விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்
பன்னிரெண்டு ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெறும் விஷ்ணுபுரம் விருது விழா எனக்கு முதல் முறை. ”முதல் முறை” எப்பொழுதுமே நினைவுப் பெட்டகத்துக்கு அணுக்கமானது. இந்த ஒரு வருட காலமாக எத்தனை முதல்முறை அனுபவங்களை நான் சேமித்திருக்கிறேன். இந்த வருடத்தின் துவக்கத்தில் நிகழ்ந்த மதாரின் கவிதை வெளியீட்டு விழாவில் தான் உங்களை முதல் முறை சந்தித்தேன். அதற்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே கடிதங்கள் வாயிலாக எண்ணங்களின் வழியாக உங்களுடன் உரையாடியிருக்கிறேன் என்றாலும் முதல் முறை சந்திப்பு என்பது பொக்கிஷமானது. அங்கிருந்து தான் எனக்கான என் நண்பர்கள் அறிமுகமாக ஆரம்பித்தார்கள்.
பள்ளியிலோ கல்லூரியிலோ உள்ளொடுங்கி ஓரிரண்டு நண்பர்களோடு சுருங்கி தனிமையில் சிந்தனைகளோடு தான் வாழ்க்கையை எதிர்கொண்டிருக்கிறேன். பின்னும் குறிக்கோள்கள் இலட்சியம் எனும் பாதையில் எந்த உணர்வுகளுக்கும், புனைவுலகங்களுக்கும் நான் இடம் கொடுத்ததில்லை. உலகியலில் இருபத்தியெட்டு வருடங்களாக உழன்று பலதரப்பட்ட தத்தளிப்புகளோடு நின்றிருக்கும் போது கிடைத்த பொக்கிஷம் விஷ்ணுபுரமும், நீங்களும். அங்கிருந்து இப்போது இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. சென்ற வருடம் வாசிப்பின் அறிதலின் ஆண்டாக அமைந்தது என்றால் இந்த ஆண்டு செயலின் ஆண்டாக அமைந்தது.
இறுதி விடைபெறுதலின் போது கிருஷ்ணன் சார் உங்களிடம் “ரம்யாவை சந்தித்தது ஆறு மாதங்கள் தான் ஆகியிருக்கிறது என்பதை நம்ப முடியுதா சார்?” என்று கேட்டு சிரித்தார். அவரிடம் பேசிக் கொண்டிருக்கும்போது “சார். புதிய வாசகர் சந்திப்பு நிகழ்ந்து ஆறு மாதம் தான் ஆகியிருக்கிறது என்பதை நம்பவே முடியவில்லை” என்றேன். ”இரண்டு நாட்கள் சந்திப்பில் நாம் வாழ்க்கூடிய வாழ்க்கை நுணுக்கமானது. விரித்து விரித்து பொருள் கொள்ளக்கூடியது. சாதாரணமாக வாழ்பவர்களுக்கு இந்த அடர்த்தியான காலம் கிடைப்பதில்லை” என்றார் அவர்.
ஜிட்டு மரணத்தைப் பற்றிக் கூறும் போது “மரணம் என்பதன் இறுதியை ஒவ்வொரு நிகழ்வின்/ நாளின்/ உணர்ச்சியின்/ வெற்றி/ தோல்வியின்/ காதலின்/ காமத்தின்/ உணர்வுகளின்/பற்றுகளின் இறுதியிலேயே அழித்து அதற்கு மரணத்தைப் பரிசளிக்க முடியுமானால் காலமற்ற பரிமாணத்தில் வாழலாம்.” அதன் வழி காலம் நீட்டிக்கப்படுகிறது என்ற கருத்தை நான் அடைந்தேன். ஆனால் அப்படி நீட்டிக் கொள்வதற்கு ஏதுவான வாழ்க்கையை நாம் வாழ் வேண்டும். வாசிப்பில் அது சாத்தியமாகிறது. இயற்கையில் கரைகையில் அது சாத்தியமாகிறது. ஆனால் அதைவிடவும் செயல்களின் வழி மேலும் சாத்தியமாகிறது. சந்திப்புகளும், புதிய மனிதர்களுமே அதை மேலும் சாத்தியப்படுத்துகிறார்கள் என்று தோன்றுகிறது.
