அன்புள்ள ஜெயமோகன்,
2019 ஏப்ரலில் கோவையில் நடந்த உங்கள் கட்டண உரைக்கு அது தொடங்கும் நேரத்திற்கு பத்து நிமிடம் முன்னாடி வந்தேன். அரங்கம் நிறைந்துவிட்டது, கடைசி வரிசையில்தான் இடம் கிடைத்தது, அன்றே முடிவு செய்துவிட்டேன் அடுத்த நிகழ்வுக்கு மிக சீக்கிரமே சென்றுவிடவேண்டும்.
இந்த வருட விஷ்ணுபுரம் விழா நான் கலந்துகொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விருது விழா. 8.30 மணிக்கே ராஜஸ்தான் சங் அரங்கத்துக்கு வந்துவிட்டேன். சிலர் வெளியே நின்று கொண்டு பேசிக்கொண்டிருந்தார்கள்.இந்த அரங்கில் எனக்கு தெரிந்த ஒரே நபர் ஜி.எஸ்.எஸ்.வி. நவீன். முதலில் அவர் கண்ணுக்கு தென்படவில்லை, சிறுதுநேரம் கழித்து பார்த்துவிட்டேன், நான் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவருக்கு அடையாளம் தெரியவில்லை. முகக்கவசத்தை கழட்டிய பின் அவருடைய பளிச் புன்னகையால் வரவேற்றார். விழா பொறுப்பில் ஓடிக்கொண்டிருந்தார்.
கீழே இருந்த தன்னறம் நூல் அரங்கில் வாங்க வேண்டிய நூல்களை முடிவு செய்தேன்.இரண்டாம் தளத்திலிருந்த நூல் அரங்கையும் பார்த்துவிட்டு 8.50க்கு விழா அரங்குக்குள்ளே வந்தேன். அரங்கின் முன் வரிசையில் ஒருவர் மட்டும் அமர்ந்திருந்தார். அரங்கின் ஆட்கள் நாற்காலிகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள். நான் உள்ளே போகும் திசையில் வலதுபுறம் ஐந்தாவது வரிசையில் முதல் நாற்காலியில் அமர்ந்தேன். உரையாடல் மேடை தெளிவாய் தெரிந்தது. உங்கள் தளத்தை பார்த்தேன். விழா 9.30க்கு தொடங்குமென எழுதியிருந்தீர்கள். இன்னும் நேரமிருக்கிறது, அரங்கை வேடிக்கை பார்த்தேன்.
உரையாடல் மேடையில் வைக்கப்பட்டிருந்த பதாகையை கவனித்தேன்.விஷ்ணுபுரம் லோகோ என்ன சொல்ல வருகிறதென யோசித்தேன். அறிவு விருட்சமாக வளர்கிறது, அது பிரகாசமாகவும் வெளிப்படுகிறது. இந்த சூரிய வெளிச்சம் காலை வெயிலா இல்ல மாலை வெயிலா மட்டும் தெரியவில்லை. சாய்வாக இருந்த விஷ்ணுபுரம் விருது விழா 2021 வாக்கியத்தில் ழ எழுத்து அழகாக இருந்தது. ழவை காற்றில் எழுதிப் பார்த்தேன். சாய்ந்த, வளைவுகள் கொண்ட ழ பெண்மை கொண்ட எழுத்தாக தெரிந்தது. பின் நாற்காலிகளை வரிசைப்படுத்தும் ஆட்களை கவனிக்க ஆரம்பித்தேன்.ஒருவருக்கொருவர் சச்சரவிட்டு வேலை செய்தனர்.
நாற்கலிகளுக்கிடையே எவ்வளவு இடைவெளி விடவேண்டுமென்பதில் இருவருக்கிடையே வாக்குவாதம் வந்தது, ஆனால் சண்டை போடவில்லை. இடது பக்கம் எத்தனை நாற்காலிகள் என்பதை ஒருவர் எண்ணினார். 14 வரிசைகள் ஒரு வரிசைக்கு 6 நாற்காலிகள். அவர்களோடு நின்ற விஜய் சூரியன் 84னு மனக்கணக்கில் சொல்லிவிட்டு போய்விட்டார். அவர்களை மேற்பார்வை பார்த்தவர் கவனம் வேறு பக்கம் திரும்பி விட்டது. நாற்காலி போட்டவர் திரும்பவும் எண்ணினார். அவர் 14 வரிசைகள், ஒரு வரிசைக்கு 6 நாற்காலிகள் என்று சொன்னார். மனக்கணக்கில் பெருக்க நினைத்து முடியாதென உணர்ந்து, ஒரு நொடி கைபேசியை திறந்து கால்குலேட்டரை உபயோகிக்க நினைத்து அது இழுக்கென உணர்ந்து அவரே நாற்காலிகளை எண்ணினார்.
