அரங்கில்  நீங்கள் இருந்த அறைக்கதவை  தயக்கத்துடன் திறந்தேன். வழக்கம்போல கட்டிலில் நீங்களும் நாற்காலிகளிலும்,  தரையிலும் நண்பர்களுமாக அமர்ந்து தீவிர  உரையாடல் நடந்துகொண்டிருந்தது.

அப்போதே விழா மனநிலை தொடங்கிவிட்டிருந்தது. அனங்கன், ஜாஜா, சாகுல், சுபா, நிகிதா உள்ளிட்ட பலர் இருந்தார்கள்.  இரவு விருந்தினர்களை வரவேற்க நீங்கள் புறப்படும்வரை இருந்துவிட்டு பின்னர் விடுதிக்கு சென்றேன். மறுநாள் நிகழ்வு குறித்த எதிர்பார்ப்பும், தனியாக வீட்டில் இருக்கும் மகனின் நினைவிலும் தூக்கமின்றி கழிந்தது இரவு .

சனியன்று அதிகாலையிலேயே , உறங்கும்  தருணுக்கு காத்திராமல் விழாவிற்கு புறப்பட்டு  விடுதிக்கு வெளியே இருக்கும் ஒரு ஆட்டோவை அழைத்தேன் அந்நேரத்துக்கு அழைத்ததும் பரபரப்பாக வந்த ஆட்டோ ஓட்டுநர் ராஜஸ்தானி அரங்கம் என்றதும் கேள்வியுடன் என்னை பார்த்தார். பின்னர் ’’என்னம்மா மார்கழி மாசம், தலைக்கு ஒரு குல்லா போட்டுக்க கூடாதா? இப்படி வரீங்களே ? என்றார்.  எனக்கு  குளிர் உறைக்கவே இல்லை என்பது அப்போதுதான் உறைத்தது.  ராஜஸ்தானி  அரங்கம்  வந்து அங்கே ஆள் நடமாட்டம் இல்லாதிருப்பதில் அவர் குழம்பி, ’’இங்கேதானாம்மா’’ ? என்றார் ஆம் என்றேன். குழப்பத்துடன் அவர் புறப்பட்டு சென்றார்

பனி போர்வை போல  மூடியிருந்தது.  யோகேஸ்வரனும், உமாவும் விருந்தினர்களுக்கான  அறை சாவிகளுடன் வாசலிலேயே காத்திருந்தார்கள்.. உமா அந்த அதிகாலையில் அங்கிருந்தது ஆச்சரியமளித்தது அவளுக்கு சிறு மகள் இருக்கிறாள். மகளை தன் கணவர் பார்த்துக்கொள்வார் என்றாள் அத்தனை தூரத்திலிருந்து அந்த அதிகாலையில் கடும் குளிரில் உமா வந்திருந்தது நெகிழ்ச்சி அளித்தது..

. சென்னையிலிருந்து  மதுவும் இன்னும் பலரும் வரத்துவங்கியதும் உமாவும் யோகேஷும் பரபரப்பாக அறைகளை ஒதுக்கி சாவியை கொடுக்க துவங்கினார்கள். யோகேஷ் விருந்தினர்களை வரவேற்க ரயில் நிலையத்திற்கும் விமான நிலையத்திற்கும் ஓடிக்கொண்டிருந்தார்.

அந்நேரத்துக்கே அனைவருக்கும் தேநீர் வந்திருந்தது.  பெட்டிகள் பிரிக்கப்பட்டு புத்தகங்கள் அடுக்கப்பட்டு கொண்டிருந்தன. நூற்பு ஆடைகள் இருந்தன. தன்னறத்தினர்  சின்ன சின்ன மலர்க்கோலங்களை வாசல் தரையில் அமைத்தார்கள். அவற்றுடன்  ஓரிகாமி காகித பறவைகள்  மற்றும் வண்ணத்துப்பூச்சி வடிவங்களையும் ஆங்காங்கே அமைத்தார்கள்.அத்தனை புதிய  புத்தகங்களை பார்க்க பரவசமாக  இருந்தது.

திருச்செந்தாழை, நாஞ்சில் நாடன், சோ தர்மன், பாவண்ணன், வசந்த சாய்  என்று விருந்தினர்களும்  வரத்துவங்கினார்கள். .எதிர்பார்த்தது போலவே விஜயசூரியன் உணவளித்து கொண்டிருந்தார்.