இந்த ஒரு வருடத்தில் புதியவாசகர் சந்திப்பு, மதுரை குக்கூ நிகழ்வு, குரு பூர்ணிமா நிகழ்வு, கோவை கவிதை முகாம், ஊரடங்கு கால ஜூம் கலை நிகழ்வுகள் இவை யாவற்றிற்கும் முத்தாய்ப்பாக விஷ்ணுபுரம் விருது விழா நிகழ்ந்தமைந்திருக்கிறது. இவற்றின் வாயிலாக இந்த ஒரு வருட காலம் என்பது மிக நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து விட்டாற் போன்ற பிரமையைத் தருகிறது.
விஷ்ணுபுரம் விழா என்று பேசப்பட ஆரம்பித்ததிலிருந்து அது தொடர்பான ஆளுமைகளிலேயே முழு கவனமும் எனக்கு இருந்தது. முதலில் விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என வாசித்து அவரைப் புரிய முற்பட்டேன். அதைத் தொகுத்துக் கொள்ள கவிஞர் லஷ்மி மணிவண்ணன், மதார், ஆனந்த் குமார் ஆகியோருடனான உரையாடல் உதவியது. பின்னும் குழுவாக கவிதைகள் வாசித்தல், அதைப் பற்றிய கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுதல் என ஜெயராம், ஜி.எஸ்.எஸ்.வி. நவீன் ஆகியோருடன் பயணத்தைத் தொடர்ந்தேன். தொகுத்துக் கொள்ள கட்டுரை எழுதியபின் ஒரு நிறைவு ஏற்பட்டது. அதன் பின் விருந்தினர்களாக அழைக்கப்பட்ட எட்டு ஆளுமைகளையும் ஒவ்வொருவராக அவர்களின் படைப்புகள் வழியாக அணுக்கமாக்கிக் கொண்டேன்.
அவர்களில் இருவரைப் பற்றி மட்டுமே கட்டுரை எழுத முடிந்தது. அதன் பின் சிறப்பு விருந்தினர்களைப் பற்றிய தயாரிப்புகளை ஆரம்பித்தேன். மனதிற்கு அணுக்கமாகியிருந்த வீரபத்ருடு கவிதைகளை முழுவதுமாக அறிந்து கொள்ள அவரின் மொழிபெயர்ப்புக் கவிதைகளும், ராஜூ அவர்கள் எழுதிய குறிப்புகளும், ஜெ பகிர்ந்த கட்டுரைகளும் பெரிதும் உதவின. இஸ்மாயில் எழுதிய கட்டுரையை நான் மொழி பெயர்த்தது எனக்கு அறிதலாக இருந்தது. நண்பர்களுடன் இணைந்து https://vishnupuramguests2021.wordpress.com/ என்ற தளத்தை உருவாக்கி விழாவில் கலந்து கொள்ளும் ஆளுமைகளைப் பற்றிய தகவல்களைத் தொகுத்துக் கொண்டேன்.
விக்கி அண்ணாச்சி கட்டுரைகளை தொகுத்தபோது சாம்ராஜ் அவர்களின் கட்டுரை விடுபட்டதை அவர் என்னிடம் கூறியபோது ஏனோ மகிழ்வாக இருந்தது. இத்துணை கவனமாக கவனித்து தளத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் என்று நினைத்து மகிழ்ந்தேன். விழா அன்று குறிப்பாக அதிகப்படியான மக்கள் அதை பார்வையிட்டிருந்தார்கள். சாம்ராஜ் அவர்களின் கட்டுரையை நீங்கள் உங்கள் சிறப்புரையில் குறிப்பிட்டு “எத்திசைச் செல்லினும்” என்பதற்கு விளக்கமளித்தீர்கள். இன்று சாம்ராஜ் அவர்களின் கட்டுரையை மீண்டும் படித்து அவற்றை பதிவேற்றினேன். இனி எப்போதும் உதவப்போகும் தளம் அது.
