அண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

கோவில்பட்டி கடை தெருவில் விக்கி அண்ணாச்சிக்கும் தனக்கும் இடையே நடந்த செல்லமான இலக்கிய சச்சரவொன்றினை சோ.தர்மன் விவரிக்க, குமரி ஆதவனோடு இணைந்து சிரித்தபடி, நானும், ஜி.எஸ்.எஸ்.வி நவீனும் கோவை ரயில்நிலைய டீ கடையில் உடன் நின்றிருக்கையில் சனிக்கிழமை காலை மணி ஏழு முப்பத்தி ஆறு.

இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக விக்கி அண்ணாச்சியின் மகன் பிரேம், மருமகள், பேரக்குழந்தைகளை நானும் ஷாகுலும், ரயில் நிலையத்தில் வரவேற்று ஃபார்சூன் சூட்ஸ் ஓட்டலில் ஒருக்கப்பட்டிருந்த அறையில் தங்க வைத்து மீண்டிருந்தோம்.

வழக்கறிஞர் செல்வராணி விக்ரமாதித்யனின் துணைவியை கௌரவிக்கிறார். அருகே யோகா

சோ.தர்மன் மற்றும் குமரி ஆதவன் இருவரையும் அவர்களுக்கென ஒருக்கப்பட்டு இருந்த அறைகளில் தங்க வைத்து,ராஜஸ்தானி பவன் ”திவான்” அறைக்கு திரும்பி, அறையில் சிந்தனையோட்டத்துடன் அமர்ந்திருந்த குவிஸ் செந்தில் அண்ணனிடம் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து உசாவி முடித்தபின், அகர வரிசைப்படியும், ஒதுக்கப்பட்ட அறை எண் வரிசை படியும், தயாராக இருந்த, தங்குமிடம் முன் பதிவு செய்திருந்தவர்களின் பட்டியலை கையளித்தார்.

நண்பர்கள் வரத்தொடங்கியிருந்தார்கள். பனிபடர்ந்த ஹெல்மட்டை கழட்டியபடி “ என் பெயர் உமா மகேஸ்வரி. ரூம் அலாட்மெண்ட் செய்வதில் உதவுவதற்காக நேரமே செந்தில் அண்ணன் என்னை வரச்சொன்னார்..” என்றபடி உள்ளே வந்த வாசகியை, குருஜி சௌந்தர், லோகமாதேவி,ரம்யா ஆகியோரோடு இணைக்க, தடுப்பூசி செலுத்தியதற்கான விபரங்களை கேட்டறிந்து, அறை விபரங்கள் தெரிவித்து சாவி அளிக்கும் பணியை இலக்கிய அரட்டை அடித்தபடி ஆரம்பித்தது அக்குழு.

சுருதி டிவி கபிலனுக்கு சிவாத்மா கௌரவம் செய்கிறார்

ஐந்து இடங்களில் [ராஜஸ்தானி பவன், குஜராத் சமாஜ், டாக்டர் பங்களா, ராஜா நிவாஸ், ஹெச்.ஆர் ரெஸிடன்ஸி] ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தங்குமிடங்களின் அறைகள், குவளைகளில் நிரம்பும் தண்ணீராய் மெல்ல நிரம்பியபடி இருந்ததை  பட்டியலில் டிக் செய்யப்பட்ட எண்கள் காட்டின.

காலை சிற்றுண்டிக்கான பதார்த்தங்கள் மண்டபத்தை அடைந்துவிட்டதற்கான அறிகுறியாய், மசால் வடை மணம் நாசியில் ஏற ”நாஞ்சில்நாடன் இன்னும் இருபது நிமிடங்களில் தயாராக இருப்பார்” நரேனின் வாட்சப் செய்தி, வடை சாப்பிடும் எண்ணத்தை பின்னுக்கு தள்ளியது.

இம்முறை வழித்துணையாக காளிபிரசாத். காளியின் ”ஆள்தலும் அளத்தலும்” நூலுக்கான நாஞ்சிலின் முன்னுரை வரிகளை பேசி முடிக்கையில், போர்டு மீட்டிங்கில் கலந்து கொள்ள அலுவலகம் கிளம்பும் தோரணையில் நாஞ்சில் தயாராக வாசலில் நின்றிருந்தார். “வென் ஆர் யூ கோயிங் டு செண்ட் தட் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் டூ கஸ்டமர் மேன்…. ஐ ஹேவ் பீன் ஆஸ்கிங் யூ திஸ் சின்ஸ் மார்னிங்…” என் அலுவலக சூழலை ஒரு கணம் நினைவில் கொள்ள வைத்தார். தலையை உதறிபடி ஸ்டீயரிங் பிடிக்கலானேன்.

