விஷ்ணுபுரம் விழா- பாவண்ணன்

அன்புள்ள ஜெயமோகன்

வணக்கம். நலம்தானே?

ஊருக்குத் திரும்பி இரு நாட்கள் கழிந்துவிட்டன. ஆயினும் இன்னும் மனம் விருதுவிழா நிகழ்ச்சியின் நினைவுகளிலிருந்து விடுபடவில்லை. எண்ணற்ற முகங்கள் மனத்திரையில் நகர்ந்தபடி உள்ளன. குரல்கள் நெஞ்சில் எதிரொலித்தபடி உள்ளன. எதிர்காலத்தில் நண்பர்களிடையில் மீண்டும் மீண்டும் சொல்லிப் பகிர்ந்துகொள்ளத் தக்க இனிய நினைவுகளாக இவையனைத்தும் நீடிக்கும் என்றே தோன்றுகிறது.

இளம் எழுத்தாளர்களின் அரங்குகள் மிகவும் ஆர்வமூட்டுபவையாக இருந்தன. திரண்டிருந்த வாசகர்களின் வினாக்களை அவர்கள் பாசாங்கில்லாமல் எதிர்கொண்டு தன் மனம் உணர்ந்த பதில்களை உடனுக்குடன் சொன்ன விதம் பிடித்திருந்தது.  அவர்கள் நம்புகிற ஒன்றை அதே தீவிரத்துடன் அவையின் முன் வைக்கும் அளவுக்கு அவர்களுடைய ஆழுள்ளம் அக்கருத்துகளில் தோய்ந்திருப்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. சுஷில்குமார், செந்தில் ஜெகன்னாதன், ஜா.தீபா, திருச்செந்தாழை, காளிபிரசாத் ஐவருமே இன்றைய சிறுகதையுலகத்தின் ஐந்து வகைமாதிரிகள். ஒருவரைப்போல ஒருவர் இல்லை. இந்த ஐவருடைய எழுத்துகளையும் நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். இதே ஊக்கத்துடனும் அர்ப்பணிப்போடும் இவர்கள் தொடர்ந்து எழுதுவார்களெனில், எதிர்காலத்தில் இவர்கள் தனித்தன்மை மிக்க ஆளுமைகளாக எழக்கூடும்.

தெலுங்குக்கவிஞர் வீரபத்ருடு தாகூரை வகுத்துச் சொன்ன விதம் மிகவும் பிடித்திருந்தது. தாகூருக்கு முந்தைய கவிஞர்கள் அனைவரும் இறைவனின் பெயரையும் உருவத்தையும் முன்வைத்துப் பாடிய சமயத்தில் தாகூரே முதன்முதலாக இறைவனை பெயரற்றவனாகவும் உருவற்றவனாகவும் உணரும் வகையில் அவன், அது, நீ என மாற்றுச் சொற்கள் வழியாக பாடினார் என்னும் குறிப்பு அவருடைய ஆழ்ந்த வாசிப்பின் வலிமையை உணர்த்தியது. ஒரு படைப்பாளியின் படைப்பூக்கத்தால் எளிய உலகியல் காட்சியொன்று, உலகியலுக்கு அப்பாற்பட்ட காட்சியாக படைப்புக்குள் உருமாறும் தன்மையை மிக எளிமையான சொற்களால் அவர் அவையோருக்கு உணர்த்தினார். ஆற்றில் குளிக்க வந்த வால்மீகி மரக்கிளையில் அமர்ந்து கொஞ்சி விளையாடிய ஒரு ஜோடி பறவையைப் பார்த்தார். அவர் கண் முன்னாலேயே ஒரு வேடனின் அம்பு பட்டு ஒரு பறவை இறந்துவிடுகிறது. துணைப்பறவையை இழந்த மற்றொரு பறவை துக்கத்தில் தவிக்கிறது. பறவையின் துக்கத்திலும் சோகத்திலும் கவிஞர் ராமனின் துக்கத்தையும் சோகத்தையும் உணர்ந்துகொள்கிறார். அக்கணத்தில் உருவான மன எழுச்சி அவர் ராமாயணம் எழுதக் காரணமாகிறது. கண்ணால் பார்க்கும் வால்மீகி வேறு. காவியம் படைக்கும் வால்மீகி வேறு. ஒரு சின்ன எடுத்துக்காட்டு வழியாக படைப்பாக்கத்தின் நுட்பத்தை அவையிலிருந்த பார்வையாளர்களுக்குப் புரிய வைத்துவிட்டார் வீரபத்ருடு. தேர்தல் அதிகாரியாக பணிபுரிய வந்த தமிழகத்தில் ஆழ்வார்களின் பிறந்த ஊர்களையும் ஆலயங்களையும் உ.வே.சா.வின் பிறந்த ஊரையும் அவர் தமிழ் பயின்ற மடத்தையும் தேடிச் சென்று பார்த்த அனுபவத்தையும் அவர் விவரித்த விதம் மனத்துக்கு நெருக்கமாக இருந்தது. தமிழை தாய்மொழியாகக் கொண்ட ஒருவருக்கு இருக்கவேண்டிய தேடலும் விழைவும் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரிடம் நிறைந்திருப்பதைக் கண்டு மனம் நிறைந்தேன்.

