விஷ்ணுபுரம் விழா-2

விஷ்ணுபுரம் விழா -1
விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்
விக்ரமாதித்யன் ஆவணப்படம், வீடும் வீதிகளும்

விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் தொடங்கப்பட்ட நாட்களில் விழாக்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை சிலநாட்கள் முன் பகிர்ந்திருந்தேன். அன்று அங்கிங்கெனாதபடி அரங்கசாமி இருந்தார். இந்த விருதே அவருடைய முயற்சியால் தொடங்கப்பட்டதுதான். இவ்வாண்டு ஒரு முக்கியமான தொழில் ஒப்பந்தத்திற்காக துபாய் சென்று அங்கிருந்து கண்ணீர் சிந்தி வாட்ஸப்கள் அனுப்பிக்கொண்டிருந்தார். [அரங்கா உளறாத மேடை, அரங்கா தூங்காத அவை என்பது என்ன இருந்தாலும் ஒரு படி குறைவுதான் – செல்வேந்திரன்]

முதல் ஆண்டு நிகழ்ந்த விழாவில் சிறப்பு விருந்தினராக மணிரத்னம் கலந்துகொண்டார். அவரே தன் செலவில் வந்து, தன் செலவில் அறைபோட்டு தங்கினார். நாங்கள் அளித்த தயிர்சாதம் புளிசாதம் பொட்டலங்களை வாங்கி சாப்பிட்டார். நாங்கள் போட்டிருந்த இரண்டே இரண்டு அறைகளில் ஒரே ஒரு சோபாதான். அதில் ஆ.மாதவன் அமர்ந்திருந்தார். மணிரத்னம் முக்காலியில் அமர்ந்தார். எஞ்சியோர் தரையில் அமர்ந்தனர். மணிரத்னம் வந்த அவருடைய கார் மட்டுமே எங்களிடமிருந்த ஒரே ஊர்தி. அதில் அத்தனைபேரும் நெருக்கியடித்து ஏறி அரங்குக்குச் சென்றோம். மணிரத்னம் மீதே ஒருவரை அமரச்செய்தோம். அந்த விழாவின் செலவு ஐம்பதாயிரம், விருதுத்தொகை ஐம்பதாயிரம்.

விக்ரமாதித்யன் அண்ணாச்சியின் குடும்பத்துடன்

இருநூறுபேர் கலந்துகொண்ட விழா அது. பிந்தைய விழாக்களில் ஐம்பது பேர் வந்து தங்கினர். நூறு பேருக்கு உணவிட்டோம். இப்போது எல்லாமே ஐந்து மடங்கு எண்ணிக்கையில். செலவு பதினைந்து மடங்கு. அன்று  என் பணம் ஐம்பதாயிரம். சிறில் அலெக்ஸ், அரங்கா உட்பட நண்பர்களின் பணம் ஐம்பதாயிரம். முதல் எட்டாண்டுகள் விஷ்ணுபுரம் வட்டத்து நண்பர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவது என்னும் நிபந்தனை வைத்திருந்தோம்.

பின்னர் நிகழ்வு பெருகிப்பெருகிச் சென்றது. ஆகவே வாசகர்களிடம் நிதி பெற ஆரம்பித்தோம். நிறுவனநிதிகளை இதுவரை பெறவில்லை. இனி அதையும் தவிர்க்கமுடியாது என்பதே சூழல். இவ்வளவுபெரிய விழாவுக்கான செலவுகளை வாசகர்கள் மட்டுமே அளிக்கும்படிக் கோருவது சரியல்ல. ஆனால் பெரிய அளவில் நிறுவனநிதியை பெறும் சூழலில் நாங்கள் இல்லை. அதற்கு ஒரு வழிமுறையை கண்டடைந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். வழக்கமான நிதியை வாசகர் அளிக்க, மிச்சத்தை வெளியே தேடமுடியுமென்றால் நல்லது.

’அன்னமிட்ட கை’ விஜய் சூரியனுடன்

விஷ்ணுபுரம் விழா தொடங்கிய ஆண்டே, எந்த வகையிலும் அதற்குரிய முக்கியத்துவம் உருவாகும் முன்னரே, நாங்கள் முறையாக அழைக்காமலேயே பார்வையாளர்களாக வந்து கலந்துகொண்டு, இன்றுவரை உடனிருப்பவர்கள் டி.பாலசுந்தரம், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன், இயகாகோ சுப்ரமணியம், டைனமிக் நடராஜன். நடராஜன் இன்று விஷ்ணுபுரம் அமைப்பாளர்களில் ஒருவர். மற்ற மூவரும் கோவையில் இலக்கியத்துக்கான பெரும்பணிகளை தங்கள் அளவில் நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நாங்களும் அவர்களுடன் இணைந்து கொண்டிருக்கிறோம்.

இன்று கோவை தவிர தமிழகத்தின் எந்தப்பகுதியிலும் எந்த தொழிலதிபர்களும் எவ்வகையிலும் இலக்கியத்திற்கு அல்லது பண்பாட்டுக்குப் பணியாற்றுவதில்லை என்பதே உண்மை. தங்களை முன்வைக்கும் நிகழ்வுகளையே அவர்கள் இலக்கிய, பண்பாட்டுப் பணிகள் என நினைக்கிறார்கள். இம்மூவரையும் இங்கே குறிப்பிடக் காரணமே அவர்கள் நிகழ்த்தும் எந்நிகழ்விலும் அவர்களின் முகமே இருப்பதில்லை என்பதனால்தான். அவர்களின் பணிகளை இலக்கியவாதிகளாகிய நாங்கள் அடையாளம் காண்கிறோம், அங்கீகரிக்கிறோம் என ஒவ்வொரு முறையும் அவர்களிடம் சொல்ல  இந்த விழாச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்கிறோம். ஏனென்றால் இது வரலாறு.