கடைசி சந்திப்பிற்கு பிறகு சரியாக 24 மாதங்கள் ஆகியிருந்தாலும், முந்தா நேத்து விட்ட இடத்தில் இருந்து தொடர்வது போல ஆரம்பித்தது இலக்கிய உரையாடல்.
நாஞ்சில் கம்பனை தொட்டபோது நான் குனியமுத்தூர் செல்லும் டவுன் பஸ்ஸை முந்த தொடங்கியிருந்தேன்.

“அருந்தும் மெல் அடகு ஆர் இட அருந்தும்”-”அந்தாளுக்கு கீரன்னா ரொம்ப புடிக்கிமே… அய்யோ நா இங்க மாட்டிக்கிட்டேனே… இப்ப அவனுக்கு யாரு கீர சமச்சி கொடுப்பாங்க….” என்று சுந்தரகாண்டத்தில் சீதை படும் அங்கலாய்ப்பையும், “அடகு” என்ற சொல் எப்படி “கீரை” என்ற பதத்தில் பயன்படுகிறது என்றும், அவ்வாறில்லாமல், எப்படியெல்லாம் அச்சொல் உரைகளில் அவஸ்தைபடுத்தப்படுகிறது, என்று சீற்றத்தோடு சொல்லி முடிக்கையில் ராஜஸ்தானி சங் வந்திருந்தோம்.

இறைவணக்கபாடலுக்கு, ஆரம்பிக்கப்பட்ட முதல் நாள் காலை தொடங்கி, இரண்டாம் நாள் மாலை வரை மொத்தம் 12 அமர்வுகள். முக்கியமாக கவனித்த விசயம்.

அ) நேர ஒழுங்கு: அனைத்து அமர்வுகளிலும் கடைபிடிக்கப்பட்ட நேர ஒழுங்கு. விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தின் அமர்வுகளை பற்றி சொல்லும்போதெல்லாம் ”அங்க கெடுபிடி ரொம்ப ஜாஸ்தி..” என்ற வால் ஒட்டப்படும்.  இவ்வருட நிகழ்வின் முடிவில்,  எழுத்தாள நண்பர்களும், விக்கி அண்ணாச்சி, சோ.தர்மன், ஜெ.தீபா. செந்தில் ஜெகந்நாதன் உள்ளிட்டோர் விடைபெறுகையிலும் சொல்லி சென்றதில் முதலானது நமது அமர்வுகளில்  கடைபிடிக்கப்படும் நேர ஒழுங்கு.

ஆ) கேள்விகளின் உள்ளடக்கம்:  பெரும்பாலான கேள்விகள், கேட்கப்படும் முன்பு, கேள்வி எதை பற்றியது என்பதை பிரேம் ஆஃப் ரெபரென்ஸ் மூலம் வரையறுத்து, சரியான சொல்லாடல்கள் மூலம் வடிவமைத்து, சரியான வடிவத்தில் கேட்கப் பட்டவை.

இ) எழுத்தாளர்- பங்கேற்பாளர்கள் உரையாடல்கள்: இரு திசை அம்புகள் என ஆரம்பித்து, ஒன்றோடொன்று தொடுத்துக்கொண்டு அம்பு மாலையாக மேலெழும்பி, அமர்வுகளை மேலே எடுத்து சென்றபடி இருந்ததை அனேகமாக அனைத்து அமர்வுகளிலும் அவதானித்தேன்.

