விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள் 10

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழாவில் சோ.தர்மன் பேசும்போது தான் விக்ரமாதித்தனின் படைப்புகள் பற்றிப்பேசப்போவதில்லை மாறாக விக்ரமாதித்தனைப் பற்றியே பேசப்போகிறேன் என்று துவங்கியத்தைப் போல, நானும் விஷ்ணுபுரம் விழாவின் அமர்வுகளையோ, விருந்தினர்களையோ பற்றிப் பேசாமல் விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களையும், இரு தினங்களில் அவர்களுடனான என் அனுபவங்களையும் பற்றி மட்டுமே பேசலாமென்று இதை எழுதுகிறேன்.

தளத்தில் வெளியான விஷ்ணுபுரம் விருது விழா பற்றிய அறிவிக்குப் பின்னர் நிகழ்வின் தேதிகள் முடிவாகிவிட்டனவா என்று நண்பர்களுடன் அவ்வப்போது கேட்டுக்கொண்டிருதேன். தேதிகள் முடிவாகாத நிலையிலேயே குடும்பத்துடனான இந்தியப் பயணத்தை டிசம்பர் 28 வரை திட்டமிட்டு பயணச்சீட்டுகளையும் முன்பதிவு செய்திருந்தேன். விழா தேதிகள் அறிவிக்கப்பட்டபின்பு அவை கிட்டத்தட்ட திரும்புவதற்கு ஒரு நாள்  இடைவெளியில் இருந்தபோதும் பங்கேற்க வேண்டுமென்ற உற்சாகத்தில் இருந்தேன்.

ஒன்றரை வருடங்களுக்கும் மேலாக சுக்கிரி குழுமத்தில் உங்கள் 125 வீடடங்குகாலக் கதைகளை வாரம் ஒன்றென்று ஸூமில் விவாதித்து வருவதால், நண்பர்களை நேரில் பார்க்கும் ஆவல் அதிகரித்திருந்தது. கூடவே சமீபத்தில் 1000 பாடல்களை நிறைவு செய்திருந்த கம்பராமாயணக் குழுமமும் விழாவுக்கு வருவதாகச் சொல்லியிருந்தார்கள். சில நண்பர்கள் போனில் அழைத்து வருகையை உறுதிசெய்தும் கொண்டது ஆர்வத்தை அதிகரித்தபடியே இருந்தது. விழாவின் முதல் நாள் அன்று கிறிஸ்துமஸ் திருப்பலி செல்லவேண்டியிருந்ததால் 24ம் தேதி மாலையே வரமுடியவில்லை. நள்ளிரவுத் திருப்பலி முடிந்து சின்னமனூரிலிருந்து கிளம்பி கோவை வந்துசேர காலை 11 மணியாகிவிட்டது.

வந்தவுடன் ஷாகுலுக்கு அழைத்துச் சொன்னதும் அவர் அப்படியே அழைத்து வந்து ஒரு சேர் போட்டு அமர்வில் விட்டுச் சென்றார். கோகுலின் அமர்வை தவற விட்டு பின்னர் நண்பர்களிடம் அது பற்றிக் கேட்டுக்கொண்டிருந்தேன். எம்.கோபாலகிருஷ்ணனின் அமர்வில் விக்னேஷ் கேட்ட கேள்விக்கு அவர் விக்னேஷின் வயசென்ன என்று விசாரித்துவிட்டு இந்த வயசுக்கு அதிகமான கேள்விதான் என்றபோது கடந்த ஒரு வருடமாக சுக்கிரி விவாதங்களில் இந்த இளம் சட்டமாணவர் எழுப்பும் வினாக்களும், முன்வைக்கும் கோணங்களும் நினைவில் எழுந்தன. அமர்வின் முடிவில் அருகில் அமர்ந்திருந்த விஜயலக்ஷ்மி குழுமத்தில் இருந்து யார் யாரெல்லாம் வந்திருக்கிறார்கள் என்று சொல்லி முடித்தார். இடைவேளையில் நண்பர்கள் அனைவரையும் முதல் முறையாகப் பார்த்து ஸூமில் யாரெல்லாம் வித்தியாசமாக இருந்தார்கள் என்று பேசிக்கொண்டோம். நண்பர் கமலநாதன் மட்டும் என்னை இன்னும் கொஞ்சம் உயரமாக நன்றாக இருப்பேன் என்று நினைத்திருந்ததாக சற்றே வருத்தமாகக் கூறினார்.

