அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
முதல் முறையாக விஷ்ணுபுரம் இலக்கிய விருதுகளில் பங்கு கொள்கின்றேன். பொதுவாகவே இலக்கியவாதிகளின் சந்திப்புகள் இனிமையானவை. பல மூத்த எழுத்தாளர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைத்தது குறிப்பாக திரு. நாஞ்சில் நாடன் திரு . சோ. தருமன், திரு. விக்ரமாதித்யன் போன்றோரின் சந்திப்புகள் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கம் அளிக்கும்.
இது போன்ற நிகழ்வுகள் மக்களை இலக்கியம் நோக்கி அழைத்துச் செல்ல மிக உறுதுணையாக இருக்கும், இளம் வாசகர்களுக்கு உண்டான தயக்கங்களை போக்குவதற்கும் இந்த வகையான சந்திப்புகள் வகை செய்கிறது. முதன்முறையாக புத்தகத்தில் மட்டுமே கண்ட உங்களை நேரில் கண்டது அற்புத அனுபவமாக இருந்தது இதுபோன்ற முயற்சிகள் வாசகனுக்கும் எழுத்தாளனுக்கும் உள்ள இடைவெளியை குறைக்கிறது. படைப்பாளிகளின் படைப்பு ஏற்படும் சந்தேகங்களை நேரடியாக கேட்டு அறிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக அமைந்தது. மேடை வடிவமைப்பு மிக நேர்த்தியாகவும், வசீகரமாகவும் இருந்தது
உங்களுடன் உரையாடிய அந்த சில நிமிடங்களை என் நினைவில் மீண்டும் மீண்டும் கொண்டு வந்து மகிழ்கிறேன்.விஷ்ணுபுரம் விருது வழங்கும் நிகழ்வில் உங்களது உரை சிறப்பாக இருந்தது. மறக்க இயலாத நாளாக மாற்றிய திரு ஜெயமோகன் அவர்களுக்கும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திற்கும் நன்றி.
தமிழ்க்குமரன் துரை
திரு.ஜெயமோகன் அவர்களுக்கு
வணக்கம்.
விஷ்ணுபுரம் விழாவிற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை வருடாவருடம் அதிகரித்திருக்கிறது என்பது நான் 2014லிருந்து தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருப்பவள் என்ற முறையில் மிகுந்த பெருமையளிக்கிறது. எண்ணிறைந்த வாசகர்கள், திட்டமிடப்பட்ட நிகழ்வுகள், அரங்குகள், உணவுக்கூடங்கள் என எல்லாமே கனகச்சிதம். (நான் எப்போதும் தங்குமிட வசதியை கோருவதில்லை என்பதால் அது குறித்து சொல்லவில்லை. ஆனால் அதுவும் கச்சிதமாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை) இம்முறை மட்டுநிறுத்துனர்கள் அறிமுகப்படலம் தாண்டி, சபையில் நிலவி விடும் சிறு மௌனத்தை இட்டு நிரப்புபவர்களாக இருந்தாலே போதுமென்றளவுக்கு கேள்விகள் தெளிவாகவும் கச்சிதமாகவும் இருந்தது. சின்ன வீரபத்ருடு அரங்கில் நீங்கள் அவர் கூறியவற்றை உள்வாங்கி, அடுத்த நிமிடங்களில் அதை திரள்வாக்கி சொன்னது உங்கள் இடத்தை“ சொன்னது.