ஈ) மட்டுறுத்தல்:  விவாதத்தின் போக்கு சற்றே விலகும் சூழல் முற்படும்போதெல்லாம். சிறு குச்சி கொண்டு நீரோட்டத்தின் போக்கை மடைமாற்றும் செயலை அமர்வை ஒருங்கிணைத்த நண்பர்கள் சரியாக கையாண்டார்கள். மட்டுறுத்துனர் செய்ய வேண்டியவை. தவிர்க்க வேண்டியவை, இரண்டையும் நண்பர்கள் மிகச்சரியாக கையாண்டனர்

உ) ஜெயமோகனின் பங்களிப்பு: இரு நாள் அமர்வுகள் நீங்கள் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. ஒரு கேள்வியும் எழுப்ப வில்லை. எல்லா அமர்வுகளிலும் பார்வையாளராகவே இருந்தீர்கள்.முழுக்கவே பங்களிப்பாளர்களின் அரங்காக நடந்து முடிந்தது. [கவிஞர் சின்னவீரபத்ருடு அமர்வில், அவரின் பதிலை தொகுத்து சொல்ல நீங்கள் மைக் பிடித்த ஒரு நிகழ்வை தவிர]

ஊ) மைக் பிடுங்கிகள்: அமர்வுக்கு சற்றும் சம்பந்தமில்லாத கேள்விகளை கேட்டு நேரத்தை காவு கொண்டு, உற்சாக மனநிலையை குலைக்கச் செய்யும் மைக் பிடிங்கிகள்  அனேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும்.

[அந்தியூர் மணியும், அனங்கனும், ராகவும், நானும் அரங்கின் நான்கு மூலையிலும் நின்றிருந்தது கூட காரணமாய் இருக்கலாம்…  ”பௌன்ஸர்களை கொண்டு பார்வையாளர்களை பயமுறுத்துகிறதா  விஷ்ணுபுர இலக்கிய வட்டம்..? ” என்று கேள்வி கேட்டு உங்களுக்கு கடிதம் வந்தாலும் வரலாம்…]

ஆனால் இவை அனைத்தும் ஓரிரவில் நடந்துவிடவில்லை.  ”பாலாடையில் தேன் கலந்து மருந்தளிப்பது” போல மெல்ல மெல்ல உருவாகி வந்த புரிதல்.

எ) உணவு இடைவேளையில் ஈரோடு கிருஷ்ணனிடம், அப்சர்விங் பவர் குறித்து பேசிக்கொண்டு இருந்தேன். திருச்செந்தாழை அமர்வில், போகன் சங்கரின் கேள்வியை மூன்று அலகாக பிரித்து  தேர்தெடுத்த மெட்டாபஃருடன் கேள்வியை  கிருஷ்ணன் முன் வைத்த விதம். [உதாரணம்: ”நாங்க தூக்கி போட்ட பழய சட்டய, புது சட்டன்னு நினைச்சி நீங்க எடுத்து போட்டுக்கிட்டு இருக்கீங்க”]

ஏ) அதேபோல கவிஞர் சின்னவீரபத்ருடு அவர்கள் அமர்விலும், கவிஞர் சொன்ன விசயங்கள் சரியான சொல்லாடலில் அவைக்கு சொல்லப்படவில்லை என்றதும், நீங்கள் அதை அழகாக அடுக்கி, படிநிலைகளாக பிரித்து சொன்ன விதம்,

இலக்கிய வாசகர்களுக்கு, இவை இரண்டும் முக்கியமான வழிகாட்டல்.

திருச்செந்தாழை தனக்கு பொன்னாடை அணிவிக்கையில், காலணிகளை அகற்றிவிட்டு அதனை ஏற்றுக்கொண்ட விதம், அந்த மேடையை எந்தளவுக்கு எண்ணுகிறார் என்பதை வெளிப்படுத்தியது.. ஈரோடு கிருஷ்ணன் “திருச்செந்தாழையின் மைக் வேலை செய்கிறதா..?” என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு, அமர்வின் ஆரம்பத்தில் சிறு மனத்தடையுடனே தனது அமர்வை தொடங்கினார்.

அனேக இளம் படைப்பாளிகள் சந்திக்கும் லௌகீக சிக்கலை, கணக்கு போடும் கால்குலேட்டராக தன் குடும்பத்தினரால் தான் பார்க்கப்படுவதை, தான் அவ்வாறல்ல என்ற புரிதலை ஏற்படுத்த முயலும் தத்தளிப்புகளை தெளிவாக முன்வைத்தார். அமர்வின் முடிவில் அவரது குரலிலும், உடல் மொழியிலும் ஏற்பட்டிருந்த நிமிர்வை கண்டுகொள்ள முடிந்தது…. இந்நிமிர்வு அவருடைய அடுத்த கட்ட எழுத்துகளிலும் தொடர்ந்து வெளிப்படட்டும்.