ஷாகுல் ஹமீது, சின்னவீரபத்ருடு, சிறில் அலெக்ஸ், வழக்கறிஞர் செல்வராணி, ஜெய்ராம் ரமேஷ், விஜயராகவன்

மீளமீளச் சொல்லிக்கொள்வது ஒன்றுண்டு, இது இலக்கிய விழா. இலக்கியக் கருத்தரங்கோ இலக்கிய விவாத அரங்கோ அல்ல. விழாவில் மட்டுமே கொண்டாட்டம் அமையமுடியும். ஊர்கூடியே விழா நிகழமுடியும். எல்லா தரப்பினரும் இங்கே வந்தாகவேண்டும். உண்மையில் தொழிலதிபர்கள் முதல் தொழிலாளர்கள் வரை, எழுத்தாளர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை அனைவரும் பங்கேற்கவேண்டுமென விரும்புகிறோம். சினிமா, இசை, ஓவியம் என அனைத்துக் கலைத்துறையைச் சார்ந்தவர்களும் பங்கேற்கவேண்டுமென்பது இலக்கு. ஊரேகூடி ஒரு படைப்பாளியைக் கொண்டாடும் நிகழ்வு இது.

ஆனால் இசை, ஓவியம் போன்ற துறைகளில் இலக்கியம் அல்லது இலக்கியவாதிமேல் மதிப்பு கொண்டவர்கள் அனேகமாக எவருமில்லை. ஓர் இலக்கியவிழாவில் கலந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுவதில்லை, அழைத்தபோது பெரிய ஊதியமும் மிகப்பெரிய வசதிகளும் எதிர்பார்த்தனர். இலக்கியத்தின் இடத்தை அறிந்தவர்கள் சினிமாவில்கூட மிகச்சிலர்தான். அவர்களில் பெரும்பாலும் அனைவரையும் அழைத்துவிட்டோம். அவர்களில் முதன்மையானவர் என்று சொல்லத்தக்கவராகிய கமல்ஹாசன் மட்டுமே இனி அழைக்கப்பட வேண்டியவர். அவரை அழைப்பதற்கு விரிவான ஏற்பாடுகள் தேவை  என்பதனால் ஒத்திப்போகிறது.

வசந்த், ஷாகுல்

இவ்விழாவில் வெவ்வேறு இடங்களில் வருகையாளர்களைத் தங்கவைத்திருந்தோம். முன்பு விஷ்ணுபுரம் விருதுவிழா ராஜஸ்தானி பவனை விட சற்றே சிறிய குஜராத்தி பவனில் நிகழ்ந்தது. இம்முறை வருகையாளர்களைத் தங்கவைக்க அதை அமர்த்தியிருந்தோம். ராஜா நிவாஸ், டாக்டர் பங்களா ஆகிய இரு விருந்தினர் மாளிகைகளை முழுமையாக அமர்த்தியிருந்தோம். அதைத்தவிர இரு ஓட்டல்களில் நிகழ்வில் பங்கேற்பவர்களுக்காக அறைகள் போட்டிருந்தோம்.

வாசகர்களும் எழுத்தாளர்களும் சேர்ந்து தங்குவது மிக முக்கியமானது என்பது என் எண்ணம். 1985 முதல் நான் கேரளத்தில் கலந்துகொண்ட இலக்கிய விழாக்களில் தகழி சிவசங்கரப்பிள்ளை உட்பட மாபெரும் படைப்பாளிகளுடன் சேர்ந்து தங்கியிருக்கிறேன். அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். எனக்கு அவை அளித்த உத்வேகமும் கல்வியும் மிகப்பெரிய வாய்ப்புகள். இப்போதும் அந்நாட்களை பெரும் உணர்வுக்கொந்தளிப்புடன் மட்டுமே நினைவுகூர முடிகிறது.

’குருஜி’ சௌந்தர், ராஜகோபாலன், இளம்புயல் விக்னேஷ் ஹரிஹரன்

ஆனால் விருந்தினர்களை அவ்வாறு பொதுவாகத் தங்கவைப்பது அவர்களை மரியாதைக்குறைவாக நடத்துவதாகவும் தொனித்துவிடும். ஆகவே அவர்களுக்கு மிகச்சிறந்த தனியறைகளையே அளிக்கிறோம். பல மூத்த எழுத்தாளர்கள் பிறருடன் தங்குவதை விரும்புவதுமில்லை. அவர்களுக்கு கூட்டத்தைக் கையாள்வதோ அல்லது தவிர்க்கமுடியாதபடி எழுந்துவரும் முதிரா இளைஞர்களின் கேள்விகளை எதிர்கொள்வதோ கடினமானது. இந்தச் சிக்கலை எப்படி எதிர்கொள்வதென்பது ஒரு கேள்விதான்.

26 ஆம் தேதி காலையில் ஓரு வாசகர் ஆஸ்பத்திரிக்குப் போகவேண்டும் என்றார். வாந்தி எடுத்திருக்கிறார். என்ன ஆயிற்று என்றேன். மொத்த இரவும் விடியவிடிய ஒரு சிறு குழுவுடன் இலக்கிய அரட்டை. முப்பதுக்கும் மேல் டீ. ”முப்பது டீயா?” என்றேன். “ஆமா சார், பேசிக்னே இருந்தோம்.” வேறென்ன ஆகும்? ஆனால் அவர் வாழ்க்கையில் என்றும் நினைத்திருக்கும் இரவென அது அமையும். அடுத்தமுறை அறைகளிலேயே டீ போட்டு அளிக்க ஏற்பாடு செய்யவேண்டும்.

நானும் அந்தப் போதையிலேயே இருந்தேன். முந்தையநாள் இரவு இரண்டு மணிநேரம்தான் தூங்க முடிந்தது. அதற்கு முந்தையநாள் நான்குமணிநேரம். காலை ஐந்தரைக்கே எழுந்து டீ குடிக்கச் சென்றோம். டீ குடித்து திரும்பிவந்தபோது எட்டு மணி. அதுவரை வழியெங்கும் நின்று நின்று இலக்கியப்பேச்சு. ஒன்பதரை மணிக்கே நிகழ்வு தொடங்கிவிட்டது.

கவிஞர் வாதரேவு சின்ன வீரபத்ருடு [சரியான உச்சரிப்பை வந்தடைய அவ்வளவு சிக்கல். ஆங்கிலம் வழியாக நம் பெயர்கள் உருமாறிக் கொண்டிருக்கின்றன] முதல் அமர்வு. முன்பு கன்னட எழுத்தாளர் எச்.எஸ்.சிவப்பிரகாஷ் வந்து கலந்துகொண்ட அரங்கில் இதைப்போல ஒரு மின்விசை நிகழ்ந்தது. ஒரு சொல்கூட தயங்காமல், மிக ஆழமாக அனைத்து வினாக்களுக்கும் விளக்கம் அளித்தார். தெலுங்கு கவிதை மரபின் ஒரு சுருக்கமான வரலாறு, அதில் செயல்பட்ட வெவ்வேறு விசைகள், இலக்கிய இயக்கங்கள், அதற்கும் இந்திய இலக்கியத்துக்குமான ஊடாட்டம், அதில் சீனக்கவிதைகளின் பாதிப்பு, இந்திய கற்பனாவாத இலக்கியத்தில் பிரிட்டிஷ் பாதிப்பு என விரிந்துசென்ற உரை.