முதல் நாள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்ட நாளாக அமைந்தது. இடைப்பட்ட குறுகிய இடைவேளை நேரத்திலும் ஆளுமைகளை சந்திப்பது உரையாடுவது என கழிந்தது. கோகுல்பிரசாத், கோபாலகிருஷ்ணன், காளிபிரசாத், சுஷில்குமார், செந்தில் ஜெகன்நாதன், ஜா.தீபா, பா.திருச்செந்தாழை, சோ.தர்மன் என எட்டு ஆளுமைகளைப் பற்றியும் அவர்களின் படைப்புலகம் குறித்த உரையாடலாகவும் அமர்வுகள் அமைந்தது. சோ.தர்மன் ஐயா மற்றும் கோபாலகிருஷ்ணன் அவர்களைத் தவிர பிற அனைத்து ஆளுமைகளும் சமகால புதிய எழுத்தாளுமைகள் அல்லது துறைசார் எழுத்தாளர்கள் எனலாம்.
எனவே இவர்களைப் பற்றிய அறிமுகத்தோடு சமகாலத்தில் கவனிக்கத்தக்க பிற எழுத்தாளுமைகளையும் அறிமுகம் செய்து கொண்டேன். மயிலன் ஜி சின்னப்பன், கார்த்திக் பால சுப்ரமணியன் என மேலும் சிலரின் எழுத்துக்கள் இந்தத் தேடலில் அறிமுகமானது. நண்பர்களுடன் கடந்த மாதம் முழுவதும் நிகழ்கால எழுத்தாளுமைகளைப் பற்றி அவர்களின் புனைவுலகம் பற்றி கலந்துரையாடுவது விவாதிப்பது என அறிதலான பயணமாக அமைந்தது. செந்தில் ஜெகன் நாதன் மற்றும் சுஷில்குமாரிடமெல்லாம் பேசக் கிடைத்த தருணங்களையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு அறிதலைப் பெருக்கிக் கொண்டேன் எனலாம்.
தமிழினி மின்னிதழ் அது தேர்வு செய்யும் கதைகளுக்காக புகழ் பெற்றது. ஒரு படைப்பை கோகுல்பிரசாத் தேர்வு செய்யும் விதத்தைப் பற்றிச் சொன்ன போது அதிலிருக்கும் நேர்மை, உண்மை, கூர்மை மற்றும் மேக்ரோ/மைக்ரோ வாழ்வுச் சித்தரிப்புகளை கவனத்தில் கொள்வதாகச் சொன்னது அறிதலாக இருந்தது.
ஆளுமையும் எழுத்தாளருமான ஜா.தீபா அவர்களுக்கு நெறியாளராக என்னை சேர்த்ததிலிருந்து அவருடைய புனைவுலகம் வழியாக, வேலைகள் வழியாக அவர்களுக்குள் புக முற்பட்டேன். கதைகளை வாசித்து முடித்துவிட்டு அதைப் பற்றி தொகுத்துக் கொள்ள எழுதிப் பார்த்தேன். அவர்களுக்கு அனுப்பினேன். அவர்களுடன் உரையாடினேன். அது மேலும் அவர்களின் உலகத்தை அணுக்கமாக்கிக் கொள்ள உதவியது. ஆவணப்படங்களுக்காக அவர் கடந்து வந்த வலி மிகுந்த பாதைகள் அளப்பரியது. விசாகபட்டினத்தில் கங்காவரம் ஆவணப்படப் பிடிப்பின் போது கைதாகி காவல் நிலையம் சென்றது, பொதிகை மலை உச்சியை முதலில் அடைந்த பெண் என சவால் நிறைந்த ஆவணப்படத் தயரிப்புப் பணிகள் அவருடையது. இது தவிரவும் சினிமா உலகிற்குள் செல்லும் பெண்களைச் சுற்றி அவர்களின் குடும்பங்கள் இடும் கட்டுப்பாடுகள் என இன்னல்களையும் தாண்டி ஒரு வெற்றிகரமான பெண்மணியாகத் திகழ்வது ஊக்கமாக இருந்தது.