“அண்ணாச்சி போட்டு வச்சிருக்குற பாதைய குறுக்காம இருந்தா போதும்” என்ற தன்னுடைய நிலைப்பாட்டை தமிழினியின் இணைய இதழ் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்லும் முன்பாக தெரிவித்த கோகுல் பிரசாத்.

காளிபிரசாத்தின் படைப்புகள் எல்லாவற்றையும் காளியை விட அதிக முறை படித்துவிட்டு வந்து அமர்வை ஒருங்கிணைத்த லோகமாதேவி. மேடைக்கு கீழிருந்து பேசும் காளிபிரசாத்தின் இயல்பான அங்கதங்கள் மேடையிலும் நடந்தது. குறிப்பாக ஹாகுல் அமீது கேட்ட கேள்விக்கு ஷாகுல் அடிக்கடி சொல்லும் “ஏசப்பா…” என்றை வாக்கியத்தை கொண்டே பதில் சொன்னது.

சுஷில் குமாரின்  அமர்வில் தான் கற்றுகொண்ட பாடங்கள், செல்ல வேண்டிய தூரங்கள் குறித்த தெளிவு வெளிப்பட்டது.

திரைத்துறையிலும், இலக்கியத்திலும், இரட்டை குதிரை சவாரி செய்யும் செந்தில் ஜெகன்நாதன் தனது ரசனைகளை தெளிவாக முன் வைத்தார். அமர்விற்கு பின்பான தனி உரையாடலில் வெளிப்பட்ட செந்தில் ஜெகன்நாதன், அமர்வின் மூலம் பெற்றவைகளை பிரதிபளித்தார்.

”சங்கம் பொயட்ஸ் கிவ்ஸ் மீ த கான்பிடன்ஸ் டு எக்ஸ்பிரஸ் மைசெல்ஃப் வித்தவுட் ஹெசிட்டேஷன்…”தான் சந்தித்து வந்த இலக்கிய அவைகள் யாவும் “பென்ஷனர்ஸ் ஆக்டிவிடி” என்ற அளவில் இருக்க,  இத்தனை  இளம் வயதினைரை இலக்கிய கூட்டத்தில் பார்பதில் ஏற்படும் சந்தோசத்தை வெளிப்படுத்தியடி அமர்வை ஆரம்பித்தார்  தெலுங்கு கவிஞர் சின்ன வீரபத்ருடு.

மை பொயட்ர்ரி சர்வைவ்டு ஈவன் ஆப்டர் த டிரான்ஷலேசன்” – சுபஸ்ரீயின் மொழிபெயர்ப்பை பற்றி அங்கத்தோடு சொல்லி,  ”நல்ல கவிதையென்பது சந்தத்தையும், அர்த்தத்தையும் இணையாக அளிக்க வேண்டும்” என்ற புரிதலை, தெலுங்கு கவிதை ஒன்றினை அழகாக பாடி காண்பித்தார்.

”கத்துக்கறதுக்காகவும். வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காகவும். இலக்கியத்தை பார்கிறேன். முதல் நாள் அமர்வுகளில்  இருந்து  கலந்து  கொள்வதற்கு காரணமும் அதான்.” இவர் ஏன் இந்த நிகழ்வுக்கு…?- என தனக்கான கேள்வியை அதற்கான விடையை தானே சொல்லிக்கொண்டார் இயக்குனர் வசந்த் சாய்.

தொண்ணூத்தொண்பதுக்கும் நூறுக்கும் இடையேயான அந்த மெல்லிய கோடு பற்றி  அவர் சொன்ன விசயம், மிகவும் யோசிக்க வைக்கும். மேலும், ஒரு திரைப்படத்தை பார்கையில் எந்த முன் முடிவுகள் இல்லாமல் பாருங்கள் [Do not start from – or +. Start from Zero]  என்ற குறிப்பு முக்கியமானது.

சோ.தர்மன் அவர்களுடனானது, முதல் நாளின் இறுதி அமர்வு. காலை முதல் தொடர் அமர்வுகளின் இருந்தவர்களை கிஞ்சித்தும் சோர்வுற செய்யாமல் கலகலப்பான அமர்வாக ஆக்கினார் சோ.தர்மன்.