2017 காவிய முகாமில் சுஷில்குமார் உள்ளிட்ட சில நண்பர்களைச் சந்தித்திருந்தாலும் இப்போது இன்னும் நெருக்கமாக உரையாட முடிந்தது. சுக்கிரியின் மட்டுறுத்துனர்களான விஜிரா சார், மது சம்பத் உள்ளிட்டோர் வழக்கமான உற்சாகத்தோடு ஸூம் அனுபவங்கள் பற்றியும், தொடரும் கூட்டு வாசிப்பின் பயன்கள் பற்றியும் பேசிக்கொண்டிருந்தனர். உணவு இடைவேளையில் ஒருவாறாக அனைவரையும் சந்தித்திருந்த பொழுதில் ஜெ.யுடன் குழுப்படம் எடுக்கவேண்டுமென்று சுக்கிரி குழுமமும், நாஞ்சில் சாரோடு படம் எடுக்கவேண்டுமென்று கம்பராமாயணக் குழுவும் பரபப்பாக ஆள் சேர்த்துக் கொண்டிருந்தார்கள். இடையிடையே ஷாகுல் அனைவரும் ஒன்றாகச் சாப்பிடலாம் என்று சொல்லிக்கொண்டிருந்தார். ஜெர்மனியில் இருந்து வந்திருந்த ஜெயந்த், விஜயபாரதி, கோகுல், லாஓசி, இளம் வாசகர்கள் விக்னேஷ், கிஷோர், உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து உணவுக்கூடத்திலேயே உங்களோடு குழுப்படம் எடுத்துக்கொண்டோம்.

பார்கவி, சுந்தரவடிவேலன், வெங்கட்ரமணன், லட்சுமி நாராயணன், பத்மநாதன், எழுத்தாளர்கள் சுனில், காளி,  கா.சிவா, விஜயகுமார் உள்ளிட்ட பிறருடன் இணைந்து கம்பராமாயக் குழுவான “இம்பர்வாரி”யும் உங்களோடு குழுப்படம் எடுத்துக்கொண்டது. இரண்டு படங்களுக்கும் வந்து கலந்துகொண்ட ரம்யாவைப் பார்த்து “நீ எல்லாக் குரூப்புலயும் இருக்கியா” என்று சிரித்துக்கொண்டே கேள்வி எழுப்பினீர்கள். இரண்டு குழுக்களிலும் வெகு ஆர்வத்துடன் இயங்கும் ஆனந்த் சுவாமியை விழாவில் சந்திக்க முடியாததை நண்பர்கள் வருத்தத்துடன் பேசிக்கொண்டித்தபோது, “யார் அவர்” என்ற அருகிலிருந்தவர் கேள்விக்கு “திருவண்ணாமலையில் உள்ள துறவி, அடிக்கடி தளத்தில் அவர் கடிதங்கள் வெளியாகும். ‘ஏழாம் கடல்’ கதைக்கு அதை விடச் சற்றே பெரிய கடிதமொன்றை எழுதியவர்” என்று சுவாமியைப் பற்றி அறிமுகம் செய்து வைத்தோம். குழுப்படத்துக்குப் பிறகு அனைவரும் கலைந்து சாப்பிடச் சென்றபிறகு என்னைச் சந்தித்த ஷாகுல் ஏன் எல்லோரையும் ஒன்றாக சாப்பிட அழைத்து வரவில்லை என்று கடிந்துகொண்டார்.