ஊடகம் சார்ந்த பல முக்கிய நிறுவனங்களுக்கு (எண்டமோல், விகடன்) கிரியேடிவ் கண்சல்டண்ட் ஆக அவர் இருப்பது குறிப்பிடத்ததக்கது. துறை சார்ந்த ஒரு எழுத்தாளராகவும் புனைவு எழுத்தாளராகவும் இருந்து கொண்டு இயக்குனராகும் கனவோடு பயணிக்கும் அவர்களின் ஆளுமையும் கனவும் செயலூக்கமும் மிகப் பிடித்துப் போனது. அந்த அமர்வில் “Identity writing” சார்ந்து சுழன்ற கேள்விகளும் அதற்கு தீபாவின் நிலைப்பாடும் என சென்ற விவாதம் எனக்குள் பல கேள்விகளை உருவாக்கியது. சுஷில்குமார், செந்தில் ஜெகன்நாதன் ஆகியோரின் அரங்கிலும் கூட இந்த ஒரு கருத்துடன் கேள்விகள் வந்த வண்ணமாய் அமைந்தன.
இந்த எட்டு அமர்வுகளையும் தொகுத்துக் கொள்ள அடுத்த நாள் காலை ஜெ -வுடனான தேனீர் நடைபயணம் (சின்ன வாக்) உதவியது. புதிய எழுத்தாளர்கள் தங்கள் உலகம் சார்ந்து தாங்கள் காணக்கூடிய விடயங்கள், உணர்வுகள் சார்ந்து கட்டற்று எழுதக்கூடியதைக் காணமுடிகிறது. இங்கிருந்து ஒரு நான்கு வருடத்தில் அவர்கள் என்ன எழுதப் போகிறார்கள் என்பதைத்தான் பார்க்க வேண்டும் என்றார். அப்படியானால் புதிய எழுத்தாளுமைகளுக்கு இந்த அரங்கு மேலும் தொடர்ந்து பயணிக்க உந்துகோலாக மட்டுமே முதன்மையாக எடுத்துக் கொள்ளக் கூடியது என்பதை உணர்ந்தேன்.
மூன்று நாட்களும் காலை நடைபயணத்தில் நகைப்பும் பேச்சுகளும், அனுபவப் பகிர்தலைத் தாண்டி ஜெ வாசிப்பை நோக்கி எழுத்தை நோக்கி பல நல்ல பார்வைகளைத் திறந்து வைத்தார். கிருஷ்ணன் சார், சீனு, விஷால் ராஜா மற்றும் அஜிதனின் கேள்விகள் மற்றும் நுணுக்கமான பார்வைகள் இந்த உரையாடல்களை மேலும் அறிதலை நோக்கிச் செலுத்தியது.