முதல் நாள் அமர்வுகள் முடிந்தபின், நாஞ்சிநாடனை அழைத்துகொண்டு அவர் வீட்டை நோக்கி பயணிக்கையில், மறுநாள் எத்தனை மணிக்கு அழைக்க வரவேண்டும் என்று கேட்ட போது, ”நேத்து வந்த மாதிரி வாங்களேன்…” என்றார். பிறகு தான் இருவருமே உணர்தோம், இவை அனைத்தும் ஒரே நாளில் நடைபெற்றவை… நாள் இன்னும் முடியவில்லை என்று….

விக்கி அண்ணாச்சியின் அமர்வு, சிகரம். தாமிரபரணியோடும்.அதன் நிலப்பரப்போடும் தன்னை ஒப்பிட்ட தருணத்தில், அரங்கம் முழு கவனக்குவிப்போடு அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது.பேச்சினூடாக படிமங்களை தவழவிட்டபடி இருந்தார் அண்ணாசி.குறிப்பிட்டவைகளில் முக்கியமான படிமம் குடத்தை திருப்பி போட்டு பெண்கள் நீச்சல் கற்றுக்கொள்ளுதல்.

இரண்டாம் நாள் மதிய உணவுக்கு பின் ஒரு மெது நடை செல்ல விரும்பினார் விக்கி அண்ணாச்சி.”ஒரு நாவல பத்தி ஒருத்தர்ட்ட பேசலாம். ஒரு கவிதைய பத்தி இன்னொருத்தர்ட பேசலாம், சிறுகதய பத்தி வேறொருத்தர்ட பேசலாம்… ஆனா….. எல்லாத்த பத்தியும் ஜெயமோகன்ட்ட பேசலாம்…”க.நா.சு முதல் கண்டராதித்யன் வரை சென்று வந்த நடைப்பேச்சு, மைய புள்ளியாய் ஜெயமோகனை வைத்தே இருந்தது.

மாலை விருது விழா நிகழ்வை நினைவூட்டி, அண்ணாச்சியை தங்குமிடம் அழைத்து சென்றேன்.மனைவி பகவதி அம்மாளிடம் தேங்காய் எண்ணைய் கேட்டார் அண்ணாச்சி..  “இப்ப என்னா பொண்ணா பாக்க போறாங்க… அவார்டு தான கொடுக்க போறாங்க…எல்லா இது போதும்….”

“பாத்தியா, என்னோட தலை முடி நீளத்த விட உங்க அண்ணாச்சி தாடி நீளமாருக்கு”   அண்ணாச்சியை கை காட்டி பகவதி அம்மாள் சொல்ல…  “போடி இவள….” என்று பகவதி அம்மாவிற்கு கேட்காத அளவில் முணுமுணுத்தபடி கண்களால் என்னிடம் சிரிக்க ஆரம்பித்தார்.

கதிர் முருகன் ராஜஸ்தானி பவன் பொறுப்பாளர் வினோதுக்கு கௌரவம் செய்கிறார்

“அப்பாவுக்கு/மாமனாருக்கு எதோ ஒரு விழா. நம்மளையும் கூட கூப்பிட்ருக்காங்க…. “ என்ற மனநிலையில் அண்ணாச்சியின் மகனும், மருமகளும், பேரக்குழந்தைகளும் இருந்ததை, சனி காலை அவர்களை ரயில் நிலையத்தில் இருந்து அழைத்து வருகையில் அவதானித்து இருந்தேன்.விழாவின் மறுநாள் வழியனுப்ப ரயில் நிலையம் அழைத்து செல்கையில் அவர்களின் பார்வை கோணங்கள் வெகுவாக மாற்றி இருந்தன.

விக்கி அண்ணாச்சி பற்றி கவிஞர் ஆனந்த்குமார்  இயக்கிய ”வீடும் வீதிகளும்” விருது நிகழ்வை வேறு தளத்திற்கு எடுத்து சென்றது.அடுத்த ஆண்டு முதல் ஆவணப்படத்தில் ஆங்கில சப் டைட்டில் சேர்க்கவேண்டுமென்று “Focus area for 2022 plan” ல் நானும் குவிஸ் செந்திலும் குறித்துக் கொண்டோம்.

