விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்-5

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

வணக்கம் சார்,

‘வேதத்தில் கவி எனும் சொல் முழுமுதற் பரம்பொருளைச் சுட்டும் ஒரு சொல்லாகவே பயன் படுத்தப்பட்டிருக்கின்றது. கவிதை என்பது ஒரு ரசவாதம், அது ஒரு கவிஞனுக்குள் நிகழ்கிறது, அவ்வாறு நிகழும் அந்த நொடியை, இடத்தை ஒரு விரல் கொண்டு சுட்டுவது, இதுதான் எனக் கண்டடைவது, இது இவ்வாறு தான் இருக்கிறது என அறிந்த கொள்வது, அந்த கனமாகி நிற்பது, அதுவே கவிதை முகிழ்த்த கணம்’. என்று குறிப்பிட்டார் கவிஞர் வடரேவு வீர பத்ருடு அவர்கள். இவ்வனுபவத்தை epiphany என்ற சொல்லால் சுட்டினார். (நான் புரிந்த கொண்டவிதத்தில்)

ஒவ்வொரு முறையும் அந்தக் கணத்தில் உண்மை என்று ஆன ஒன்றை ஒரு விரலால் தொட்டு தொட்டு மீள்கிறான், அல்லது உண்மை என்றாகி மீள்கிறான் கவி. அந்நிலையிலிருந்து ஒரே ஒரு படி மட்டும் கீழிறங்கி, அதை எல்லோருக்குமாக பங்குவைக்கிறான். சன்னதம் கொள்ளும் தருணத்தில் மருளாடி, தனக்குள் நிகழ்வதை கண்டு கொண்டு அதை சொல்லாக்கி சொல்வது போல. அதனால் கவிதை, ஞானம் என்றும் ஆகிறதோ?  கவி என்ற சொல்லை, இனி இத்தனை அடர்த்தியும், கணமும், விரிவும் கூடிய சொல்லாக அன்றி வேறு எவ்வாறாக கைக்கொள்ள இயலும்? ஒரு பீஜம் போல! ஒரு மந்திரம் போல!

மற்றும் கவி வீரபத்ருடு ‘ஆதி கவி வால்மீகி சோகத்தை கண்ட போது ஸ்லோகம் பிறந்தது’ என்றார். காட்சியோ, நிகழ்வோ அல்ல கவிதை ஆவது, அதன் வழியாக, ஒரு கவி தான் தேடி தொட்டுக்கொண்ட மெய்யே கவிதையாகிறது.

கவி பேணப்பட வேண்டியவன், கவி எந்த இலக்கணத்திருக்கும் அகப்படாதவன். சிற்றில் விளையாடும் சிறு குழந்தை போல, தான் தனக்குள் விரல் சுட்டிக் கண்டதை இன்னாருக்காக என்று எல்லாம் இல்லாமல், ஆக்கி அங்கேயே விட்டுவிட்டு அடுத்த இடத்திற்கு நகர்ப்பவன்.  அவன் விட்டதை பேணுவதும் அவன் விளையாடும் இடத்தை பேணுவதும், அவனையே பேணுவதும் கூட நம் கடனாகிறது. ஏனெனில் அவன் ஆக்கி விட்டு  கடப்பவைகளில் பல, மனிதன் அடையக்கூடிய ஆகச் சாத்தியமானவைகளில் ஒன்றாக அமைவன.

ஈன்று புறந்தருதல் என்  தலை கடனே என்னும் சங்கப்பாடலின் ஈற்றடியாக, கவியைப் பேணுதல் நம் தலைக் கடனே எனறு எழுதிக்கொள்ள வேண்டுமோ? ஆங்கில தொலைக்காட்சிகளில் Roasted என்ற ஒரு நிகழ்ச்சி உண்டு. விருந்தினரை வாய்ப்புள்ள எல்லா வழிகளிலும் பகடிக்குள்ளாக்கி வறுத்து எடுப்பது. எழுத்தாளர் சோ. தர்மன் அவர்களின் விழா உரை அதை நினைவு படுத்தியது என்றாலும், அது அதுவல்ல. அது அன்பின், அறத்தின் வெளிப்பாடு மட்டுமே. ‘ஓரி டத்தில் உட்காருகிறதா பாரு’ என்று ஓடி அழிச்சாட்டியம் செய்யும் குழந்தையை அன்னை சலித்து கொள்வது போல ஒரு செல்ல சலிப்பு. அவள் அந்த இனிய சலிப்பை பாவிப்பதற்காகவே தவம் இருந்தவள், உரலில் கண்ணனைக் கட்டிய யசோதை போல.