வளவதுரையன், பாவண்ணன், ஷாகுல்- அண்ணாச்சியுடன்

அவருடைய வாசிப்பும் சிந்தனைகளும் பிரமிப்படையச் செய்பவை. தெலுங்கு மரபிலக்கியம், தமிழ் மரபிலக்கியம் [ஆங்கிலம் வழியாக], சம்ஸ்கிருத இலக்கியம், சீன இலக்கியம் என ஆழ்ந்து கற்றிருந்தார். நினைவில் இருந்தே முழுத்தகவல்களையும் எடுத்தார். வினாக்களுக்கு கவித்துவமும் கல்வியும் நிறைந்த விளக்கங்களை அளித்தார். நவீனக் கவிதையில்கூட அகம் புறம் என்னும் பிரிவினை இருப்பதை [புறம் வெளியுலகு நோக்கி எழுதப்படுவது, அகம் உள்முகமாக நோக்கி எழுதப்படுவது], இலக்கிய இயக்கங்களில் செவ்வியலும் நாட்டாரியலும் ஊடாடிப்பின்னிச் செல்வதை விளக்கினார்.

நாம் தெலுங்குக் கவிதை பற்றி அறிந்திருக்கவே இல்லை. ஆகவே அங்கே நவீனக்கவிதை இல்லையோ என்றே எண்ணியிருக்கிறோம். சின்ன வீரபத்ருடு அவர்களின் பேச்சில் இருந்து நாம் அறியமுடிவது தெலுங்கு இலக்கியத்தின் மையம் ஹைதராபாத் அல்ல என்பதே. ராஜ்மந்திரிதான் அதன் தலைநகரம். அங்கே மிகத்தீவிரமான இலக்கிய மரபு உள்ளது. ஆனால்  ஆயிரம்பேருக்குள்தான் அங்கே நவீன இலக்கியம் வாசிக்கிறார்கள். எண்பதுகளின் நவீனத்தமிழிலக்கியச் சூழல்போல.

நண்பர், இதழாளர் ராஜு இல்லையேல் வீரபத்ருடு அவர்களை சென்றடைந்திருக்க முடியாது. அவர் அறியப்பட்ட ஆளுமை அல்ல. ராஜு அவரை மிகச்சிறப்பாக மொழியாக்கம் செய்தார். வீரபத்ருடு அவர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்தேன். தெலுங்கின் மிகச்சிறந்த 200 நவீனக் கவிதைகளை அவர் தேர்ந்தெடுத்தளித்தால் அவற்றை மொழியாக்கம் செய்து ஒரு நூலாகக் கொண்டுவரலாம். ராஜு தமிழில் அதை தொகுத்தளிக்கலாம்.

ஏற்கனவே விஷ்ணுபுரம் அமைப்பால் அழைக்கப்பட்ட படைப்பாளிகளின் ஆக்கங்கள் நூலாகியிருக்கின்றன. ஜனிஸ் பரியத்தின் சிறுகதைத் தொகுதி நிலத்தில் படகுகள் நற்றுணை வெளியீடாக வந்துள்ளது. அனிதா அக்னிஹோத்ரியின் நாவல் ஆனந்த் ஸ்ரீனிவாசன் மொழியாக்கத்தில் வெளியாகவுள்ளது. எச்.எஸ்.சிவப்பிரகாஷின் குரு என்னும் நூல் ஆனந்த் ஸ்ரீனிவாசன் மொழியாக்கத்தில் வெளியாகியிருக்கிறது. என் மொழியாக்கத்தில் கே.ஜி.சங்கரப்பிள்ளையின் கவிதைகள் நூலாகியிருக்கின்றன. கல்பற்றா நாராயணன் கவிதைகள் வெளியாகவுள்ளது.

வசந்த் சாய் உரையாடல் தமிழ்ச்சூழல் சினிமாமேல் முன்வைக்கும் வழக்கமான வினாக்கள் இல்லாமல் இலக்கியமும் சினிமாவும் கொண்டிருந்த உறவாடலை ஒட்டியதாகவே வளர்ந்தது. வசந்த் மென்மையாகவும் கூர்மையாகவும் கேள்விகளை எதிர்கொண்டார். அட்டன்பரோவின் திரைப்படத்தில் காந்தியின் குரலாக அவர் குரல் ஒலித்ததைப் பற்றிய கேள்விபதில் வியப்பூட்டியது. அது எவ்வளவுக்கு முக்கியமானதாக தமிழ் மனதில் பதிந்துள்ளது என்பது ஆராய்வதற்குரிய ஒன்று.

ஜெய்ராம் ரமேஷின் அரங்கு அவர் எழுதி சமீபத்தில் வெளிவந்துள்ள ஆசியஜோதி கவிதையின் வரலாறு பற்றிய நூலை ஒட்டியே பெரிதும் நிகழ்ந்தது. பௌத்தம் ஐரோப்பாவினூடாக இந்தியாவின் நவீன அறிவியக்கவாதிகளால் கண்டடையப்பட்டதை ஜெய்ராம் ரமேஷ் விளக்கினார். எட்வின் ஆர்னால்ட் வழியாகவே  விவேகானந்தர், காந்தி, நேரு, அம்பேத்கர் அனைவருமே புத்தரை அறிந்தனர். ஆர்னால்ட் முன்வைத்த பௌத்தம் ஒரு நவீனஆன்மிகம். கீழைநாடுகளில் அப்போது இருந்த பௌத்தம் இனவாதம், மதவாதம் கொண்ட அரசியல் பௌத்தம். இரண்டுமே இன்று நீடிக்கின்றன. சூழியல் சார்ந்தும் இந்திரா காந்தி சார்ந்தும் விவாதம் நிகழ்ந்தது.

