விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-6

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

அறம் புத்தகத்தை 2013-இல் வாசித்ததில் இருந்து உங்களின் வாசகி ஆனேன். இது என்னுடைய முதல் கடிதம் (நீண்ட தயக்கங்ளுக்கு பின்).  விஷ்ணுபுரம் இலக்கிய விழாவின் உரைகளையும் புகைப்படத்தையும் பார்த்து Virtual Participant ஆக மாறினேன். நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவள், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் திட்ட மேலாளராகப் பணிபுரிகிறேன்.

என் வேலையும் மனமும் முற்றிலும் வேறுபட்டவை. சிறிது காலத்தில் தகவல் தொழில்நுட்ப கலாச்சாரம் காரணமாக தமிழ் கலாச்சாரம் மாறிவிடுமோ என்ற ஐயம் ஏற்பட்டதை இந்த இலக்கிய விழா நிகழ்வு மாற்றிவிட்டது. இந்தச் சந்திப்பில் சமூகப் பாகுபாடுகள் நீக்கப்பட்டதாக நம்புகிறேன்,  பல வெற்றிகரமான விருது விழாக்களை நடத்திட வேண்டுமென்ற ஆவலுடன் என் மனமார்ந்த வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

தமிழ் இலக்கியத்தைப் படிக்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன், அது என் மன அழுத்தத்தை நீக்குகிறது. ஒரு ஒரு வாசகியாக இலக்கியத்துடன் எப்படி இணைவது என்று தெரியவில்லை.

அன்புடன்

அனிதா

அன்புள்ள அனிதா,

இலக்கியத்துடன் இணைவது என்பது முதலில் தொடர்ச்சியாக வாசிப்பதுதான். அத்துடன் இலக்கிய அரங்குகளில் கலந்துகொள்வது, இணையுள்ளங்களைக் கண்டடைவது. என் தளத்தில் தொடர்ச்சியாக வெவ்வேறு இலக்கிய அரங்குகள் பற்றிய அறிவிப்புகள் வருகின்றன. தயக்கம் களைந்து அவற்றில் தொடர்புகொண்டு ஈடுபடலாம். இலக்கியம் இணையான இன்னொரு வாழ்க்கையை அளிக்கும்.

ஜெ

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் கலந்துகொண்டேன். ஒரு மகத்தான அனுபவம். நான் என்னைப்போன்ற இளம்வயதினரை மால்களிலும் சினிமாஹால்களிலும்தான் கண்டிருக்கிறேன். அவர்களின் உலகம் வேறு. அவர்களுடன் தொடர்புகொள்ள என்னால் முடிவதில்லை. விஷ்ணுபுரம் அரங்குக்கு தற்செயலாகவே வந்தேன். அங்கிருந்த அந்தக்கூட்டம் என்னை பிரமிக்க வைத்தது. அவ்வளவு இளைஞர்கள். ராஜபாளையம். ஸ்ரீவில்லிப்புத்தூர், திருச்சி என்று வெவ்வேறு ஊர்களில் இருந்தெல்லாம் வந்திருந்தார்கள். அத்தனை உத்வேகம் அவர்களுக்கு இலக்கியத்தின்மேல் இருக்கிறது. அற்புதமான இரண்டு நாட்கள். ஒவ்வொரு அரங்கும் பெரிய கல்விக்கூடம் மாதிரி எனக்கு இருந்தது.

இலக்கியம் ஒரு வாழ்க்கையாக எனக்கு ஆகவேண்டும் என்று நினைக்கிறேன். எழுதுகிறேனா இல்லையா என்பது முக்கியமல்ல. வாசிக்கவேண்டும். நிறைய தெரிந்துகொள்ளவேண்டும். அந்த திளைப்பில் வாழவேண்டும். அந்த ஏக்கத்தை விஷ்ணுபுரம் விருதுவிழா உருவாக்கியது.

விழாவில் ஜெய்ராம் ரமேஷ் பேசும்போது இங்கே அவரை வரவேண்டாமென்று சிலர் தடுத்ததாகச் சொன்னார். இப்படிப்பட்ட முயற்சிகளுக்குக்கூட எதிரிகள் இருப்பார்கள் என்பது ஆச்சரியமாக இருந்தது. அங்கே எவருக்கு எதிராகவும் எதுவும் சொல்லப்படவில்லை. ஏன் அந்த வெறுப்பு என்று புரியவில்லை.

எஸ்.தனஞ்சய்

அன்புள்ள தனஞ்சய்,

எந்தத் தீவிரச் செயல்பாட்டுக்கும் எளிய உலகியல் தரப்பிலிருந்து எதிர்ப்பும் காழ்ப்பும் உருவாகும். உங்கள் தனிவாழ்க்கையிலானாலும் சரி, விஷ்ணுபுரம் விழா போன்ற பொதுச்செயல்பாட்டிலானாலும் சரி. ஏனென்றால் தீவிரச்செயல்பாடு மற்றவர்களின் அற்பச் செயல்பாடுகளை கீழே தாழ்த்துகிறது. அவற்றின் அர்த்தமின்மையை அது சுட்டிக்காட்டுகிறது. இலக்கியச்செயல்பாட்டை அரசியல்வாதிகள், எளிமையான பாமரர் எதிர்பார்கள். ஏனென்றால் அடிப்படையில் அரசியல் போன்ற அதிகாரச்சண்டைகளுக்கும் அன்றாட வணிகச்சூழ்ச்சிகளுக்கும் நேர் எதிராக ஓர் ஆழமான விஷயத்தை இலக்கியம் முன்வைக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைவல்லினம், ஜனவரி 2022 இதழ்
அடுத்த கட்டுரைஇலக்கியம் பாடமாக ஆகலாமா?