எழுத்தாளர் சோ. தர்மன்  அவர்கள் வார்த்தைகளிலேயே சொல்வது என்றால், ‘வீட்டில் பேரக்குழந்தைகள் ஆடி ஓடி கூச்சலிடும் போது எரிச்சலாக இருக்கும் ஆனால் கொஞ்ச நேரம் அந்த சத்தம் ஓய்ந்து இருந்தால், தேடும்’. விக்கிரமாதித்தன் என்னும் பெரும் கவி எப்போதும் தன் அரியணை விட்டு இறங்காதவன், தனக்கு வேண்டும் என்று கேட்கும் போதும் அவ்வாறே. அதனாலேயே குழந்தையும் கூட. அனைத்துலகும் அவர்கள் மாட்டே குழந்தைக்கும் கவிக்கும். அந்த உரை நிகழ்ந்த முழு நேரமும், அண்ணாச்சி அடக்க மாட்டாமல் சிரித்த சிரிப்பு நினைவுகளில் என்றும் நிலைத்திருக்கும். சிரிக்கும் சிங்க குருளை!

கவிமனம் பேணப்படவேண்டியது.  அது காலாதீதமானது. அதுவே அணைத்து அறிதல்களினும் தொடக்கம். கவி எனும் பரம்பொருள் என்று வேதம் சொல்லும் என்றால், அவ்வை தொட்டு தமிழ் மரபின் நீட்சியாக,  விக்கிராமாதித்யன் என்னும் பெருங்கவிஞன் எழுத்து வரும் இடத்தைச் சுட்டி துவங்கிய உங்கள் உரை, மிகச் சரியாக சோ. தர்மன் காட்டிய நாணயத்தின் மறு புரத்தைக் வரைந்து காட்டியது. உரையின் துவக்கத்தில், எழுத்தாளர் சுந்தர ராமாசாமி அவர்களுக்கும், அண்ணாச்சிக்கும் இடையில் நிகழ்ந்த உரையாடல் ஒன்றை நீங்கள் சொன்னபோது, சிரித்த சிரிப்பில் ப்ளாக்கவுட் ஆகியிருந்திருப்பேன், தள்ளாடி நின்று விட்டேன்.

விஷ்ணுபுரம் மீண்டும் ஒரு மைல் கல்லை எட்டியிருக்கிறது.  இளம் வாசகர்களாக படியேறி வந்தவர்கள் அறியப்பட்ட எழுத்தாளர்களாக, பேச்சாளர்களாக அவை ஏறுகிறார்கள். அவ்வகையில் நண்பன்  காளிபிரசாத் இவ்வருடம் அவை ஏறியது மிகப்பெரிய மகிழ்ச்சி. விஷ்ணுபுரம் மேடையின் அங்கீகாரம் ஒரு அரங்கேற்றம் போல, இனி அவன் எட்டு திக்கும் சென்று வெற்றி கோடி நாட் டட்டும்.  பிறமொழி எழுத்தாளர்கள் அவையின் கட்டுக்கோப்பையும், அதில் நிறைந்து இருக்கும் இளம் முகங்களையும் கண்டு பாராட்டாமல் இருந்ததே இல்லை ஒவ்வொரு முறையும். இம்முறையும் அவ்வாறே. அனைவருக்கும் முன்னுதாரமாக விஷ்ணுபுரம் அமைகிறது என்பது ஒரு பெருமிதம் என்றால்,  இன்று தயங்கியபடி சொல் கூட்டி மெல்ல பேசிய இளம் முகங்கள் எல்லாம் நாளை இலக்கிய கர்த்தாக்களாக, ஆராய்ச்சியாளர்களாக, பல் துறை நிபுணர்களாக, தவிர்க்க முடியாத ஆளுமைகளாக உருக்கொள்ளப்போகிறார்கள் என்பதை நினைத்தால் முட்டைகளின் ஓடு உடைத்து வெளியேறும் குஞ்சு பறவைகளை காண்பதை போல ஒரு பரவசம்.