நீங்கள் வழக்கம் போல் குன்றா உற்சாகத்துடன்  சுற்றி நிற்பவர்களிடம் உரையாடிக் கொண்டிருந்தீர்கள்.. அந்த ஆற்றல் என்னை எப்போதும் வியப்படைய வைக்கும் நள்ளிரவு வரை உரையாடிக்கொண்டு, பயணித்துக்கொண்டு இருந்தாலும்  அதிகாலையில் புத்தம் புதிதாக மலர்ச்சியுடன் தீவிரமான உரையாடலில் நீங்கள் இருப்பதை பலமுறை கண்டிருக்கிறேன். உங்களின் அந்த விசை உடனிருப்பவர்களையும் செலுத்திக் கொண்டிருக்கும்.

வரிசையாக 7 பைக்குகளில் இளைஞர்கள் வந்தபோது நான் அவர்கள் இடம் மாறி வந்துவிட்டதாகவே நினைத்தேன். ஆனால் அவர்கள் விஷ்ணுபுரம் விழாவிற்கு தான் வந்திருந்தார்கள். இந்த முறை வழக்கத்தை காட்டிலும் அதிக இளைஞர்கள் விழாவில். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இருக்கும் இடத்தில் பணிபுரிபவள் என்பதால் , இதுபோன்ற இலக்கிய விழாக்களுக்கு அதிகாலையில் இலக்கிய பரிச்சயம் உள்ள அத்தனை இளைஞர்கள்  வந்திருந்தது பெரும் மகிழ்ச்சியை அளித்தது.

அரங்கில் இரம்யா, சுஷீல்,  கல்பனா, ஜெயகாந்த், ஜெயந்தி , காளி பிரசாத், கதிர்முருகன், குவிஸ்செந்தில், பாலு  உள்ளிட்ட பலரும் இருந்தார்கள். பல நண்பர்கள் விழா தொடர்பான  ஏதோ ஒரு முக்கிய வேலையை பார்த்துக் கொண்டிருந்தார்கள் அவர்களை யாரும் வழிநடத்தவில்லை.  ஆனால் எல்லா வேலைகளும் கச்சிதமாக  விஷ்ணுபுரம் விழவிற்கே உரிய மாறா ஒழுங்குடனும் மகிழ்வுடனும்  நடந்துகொண்டிருந்தன. மேடை இலக்கிய விவாதத்தின் பொருட்டு ஒருங்கிக்கொண்டிருந்தது.  விருந்தினர்கள் ஒவ்வொருவராக  வரவேற்கப்பட்டு  அரங்கில் அமர செய்யப்பட்டனர். உணவு  தயாராக  இருந்தது அறைகள்  காத்திருந்தன, புத்தகங்கள் விற்பனைக்கு தயாராக இருந்தன. அரங்கு நிரம்ப துவங்கியது..

கண்ணுக்கு தெரியாத  மாபெரும்  வலையொன்றினால்  இணைக்கப்பட்டிருப்பது போல அத்தனை திசைகளிலும் பணிபுரிந்தவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு விழா அரங்கும், விழாவும் தயாராகிக்கொண்டிருந்தது.  அவ்வலையின்  மத்தியில்  மானசீகமாக உங்களை  நிறுத்தியே அனைவரும் பணிபுரிந்தார்கள்.

அஜிதனை, பார்த்தேன் முன்பே  அலைபேசியில்  பேசி அறிமுகமாகி நட்புடனிருந்த  அத்தானி ஆனந்த் மனைவியுடன் வந்திருந்தார், ஆவடியில் இருந்து தேவி, திருச்சியிலிருந்து டெய்ஸி ஆகியோரையும்  முதல்முறையாக பார்த்து பேசினேன். விக்கிரமாதித்யன் அரங்குக்குள் நுழைந்தார்.அவரை பார்க்கையில் அவர் ஒரு காட்டுச்செடி என்று மனதில் நினைத்தேன்., மழையும், வெயிலும், புயலும் ,காற்றும்  எதுவும் பொருட்டேயில்லாத காட்டுச்செடி.அருகில் சென்று அறிமுகப்படுத்திக்கொண்டு வணங்கினேன். என்னை  அவருக்கு தெரிந்திருந்தது.

விழா குறிப்பிட்ட நேரத்தில் துவங்கியது.   இலக்கிய விவாத அமர்வுகள் துவங்கின, வழக்கமாக மேடையை அலங்கரிக்கும் ஜெர்பரா பெருமலர்க்கொத்துகள்  இந்த முறை முதல் நாள் அமர்வுகளின் போது வைக்கப்பட்டிருக்க வில்லை. மறுநாள் விழா மேடையில் வழக்கம் போல் அவை இடம்பெற்றிருந்ததை காணொளிகளில் பார்த்தேன்.