கட்டற்று எழுதுவது, தானாக வருவதை எழுதுவது அதைப்பற்றிய விமர்சனத்தை வைக்கும் போது ”கலை” என்ற ஒற்றைச் சொல்லில் அவற்றையெல்லாம் நிராகரிப்பது பற்றிய செயலை நண்பர் ஒருவர் எழுப்பினார். ஜெ அந்தக் கேள்விக்கு ”சிலம்பாட்டத்தில் ஆசானாக இருப்பவரும் கட்டற்று எந்த சிந்தனையுமில்லாமல் சிலம்படிகளை எதிர் கொள்வார். அது கலை. ஆனால் சிலம்பாட்டம் என்ற கலையைப் பற்றி ஏதுமறியாமல் அதை எதிர் கொள்ளும் ஒரு நபரும் கலை என்று சொன்னால் அது தகாது. முதலில் கட்டற்று தொடங்கினாலும் எழுதுபவனுக்கு தன்னுடைய கலையைப் பற்றிய முழுமையான அறிமுகம் காலப்போக்கில் நிகழ வேண்டும். அந்தக் கலையின் கோட்பாடுகளைப் பயில வேண்டும். அது சார்ந்த விரிவான அறிமுகம் இருக்க வேண்டும். அது கலை என்ற பிரக்ஞை இருக்க வேண்டும். தமிழில் எழுதக் கூடிய ஒரு படைப்பாளிக்கு தமிழ் இலக்கியத்தில் தான் நிற்கக் கூடிய இடத்தைப் பற்றிய அறிதலும் புரிதலும் இருக்க வேண்டும். தன் கலை கடந்து வந்த பாதையை அவன் சரிவர புரிந்திருக்க வேண்டும். அதன் பின் தன் எழுத்தை மதிப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டும். தன்னை நோக்கி வரும் விமர்சனத்தை அவன் கூர்மையாக கவனிக்க வேண்டும். உள்ளீடற்ற விமர்சனத்தை புறந்தள்ளலாம். ஆனால் ஒரு எழுத்தைக் கவனித்து அது நோக்கி வைக்கப்படும் அறிவார்ந்த விமர்சனத்தை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார். ”எழுத்தாளனோ வாசகனோ தன் மொழி சார்ந்த முக்கியப் படைப்புகளையும், முக்கியமான இந்தியப் படைப்புகளையும், உலக இலக்கியங்களையும், ஆளுமைகளையும் அறிமுகம் செய்து கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அவன் நின்று கொண்டிருக்கும் இடம் தெரியும்” என்றார்.
தொடர்ந்து விஷால் “stylist writing” பற்றிய கேள்வியை முன் வைத்தார். அது பற்றிய விளக்கமும், எப்படி stylist writing ஒரு inferior writing ஆக இருக்கிறது என்பதையும் ஜெ விளக்கினார். ”ஒரு படைப்பை வாசிக்கும் போது resistance இல்லாமல் இருப்பது ஒரு inferior writing. ஒரு நல்ல படைப்பு முதலில் தடையைக் கொடுக்க வேண்டும். ஆனால் செயற்கையாக அந்த resistance உருவாக்கப்பட்டால் அதுவும் நல்ல படைப்பல்ல” என்றார். “மரண வாக்குமூலம் கொடுப்பவன் stylist ஆக இருக்க முடியாது” என்ற வரியோடும், உலக அளவிலும், தமிழிலும் அப்படியான stylist writers பற்றிய அறிதலோடும் அந்த உரையாடலை நிறைத்துக் கொண்டேன்.
ஏற்கனவே புதிய வாசகர் சந்திப்பில் உலக இலக்கியங்களையும், எழுத்தாளர்களையும் அறிமுகப்படுத்தியிருந்தாலும், மேலும் ஒரு முறை வேறுவகையில் பிரித்து அவர்களை அறிமுகப்படுத்திக் கொண்டது போல அமைந்தது ஜெ -வின் காலை உரையாடல்கள்.
”ஒரு புத்தகம் உதவாது என்பதை எப்போது முடிவு செய்து படிப்பதை நிறுத்துவீர்கள்?” என்று கிருஷ்ணன் சார் ஜெ -விடம் கேட்டபோது இத்தனை வாசிப்புக்குப் பின்னும் ஒரு மாணவனாக நின்று ஆசிரியரிடம் கேள்வி கேட்டு தெளிவுபடுத்திக் கொள்கிறார் என்று நினைத்தேன். ஒன்றில் ஐந்து பங்கு பக்கத்திலும் எதுவும் தெளிவாக எடுத்தியம்பப் படவில்லை எனில் அதை நிறுத்துவது நல்லது என்று ஜெ கூறினார். மிகச் சிறிய விடயமாக இருந்தாலும் வாசகர்களுக்கு பயனுள்ளது.