ஆனால் அவர் வலது பக்க நாற்காலிகளை எண்ணினார். நான் உணர்ந்தது அவர்களுக்குள் திட்டமிடல் இல்லை. ஒரு பத்துநிமிடம் யோசித்தால் எளிதாய் முடிக்கக்கூடிய பணி. ஏன் இப்படி சிக்கல் படுத்திக்கொள்கிறார்கள்? அந்த சிக்கல் அவர்களுக்கு அர்த்தத்தை வழங்குவதாய் உணர்கிறேன். அவர்கள் தினமும் செய்யும் பணி. செய்பவரை முக்கியமாக உணரவைக்காத பணி. சின்ன விவாதம், சச்சரவு, சிக்கல் எல்லாம் அந்த பணியை அவர்களுக்கு அர்த்தப்படுத்துவதாய் தெரிகிறது. கடைசியில் நாற்காலிகள் ஒழுங்கான வரிசையில் அமர்ந்திருந்தது.
அரங்கின் சுவற்றில் பல புகைப்படங்கள். எல்லாம் பாலைவன முகங்கள். வேறு மொழிபேசும் , வேறு கலாச்சாரம் கொண்ட நீண்ட தொலைவிலிருந்து இங்கு வந்து, வென்ற பாலைவன மக்கள் கட்டிய அரங்கில் தமிழுக்கு மரியாதை செய்யப்படுகிறது. வீரபத்ருடு தெலுங்குகில் பேசும்போது, ஹிந்தி மக்களின் இடத்தில், தமிழ் மக்கள் நடத்த, தெலுகு மக்கள் பேசுகிறார்கள். அடுத்த பத்து வருடத்தில் இலக்கியம் பேசும் அனைத்து இந்திய மொழிகளும் கலந்துகொள்ளும் விழாவாக இது வளர்ந்தால் அன்றைய காஞ்சிபுரம் போல் இன்றைய கோவை வளரும்.வரலாற்றை மீண்டும் உருவாக்கிய பெருமை விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேரும்.
10 மணிக்கு அமர்வுகள் தொடங்கின.
அமர்வு 1 – கோகுல் பிரசாத்
தொடக்கத்தில் அவர் கொஞ்சம் பதட்டமாக இருப்பதாய் உணர்ந்தேன். கேள்விகளுக்கு பதில் சொல்லச் சொல்ல அவருக்கு பிடி கிடைத்துவிட்டது. அவர் சொன்னது எழுத்தாளர்கள் எழுதுவது அவர்களுக்காக மட்டுமல்ல, வாசகர்களுக்காகவும் தான். தனக்காக மட்டும் எழுதுவதாய் ஒருவர் சொல்வது வெறும் அகந்தையென்று சொன்னார். கொஞ்சம் உண்மைதான். தனக்காகத்தான் எழுதுகிறார்கள், ஆனால் தன்னுள் மட்டும் வெளிப்பட முடியாது.வெளிப்பட வாசகர் வேண்டும்.வெளிப்படும் ஆழ்மனம் மற்ற ஆழ்மனத்துடன் சேர்ந்தால்தான் மகிழ்ச்சி. சினிமா விமர்சன முறைகளாக அவர் சொன்ன சினிமா சொல்லும் அழகியல், அதன் சிந்தனை, அது தரும் தரிசனம் எனக்கு உதவுமென்று நினைக்கிறேன். விமர்சனம் படைப்பை உயர்த்தவேண்டுமென்று சொன்னார்.அதுவும் எனக்கு சரியெனப்படுகிறது. ஆணவமில்லாத, தன்னை அறிவாளியென காட்டாத திட்டல் கூட படைப்பை உயர்த்தும்.