விக்ரமாதித்யனின் வாசகர் சந்திப்பு ஒருவகையான கட்டற்ற பெருக்கு. நினைவுகள், கருத்துக்கள், உணர்ச்சிகள். சோ.தர்மனும் அப்படித்தான். அவர்களின் மொழியுலகம், அகவுலகம் வேறு. அங்கே அரங்கு என்பதன்பொருளும் வேறு. மட்டுறுத்துநர் மட்டுமல்ல, அரங்கினர் கூட அங்கே எதையும் வழிநடத்த முடியாது.

விஷ்ணுபுரம் போன்ற அரங்கு ஏன் தேவை என்றால் இதன் பொருட்டே. வாசகர்கள்- எழுத்தாளர்களால் ஒருங்கிணைக்கப்படும் இத்தகைய அரங்குகளிலேயே சோ.தர்மனும் விக்ரமாதித்யனும் பேசமுடியும். கல்விநிறுவனங்கள், அரசு, பெருநிறுவனங்களின் நிகழ்வுகளில் அவர்கள் பொருந்தாதவர்களாக, கரடுமுரடானவர்களாக, இடம்பொருள் அறிந்து பேசாதவர்களாக, பொதுவாக அன்னியர்களாக கருதப்படுவார்கள். அவர்கள் பேசுவதென்ன என்று புரிந்துகொள்ளும் அவையும் பெரிய நிறுவன அரங்குகளில் அமைவதில்லை.

இதை நான் மும்பை கேட்வே லிட் ஃபெஸ்ட் நிகழ்த்தும் என் நண்பர்களான மலையாளி இதழாளர்களிடம் பேசியிருக்கிறேன்.ஆங்கிலத்தில் தொடர்புறுத்தும் திறன் கொண்டவர்களையே அவர்கள் அழைக்கிறார்கள். அக்காரணத்தாலேயே ஆழமான,அசலான குரல்கள் வராமலாகின்றன. அரசியல் சரிகள், அவைமுறைமைகள் பார்த்துப்பேசும் மிகச்சம்பிரதாயமான குரல்களே படைப்பாளிகளின் குரல்களாக ஒலிக்கின்றன.

ஒருவர் இன்று ஆங்கிலத்தில் சரளமாகப் பேசுவார் என்றாலே அவருடைய நுண்ணுணர்வில் ஒரு பெரும் பாதிப்பு இருக்கும் என எண்ணலாம். அவருடைய அசல்தன்மையை விட புறச்செல்வாக்குகளே ஓங்கியிருக்கும். இது இந்திய மொழிப் படைப்பாளிகளைச் சார்ந்து மட்டுமல்ல, ஐரோப்பிய ஆசிய மொழி படைப்பாளிகளைச் சார்ந்தும் சொல்லத்தக்கது என்பதை சர்வதேச இலக்கியக் கருத்தரங்குகளில் கண்டிருக்கிறேன்.

விதிவிலக்குகள் உண்டு, யூ.ஆர்.அனந்த மூர்த்தி போல. அதேபோல அரசியல்சரிகளுக்கும் அவைமுறைமைகளுக்கும் அப்பாற்பட்டவர்கள் எல்லாம் படைப்பூக்கம் கொண்ட அசலான ஆளுமைகளும் அல்ல. ஒருவகையிலும் பொருட்படுத்த முடியாதவர்கள் எல்லா முறைமைகளையும் புறக்கணித்துச் சலம்புவதே மேடைகளில் அதிகமும் நிகழ்கிறது. அவர்களும் விதிவிலக்குகளே.

அசலான குரல்களில் கணிசமானவை ஒருவகையான தன்னிச்சைத்தன்மை கொண்டவை. அவற்றை அடையாளம் காண படைப்புகளை படிக்கும் வாசகர்கள், நுண்ணுணர்வுடன் அணுகுபவர்களால் மட்டுமே இயலும். அதற்குத்தான் விஷ்ணுபுரம் போன்ற அவையும்  மேடையும் தேவையாகின்றன.

வழக்கறிஞர் செந்தில்,செல்வேந்திரன், சென்னை புத்தக்கடை செந்தில், நரேன்

மாலையில் நிகழ்வு ஐந்து முப்பதுக்குத் தொடங்கியது. விக்ரமாதித்யன் பற்றிய ஆவணப்படம். ஞானக்கூத்தன் தொடங்கி படைப்பாளிகள் பற்றிய ஆவணப்படங்களை தயாரித்து வருகிறோம். இந்த ஆவணப்படங்களின் நோக்கம் வாசகர்கள் அல்லாதவர்களுக்கு விக்ரமாதித்யனை அறிமுகப்படுத்துவது அல்ல. ஆவணப்படம் வழியாக எந்த எழுத்தாளனும் எவருக்கும் அறிமுகமாகக்கூடாது, இயலவதுமில்லை. இது விக்ரமாதித்யனை ஏற்கனவே படித்து உணர்ந்து அறிந்த அவருடைய வாசகர்களுக்காக எடுக்கப்பட்டது.

நான் ஓர் எதிர்பார்ப்பாக முதல் ஆவணப்படத்திலேயே இயக்குநர்களிடம் சொன்னது படைப்பாளியின் குரல், உடல்மொழி, பேச்சுமுறை ஆகியவை முதன்மையாகப் பதிவாகவேண்டும் என்பதுதான். அவர் வாழும் சூழல் பதிவாகவேண்டும். அவருடைய ஊர், வீடு, குடும்பம், அவருடைய அறை ஆகியவை. அதன்பின் அவருடைய புனைவுலகு பற்றிய ஒரு துளிச்சித்திரம், அவரைப்பற்றிய சூழலின் அவதானிப்பு ஆகியவை தேவை. அதிகபட்சம் நாற்பது நிமிடங்கள். ஆவணப்படத்திற்கு இதுதான் இங்கே சராசரிப் பார்வையாளர் அளிக்கும் நேரம்.

அதன்பொருள் வேறு ஆவணப்படங்கள் கூடாதென்பது அல்ல. கோவை மயன் அவர்கள் எழுத்தாளர்களைப் பற்றி ஒருசில மணிநேரம் நீளக்கூடிய ஆவணப்படங்கள் தயாரித்திருக்கிறார். படைப்பாளிகளுடன் நீண்ட உரையாடல்கள் பதிவாகவேண்டும். அவர்களை விரிவாக அறிமுகம் செய்யும் ஆவணப்படங்களும் நமக்குத்தேவை. எதிர்காலத்தில் அவை இயல்வதாகலாம். நாங்கள் உத்தேசிப்பது ஒரு விழாவின் பகுதியென செய்யப்படும் ஒரு சிறப்பித்தலை மட்டுமே.