கோட்பாடுகளில் சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதைப் பற்றிச் சொல்லும்போது கட்டற்று காட்டாற்று வெள்ளம்போல பேசிய சோ.தர்மன் ஐயாவின் எழுத்தை உதாரணம் காட்டினார். தான் ஒரு எழுத்தாளன். வேறு எந்த இஸத்துக்குள்ளும் என்னை அடைக்காதே என்பது ஒரு கலைஞனால் தான் சொல்ல முடியும் என்றார். ஒட்டுமொத்தமாக இந்த தேனீர் நடை அறிதலை நோக்கிய நடையாக அமைந்தது எனலாம்.
இரண்டாம் நாளின் சிறப்பு விருந்தினர்களான இயக்குனர் வசந்த் சாய், கவிஞர் சின்ன வீரபத்ருடு, ஜெய்ராம் ரமேஷ், கவிஞர் விக்ரமாதித்யன் ஆகியோரின் அரங்குகள் இனிமையாக அமைந்தது. சின்ன வீரபத்ருடு அவர்களின் கவிதைகள் அணுக்கமாகியது போலவே அவரின் உணர்வுப்பூர்வமான பேச்சும் மனதிற்கு அணுக்கமாகியது. அரங்குக்குப் பின்னான உரையாடளில் அவர் ஜெ -வை வியந்து கொண்டே இருந்தார். தன்னுடைய வேலையால் (இ.ஆ.ப) இழந்தது ஒன்று உண்டானால் ஜெயமோகன் போல இப்படி ஒரு முன்னெடுப்பை செய்ய முடியாமல் இருந்தது தான். இத்தனை சுய நலமில்லாமல் இலக்கியத்திற்காக தலை கொடுக்க முடியாமல் இருப்பதே தான் இழந்தது என்றார். சுற்றி நின்று அவரிடம் ஆர்வமாகப் பேசிக் கொண்டிருந்த எங்களை ஒருமுறை வெறித்து நோக்கிவிட்டு “எங்கள் இளைஞர்களெல்லாம் சினிமாக்களுக்கு பின் தான் செல்கிறார்கள். உங்களைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது” என்று பெருமூச்செறிந்தார். தெலுங்கு இலக்கிய உலகைப் பற்றியும் குறிப்பாக கவிதையின் போக்கு பற்றியும் ஆர்வமுடன் பகிர்ந்து கொண்டார். மேலும் தமிழ்-தெலுங்கு மொழி இலக்கியத்திற்கான சில முன்னெடுப்புகளை ஜெ -வின் உதவியோடும், ஆர்வமான உங்களுடனும் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
மாலையில் ஒளிபரப்பப்பட்ட விக்கி அண்ணாச்சியின் ஆவணப்படம் நெகிழ்ச்சியாக இருந்தது. திரளாக அமர்ந்து விக்கி அண்ணாச்சியுடனும், பகவதி அம்மாவுடனும் அதைப் பார்த்தது அந்த நெகிழ்வை மேலும் கூட்டியது எனலாம். எனக்கு அருகிலிருந்த சீனு கண்கள் வேர்த்து அழுது கொண்டிருந்தார். “There is no miracle. Poetry itself a miracle” என்ற வரி ஒலித்துக் கொண்டே இருந்தது. கவிஞர் விக்ரமாதித்யன் எனும் தமிழ்ப்பாணனும் அப்படியான miracle தான். மிக இயல்பாக எந்த செயற்கைத் தோற்றமும் கலந்துவிடாது கவிஞரைக் காணிக்க வேண்டும் என்று ஆனந்த் குமார் முயற்சித்துக் கொண்டிருந்ததை அருகமைந்து பார்த்துக் கொண்டிருந்தவள் என்கிற முறையில் அது அப்படியாக அமைந்து அரங்கு நெகிழ்ந்ததைக் கண்டு கலங்கிவிட்டேன்.