அமர்வு 2 – எம். கோபாலகிருஷ்ணன்
தெளிவான, அமைதியான, கச்சிதமான பேச்சு. இன்னும் கொஞ்சம் ஆழமாக பேசியிருக்கலாம். அவர் சொன்ன திருப்பூரின் தற்போதைய கலாச்சார மாற்றம் எனக்கு முக்கியமானது. நான் கவனிக்க இங்கே நிறைய இருக்கிறதென உணர்த்தியது.புனைவில் தானெழுதிய சம்பவங்கள் நிகழ்ந்த அலுவலக பெண்மணியிடம் பட்ட கஷ்டத்தை சுவைபடச் சொன்னார். அலுவலக விஷங்களை புனைவாய் மாற்றுவதில் கொஞ்சம் தள்ளியே இருப்பதாக சொன்னார்.சூத்திரதாரி என்ற புனைப்பெயரை விலக்கி விட்டதாய் சொன்னார். அடுத்த கேள்வியில் ராஜகோபாலன் எழுந்து சூத்திரதாரி அல்லாத எம். கோபாலகிருஷ்ணனிடம் ஒரு கேள்வியென ஆரம்பித்தார்.இந்த மாதிரி கேள்விகளால் அவ்வப்போது சிரித்துக் கொண்டேயிருந்தோம்.
அமர்வு 3 – காளி பிரசாத்
உண்மை சம்பவ சிறுகதையின் உண்மை சம்பவத்தை விவரித்தார்.பயத்தோடு நண்பரின் ஊருக்கு சென்றவருக்கு காத்திருந்தது ஆச்சரியம். மனிதம் மேல் நம்பிக்கைக்கொள்ளும் தருணங்களில் ஒன்று. விமர்சனங்கள் மூலம் தான் பெற்றதை வெளிப்படையாய் சொன்னார். மனதிற்குள் முடிவு செய்த ஐந்து பக்களவு அளவுகோல் கதை முழுதைவெளிப்பட தடையாய் அமைந்ததாய் சொன்னார்.சில இடங்களில் அதிகப்படியான விவரணைகள் கொடுத்ததை குறைத்திருக்கலாமென்று சொன்னார்.இரண்டும் புதியதாய் எழுதுபவர்களுக்கு உதவும். இவரிடம் நான் கேட்க நினைத்த கேள்வி தம்மம் தந்தவன் மொழிபெயர்ப்பு மூலம் அடைந்தது என்ன? அதை அவரே சொல்லிவிட்டார்.புத்தரின் மேலிருந்த போலியான குற்றச்சாட்டுகள் விலகி புத்தர் பத்துவருடம் காத்திருந்து மனைவிடம் அனுமதிவாங்கிக் கொண்டு துறவறம் சொல்கிறார். அவரின் நிதானத்தை புரிந்துகொண்டதாய் சொன்னார்.
அமர்வு 4 – சுஷீல்குமார்
முழுதாக நினைவை மீட்டெடுக்க முடியவில்லை. அவர் பேசியதில் தொன்மம், அவர் வீட்டுக்கு வெளிய இருக்கும் தெய்வங்கள், சுசீந்திரம் கோவில், வட்டார வழக்கு, சென்னை வட்டார வழக்கு இப்படி சின்ன சின்ன புள்ளிகளாக மட்டும் நினைவில் உள்ளது. அப்படியே பதிவுசெய்கிறேன். வேறு யாராவது கடிதம் எழுதினால் ஞாபகம் வரலாம்.
அமர்வு 5 – செந்தில் ஜெகநாதன்
தயக்கத்தோடு அமர்வில் வந்தமர்ந்தார். போகப்போக கான்பிடென்ஸ் கிடைத்துவிட்டது. தன் எழுத்து உள்ளுணர்விலிருந்து வெளிப்படுவதாகவும் அதை மட்டுப்படுத்த மட்டும் அறிவை உபயோகிப்பதகாவும் சொன்னார்.