ஆனந்த்குமாரின் ஆவணப்படம் கூடுமானவரை காட்சிகள் வழியாக விக்ரமாதித்யனை சுருக்கி அளித்தது. அவர் வாழும் தென்காசியில், ஆலயத்தில் நாயன்மார்களின் வரிசையின் இறுதியில் அவர் நிற்கும் காட்சியுடன் தொடங்கியது. முன்னோட்டமாக மகாகவியென இறுமாந்திருக்கும் அவன் மதியம் வெயில் உறைக்கவும் மனிதனாக ஆவான் என்னும் அவர் வரிகள் வழியாக அவர் ஊசலாடும் இருபுள்ளிகளை சுட்டிக்காட்டியது.

கோயிலுக்குள் அமர்ந்து திரைபோட்டு வைத்தால் தீவைத்துக் கொளுத்து, தங்கரதத்திற்கு அலங்காரம் எதுக்கு என கவிதை வாசிக்கும் விக்ரமாதித்யனில் வெளிப்படுவது கலகத்தின் கவித்துவம், அதை மிஞ்சிய ஓர் ஆன்மிகம். [கோயிலையே திரை என்றும் அலங்காரம் என்றும் சொல்லும் மரபு உண்டு] அதை முவைப்பதே இயக்குநரின் பார்வை. அவர் வீடு, அவருடைய இயல்பான பேச்சுமுறை, சிரிப்பு, அவருடைய பேச்சிலுள்ள கொப்பளிப்பும் கொந்தளிப்பும், அவர் மனைவியுடன் அவருக்கிருக்கும் உறவு, மனைவியின் ஆளுமை என தொட்டுத் தொட்டுச் சென்றது. அவருடைய படைப்பியக்கம் பற்றி வெவ்வேறு கோணங்களில் சக கவிஞர்களும் விமர்சகர்களும் சொல்லும் கருத்துக்களில் நிறைவுகொண்டது.

அரங்கினர் ஆவணப்படத்தால் பெரிதும் உளநெகிழ்வடைந்ததைக் காணமுடிந்தது. “வெறும் காட்சிகளில் இருந்து அவருடைய பல கவிதைகளுக்குச் செல்லமுடிந்தது” என்று ஒரு நண்பர் சொன்னார். “அந்த தனித்த தீபம் போதும், அவரைப்பற்றிய ஒரு படிமமாக எப்போதும் நினைவில் அது நிலைகொள்ளும்” என்றார் ஒருவர். ”தமிழ்க்கவிஞனின் நம்பிக்கை இருக்கே, அது திமிர்தான். அன்பிலீவபிள்” என சிரிக்கிறார். பேசும்போது வாழ்த்துவதுபோல கை தூக்கப்படுகிறது. அவருடைய வெடிச்சிரிப்பில் முடியும் ஆவணப்படம் முடிந்தபின் கண்களில் எஞ்சும் காட்சி அதுதான். “அந்தச் சிரிப்பு இல்லாமல் இனி அவரோட ஒரு வரியைக்கூட படிக்கமுடியாது” என்றார் ஒரு வாசகர்.

செந்திலுக்குப் பாராட்டு

நிகழ்வு ஆறரை மணிக்குத் தொடங்கியது. விஷ்ணுபுரம் விருதுவிழா என்பது உண்மையில் தொடர்ச்சியாக இருநாட்களிலாக மொத்தம் 12 மணிநேரம் நிகழ்ந்த இலக்கிய நிகழ்வின் உச்சம் மட்டுமே. ஆகவே அது ஒரு மங்கலநிகழ்வு. விரிவான பேருரைகளுக்கு அங்கே இடமில்லை. பதினைந்து நிமிடங்கள் ஒவ்வொருவருக்கும். மிகச்சரியாக நிகழ்வு நடைபெற்று முடிந்தது.

ஒவ்வொரு விருந்தினரையும் தேர்ந்து அழைப்பது எங்கள் வழக்கம். இவ்விருது சிற்றிதழ்ச்சூழலில் இருந்து சிற்றிதழ்ச்சூழலில் செயல்படும் ஒருவருக்கு வழங்கப்படுவது. ஆனால் இது இங்குள்ள சிற்றிதழ்ச்சூழலுக்குள் நின்றுவிடலாகாது. இதன் நோக்கமே இச்சூழலில் இருக்கும் பெரும்படைப்பாளிகளை மைய ஓட்டத்திற்கு அறிமுகம் செய்வதுதான். முதல் விருதுமுதல் இந்நோக்கத்தை நான் பதிவுசெய்திருக்கிறேன். ஆகவேதான் சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் இணைந்து அளிக்கும் விழாவென இது அமையவேண்டுமென நினைக்கிறேன். செய்தியூடகங்கள் கவனிக்கவேண்டும், கூடுமானவரை பொதுவாசகர் கவனிக்கவேண்டும், அவ்வாறு கவனத்தை கொண்டுசெல்லும் ஆளுமைகள் வேண்டும்.

இன்னும்கூட நம் சமூகத்தின் அனைத்து தரப்பினரின் பிரதிநிதித்துவம் இவ்விருது விழாவுக்கு இல்லை. தன்னை முன்னிறுத்தாமல், நம் மரபின் ஒரு படைப்பாளிக்காக வந்து சிறப்பிக்கவேண்டும் என்னும் எண்ணம் நம் சமூகத்தின் முதன்மை ஆளுமைகளிடம் இல்லை. அவ்வெண்ணம் உடையவர்களையே இதுவரை அழைத்திருக்கிறோம். ஆரம்பகாலத்தில் இங்கு வந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்தச்செலவில் வந்தவர்கள்.

கூடவே இந்த விருது இந்திய அளவில் சென்றடையவேண்டும் என விரும்புகிறோம். ஆகவேதான் அனைத்து மொழிகளில் இருந்தும் படைப்பாளிகளை அழைக்கிறோம். தெலுங்கில் தீவிரமான ஓர் இலக்கிய இயக்கம் இருப்பது சின்ன வீரபத்ருடு இங்கே வந்தபிறகே நமக்குத் தெரிகிறது. புகழ்பெற்ற அரங்குகளில் தெலுங்கின் முகமென வெளிப்படுபவர்கள் மிக மேலோட்டமானவர்கள். இத்தகைய அரங்குகள் அந்த அதிகாரபூர்வ அரங்குகளுக்கு மாறாக அமைபவை.