ஜெயராம் ரமேஷ் தன் உரையில் மேற்கோளாகக் குறிப்பிட்ட ‘பிரக்ருதி ரட்சிதி ரட்சித’ (இயற்கை தன்னைப் பாதுகாப்பவரைப் பாதுகாக்கிறது) என்ற வாக்கியம் அக்கணமே என் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. மாபெரும் உண்மையைப் புலப்படுத்தும் எளிய சொற்கள்.

எம்.கோபாலகிருஷ்ணன் அமர்வில் தன்னை நோக்கி எழுப்பப்பட்ட பல கேள்விகளுக்கு அவர் அளித்த விடைகள் கதைப்பாத்திரங்களின் மனப்போக்குக்கும் மாறி வரும் சமூக எதார்த்தத்துக்கும் உள்ள நெருக்கத்தை அல்லது விலக்கத்தை உணர்த்துபவையாக இருந்தன. சோ.தருமனின் அமர்வு திடீரென பொழிந்த அடைமழைபோன்ற உற்சாகத்தை அளித்தது. இரவு எட்டு மணிக்குத் தொடங்கி ஒன்பது மணிக்கு முடிவடைந்த அவருடைய உரை அனைவருக்கும் புத்துணர்ச்சியை ஊட்டியதை அவையில் அமர்ந்திருந்த ஒவ்வொருவருடைய முகத்திலும் பார்த்தேன்.

விக்ரமாதித்யன் அண்ணாச்சி தனக்கான அமர்விலும் ஏற்புரையிலும் பல பழைய நண்பர்களை நினைவுகூர்ந்தபடியே இருந்த விதம் நெகிழ்ச்சியாக இருந்தது. உங்கள் உரையில் காடு வளம்பெற ஒவ்வொரு முறையும் தன்னை அழித்துக்கொண்டு முளைத்து வரும் தருவைப்புல்லை அண்ணாச்சிக்கு உவமையாகச் சொன்ன விதம் நெஞ்சில் ஆழமாகப் பதிந்துவிட்டது. தன் பண்பாட்டின் குரலாக தன் படைப்புகள் நிற்பதை ஒரு கவிஞன் நேருக்கு நேர் பார்ப்பதும், அதை ஓர் அவையே கூடி நின்று ஓங்கி ஒலிப்பதை காதாரக் கேட்பதும் மிகப்பெரிய பேறு.  ஒரு மகத்தான கவிஞனை அவைநடுவில் அமரவைத்து மனமாரப் பாராட்டுவது மாபெரும் பேறு. விருதுநாள் அன்று நாம் அனைவருமே பேறு பெற்றவர்களானோம்.

ஒரு சிறு பிழை கூட நேர்ந்துவிடாத வண்ணம் துல்லியமாகத் திட்டமிட்டு இரண்டு நாட்கள் நிகழ்ச்சியையும் சிறப்பாக நடத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்.

அன்புடன்

பாவண்ணன்

 

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்-3
அடுத்த கட்டுரைதிட்டங்கள் என்ன?