விழா  அரங்கு வண்ண மயமாக இருந்தது, நல்ல கூட்டம். ஆஸ்டின் செளந்தர் மகளும் புதுமணப்பெண்ணுமான பார்கவி கணவருடன் வந்திருந்தாள்.  காகித வண்ணத்துப்பூச்சியை தன் சிறு மகளுக்கு  எடுத்துக் கொடுத்து  ’’பட்டர்ஃப்ளை’’ என்று அவளுக்கு சொல்லிக்கொடுத்து கொண்டிருந்தார் ஒருவர்.   சொல் திருந்தியிருக்காத அவள் ’’டட்டட்டை’’ என்றாள் மலர்ந்து.  அந்த பச்சை வண்ண காகித வண்ணத்துப்பூச்சியை பரவசத்துடன் கைகளில் எடுத்துக்கொண்டு தளர்நடையிட்ட அவள் இரு எட்டுக்கள் வைப்பதும் பின்னர்  ’’ட ட்டட்டை’’ என்று சொல்லி விட்டு அண்ணாந்து  வானில் பறக்கும் மானசீக வண்ணத்துப்பூச்சியை கண்டதுபோல பரவசமடைவதும் பின்னர் மீண்டு சில எட்டுகள் வைத்துவிட்டு டட்டட்டை என்று சொல்லி அண்ணாந்து பார்த்து பூரிப்பதுமாக இருந்தாள்.

இலக்கிய அமர்வுகளின் போது இந்த முறை  வழக்கத்தை  காட்டிலும் கூடுதல் கேள்விகள் வந்ததை கவனிக்க முடிந்தது. பல புதியவர்கள் ஆழமான கேள்விகள் எழுப்பினார்கள். நீங்கள் பெரும்பாலும் ஏதும் கேட்கவில்லை.

மதிய உணவிற்கு பின்னர் செந்தில் ஜகன்னாதன் அமர்வு துவங்கிய போது  சரண் கடும் காய்ச்சலும்,  குறைந்து கொண்டே வரும் ரத்த திட்டுக்களின் எண்ணிக்கையுமாக  அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தகவல் வந்தது. பதற்றத்துடன் வீட்டுக்கு கிளம்பினேன். தருணுக்காக   அரங்கின் வாசலில்  காத்திருக்கையில்  திருச்செந்தாழை பார்த்து  விசாரித்துவிட்டு ’’கவலைப்படவேண்டாம் சரியாகிவிடும்’’ என்றார்

2 மணிநேரத்தில் மருத்துவமனைக்கு வந்தேன், விழாவை தவறவிட்டு வர காரணமாயிருந்ததற்கு  சரண் பலமுறை அந்த கடும்காய்ச்சலிலும் மன்னிப்பு  கேட்ட படியே  இருந்தான்.  கண்ணீருடன் அணைத்துக்கொண்டேன்.   இரண்டாம் நாள் விழாவை மருத்துவமனையில் இருந்தபடி  நண்பர்கள் அனுப்பிய காணொளிகளிலும் புகைப்படங்களிலும்  பார்த்துக்கொண்டிருந்தேன். விழா நிறைவில் எடுத்துக்கொள்ளப்பட்ட குழு புகைப்படத்தில் நானும் மானசீகமாக ஒரு ஓரத்தில் நின்றேன். விழாவை தவறவிட்டதன்  இழப்புணர்விலிருந்து விழா குறித்த கடிதங்களை  வாசிப்பதன் மூலம்  மீண்டு வருகிறேன். இதோ ஜனவரி  வந்துவிட்டது இன்னும் 10 மாதங்களில்  அடுத்த விஷ்ணுபுர விழா வந்துவிடும் என்று இப்போதே மனதை தேற்றிக்கொண்டு, எதிர்பார்க்க  துவங்கிவிட்டேன்

அருணாவின்  ‘பனி உருகுவதில்லை’  ஆனந்தின் டிப் டிப் டிப், உள்ளிட்ட எந்த புத்தகங்களையும் வாங்க முடியாமல் போனதில் கூடுதல் வருத்தம்

மகன் உடல் தேறி வீடு வந்துவிட்டான்.  இன்னும் விழா உரைகளை கேட்டுக்கொண்டிருக்கிறேன்.கையிலிருந்த காகித வண்ணத்துப்பூச்சியை பார்த்துக்கொண்டு, மனதிலிருக்கும் வண்ணத்துப்பூச்சி பறப்பதை கற்பனையில் கண்டு களித்த  அந்த குழந்தையை போல,   கலந்துகொண்ட ஒருநாளின் நினைவில் தவறவிட்ட மற்றொரு நாளை கண்டுகொண்டிருக்கிறேன்.

அன்புடன்

லோகமாதேவி

முந்தைய கட்டுரைபொங்கல் பறவைகள் கணக்கெடுப்பு
அடுத்த கட்டுரைஸ்ரீராகமோ- கடிதம்