இலக்கியம் பாடமாக- கடிதங்கள்

இலக்கியம் பாடமாக ஆகலாமா?

அன்புள்ள ஜெயமோகன்,

கொஞ்சம் பொதுமைப்படுத்திவிட்டீர்களோ என்று தோன்றியது.

எனக்கு புதுமைப்பித்தன் அறிமுகமானது “ஒரு நாள் கழிந்தது” சிறுகதை மூலம், 1980-இலோ 81-இலோ (1985 வரை அவர் பள்ளி துணைப்பாடங்களில் வரவில்லை என்று நீங்கள் எழுதி இருப்பது தகவல் பிழை.) பொறியியல் கல்லூரிக்குப் போவதற்கு முன் தமிழ்ப் பாடத்தில் “ஆண்மை” சிறுகதை துணைப்பாடமாக இருந்தது. பொன்னகரத்தையும் துணைப்பாடமாகத்தான் படித்தேன் என்று நினைக்கிறேன், ஆனால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. (நிச்சயம் பதின்ம வயதுகளில் படித்தேன்.) சேதுப்பிள்ளையும், அண்ணாதுரையும் திரு.வி.க.வும் main பாடங்களில் இருந்தன.

ஒரு நாள் கழிந்ததைப் படித்துவிட்டு புதுமைப்பித்தனை உள்ளூர் நூலகங்களில் (செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி) தேடி இருக்கிறேன், கிடைத்ததில்லை. சேலம் மாவட்ட நூலகத்தில் கிடைத்த தொகுப்பை அங்கேயே உட்கார்ந்து படித்திருக்கிறேன். (மகாமசானம், செல்லம்மாள், சுப்பையா பிள்ளையின் காதல்கள், பால்வண்ணம் பிள்ளை, காலனும் கிழவியும், கடவுளும் கந்தசாமிப் பிள்ளையும், சாபவிமோசனம்…) பிறகு எப்படியோ கிடைத்ததை நானும் என் அம்மாவும் உட்கார்ந்து பேசி இருக்கிறோம். (என் அம்மாவுக்கு காலனும் கிழவியும் ரொம்பப் பிடிக்கும்.)

(பற்றாக்குறையாக) சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு புதுமைப்பித்தன் பேர் தெரிந்தால் யோசிக்காமல் வாங்கவும் ஒரு நாள் கழிந்தது சிறுகதைதான் முக்கியக் காரணம். அதனால் துணைப்பாடங்களில் வந்தால் அலுத்துவிடும் படிக்கமாட்டார்கள் என்ற எண்ணங்களுக்கு விதிவிலக்குகளாவது உள்ளன…

அன்புடன்

ஆர்வி

***

அன்புள்ள ஜெ

நலம்தானே? நானும் நலம்

பள்ளிகளில் இலக்கியங்களைப் பாடமாக வைப்பது பற்றி எழுதியிருந்தீர்கள். நீங்கள் சொல்வது உண்மை. அதனால் இலக்கியம் பிரபலம் ஆவதில்லை. அங்கே பாடமாக இருக்கும் படைப்பாளிகள் பிரபலமாக அனைவராலும் வாசிக்கப்படுவதில்லை.

கதையை பாடமாகப் பார்க்கும்போது ஒரு வெறுப்பும் உதாசீனமும் வருகிறது. அதை மிகமிகத் தவறாகவே நமக்கு சொல்லிக்கொடுக்கிறார்கள். ஆகவே நாம் தவறான வாசிப்புக்கும் பழகிவிடுகிறோம். ஆனால் ஒரு முக்கியமான விஷயத்தைக் கவனிக்கவேண்டும். இயல்பாகவே கலையிலக்கிய ஆர்வமும் கற்பனை வளமும் கொண்ட ஒரு வாசகன் ஒரு கதையை வாசித்ததுமே அதிலுள்ள கலையம்சத்தால் ஈர்க்கப்படுகிறான். உடனே அவன் இலக்கியவாசகன் ஆகிவிடுவதில்லை. ஆனால் அவனுக்குள் ஏதோ ஒரு தொடக்கம் நிகழ்ந்துவிடுகிறது. கலையார்வமோ கற்பனையோ இல்லாத வாசகர்களுக்கு அப்படி ஒரு தொடக்கம் நிகழ்வதில்லை. அவர்கள்தான் மிகப்பெரும்பான்மையினர்.

சிறுபான்மையினர்தான் இலக்கியத்துக்குள் வரமுடியும். கற்பனை இல்லாதவர்கள் இலக்கியத்தை வேறேதோ காரணத்துக்காக வாசிக்கிறார்கள். பெரும்பாலும் அரசியல் காரணங்களுக்காக. சிலசமயம் கல்வித்துறை ஆய்வுகளுக்காக. அவர்கள் வாழ்க்கைமுழுக்க வாசித்தாலும் இலக்கியத்தை உணரமுடியாது. அவர்களுக்கு ஏற்கனவே தெரிந்த அரசியலையோ இலக்கணத்தையோ கொள்கைகளையோ இலக்கியத்தில் பார்ப்பார்கள். புதியதாக இலக்கியத்தில் இருந்துஒன்றுமே அவர்களுக்குக் கிடைக்காது. அல்லது தங்கள் வளர்ப்பில் இருந்து கிடைத்த சாதாரணமான சாதிமதப் பார்வையை இலக்கியத்தில் போட்டுக்கொண்டிருப்பார்கள். இலக்கியம் அவர்களுக்கு உரியது அல்ல. தன்னை தனிமனிதனாக நிறுத்தி கற்பனையில் உலகத்தை விரிவாக்கம் செய்பவர்கள் வாசிக்கவேண்டியது.

அத்தகைய மாணவர்களுக்கு இலக்கியம் பள்ளி நாட்களில் அறிமுகமாவது சிறப்புதான். நான் புதுமைப்பித்தனின் ஒரே ஒரு கதை வழியாகவே இலக்கியத்தை அறிந்தேன். ஒருநாள் கழிந்தது என்ற கதை எனக்குப் பாடமாக இருந்தது. இன்றைக்கு நான் வாசிப்பதெல்லாம் அதில் இருந்துதான். அந்தக்கதை எனக்கு பிடிபடவில்லை. ஆனால் மிகப்பெரிய ஈர்ப்பு உருவாகிவிட்டது

ஜெயராமன்

***

முந்தைய கட்டுரைஅறம்- வாசிப்பு
அடுத்த கட்டுரைஎழுத்துரு பற்றி, மீண்டும்…