அகச்சொற்கள் புறச்சொற்கள்

பொதுவாகவே மனிதர்கள் வயதான காலத்தில் வம்புச் சிக்கல்களில் போய் சிக்கும் வாய்ப்பு அதிகம். அவர்கள் எழுத்தளர்களாக இருந்தால் இன்னும் அதிகம். முந்திய தலைமுறை எழுத்தாளர் அவசர அவசரமாக ஒரு மின்னஞ்சல் செய்து கேட்டிருந்தார். pubic hair க்கு தமிழில் என்ன? ஆண் பெண் வேறுபாடு உண்டா? அவருக்கு என்ன அவ்வளவு பதற்றம் என்றும் தெரியவில்லை. நான் அச்சிக்கலில் என் மொழியறிவை போட்டு குழப்பினேன். அப்போதுதான் தமிழர்களாகிய நாம் எவ்வளவு நாகரீகமானவர்கள் என்ற எண்ணம் ஏற்பட்டு இறும்பூது எய்தினேன்.

நம் மொழியில் நிறைய விஷயங்களுக்குச் சொற்களே இல்லை. சில விஷயங்களுக்கு விதவிதமான சொற்கள். சங்க காலத்தில் தெருவெங்கும் முலைகள்,கொங்கைகள்,நகில்கள்… பாம்பின் படம் போன்ற அல்குல்கள். ஆனால் அல்குல் என்பது பெண்ணுறுப்பு அல்ல. செயிண்ட் தாம்ஸ் மவுண்டுக்கு பக்கத்தில் உள்ள வீனஸ் மவுண்ட் எனப்படும் பிராந்தியம்தான் என்று எம்.வேதசகாயகுமார். பெண்குறிக்குச் சொல்லே இல்லையாம். முதுமைக் காலத்தில் ஒரு கதையில் சுந்தர ராமசாமி ஆனந்த அல்குல் என எழுதப்போய் பட்டபாடு மறக்கவில்லை. இந்த மூத்த எழுத்தாளரும் அதேபோல விபரீதமாக ஏதாவது செய்யப்போகிறாரா என்ன?

சங்க காலத்தில் என்னென்ன இருந்தது என்பதைப்பற்றி ஐம்பதாண்டுகளாக ஆராய்ச்சி நடக்கிறது. இலக்கியக் குறிப்புகளை வைத்துப் பார்த்தால் பழந்தமிழனுக்கு ஆண்குறி இருந்தமைக்கான ஆதாரமே இல்லை. இந்தச் சீரில் முதுபெரும் எழுத்தாளர் கனிந்த வயதில் கேட்கும் ஐயத்திற்கு எங்கே போக?

யோசித்துப்பார்த்தால் எவ்வளவோ விஷயங்களுக்குச் சொற்கள் இல்லை. shit க்கு தமிழில் என்ன? மலம் என்பது சம்ஸ்கிருதச் சொல். அழுக்கு என்று பொருள். ஆணவமலம், கன்மமலம், மாயைமலம் என்றால் மூவகை மன இருள்களே ஒழிய மலச்சிக்கலின் மூன்று படிநிலைகள் அல்ல.மலமறுத்தல் என்றால் ஆமணக்கெண்ணை குடிப்பதுமல்ல. நிர்மலா என்றால் அழுக்கில்லாதவள், எனிமா கொடுக்கப்பட்டவளல்ல. சம்ஸ்கிருதத்தில் அமேத்யம் என்றால்தான் மலம். நைவேத்யம் என்றால் ஆண்டவனுக்குப் படைக்கப்படும் உணவு. முன்னால் ஒரு கேரள கிறிஸ்தவ மந்திரி குழம்பிப்போய் ”சபரிமலை அமேத்யம் பாக்கெட்டுகளில் விற்கப்படும்” என்று சொன்னதாகச் சொல்வார்கள்.

சபரிமலையில் ஒருநாளைக்கு எட்டு லட்சம்பேர் ஒரே பாதையில் மலையேறி காலைக்கடன் கழிக்கிறார்கள். ஏன் கடன்? திருப்பி நாம் எடுத்துக்கொள்ளபோவதேயில்லையே? போகட்டும். அய்யப்பன்கள் எங்கும் மஞ்சளாகப் பூத்திருக்கும் அதை மங்கலமாக ‘பூச்சாமி’ என்று சொல்கிறார்கள். பம்பையில் மூழ்கி எழுந்தால் பூச்சாமி வந்து தோளைத்தட்டி கூப்பிடுமாம்.

இப்போது இடக்கரடக்கலாகக் கழிவு என்று சொல்கிறோம். மலையாளத்தில் திறமை என்று பொருள். ஜேசுதாஸ் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் சொன்னார். ‘என்னாலே நல்லா ராகங்களை அனுபவிச்சு பாடமுடியும். அந்தக் கழிவு எனக்கு ஆண்டவன் கொடுத்திருக்கான்…’. ஆண்டவனுக்கே இயற்கை உபாதைகள் உண்டு என்று சொல்வதாக எடுத்துக் கொண்டார்கள் பக்தர்கள். உருவ, சகுண வழிபாட்டின் உச்சம். சுத்த தன்மயீ பாவம்.