டைனமிக் நடராஜன்

“அப்பாவ பத்தி நமக்கு நல்லா தெரியும்.. ஆனா சில சமயங்கள்ல மத்தவங்களோட கேள்விக்கு பதில் சொல்ல முடியாது…. இப்ப… இந்த ஆவணப்படம் எல்லா கேள்விக்கும் பதில் சொல்லியிருக்கு….”இடது புறம் கடந்து செல்லும், இரு சக்கர வாகனம் ஒன்றை உற்று பார்த்தபடி சொல்லிக் கொண்டு இருந்தார் அண்ணாச்சியின் மகன் பிரேம்.

”மாமா வீட்ட விட்டு கிளம்புனா, வீடு திரும்புற வரைக்கும் மடியில நெருப்ப கட்டிகிட்டு இருப்போம்…ஆனா… இப்ப இந்த நிகழ்வுல இவ்ளோ பேர் பாராட்டும்போது, இவ்ளோ பெரிய நிகழ்வு நடக்கும்போது…..நான் நினைக்கவேயில்ல….” வாக்கியத்தை முடிக்காமல் மௌனமாகிவிட்டார் அண்ணாச்சியின் மருமகள்.

”அண்ணாச்சி எவ்ளோ மக்கள சம்பாதிச்சி வச்சிருக்குறாரு பாத்தியா யோகேசு….” – பகவதி அம்மாள்.

விருது விழாவுக்கு பிறகு ஒரு வித பரவச நிலைக்கு சென்று விட்டார் அண்ணாச்சி… ”நாம லேட்டா சாப்டுவோம்.. இப்ப டீ வாங்கித் தா…” படியிறங்கி இரவு நடையை ஆரம்பித்தோம். தனக்குள் பேச முற்பட்டு, தன்னை மறுத்து தலையை ஆட்டியபடி என தன்னுள் தளும்பியபடி இருந்த அண்ணாச்சியை தொந்தரவு செய்யாமல் மௌனமாக உடன் நடந்தபடி இருந்தேன்.

ஞாயிறு இரவு, மணி பதினொன்று முப்பது. இரவுணவுக்கு சம்மதம் தெரிவித்தார் அண்ணாச்சி. அருகாமை கடையொன்றில் “நான் கடவுள் ஆக்டர்” என்ற அடைமொழியொடு பரிசாரகரால்  ஐஸ் போடாத மாதுளை ஜூஸ் அண்ணாச்சிக்கு விளம்பப் பட்டது.

”இலக்கியம் என்ன கொடுக்கிறது…?” என்ற கேள்வி..மீண்டும் மீண்டும் நம் முன் வைக்கப்படுகிறது. இந்த இருநாள் நிகழ்வுகளில் ஒரு இலக்கிய வாசகன் பெற்று செல்லும் கொடை என்பதை எண்ணிப்பார்த்தால் தெரியக்கூடும்.

ரம்யா, விக்னேஷ் உள்ளிட்டவர்களை மேடைக்கு எதிரே பார்கையில், அவர்கள் எதிர்புறம் மேடைக்குச் செல்லும் நாள்கள் அதிகமாய் இருக்கப் போவதில்லை என்றே நினைக்க தோன்றுகிறது. வருடங்கள் செல்ல செல்ல, தமிழ் இளம் எழுத்தாளர்களில் பிரதானமானோர் விஷ்ணுபுர இலக்கிய வட்டத்தில் உருவான எழுத்தாளர்களாக அமைகிறார்கள். விட்டிலாய் கீழிறங்காமல் விண்மீனாய் மேலெழும்பிய வண்ணம் இருக்கட்டும்.

”Unity through Diversity” – மத்திய அமைச்சர் திரு.ஜெய்ராம் ரமேஷ் அவர்கள் உரையுனூடாக குறிப்பிட்டது.“விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்களிடையே, இலக்கிய ரீதியாக பல தரப்பட்ட கருத்து நிலைப்பாடுகள் இருந்தாலும், முக்கிய முன்னெடுப்புகளில் ஓர் உருவாய் இணைந்து செயலாற்றுவதென்பது ஒவ்வொரு படிநிலைகளாக கூடியபடி இருக்கிறது.

நாஞ்சில் நாடன், பாவண்ணன், சு.வேணுகோபால், மோகனரங்கன், எம்.கோபாலகிருஷ்ணன், லக்‌ஷ்மி மணிவண்னன், போகன் சங்கர், சாம்ராஜ், அமிர்தம் சூர்யா உள்ளிட்ட எழுத்தாளர்கள், கவிஞர்கள் தொடர்ச்சியாக இலக்கிய அமர்வுகளில் கலந்துகொண்டு வாசகர்களோடான தொடர் உரையாடலில் இருப்பது மகிழ்வை அளிக்கிறது.