அமர்வு 6 – ஜா.தீபா
script, screenplay பற்றி இவர் பகிர்ந்துகொண்ட தகவல்கள் எனக்கு புதிது. தாமிரபரணி ஆற்றைப்பற்றிய ஆவணப்படத்தைப்பற்றி பகிர்ந்துகொண்டார். படம் விரைவில் வெளிவருமென்று சொன்னார். தான் எழுதுவது பெண்ணெழுத்து என்றும், வேறு அனுபவங்கள் இல்லாததால் பெண்ணின் வலிகளை மட்டும் எழுதுவதாய் சொன்னார். சினிமாவில் பாத்திரம் துலக்கும் அக்காவின் கஷ்டங்களை எழுத்தில் வெளிக்கொணர வேண்டுமென்று சொன்னார். அவரின் பார்வையிலும் சினிமா உலகம் பற்றி நாம் தெரிந்துகொள்ளலாம். பெண் எழுத்தைமட்டும் எழுதும் பெண் எழுத்தாளர்கள் யாருக்கு எழுதுகிறார்கள்? சிலசமயம் தோன்றுவதுண்டு இந்த புறஉலகில் பெண்கள் தங்களுக்குள் உருவாக்கிக்கொண்ட ஒரு விர்ச்சுவல் உலகமுண்டு.பெண் எழுத்தைமட்டும் எழுதும் பெண் எழுத்தாளர்கள் அந்த விர்ச்சுவல் உலகத்துக்கு மட்டும் எழுதுகிறார்களா?
அமர்வு 7 – திருச்செந்தாழை
தன்னுடைய உரைநடை கவித்துவமாய் இருப்பதற்கு உரைநடையின் உச்சத்தில் தன்னிச்சையாய் ஒரு ரிதம் வந்துவிடுவதாக சொன்னார். இனிமேல் சோதித்துப் பார்க்கவேண்டும். ஆண் பெண் உறவு ஒரு Businessயென சொன்னார். Business போரைவிட கொடிய போரென சொன்னார். அதனாலதான் போரும், ஆண்-பெண் உறவுச் சிக்கல்களும் இலக்கியத்தில் குன்றாத பேசு பொருளாக உள்ளதோ? என் குறிப்பில் ஆசிரியர் என்பவர் ஆற்றல் என்று குறித்துவைத்துள்ளேன்.இவர் தேவதச்சனை பற்றி பேசும்பொழுது இவரிடம் புது ஆற்றல் வெளிப்பட்டதை உணர்ந்ததால் இருக்குமென நினைக்கிறேன்.
அமர்வு 8 – சோ.தர்மன்
அமர்வு தொடங்கும் போது இரவு எட்டு மணி. வழக்கமான அலுவல்முடிந்த சோம்பல் இல்லையென்றாலும் ஒரு சோம்பல் இருந்தது.இவருக்கு ஏன் எட்டு மணிக்கு கொடுத்தார்களென நினைத்தேன். சில நொடிகளில் காரணம் புரிந்துவிட்டது. அமர்வில் அவரே பேச்சாளர், மட்டுறுத்துனர். முதல் கேள்விக்கு பதில் சொல்லி முடித்து ஜி.எஸ்.எஸ்.வி. நவீனின் முகத்தைப் பார்க்கிறார்.நவீனோடு சேர்ந்து அனைவரும் சிரித்துவிட்டனர். உற்சாகமான ஒருமணிநேரம்.அவர் பேச்சில் இனிமையும், உண்மையும் ஒருங்கே வெளிப்பட்டது. கண்மாய்களைப் பற்றி, பகுத்தறிவிப்பற்றி, பறவைகள் பற்றி, தன் தினசரி வாழ்க்கைமுறை பற்றி, கூத்துக்கலைஞர்கள் பற்றி, சிறை அனுபவம்பற்றி,தனிமையில் மனிதனுக்கு எலியும் நண்பனாவதைப்பற்றி, கண்மாயை குத்தகை எடுத்தவர்கள் பறவையை, மாட்டை துரத்துவதை பற்றி தன் கவலையையும் நகைச்சுவையோடு பகிர்ந்துகொண்டார்.எதிரியே வீட்டுக்கு வந்தால் உபசரிக்கக் கூறும் தமிழ் மரபில் லாபத்தை மட்டும் கணக்கில் கொண்டு விருந்தினராய் வந்த பறவையை துரத்தும் நம் அறவீழ்ச்சி என்று இவர் அமர்வு கேள்வி கேட்கிறது? தன் நூலை Ph.D செய்யும் மாணவி தன்னை தொடர்புகொள்ள முடியாததால் இறந்துவிட்டது சொல்லி Ph.Dஐ முடித்துவிட்டதாய் சொல்கிறார். வல்லமையுள்ள வாசகன் எப்படியும் தேடிவருவானென சொல்கிறார். அவன் மட்டும் தனக்கு போதுமென நினைக்கிறார்.