பிற இடைவேளைகளில் குவிஸ் செந்தில், விஜயசூரியன், செல்வராணி, குருஜி, தனா, கடலூர் சீனு, ஜாஜா, கிருஷ்ணன், கதிர்முருகன், சிறில், செல்வேந்திரன், ஆனந்த், கல்பனா என எதிர்ப்படும் நண்பர்களிடம் எல்லாம் அறிமுகம் செய்துகொண்டு பேசிச்சென்றேன். சுபாவின் ‘மாஸ்டர் கிறிஸ்டியன்’ மொழியாக்கத்தைப் பற்றி விசாரித்துக்கொண்டிருந்தேன்.  ‘மேரி கெரெல்லி’ அடக்கம் செய்யப்பட்டுள்ள “ஸ்ட்ராட்போர்ட் அபான் எ வான்” கல்லறைத்தோட்டம் என் வீட்டிலிருந்து 30 நிமிடத்தொலைவில் உள்ளதைச் சொல்லி அங்கு மொழியாக்கப் பிரதியினை வைத்து வணங்கத் திட்டமிட்டுள்ளதைச் சொன்னதும் சுபா சற்றே நெகிழ்ந்தார். “இப்படியெல்லாம் சொன்னால் நானே புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கு கிளம்பி வந்துவிடுவேன்” என்றார். அவருள் இருந்த பயணி இதைச் சொல்லாமல் போயிருந்தால் தான் வியப்பு.

சிரிப்பும், வாசிப்பு விசாரணைகளும் நிறைந்த இந்த நாட்களில் மகிழ்ச்சியளித்த இன்னொன்று புதியவர்களைச் சந்தித்தது. விஜய் கிருஷ்ணா, மருதுபாண்டியன், மனோஜ் என்று ஒரு புறமாகத் தயங்கி நின்ற புதிய இளம் வாசகர்களைச் சந்தித்து அவர்களையும் பிறரோடு இணைத்துக்கொண்டு உரையாடியது குழுமத்தில் சேர லிங்குகளை பகிர்ந்துகொண்டோம். தன் சீனியர் தூண்டுதலால் ஜெயமோகனைப் பற்றி அறிந்து கொண்ட தமிழில் முதுகலை படிக்கும் இளைஞர் மனோஜ், உங்கள் பெயர் தவறியும் கல்லூரியில் பேராசிரியர்களால் குறிப்பிடப்படுவதில்லை என்று வருந்தினார்.

எல்லாம் முடிந்த பின்பு உங்கள் அருகில் நின்று உங்களால் அணைத்தபடி படம் எடுத்துக்கொள்வது எப்போதும் மகிழ்ச்சியான ஒன்று. புதிய வாசகர் சந்திப்பு ஒன்றில் எடுத்துக்கொண்ட படத்தில் நீங்கள் சிரித்தபடி ஏதோ சொல்ல நான் பெரிதாய்ச் சிரிக்கும் புகைப்படம் என் சேமிப்பில் விருப்பத்திற்குரிய ஒன்று. இப்போதும் அப்படியான படங்கள் அமைந்தன.  நிகழ்வின் இறுதியில் அண்ணாச்சியோடும் படம் எடுத்துக் கொண்டேன். அருகில் காத்திருந்த நண்பர் விஜயபாரதியை அண்ணாச்சியிடம் காட்டி அவரோடு ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா என்றேன். பதறிய அண்ணாச்சி ‘தாராளமாக எடுத்துக்கங்க’ என்று அந்த இடத்தை விட்டு விலகிச் செல்ல முயல, சட்டென்று அவர் முன்னால் சென்று மறித்து ‘உங்களோடு தான் அண்ணாச்சி நாங்க போட்டோ எடுக்கணும்’ என்று சொல்லவும், பெரிதாய்ச் சிரித்தபடி எங்களோடு நின்று படம் எடுத்துக் கொண்டதை என்னால் என்றும் மறக்கமுடியாது. இந்த இனிய விழாவைச் சாத்தியமாக்கிய அணைத்து நண்பர்களுக்கும் என் நன்றிகள்.

அன்புடன்,
ராஜேஸ்,
காவெண்ட்ரி.

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி பற்றி…
அடுத்த கட்டுரைடிப்டிப்டிப்- கோவர்தனன் மணியன்