மூன்றாவது நாள் காலையும் மாலையுமென சின்ன நடைகளும் பகல் முழுவதுமாக ஆசானுடன் உரையாடளுமாக தொடர்ந்தது. விக்கிபீடியாவுக்கான மாற்றாக பங்களாபீடியாவைப் போல தமிழில் கொண்டு வரும் விடயம் இறுதியாக எல்லோர் மனதில் எஞ்சியது. அதை சாத்தியப்படுத்த முடியுமா என்ற ஒருவரின் கேள்விக்கு ஜெ, “உதவிக்கு ஆட்கள் இருந்தால் மூன்று வருடம் இல்லையேல் பத்து வருடத்தில் நானே ஒற்றை ஆளாக செய்துவிடுவேன்” என்றார். அந்த ஊக்கம் யாவருக்கும் உந்து கோலாக அமைந்தது. அதை சாத்தியப்படுத்த நாங்களும் உள்ளோம் என்று ஜெ -விடம் சொன்னோம். அடுத்த வருடம் அந்தப் பணியை ஆரம்பித்தால் நித்தமும் அன்றாட வேலைகளில் ஒன்றாக பாவித்து அவற்றை செய்து முடிக்கலாம் என்று தோன்றியது. இந்த மாற்று ஏற்பாடு பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது ஏனோ அழிசி ஸ்ரீநி உடன் நினைவிற்கு வந்தார். இந்த முறை தன்னுடைய பதிப்பகத்திலிருந்து விற்பனைக்காக புத்தக ஸ்டால் விழாவில் அமைத்திருந்தார். அவருடன் பேசிக் கொண்டிருக்கும்போது ஒட்டுமொத்த அவரின் உழைப்பையும் ஒரு நொடியில் அழித்துவிட்ட விடயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அமேசன் கிண்டிலைப் போல ஒரு க்ளவுடை நாம் ஏன் உருவாக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டிருந்தேன். இப்போதைக்கு மாற்று வழிகள் பலவற்றையும் யோசித்துக் கொண்டிருக்கிறார். அந்த முன்னெடுப்பும் மாற்று யோசனைகளும் கூட யாவரும் சேர்ந்து செய்யக் கூடியது தான். இத்தனைக்குப் பிறகும் ஒரு செயல்வீரராக எந்தச் சுணக்கமும் இல்லாமல் பதிப்பாளராக பணியை அவர் தொடர்வது மகிழ்வாக இருந்தது. விக்கிபீடியாவுக்கான மாற்று தளமும், அழிசி ஸ்ரீநி கிண்டிலில் இலவசமாகக் கொணர்ந்து தற்போது அழிக்கப்பட்ட நூல்களுக்கு மாற்றான ஒரு தளமும் என செல்ல வேண்டிய பாதை கண் முன் இருந்தது.
மேலும் இறுதி நாளிலும் நண்பர்கள், வாசகர்கள், எழுத்தாளர்களின் கேள்விகளுக்கு ஜெ பதில் சொல்லிக் கொண்டிருந்தார். மாலை நண்பர்களைப் பிரியும் மெல்லிய சோகம் படர்ந்து வாட்ட ஆரம்பித்துவிட்டது. ஜெ வை வழியனுப்பிவிட்ட பிறகு, விக்கி அண்ணாச்சி, லஷ்மி மணிவண்ணன், பகவதி அம்மாவுடன் அதே பேருந்தில் நானும் வீடு வந்து சேர்ந்தேன். கோவையில் இறங்கியதிலிருந்து செல்லும் வரை வழியனுப்பி வைத்த நண்பர்கள் சூழ நான் இருந்ததும் என் வாழ்வில் முதல் முறை. சுஷில், ஆனந்த் குமார், குமார்ஷண்முகம், ஷாகுல் அண்ணா, சுபா, செந்தில், விஜய சூரியன் அண்ணா என அன்போடு அரவணைத்துக் கொண்டவர்களுக்காக இறைவனுக்கு எப்போதும் நன்றி சொல்வேன். வந்த பிறகும் இந்த இரண்டு நாட்களும் பிரிவாற்றாமை துரத்திக் கொண்டே, பேசிக் கொண்டே இருக்கிறோம்.