ஆரம்ப நாட்களில் இதனை ஒரு கூடல் என்று திட்டமிட்டிருக்கலாம். சிறு நிகழ்வு என்று உத்தேசிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இன்றோ இந்நிகழ்வு தமிழ் இலக்கிய உலகின் திரண்ட முகமாக, அடையாளம் காண வேண்டிய படைப்புகள், படைப்பாளிகள், தன்னறம் போன்ற நிறைவான காந்திய அமைப்புகள், அழிசி போன்ற தன்னலமற்று இயங்கி வரும் கலைஞர்கள், வளர்ந்த எழுத்தாளர்கள் என எல்லோரையும் முன்னிறுத்தும் கலாச்சார நிகழ்வாக மாறியிருக்கிறது. இதன் மையம் நீங்கள்தான் என்றாலும், இவ்விழாவில் நீங்களோ உங்கள் படைப்புகளோ எங்குமே முன்னிறுத்தப்படுவதில்லை. அடையாளம் காணப்பட வேண்டிய தமிழ் படைப்பாளிகளை உயர்த்தி பிடிப்பதோடு, மற்ற மாநிலங்களின் முக்கிய படைப்பாளிகளை இங்கு கொண்டு வந்து நிறுத்துகிறீர்கள். இது மேலும் மேலும் வளர்ந்து பெருகட்டும்.
நன்றி
கலைச்செல்வி.
அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருதுவிழாவிலும் நிகழ்விலும் கலந்துகொண்டேன். நான் ஆறாண்டுகளாக வந்துகொண்டிருக்கிறேன். வண்ணதாசன் விழாவில் கலந்துகொண்டபின் இதைப்போல இன்னொரு விழா விஷ்ணுபுரம் அமைப்புக்கு அமையாது என எண்ணினேன். அதற்கு வண்ணதாசனின் கரிஷ்மாவும் ஒரு காரணம் என நினைத்தேன். ஆனால் அதிலிருந்து ஆண்டுதோறும் விழா வளர்ந்துகொண்டே இருக்கிறது. இம்முறை உச்சம். ஆனால் இன்னும் நாலைந்தாண்டுகளில் இது மிகச்சிறியதாக தெரியுமென நினைக்கிறேன்.
மிகச்சிறப்பான விழா. இந்த விழாவைப்பற்றி ஒரே வரியில் இப்படிச் சொல்வேன். பார்வையாளர்களை முக்கியமாகக் கருதி நிகழ்த்தப்பட்ட விழா. பொதுவாக இலக்கியவிழாக்கள், கூட்டங்கள் எல்லாம் பார்வையாளர்களை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. அரைமணிநேரம் பேசவேண்டியவர் ஒன்றரை மணிநேரம் பேசிக்கொல்வார். பேசத்தெரியாதவர் பேசிக்கொண்டே இருப்பார். கேள்விகேட்கிறேன் என்று எழுந்து சம்பந்தமில்லாமல் உளறித்தள்ளுவார்கள். ஏண்டா வந்தோம் என்று ஆகிவிடும். அன்றாட வாழ்க்கையில் சுயதொழிலில் மண்டை காய்ந்துதான் இலக்கிய நிகழ்ச்சியின் அறிவிப்பை பார்த்துவிட்டு கிளம்பி வருகிறோம். வந்தால் ஏண்டா வந்தோம் என்று ஆகிவிடும். ஆனால் நாலைந்து மாதம் கடந்து மீண்டும் வருவோம். இதுதான் இலக்கியவாசகனின் தலையெழுத்து.
இங்கே ஒருவார்த்தைகூட அர்த்தமில்லாமல் பேசப்படவில்லை. ஒருவர் கூட எல்லை கடந்து பேசவில்லை. தேவையில்லாத எவருமே பேசவில்லை. அதைவிட மிகச்சரியான நேரத்தில் எல்லாம் நடைபெற்றது. இன்றைக்கு நேரம் மிக முக்கியம். எல்லாருக்குமே அவசரங்கள் உள்ளன. மிகக்கச்சிதமாக நிகழ்ந்தது. நல்ல உணவு. நல்ல புத்தகக்கடைகள். ஒரே குறை நல்ல காபி டீ ஏற்பாடு செய்திருக்கலாம் என்பதுதான். நிகழ்ச்சியில் ஜெய்ராம் ரமேஷ், சின்ன வீரபத்ருடு ஆகியோரின் அரங்குகள் மிகச்சிறப்பாக இருந்தன. திருச்செந்தாழை சோ தருமன் சிறப்பாக பேசினார்கள்.
ஆர்.எஸ்.சண்முகசுந்தரம்