அமர்வு 9 – வடரேவு சின்ன வீரபத்ருடு
நான் கொஞ்சம் குறிப்பெடுத்தது இவர் அமர்வில். ஆங்கிலத்திலும், தமிழிலும் பேசியதால் நிறைய நேரம் கிடைத்தது. தத்துவம் என்பது தொடர்ந்து கேள்வி கேட்பது, அது பதில் தர தொடங்கும்போது முடிவடைகிறது. பதில் தருவது அறிவியலின் வேலை, கேள்வி கேட்பது தத்துவத்தின் வேலை என்று சொன்னார். யார் கவிஞர் என்ற கேள்விக்கு வெளிப்புற சம்பவங்கள் நம் மனதுக்குள் ஏற்படுத்தும் ரசாயன மாற்றத்தின் தருணங்களை கடவுள் மட்டுமே அறிய முடியும். அதை தன்னுள் நோக்கி அறிபவனே கவிஞன். கவிதை என்பது லயத்தையும், கருத்தையும் ஒருங்கே கொண்டிருக்க வேண்டுமென்ற இடத்திற்கு இப்பொழுது வந்திருப்பதாய் சொன்னார். தெலுகு கவிதையில் இருந்த கண்ணுக்குத் தெரியாத சுவர் பற்றி சொன்னார். அதாவது அகக் கவிதைகளை மட்டும் எழுதும் ஒரு பிரிவு, புறக் கவிதைகளை மட்டும் எழுதும் இன்னொரு பிரிவு. இரு பிரிவுகளும் தனித்தனி. தன்னுள் இரண்டும் உணர்வுகளும் இருக்கும்போது அதை கவிதையில் வெளிப்படுத்த தயக்கம் கொண்டார். சீனக் கவிதைகள் மூலமும் பின் தமிழின் சங்க கவிதைகள் முதல் ஆழ்வார், நாயன்மார் கவிதைகள் வழியே ஒரு கவிஞன் இரண்டையும் எழுதலாமென்ற உறுதியைப் பெற்றார். அவர் தமிழ் கவிதைகளுக்கு 2000 வருடம் தொடர்ச்சி உள்ளதென சொல்லும்போது முறுக்கிய புஜத்தில் வெம்மை பாய்ந்தது. இவரின் அமர்வு ஒரு பாடம் போல் நடத்தப்பட்டது.தெலுகு கவிதையின் கூறுகளை அறிய அமர்வின் உள்ளடக்கத்தை எழுதிவைத்து திரும்பவும் படிக்க வேண்டும்.
அமர்வு 10 – வசந்த் சாய்
தனக்கு இலக்கியமும் சினிமாவும் எப்படி பொருள்படுகிறதென விளக்கினார்.இலக்கிய வாசிப்பு தான் விரும்பி செய்யும் ஒரு செயல். வாசித்ததில் பிடித்ததை தன் சினிமாவில் கொண்டுவர முயல்கிறேன்னு சொன்னார்.உற்சாகமான அமர்வு.
அமர்வு 11 – விக்ரமாதித்தன்
அவரின் அமர்வில் அவரிடம் கேட்ட கேள்விகளுக்கு நேரடி பதிலில்லை. பதிலின் பின்புலத்திலிருந்து தொடங்கி மெதுவாய் கேள்விக்கான பதிலை நோக்கி வருகிறார். நாம் காத்திருந்தால் நீண்ட பதில் கிடைக்கிறது.
அமர்வு 12 – ஜெயராம் ரமேஷ்
இவரின் ஆங்கில உச்சரிப்பும், அமர்வில் தன்னை ப்ரெசென்ட் செய்த விதமும் பிடித்திருந்தது. ஆசியா ஜோதி நூலின் முக்கியத்துவத்தை அது வந்த காலத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும், காந்தி முதல் விவேகானந்தர் வரை அந்நூல் பாதித்த விதம் பற்றியும் விரிவாய் சொல்லி புரியவைத்தார். இவரின் சூழியல் பற்றிய பேச்சு நமக்குள் கேள்விகளை எழுப்புகிறது.