பத்தாண்டுகளுக்கு முன் டெல்லியில் நிகழ்ந்த  சாகித்ய அக்காதமி கருத்தரங்கில் ஒரு தெலுங்கு பேராசிரியர் தெலுங்கின் மிகச்சிறந்த படைப்பாளி எண்டமூரி வீரேந்திரநாத் என்று பேச தலையில் அறைந்தபடி ஜி.என்.டெவி எழுந்து வெளியேறியதை எழுதியிருக்கிறேன். உண்மையில் தமிழைப்பற்றி பிறமொழிகளில் இருக்கும் சித்திரமும் இதுவே. இங்கே அகிலன் முதல் பெருமாள் முருகன் வரையிலான மேலோட்டமான எழுத்தே உள்ளது என்பதுதான் அவர்களின் மனப்பதிவு.

சின்ன வீரபத்ருடு அதைச் சொன்னார். அவருக்கு தமிழிலக்கியம் மேலோட்டமான கருத்துப்பிரச்சார எழுத்து மட்டுமே கொண்டது என்னும் உளச்சித்திரமே இருந்தது. அந்த எண்ணம் இவ்விழாக்களால் மாறுகிறது. இத்தனை தீவிரமான இலக்கிய இயக்கம், முழுக்கமுழுக்க வாசகர்களால் முன்னெடுக்கப்படும் இலக்கிய நிகழ்வு இந்தியாவில் இன்னொன்று இல்லை. அதை ஜெனிஸ் பரியத் முதல் ஜெய்ராம் ரமேஷ் வரை திரும்பத்திரும்பச் சொன்னார்கள். “இங்கே கூடியிருக்கும் இளைஞர்களை, குறிப்பாக இளம்பெண்களைப் பார்க்கையில் நான் ஒன்றை உருவாக்க முயலாமல் விட்டுவிட்டேனே என்னும் ஏக்கம் எழுகிறது” என்றார் சின்ன வீரபத்ருடு.

அண்ணாச்சி, அறையில்

இங்கிருந்து இந்த இலக்கிய உலகம் அவர்களின் மொழிக்குச் சென்று சேரவேண்டும். ஜெனிஸ் பரியத், அனிதா அக்னிஹோத்ரி, கே.ஜி.சங்கரப்பிள்ளை போன்றவர்கள் பலமுறை இந்நிகழ்வு, இதில் பரிசுபெற்ற எழுத்தாளர்கள், தமிழ்ச்சிற்றிதழ் இயக்கம் பற்றி தங்கள் மொழிகளில் பேசியிருக்கிறார்கள். தமிழிலிருந்து சர்வதேச அரங்குகளூக்குச் செல்பவர்கள் தமிழில் நவீன இலக்கியம் இருப்பதையே சொல்வதில்லை. ஒரு பின்தங்கிய சூழலில் இருந்து தாங்கள் மட்டும் போராடி வந்திருப்பதான பாவனையையே மேற்கொள்கிறார்கள்.

இலக்கிய ஆய்வாளராக புகழ்பெற்ற ஜெய்ராம் ரமேஷ் அழைக்கப்பட்டதும் அதற்காகவே. இங்குள்ள ஊடகங்கள் தமிழ் சிற்றிதழியக்கத்தைக் கருத்தில்கொள்ள வேண்டும் என்றால் அவரைப் போன்றவர்கள் அதைப்பற்றிப் பேசவேண்டும். அது நிகழ்ந்திருப்பதைக் காண்கிறேன். விக்ரமாதித்யனுக்கு விருது அளிக்கப்பட்டிருக்கும் செய்தி தேசிய அளவில் நூறுக்கும் மேற்பட்ட செய்தி ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.

கிருஷ்ணன் புத்தக வணிகம்

விக்ரமாதித்யனுக்கு விருது அளிக்க முடிவுசெய்தபோது சோ.தர்மனையும் அழைக்கவேண்டுமென எண்ணினேன். முதன்மையான காரணம், விக்ரமாதித்யன் வாழ்ந்த உலகுடன் அணுக்கமானவர் தர்மன், ஆனால் அவரிடமிருந்து மாறுபட்டவர் என்பதுதான். நம்மால் இன்று விக்ரமாதித்யனை கொண்டாடமுடிகிறது. அவருடைய கலகம், கொந்தளிப்பு, அராஜகம் ஆகியவற்றை கொஞ்சம் ‘ரொமாண்டிஸைஸ்’ செய்துகொள்கிறோம். அதன் வழியாக அதை ‘நாகரீகப்படுத்தி’ நம் உலகுக்கு அணுக்கமாக்கிக் கொள்கிறோம். ஆனால் அவர் அவ்வண்ணம் கொந்தளித்த அந்நாட்களில் அவரை நம்மில் பெரும்பாலானவர்கள் அணுக விட்டிருக்க மாட்டோம். எத்தனைபேர் அவரை அஞ்சி, அருவருத்து விலக்கினர் என நான் அறிவேன். இன்று அவரை புகழ்பவர்கள் பலர் அன்று வாசலை அவர் முகத்தில் வீசி அறைந்தவர்கள்தான்.

அதில் பிழையும் இல்லை. அண்ணாச்சி ஓர் எளிய நடுத்தரவர்க்க உலகியலாளனால் தாங்கிக்கொள்ள முடிபவர் அல்ல. உண்மையைச் சொல்லப்போனால் பணிவுடன், பக்தியுடன் என்றாலும் நானும் விலகித்தான் சென்றேன். அவரை என்னால் தாங்கிக்கொள்ள முடியாது. பாரதி காலகட்டத்தில் நான் வாழ்ந்திருந்தால் எட்டையபுரத்திற்கு திரும்பிவந்த பாரதியிடமிருந்து அன்றைய அத்தனை சராசரி மனிதர்களையும், இலக்கியகர்த்தர்களையும்போல நானும் திகைத்து, அஞ்சி விலகியிருப்பேன். ஆனால் சோ.தர்மனைப்போன்றவர்களுக்கு அந்த விலக்கம் இல்லை. அண்ணாச்சியை எவரேனும் ஏதாவது சொன்னால் சொன்னவனை எட்டி அறையவுவும் தேவையானால் அண்ணாச்சிக்கே ஒரு அடிபோடவும்கூடிய அணுக்கத் தொண்டர். அவரைப் போன்றவர்கள்தான் அவரை தாங்கிக்கொள்ள முடியும்.