தொன்மங்கள் சொல்லும் சிவனென்று ஆனவரின் சக்தி எல்லாம் அவர் இடப்பாகம் கொண்ட உமையாள் என்று. “பிள்ளைகளுக்கு நல்ல அப்பா, தமிழுக்கு நல்ல கவிஞர், பொய் சொல்லக்கூடாதுல..” என்ற பகவதி அம்மாவின் குரல் ரீங்காரம் இட்டுக்கொண்டே இருக்கிறது. வாழ்வை அதன் போக்கில் விட்டு அதன் வழியாக முதிர்ந்த விவேகம். எதன் மீதும் குறை இல்லை அவருக்கு. புன்னகையும் சிரிப்புமாக மிக நல்ல உரையாடல்காரர். அன்னையாக அவர், காடும் மேடும் சுற்றும் பித்தனின் இடப்பாகம் கொண்டதால் விக்கி அண்ணாச்சி இன்று கவியாகி சிவனாகி நிற்கிறார் என்றே தோன்றியது.  ஒரே  ஒரு முறை உரையாடியவர்களின் பெயரைக் கூட மறக்கவில்லை அம்மா. அவருக்கு அனைவரும் குழந்தைகளே. விஷ்ணுபுர வட்டத்தின் நுண்மையின், உயர்வின் மிகப் பெரிய சான்று விருது பெரும் எழுத்தாளர்களை மட்டும் அல்லாமல் அவர்கள் குடும்பத்தினரையும், அழைத்து கவுரவித்து நன்றி அறிதலோடு மரியாதை செய்வது.

மீண்டும் ஒரு அழகிய விழா, அழகிய புன்னகைகள், அதிர்ந்த சிரிப்புகள், மெல்லிய தயக்கங்கள், கண்ணோரத் துளிர்ப்புகள், மிகச்  சிறந்த உணவு என இனிதே நிறைவடைந்தது. இனி அடுத்த வருடத்திற்கான  காத்திருப்பு. நன்றி,

சுந்தரவடிவேலன்.

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றது. இலக்கிய நிகழ்வு ஒன்று இத்தனை முறையாகவும், அதே சமயம் இத்தனை தீவிரமாகவும் நடைபெற முடியும் என்பதே வியப்பூட்டுவதுதான். அந்தக் கட்டுப்பாடு வெளியே இருந்து உருவாக்கப்பட்டது அல்ல.

உதாரணமாக எல்லா நிகழ்வுகளும் மிகச்சரியான நேரத்தில் தொடங்கின. சாப்பாட்டு இடைவேளை வெறும் ஒரு மணிநேரம்தான். நான்கு பந்திகள். ஒரு பந்தியில் நூற்றியிருபதுபேர்தான் அமரமுடியும். ஆகவே வேகமாகச் சாப்பிடவேண்டும். எவரும் எவரையும் அழைக்கவில்லை. கட்டாயப்படுத்தவில்லை. ஆனால் அத்தனை அரங்கிலும் பார்வையாளர் நிறைந்திருந்தனர்.

கடைசிநாள் விழாவில்கூட நன்றியுரை சொல்லப்படும்போது ஒருவர் கூட எழுந்து செல்லவில்லை. அந்தக் கட்டுப்பாடு விழாவுக்கு வந்தவர்களின் தீவிரத்தால் உருவானது. இங்கே எதுவும் மேலோட்டமானது அல்ல என்ற எண்ணத்தை விழா உருவாக்கிவிட்டது.

நான் விழாவுக்கு வரும்போது என்னுடன் வருவதாகச் சொன்ன நான்கு நண்பர்கள் கடைசிநேரத்தில் வராமலிருந்துவிட்டார்கள். கேட்டபோது அவர்களிடம் பலர் விழாவுக்குச் செல்லவேண்டாம் என்று சொன்னதாகச் சொன்னார்கள். நான் அவர்களிடம் சொன்னேன். ”விழா நீங்கள் புறக்கணிப்பதனாலோ கலந்துகொள்வதனாலோ எந்தவகையிலும் மாறப்போவதில்லை. அது வேறெங்கோ போய்விட்டது. அதன் இடமும் தீவிரமும் வேறு. புறக்கணிப்பதனால் உங்களுக்குத்தான் நஷ்டம். ஒரு ஐந்து வருடம் கழித்து என்ன நஷ்டம் என்று உங்களுக்கே தெரியும்”

ஆனந்த்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைதலபுராணங்கள் எதன்பொருட்டு?