உலகாயதத்தில் முழுவதுமாக மூழ்கிவிடும் நபர்களும் இருக்கிறார்கள் தாம். ஆனால் அப்படியல்லாது மனிதர்கள் மேல் தீரா அன்பு கொண்ட பித்தர்களை என் வாழ்வில் கண்டு கொண்டமைக்கு மகிழ்கிறேன். சீனுவும், செல்வேந்திரனும் பேசும் போது அத்துணை அன்பை உணர முடிகிறது. நிகிதா, ஜெயராம், அஜி இத்துணை அணுக்கமாகிப் போவார்கள் என்று நினைத்திருக்கவில்லை. யாவரும் அன்றாடங்களைத் தொடர சிரமப்படுவது வலியை மேலும் கூட்டி அணுக்கமாக்குகிறது. சுஷில்குமாரின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பும் (சப்தாவர்ணம்), கவிஞர் ஆனந்த் குமாரின் முதல் கவிதைத் தொகுப்பும் (டிப் டிப் டிப்) வெளியிடும்போது எனக்கே நிகழ்ந்தது போல பேருவகை அடைந்தேன். அத்தகைய எண்ணம் ஏற்படும் அளவு அன்போடும், அதே சமயம் கண்டிப்போடும் இருப்பதும், என் இந்த இலக்கியப் பயணத்தை ஊக்குவிப்பதுமென அவர்கள் இருப்பது நிறைவளிக்கிறது. ஊர் வந்து சேர்ந்து அலுவலகம் செல்லும் முன் காலை ஆனந்த்ஸ்ரீநி மாமாவிடம் பேசியது ஒட்டுமொத்தமாக தொகுத்துக் கொள்ளவும், மேலும் பயணத்தைத் தொடரவும் உதவியது. இன்னும் உலகாயதத்தில் மூழ்கவியலாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறேன் எனலாம். மெதுவாக ஒட்டியும் ஒட்டாமலும் என இங்கே ஒளிந்து கொள்ள முற்படுகிறேன்.
இந்த வருடம் நிறைவடையவிருக்கிறது ஜெ. விஷ்ணுபுர விழாவுடன் இதனை நிறைவு செய்து கொள்கிறேன். வாசிப்பையும், எழுத்தையும், அறிதலையும் தாண்டி மனிதர்களை இந்த ஆண்டில் சேர்த்திருக்கிறேன் எனலாம். தனியனென உணரச் செய்யவியலாமல் எத்துணை இனிய நினைவுகளை இவர்கள் பரிசளித்திருக்கிறார்கள். மீட்ட மீட்ட விரிந்து கொண்டே செல்லும் காலம். இந்த 2021 மட்டும் இதுகாறும் நான் வாழ்ந்த ஆண்டுகளிலேயே மிக நீண்ட ஆண்டு எனலாம். இனி வரக்கூடிய காலங்களையும் நான் விரித்து விரித்து நீட்டி வாழ்ந்து கொண்டே இருப்பேன். சுஷில்குமாரின் சிறுகதைகளில் வரும் அப்பா தன் மகனை நோக்கி சொல்லக் கூடிய வரி ஒன்று உண்டு. “மனுசங்க தான் மொக்கா முக்கியம்… பணம் காசு மயிரெல்லாம் தானா வரும். எனக்குப் பொறவு ஒனக்கு நாலு பேரு வேணும்லா டே?” அப்படியான நாலு நல்ல மனிதர்களை என் வாழ்க்கைக்கு சேர்த்துக் கொண்ட ஆண்டாக இது அமைந்தது.
உங்களின் எழுத்துக்களின் வழியாகத்தான் இந்த கால நீட்டிப்பையும் மதுரத்தையும் அடைந்திருக்கிறேன். மேலும் மேலும் செயல்களின் ஆண்டாக அடுத்த வருடத்தை நிறைத்துக் கொள்வேன். இந்த ஆண்டின் அறிதலுக்காகவும், நினைவுகளின் மனிதர்களுக்காகவும், தருணங்களுக்காகவும் நன்றி ஜெ.
பிரேமையுடன்
இரம்யா.