அண்ணாச்சி வழியனுப்புதல்

அவர்களின் உலகமே வேறு, நம்மால் அதை பேசத்தான் முடியும், உள்ளே நுழைந்து அரைநாள் வாழமுடியாது. அண்ணாச்சியின் கால்தொட்டு அவர் வணங்கி பேச்சை ஆரம்பித்தார். சோ.தர்மனுக்கு அண்ணாச்சி வாழும் சுப்ரமணிய பாரதியேதான், ஒரு அணு குறைவில்லை. மேடையில் அல்ல, எப்போதும். [கூடவே நெல்லைக்கு வெளியே ஒரு பாரதி உருவாகி வரமுடியாது என்னும் ஆழ்ந்த நம்பிக்கையும்]

விழா எண்ணிய நேரத்தில் முடிந்தது. அதன்பின் உணவு. ஒவ்வொருவராக விடைபெற்றுச் சென்றனர். ஆனால் இருநூறுபேருக்கு மேல் மறுநாள்தான் கிளம்பினர். நான் ஒரு கும்பலுடன் டீ குடிக்கச்சென்றேன். டீக்கடையில் அமர்ந்து அரட்டை. அந்த டீக்கடையில் ஒருநாளில் இரண்டுமுறை ஐம்பது டீ ஆர்டர் செய்து குடித்தோம். வழியெல்லாம் நின்றுபேசினோம்.

திரும்பிவந்து வழக்கம்போல அந்த படிகளில் அமர்ந்து சிரிப்பும் அரட்டையுமாக ததும்பினோம். அது ஒரு வழக்கமான சடங்கு. ஒருவகை வெற்றிகொண்டாடல். நிகழ்வை மிகச்சிறப்பாக ஒருங்கிணைத்த குவிஸ் செந்தில்குமாருக்கு பொன்னாடை போர்த்தி தழுவிக்கொண்டேன். “வழக்கமா செகண்ட் யூஸ் பொன்னாடைதான் சார் போர்த்துறது. மாறிடக்கூடாது…” என கிருஷ்ணன் குறிப்பாகச் சொன்னார்.

அன்றிரவு தூங்க மீண்டும் மூன்று மணி. ஷாகுல் ஹமீது இம்முறை ஜாக்ரதையாக எங்கோ சென்று ஒளிந்துகொண்டு தூங்கிவிட்டார். அவரை ஒரு கூட்டம் தேடி அலைந்தது, கப்பல் பற்றிய ஐயங்களைக் கேட்க. நாங்கள் அடுக்கடுக்காக பேசி முடித்து களைத்து தூங்கினோம். காலை ஆறரை மணிக்கு கடலூர் சீனு எழுப்பிவிட்டார். ராஜஸ்தானி பவனை ஏழுமணிக்கு காலிசெய்து தரவேண்டும். அத்தனை பங்களாக்களையும் காலிசெய்துவிட்டு எஞ்சியவர்கள் ராஜாநிவாஸ் பங்களாவில் ஒன்றுசேர்ந்தோம்.

அங்கே மீண்டும் உரையாடல். நிகழ்வை மதிப்பிடுவது, விவாதங்களைப் பற்றிய விவாதம். இலக்கிய அடிப்படைகளைப் பற்றி தீவிரமாக விரிந்து சிலமணிநேரம் பேசினோம். இரண்டு பேசுபொருட்கள். இலக்கிய ஆக்கம் அளிக்கும் தடை பற்றி. இலக்கியத்தில் உளவியல், அல்லது தத்துவார்த்த நெருக்கடிகள் இன்றியமையாதவையா என்பது பற்றி, இலக்கியத்தின் வடிவச்சிக்கல்கள் பற்றி.

கூடவே பகடிகளும் சிரிப்புகளும். இந்த விழாவில் விஷ்ணுபுரம் பதிப்பகம், ஜீவ கரிகாலனின் யாவரும் பதிப்பகம், ஈரோடு பாரதி நூல்நிலையம், தும்பி-தன்னறம் பதிப்பகம், நண்பர் கொள்ளு நதீமின் சீர்மை பதிப்பகம் தமிழினி பதிப்பகம் ஆகிய புத்தகக் கடைகள் இருந்தன. ஒரு குட்டி புத்தகக் கண்காட்சி அளவுக்கு விற்பனை இருந்தது என்றனர்.

யோகாவுடன் விக்கி அண்ணாச்சி

அரங்கிலும், பின்னர் புத்தக அரங்கிலும் நூல்களை வெளியிட்டோம். தமிழினி புத்தக அரங்கில் வசந்தகுமார் இல்லாத சிறிதுநேரம் ஈரோடு கிருஷ்ணன் புத்தகம் விற்றது தொன்மம் ஆகியது. நூல்களை எடுத்தவரிடம் “பேரு ஊரு, ஆதார் நம்பர் சொல்லுங்க பில் போடணும்” என்றார். எஃப்.ஐ.ஆர் போடும் மனநிலை. அவர் எல்லாம் சொல்லி நூலை வாங்கியதும் ”அதில போட்டிருக்கிற விலையிலே பத்து பர்சண்டேஜை நீங்களே கழிச்சுட்டு மிச்சம் குடுங்க” என்றார். “அதை நீங்கதாங்க செய்யணும்” என வாங்குபவர் முணுமுணுக்க ”கணக்கு தெரிஞ்சா நான் ஏன்யா வக்கீலா போறேன்?” என்று ஒரு எகிறல். அவர் “வாஸ்தவம்தாங்க” என அனுதாபத்துடன் சொன்னதாகச் சொன்னார்கள்.

புத்தகங்கள் இங்கே எண்ணியதை விட அதிகமாக விற்றமைக்குக் காரணம் வருகையாளர்கள் அனைவருமே தீவிர இலக்கியம் வாசிப்பவர்கள், கொண்டுவரப்பட்ட நூல்கள் அனைத்துமே தீவிர இலக்கிய நூல்கள் என்பதுதான். ஒப்புநோக்க சீர்மை பதிப்பகத்தின் நூல்களுக்கு விற்பனை குறைவு என நினைக்கிறேன். ஏனென்றால் பெரும்பாலான நூல்கள் மொழியாக்கங்கள். தமிழ் வாசகர்களுக்கு மொழியாக்கங்கள் மேல் சூடுபட்ட பூனைபோல அச்சமிருக்கிறது. பல மொழியாக்கங்கள் ஐந்துபக்கம் வாசிக்கமுடியாத அளவுக்கு மொழிக்குளறுபடி கொண்டவை.