ஆவணப்படம்
சிலநொடிகளுக்குள் நாம் படத்துக்குள் சென்றுவிடுகிறோம்.தமிழ் கவிஞனின் நெஞ்சுரம் – unimaginable,இவர் தமிழுக்கு நல்ல கவி இரண்டும் படத்தின் மைய வசனங்கள்.படத்தின் சில வசனங்கள் அரங்கில் புரியவில்லை. பின் யூடூபில் பார்த்து தெரிந்துகொண்டேன்.படம் பார்த்த அத்தனை பேரும் நெகிழ்ந்துவிட்டார்கள்.
பகவதி அம்மாள்
ஆவணப்படத்தில் இவரிடம் விக்ரமாதித்தன் அன்பானவராவென கேட்பார்கள்? இவரின் பதில் : முகத்தை திருப்பிக்கொண்டு தெரியலையே, குழந்தைகளுக்கு நல்ல அப்பா, தமிழுக்கு நல்ல கவிஞர். நாம் அடையும் பதில் : எனக்கு அவரை ரொம்ப பிடிக்கும்,குழந்தைகளுக்கு நல்ல அப்பா, தமிழுக்கு நல்ல கவிஞர். அவருக்கு பொன்னாடை போர்த்தி சிறப்புச் செய்யும்போது பலமாய் கைதட்டினேன். அவருக்கு நாம் செய்யும் மரியாதை.
விக்ரமாதித்தன்
இடைவேளையில் வெளியேயிருந்த பேனருக்கு அருகில் இவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். அவரை அருகில் பார்த்தேன். வண்ணதாசன் சொன்னபடி மூக்கு, முழியை தாண்டிய ஒளி அவரிடம் உள்ளது. தோலில் தெரியும் ஒரு தேஜஸ்.குருத்தாகும் மூத்தவர்.
நாஞ்சில் நாடன்
2018 ஊட்டி காவிய முகாம் முதல் இவர் பேசும்போது அருகிலிருந்து கேட்டுக்கொண்டிருக்கிறேன். தாத்தா தன் பேரனிடம் பேசும் கனிவு இவரிடம் வெளிப்படுகிறது. கனிவும், இனிமையும் கலந்த பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம். விருது விழா தொடங்குவதற்கு முன்னாடி அரங்கில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அவருக்கு பின்னாடி இடதுபக்கம் உட்கார்ந்து கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன். பாம்புகளைப் பற்றி சொன்னார்.4% பாம்புகள்தான் விஷமுள்ளது. நாம் பாம்பை கண்ணால் கண்டாலே அடித்துக் கொன்றுவிடுகிறோம்னு கவலைப்பட்டார். விஷமேயில்லாத பாம்பை ஏன்கொல்லவேண்டும்? அதுவும் பாம்பு நேராய் கொத்தினால் விஷமேறாது, கொஞ்சம் சாய்வாக கொத்தினால்தான் விஷமேறும் விஷயங்கள் ஆர்வமான தகவல்கள்.கேட்கக் கேட்க பாம்பை பற்றிய பயம் குறைந்துகொண்டே வந்தது.இன்னும் கொஞ்சம் நேரம் பாம்பைப் பற்றி இவரிடம் கேட்டால் பாம்பை கையில் பிடித்து விளையாடிவிடுவேன்.கல்வி பற்றியும், குழந்தைகளுக்கு போதிப்பதில் பெற்றோரின் பங்கு பற்றியும், இன்றைய தலைமுறைக்கு மீன் வாங்குவது போன்ற விசயத்தில் உள்ள அறியாமை பற்றியும் சொன்னார். அடுத்து மீனைப் பற்றி நிறைய படிக்க வேண்டும், பார்த்தவுடனே அதன் குணங்கள் பற்றி சொல்லும் அறிவையும் வளர்த்துக் கொள்ளவேண்டும். கிராமத்தில் பிறந்ததால் அடைந்த அனுகூலங்கள் பற்றியும் நகர வாழ்மக்கள் இழக்கும் அறிவுகள் பற்றியும் சொன்னார். தகவல் பொதிந்த, மேலும் தெரிந்துகொள்ள தூண்டும், ஆர்வமான உரையாடல்.
ஆணவம்
சோ.தர்மன் தமிழக கூத்துக்கலைகள் நலிவடைந்ததைப்பற்றி தன் அமர்வில் சொன்னார். அதிலிருந்து புரிந்துகொண்டது கலைஞர்களுக்கு ஆணவம்/நிமிர்வு எந்த அளவு முக்கியம். கலைஞன் தன் நிமிர்வைவிட்டு விலகும்போது கலையின் மதிப்பு வீழ்கிறது. அது கலைஞனையும் வீழ்த்துகிறது.தன் கலையின் முக்கியத்துவத்தை உணர்ந்து நிமிர்வு குறையாமல் வாழும் படைப்பாளிகள் கலையை நிலைநிறுத்துகிறார்கள்.
