விஷ்ணுபுரம் விழா, கடிதங்கள்

ஆசிரியருக்கு வணக்கம்,

இந்தியாவின் மிக முக்கியமான இலக்கிய திருவிழாவான விஷ்ணுபுரம் விருது விழா (2021) மிக சிறப்பாக நடந்து முடிந்தது.

சனி, ஞாயிறு இருதினமும் எழுத்தாளர் களை சந்தித்து அவர்களின்   படைப்புகளை குறித்த விவாத அமர்வுகன் தொடர்ந்து நடைபெற்றது. எழுத்தாளர்கள் நல்ல வாசகர்களை சந்தித்த தருணம். உதாரணம் இளம் வாசகன்  விக்னேஷ் ஹரிஹரன் கேட்ட கேள்விகள்.

இறுதியாக ஆவண பட திரையிடக்குப் பின் ,விருதும், கேடயமும் ,வழங்கி வாழ்துரையும் ஏற்புரையும் முடிந்து குழு புகைப்படம் எடுத்த பின் மேடையிலிருந்து கீழிறங்கி வந்ததும் விழாக்குழுவின் தூண்களில் ஒன்றான நண்பர் மேகலாயா கலெக்டர் ராம்குமார் புன்னகையுடன் கட்டிதழுவினார் . விழாவை மிகச்சிறப்பாக நடத்தி முடித்துவிட்டோம் எனும் மகிழ்ச்சியின் வெளிப்பாடு அது.பின்னர் அதுபோலவே குவிஸ் செந்தில் அண்ணாவும், ஜாஜாவும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர் .

அமெரிக்கா விலிருந்து சங்கர் பிராதப், சிஜோ,மணிகண்டன், பாலாஜி  அபுதாபி யிலிருந்து ஜெயகாந்த்ராஜு, கல்பனா குடும்பம்,  சவுதியிலிருந்து ஒலி சிவக்குமார் என உலகம் முழுவதும் இருந்து இந்த விழாவுக்கு வந்திருந்தனர்.

இரு தினமும் அனைவருக்கும் 6 வேளை உணவும், தங்குமிடம் வழங்கினோம். இறுதி நிகழ்வான விருது வழங்கும் நிகழ்வில் 500 பேர் வரை கலந்துகொண்டிருக்கலாம்.

அமெரிக்காவின் ராலே நகரிலிருந்து புறப்படும் முன் ஆவண பட இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் என்னை அழைத்து சொன்னார்   “ஷாகுல் விழாவுக்கு வருகிறேன் சந்திப்போம் ” என.உடல் நலமின்றி அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது. பெரும் ஏமாற்றமாக இருந்தது.

வெகு சிறப்பாக இந்த விழா நடக்க  நிதி முக்கிய காரணம் . 500 ரூ முதல் லட்ச ருபாய்  வரை உங்கள் வாசகர்களே  இதை வழங்கினர். முழுக்க முழுக்க வாசகர்களின் பங்களிப்பால் நடந்த பெரு விழா இது.

உலகம் முழுவதும் இருந்து  பொருளுதவி செய்த நண்பர்கள் அனைவருக்கும் விழாக்குழு சார்பாகவும் , எங்கள் வழிகாட்டி ஜெயமோகன் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் .

மிக்க நன்றியுடன்

ஷாகுல் ஹமீது,

நாகர் கோவில்.

அன்புள்ள ஜெ

இந்த ஆண்டும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொண்டேன். இலக்கியவிழா என்பது எப்படி இருக்கவேண்டும் என்பதற்கே உதாரணமாக அமைந்த பெருவிழா. ஒவ்வொரு ஏற்பாடும் பார்த்துப் பார்த்துச் செய்யப்பட்டிருந்தது. இன்று இத்தகைய விழாக்களை ஒரு கார்ப்பரேட் அமைப்புதான் செய்யமுடியும். நான் அவ்வாறு நிகழ்வுகளை அமைத்திருக்கிறேன். ஆனால் முழுக்க முழுக்க நண்பர்களின் உழைப்புக்கொடையால் நிகழ்ந்த விழா என்பது உண்மையிலேயே திகைப்பூட்டுவது.

எல்லா அரங்குகளும் மிகச்சிறப்பாக இருந்தன. வசந்திடம் ஒரு பெரியவர் திரைப்படங்களில் வன்முறை பற்றி ஒரு வழக்கமான கேள்வியைக் கேட்டார். சின்ன வீரபத்ருடுவிடம் ஒருவர் அதேபோல ஒரு அப்பாவித்தனமான கேள்வியை கேட்டார். ஆங்கிலக் கவிதைகளில் தேன்மெழுகுதான் இருக்கிறது, நம் கவிதைகளில் தேன் இருக்கிறது என்பதுபோல. அந்த இரண்டு கேள்விகளைத் தவிர்த்தால் 12 மணிநேரம் நடந்த எல்லா விவாதங்களுமே ஆழமானவை. எல்லா கேள்விகளுமே சீரிய பதில்களை உருவாக்கியவை.ஒவ்வொன்றுக்கும் ஒரு பதிலைச் சொல்ல என்னால் முடியும். ஆனால் நான் வெறும் பார்வையாளராகவே இருந்தேன்.

இந்த அற்புதமான நிகழ்வை ஒருங்கிணைத்த நண்பர்களுக்கு என் வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவியுங்கள்.

சரவணக்குமார்

புகைப்படங்கள்

முந்தைய கட்டுரைஅதுலம், இணையவழி தமிழ்க்கல்வி
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா 2021- கதிர் முருகன்