விழாவில் ஸ்ருதி டிவி கபிலனுக்கு மரியாதை செய்தது நிறைவளிக்க கூடியதாய் அமைந்தது.அனைத்து நிகழ்விலும் பின்புலமாய் நின்றிருக்கும் நமது ”விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நண்பர்கள்.

விக்கி அண்ணாச்சியின் அணுக்கனாய் மூன்று நாட்கள் உடனிருக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய நல்லூழ் என்றே நினைக்கிறேன். திங்கள் மதிய உணவிற்கு பின்பான இளைப்பாறுதலின் போது, ஜி.எஸ்.எஸ்.வி நவீன் உடனிருக்க “இருநாள் நிகழ்வுகள் + விருது விழா”விற்கு முன்பான உங்களின் மனநிலை குறித்தும், தற்போதைய மனநிலை குறித்தும் எப்படி உணர்றீங்க அண்ணாச்சி..” என்று கேட்டேன்…

இடக்கையால் தாடியை தடவியபடி “ கொஞ்சம் பதட்டமா தா இருந்தேன்… குறிப்பா சொல்லனும்னா, இங்க வந்து, இந்த நிகழ்வுல கலந்துக்கிற நண்பர்களை, சின்ன புள்ளைகளை பாத்ததுக்கு பின்னாடி, நாம ஒன்னும் அவ்ளோ ஆயாசப்பட தேவையில்லைன்னு தோண ஆரம்பிச்சிருக்கு” என்றார்.

தமிழிலக்கியத்தின் கண்ணி அறுபட்டு போகாமல் தொடரும்னு வச்சிக்கலாமா…” என்று கேட்டதற்கு ”ஆமா…” என்று ஆமோதித்தபடியே  தன் பிரத்யேக சிரிப்பை ஆரம்பித்தார்.

தெலுங்குக் கவிஞர் சின்ன வீரபத்ருடு தன்னுடைய அமர்வில் முக்கிய விசயம் ஒன்றை குறிப்பிட்டார்.தேர் வீதிகளில் ஓடும் தேர், மற்ற வீதிகளில் ஓட, தேரில் மாற்றங்கள் செய்தாக வேண்டும். மோட்டார் காராக உருமாற வேண்டும்”. தமிழிலக்கிய ரத வீதிகளில் தேர் ஓட்டிய “விஷ்ணுபுர இலக்கிய வட்டம்” ரத வீதியை தாண்டிய தேரோட்டத்திற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டபடி இருக்கிறது. திங்கள் அன்று செய்தித்தாள்களில் வெளிவந்த குறிப்புகள் அதற்கான கட்டியம்.

செவ்வாய் காலை, அண்ணாச்சி வீடடைந்ததை உறுதிபடுத்திக்கொள்ள போன் செய்தேன்… “யோகேஸ்வரா… எப்படி இருக்க…” என்றபடி பேச ஆரம்பித்தார். நான் வீடு திரும்பிக் கொண்டு இருந்த ரயில் நீடாமங்கலத்தை தாண்டியிருந்தது. இருபுறமும் பச்சையாய் தெரியும் வயல்வெளிகளை நோக்கிக் கொண்டு இருந்தேன்.. முகம் கொள்ளா சிரிப்புடன், குழந்தையின் குதூகலத்துடன் பேசிக்கொண்டிருக்கும் அண்ணாச்சியின் முகம், பச்சைவயல்களினோடே அலையலயாய் ஏறி இறங்கியவண்ணம் தெரிய ஆரம்பித்தது.

“புதியவன்” – கோவையில் இருந்து அண்ணாச்சி ஊர் திரும்பிய சொகுசு பேருந்தின் பெயர்.பாபநாசம் வந்தடைந்த தாமிரபரணியாய், அகம் அடங்கிய அண்ணாச்சியாய் , புதியவனாய், வெளிப்படுவாராக!

நட்புடன்,

யோகேஸ்வரன் ராமநாதன்.

புகைப்படங்கள்-1

புகைப்படங்கள்-2

புகைப்படங்கள்-3

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா-2