ஆகவே ass hole க்கு சொற்கள் இல்லாததில் ஆச்சரியமில்லை. குதம், ஆசனவாய் எல்லாம் சம்ஸ்கிருதச் சொற்கள். ஆசனம் என்றால் இருக்கை என்றுதான் பொருள். பழம்பெரும் பாடகி திருவிதாங்கூர் அரசவையில் பாடப்போனபோது அவர் அமரப்போகும் நேரத்தில் சம்ஸ்கிருத அறிஞரான மகாராஜா ”டே, ஆசனத்தை தட்டிப் போடமாட்டியா?” என்று தூசி தட்டச் சொல்ல கேட்டிருந்த பிள்ளைவாள் அப்படியே செய்து தலைக்கு தீம்புவந்ததாக ஒரு வம்புக்கதை உண்டு.

சித்தவைத்தியம் கடல்கொண்ட தென்னாட்டின் மரபு என்பார்கள். அதன் அடிப்படைச் சொற்களான வாதம்,பித்தம்,கபம் மூன்றும் சம்ஸ்கிருதச் சொற்கள். அவற்றின் மூலம் அங்கேதான். பீதம் என்றால் மஞ்சள். நோய்பெயர்கள் பெரும்பாலும் சம்ஸ்கிருதம். மகோதரம்,குன்மம், கண்டமாலை… நோய் சம்ஸ்கிருதத்தில் வருவதனால் மருந்தும் சம்ஸ்கிருதம். தசமூலாதி சூர்ணம், திரிரஸப் பொடி…. சிட்டுக்குருவி சுத்த தமிழ் பறவை என நினைக்கிறேன். சித்த வைத்திய மரபின் உச்ச சாதனை என்று இப்போது பறைசாற்றப்படுகிற சிட்டுக்குருவி லேகியம் தமிழகத்திற்கு அப்பால் பெரிய அளவில் புகழுடன் இல்லை. சிட்டுக்குருவி போல பறந்து பறந்து துய்ப்பதற்கு உதவியான இதை வயோதிக அன்பர்களுக்கு விற்கும் நபர்கள் டிவியில் வந்து ”…உங்கப்பன் போலே சொல்றேன். எடுரா கைய”என்று கண்ணீர் மல்க அதட்டுகிறார்கள்.

எல்லா இடங்களிலும் உள்ளதுதான் இடக்கரடக்கல். பல இல்லங்களில் உடலின் பல இடங்களை, உடல்சார்ந்த பல பொருட்களை வாயால் சொல்லவே மாட்டார்கள்.மதம் சார்ந்த விலக்குகளும் உண்டு. எனக்குத்தெரிந்த அய்யங்கார் வீட்டில் மீன் என்றே சொல்ல மாட்டார்கள். மீயன்னா என்பார்கள். கறிக்கு கானா. முஸ்லீம்களுக்கு பன்றி விலக்குண்டு. நானறிந்த ஒரு ராவுத்தர் டாக்டரிடம் கதறியபடி ஓடிப்போய் ”பேரு சொல்லப்படாததை பேருசொல்லப்படாதது கடிச்சிட்டு துரை” என்று சொன்னார்.

நம்மிடம் எல்லாவற்றுக்கும் சொற்கள் இருந்திருக்கும். இல்லாமல் எண் அடையாளம் போட்டா அவற்றையெல்லாம் புழங்கியிருப்பார்கள்? தமிழ் அவரை விதைபோல இரு பகுதி. ஒன்று செவ்வியல்.அதுதான் நமக்கு ஏட்டுக்கு அடங்கியது. ஏட்டால் அணையிடப்படாத பெருவெள்ளமாக இன்னொரு தமிழ் உண்டு. முதலில் சொன்னது கன்னித்தமிழ். இது கள்ளித்தமிழ். நவீன மொழியியலில் வெளியே சொல்வடிவிலிருப்பது பரோல் [Parole] வெளிமொழி. மனதில் நுண்வடிவில், அர்த்த வடிவில், இருப்பது லாங்[Langue], அகமொழி. தமிழின் அகமொழி பலதமிழ்களுக்குச் சமம். அதில் தேறிய பிறகே நானெல்லாம் இதில் அறிமுகம் பெற்றேன்.

முற்றிலும் நாகரீகமான இந்த மொழியைவைத்துக் கொண்டு அந்தக்காலம் முதலே கலைஞர்கள் துன்புற்றிருக்க வேண்டும். தனக்கு தமிழ்மொழி போதவில்லை என்ற துயர் நாஞ்சில்நாடனுக்கு இருக்கிறது. ”இருக்கிற தமிழ வச்சிட்டு நீங்க எழுதினது போரும் சும்மா இருங்க. வீட்டிலே சமைஞ்ச புள்ளை இருக்கு” என்று சொன்னேன்.

நாஞ்சில்நாடன் கைவசம் சொற்களஞ்சியம் ஒன்று நிரம்பி கனத்து துருப்பிடித்த பூட்டுடன் இருக்கிறது. என் கைவசம் அதைவிடப்பெரிய ஒன்று. அதிலிருந்து மூத்த எழுத்தாளரின் ஐயம் தீர சரம் சரமாக அனுப்பலாம்தான். அதற்கும் மரபு அனுமதிக்கவில்லையே. மேலும் நாளை கடும் சினத்தால் அவரை வைவதற்கும் அதே சொற்களைத்தானே நான் பாவிக்க வேண்டும்?

முந்தைய கட்டுரைஎஸ்ரா
அடுத்த கட்டுரைமுடிவின்மையின் அடி:சிரில் அலெக்ஸின் ‘முட்டம்’