உண்மையில் சிற்றிதழ்ச்சூழலில் இல்லாத மொழிபெயர்ப்பாளர்களின் மொழிநடை சீரானது, நம்பி வாசிக்கத் தக்கது. சேப்பியன்ஸ் வரிசை நூல்களை மொழியாக்கம் செய்த நாகலட்சுமி சண்முகம், வேட்டை எஸ் கண்ணன், சிவசக்தி சரவணன், ஸ்டீவ் ஜாப்ஸ் வாழ்க்கைவரலாற்றை மொழியாக்கம் செய்த உமா பாலு ஆகியோரே மிகச்சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள். சாகித்ய அக்காதமி நூல்களில் துருவன் மகன் நாவலை மொழியாக்கம் செய்த பெ.பானுமதி முக்கியமான மொழிபெயர்ப்பாளர். எல்.சுபத்ராவின் மொழியாக்கங்களும் சரளமானவை.

சீர்மை பதிப்பகத்தின் வெளியீடாக எகிப்திய, அராபிய நாவல்கள் தமிழில் வெளிவந்துள்ளன. தமிழிலக்கியச் சூழலில் அவை மிகப்பெரிய வாசல்திறப்புகள்.  அவர்கள் வெளியிட்ட கிரானடா முக்கியமான ஆக்கம். ஆனால் பொது இலக்கியச் சூழலில் அவை இன்னும் பேசுபொருள் ஆகவில்லை. முனைவர் பி.எம்.எம். இர்ஃபான் போன்றவர்களின் மொழியாக்கம் சரளமானது என்றாலும் றள்வா அஷூர் போன்ற அராபிய பெயர்களின் எழுதுமுறைகள் வாசகர்களை கொஞ்சம் அன்னியப்படுத்துகின்றன. அந்த உளத்தடையைக் கடந்தால் இந்நூல்களை வாசகர்கள் வாங்கி வாசிக்கலாம்.

மாலை ஆறுமணிவரை பேசிக்கொண்டிருந்தோம். ஒரு சிறு இலக்கியக் கூட்டம் அளவுக்கு ஆளிருந்தது. உணவு மொத்தமாக கொண்டுவரப்பட்டது. விக்ரமாதித்யன் அவர்களும் குடும்பமும் அன்று மாலைதான் கிளம்பினார்கள். லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களை தென்காசி சென்று கூட்டிவந்து திரும்ப கூட்டிச்சென்று வீடுசேர்த்தார். அவர்கள் வந்தது முதல் செல்வது வரை யோகேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார்.

விருதுவிழாவுக்குப் பின் உணர்ச்சித்ததும்பலுடன் விக்ரமாதித்யன் கோவை தெருக்களில் நடந்துகொண்டே இருந்ததைப் பற்றி யோகா சொன்னார். அவரால் எவரையும் சந்திக்கவோ பேசவோ முடியவில்லை. அமரவும் முடியவில்லை. சாப்பிடவும் இல்லை. டீ மட்டும் குடித்துக்கொண்டே இருந்தார். நள்ளிரவின் நடந்து களைத்தபின் ராஜஸ்தானி பவன் வந்து என்னிடம் விடைபெற்றுச் சென்றார். மறுநாள் காலை ராஜாநிவாஸ் வந்து ஒருமணிநேரம் பேசிக்கொண்டிருந்தார். அந்தியில் அவரை பேருந்தில் ஏற்றிவிட்டுவிட்டுத்தான் நண்பர்கள் கிளம்பினார்கள்.

மீண்டும் ஒரு பெருநிகழ்வு. இயல்பாக நிகழ்ந்து பிசிறில்லாமல் முடிந்தது. ஒரு நிகழ்வு ஏன் பிசிறில்லாமல் நிகழவேண்டும் என்றால் அதுவே அனைவருக்கும் பயனுள்ளது என்பதனால்தான். ஒருவர் நேரத்தை இன்னொருவர் எடுத்துக் கொள்ளவில்லை. பயனற்ற பேச்சுக்களே நிகழவில்லை. எவர் பொழுதும் வீணடிக்கப்படவில்லை. இனி வரும் சூழலில் இலக்கிய நிகழ்வுகளில் கருத்தில் கொள்ளப்படவேண்டியது அதுதான். நான் எந்த விழாவிலும் கலந்துகொள்பவர் எவர் என்பதையே முதலில் கேட்பேன். நேரமறியாமல் பேசுபவர், உளறுபவர்களை முழுக்கவே தவிர்க்க நினைக்கிறேன்.

ஆனால் தீவிரமான விவாதங்களும் முரண்பாடுகளும் நிகழ்ந்தன. அவற்றை மனக்கசப்பாக எண்ணவேண்டியதில்லை. அது அவசியமானது. பொதுவாக தமிழ்ச்சூழலில் நிறுவப்பட்ட கருத்துக்களுக்கெல்லாம் எதிர்க்குரல்கள் எழும். கூடவே எதிர்வடிவம் என பேசுபவர்களுக்கும் எதிர்ப்பு எழும். அது இங்கும் நிகழ்ந்துகொண்டே இருந்தது. உள்ளும் வெளியும் அவ்விவாதம் நிகழ்ந்தது. தமிழ்ச்சூழலில் நிகழும் இலக்கியப்போக்குகள் அனைத்தையும் ஓரிடத்தில் எங்களால் கூட்டமுடிந்தது என்பதற்கான சான்று அது

https://www.facebook.com/vishnupuram.vattam/

புகைப்படங்கள்:
சரண்ராஜ்
ராஜேஷ் உதயன்
மோகன் தனிஷ்க்
ஆனந்த் குமார்
முந்தைய கட்டுரைஅண்ணாச்சியுடன் இரண்டுநாள்- யோகேஸ்வரன் ராமநாதன்
அடுத்த கட்டுரைஅம்பைக்குச் சாகித்ய அக்காதமி விருது