பணிவு
விக்ரமாதித்தன் அமர்வில் அவரிடம் பணிந்துவிட்டு பொன்னாடை போர்த்தினீர்கள். அது ஏனென்று யோசித்துக்கொண்டிருந்தேன்? அவரின் ஆவண படத்தையும் உங்களின் மதிப்புரையையும் கேட்ட பின் விடை கிடைத்தது. ஆவணப் படத்தில் மரத்தின் அடியில் உட்கார்ந்து கொண்டு தமிழ் கவிஞனின் நெஞ்சுரத்தை பற்றி பேசுகிறார். Unimaginable என்று சொல்லி வழக்கம்போல் சிரிக்கிறார். நீங்கள் அவரை சங்ககாலம் முதல் இன்றுவரை உள்ள தொடர்ச்சியில் வைக்கிறீர்கள்.இவர் அந்த நெச்சுரமில்லாமல் வேறு திசையில் போயிருந்தால் தமிழன்னையை சுமக்கும் பல்லக்கு கொஞ்சம் சரிந்திருக்கும். தன் கால் புண்ணானாலும் பல்லக்கை சுமக்கிறார். அந்த காலுக்கு மருந்து தடவ பணிந்தீர்கள்.
உணவு
நான் வெளியில்தங்கியிருந்தேன். அதனால் காலையுணவை அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்துவிடுவேன். காலையுணவைப்பற்றி தெரியவில்லை. இரண்டு நாட்களும்
மதிய உணவு சிறப்பு. சனிக்கிழமை மதிய உணவில் இருந்த அல்வா தரம். இதன் ருசி 2019 ஏப்ரலில் கோவையில் நடந்த உங்கள் கட்டண உரையில் சாப்பிட்ட அல்வாவின் ருசிக்கு ரொம்பப் பக்கம்.அது நான் சாப்பிட்ட சிறந்த அல்வாக்களில் ஒன்று. இரண்டு நாளும் இரவுணவும் சிறப்பு. தேனீர் மட்டும் இரண்டுதரம் குடிக்க விரும்புமளவுக்கு இன்னும் கொஞ்சம் சுவையாயிருந்திருக்கலாம்.
நான் பெற்றது
இது நான் கலந்து கொள்ளும் முதல் விஷ்ணுபுரம் விழா. ஜா.தீபாவின் சிறுகதைகள் மற்றும் காளி பிரசாத்தின் தம்மம் தந்தவன் மட்டும் வாசித்திருந்தேன். இரண்டு நாள் நிகழ்வில் நான் என்ன பெற்றேன், என் அகம் என்ன பெற்றது? அகம் பெற்றது முழுவதும் இப்பொழுது தெரியவில்லை. விழா முடிந்தபின் நான் உணர்ந்தது எனக்கும் எழுத்தாளர்களுக்கும் இடையே இருக்கும் திரை விலகியது. உதாரணமாக 2018 ஊட்டி காவிய முகாமில் சுஷில்குமாரை பார்த்தேன்.இந்த விழாவில் அமர்வு முடிந்தபின் பார்த்த சுஷில்குமார் கொஞ்சம்தெளிவாய் தெரிந்தார். எனக்கும் அவருக்குமிடையே சிறு நூலால் கட்டப்பட்ட கனெக்சனை உணரமுடிகிறது.இனி அவர் புத்தகத்தை வாசிக்கும்போது வாசிப்பு கொஞ்சம் நெருக்கமானதாய் இருக்குமென நினைக்கிறேன்.
கவிஞர் விக்ரமாதித்தன் மற்றும் பகவதி அம்மாள் அவர்களுக்கும்,விஷ்ணுபுரம் வட்ட நண்பர்களுக்கும், உங்களுக்கும், விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கும், அரங்கில் கேள்வி கேட்டவர்களுக்கும், என்னைப்போல் கலந்து கொண்டு விழா சூழலை கொண்டுவந்த சக பங்கேற்பாளர்களுக்கும் நன்றிகள்.
அன்புடன்
மோகன் நடராஜ்