விஷ்ணுபுரம் விழா -1

விஷ்ணுபுரம் வட்டம் இணையதளம்

விக்ரமாதித்யன் விருது விழா- உரைகள்

விழாவுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கும்போது எல்லாவகையான பிரச்சினைகளும் எழுந்து வரும். அறைகள் பதிவுசெய்வது முதல். இது தங்களைப் போன்ற தன்னார்வலர்களால், எழுத்தாளர்களால் செய்யப்படுவது என்பது பலருக்கும் நினைவிருப்பதில்லை. ஆகவே முடிவில்லாத கோரிக்கைகள். பெரும்பாலும் அனைத்துமே நிறைவேற்றப்பட்டுவிடும். ஆனாலும் பல எஞ்சியிருக்கும். நான் சுக்குவெந்நீர்தான் குடிப்பேன், அதை தனியாக ஏற்பாடு செய்து தரவேண்டும் என்பதில் தொடங்கி நான் இன்னின்னாருடனேயே தங்குவேன் என்பது வரை.

ஆனால் சில கோரிக்கைகளை பரிசீலிப்பது கொஞ்சம் கஷ்டம். பெயர் சொல்ல விரும்பாத ஓர் இளைஞர் கேட்டார், ‘சார் போகன் சங்கர் எங்க தங்கறாரோ அந்த பில்டிங்ல எனக்கு எடம் வேண்டாம். வேற எடம் குடுக்க முடியுமா?’

ஏதோ இலக்கியச் சண்டைபோல என எண்ணி “ஏன்? என்ன பிரச்சினை?”என்றேன்

“அவரு நிறைய பேய் விஷயங்கள் சொல்றார்”

“அப்படியா?”என்றேன் “நீங்க எதுக்கு அதையெல்லாம் கேக்கறீங்க?”

“இல்லசார், அப்டி பேய்க்கதை சொல்ற இடத்திலே நிஜம்மாவே பேய்கள் வந்திடும். நான் போனவாட்டி பாத்தேன்”

“நேரிலயா? பேயையா?”

“ஆமா, ஆனா தெளிவா இல்லை…ஒரு மாதிரி நிழல் மாதிரித்தான்… ஒண்ணுக்கு போக எந்திரிச்சு நடக்கிறப்ப….”

இலக்கியவாதிகளின் நரம்புச் சிக்கல்கள் இலக்கியத்திற்கு மிகப்பெரிய வாய்ப்புகள். அந்த இளைஞர் நல்ல கதையாசிரியர் ஆவார் என நினைக்கிறேன்.

விஷ்ணுபுரம் விருது விழா தொடங்கப்பட்டு 12 ஆண்டுகளாகின்றன. அதை அவ்வப்போது திகைப்புடனும் நிறைவுடனும் நானே சொல்லிக்கொள்கிறேன். தமிழில் தொடங்கப்பட்ட இலக்கிய விருதுகள், இலக்கிய அமைப்புகள் இத்தனை காலம் தொடர்ச்சியாக நீடிப்பது அரிது. முன்பைவிட பெரிதாக வளர்வது அரிதினும் அரிது.

இந்த விழா இவ்வண்ணம் நீடிப்பதற்கு நவீனத் தொழில்நுட்பம் அளிக்கும் தொடர்புகள் மிகப்பெரிய காரணம். இந்த இணையதளம் அதன் விளைவு.  இத்தனை குறைவான செலவில் இவ்வளவுபெரிய தொடர்புவலையை, அமைப்பை இருபதாண்டுகளுக்கு முன்பு உருவாக்கியிருக்க இயலாது. முன்பு இலக்கியம் சிற்றிதழ்களுக்குள் சிறையுண்டிருந்தது. இணையமே அதற்கான வாசல்களை திறந்தது. இன்றும்கூட பெரிய அச்சிதழ்கள் சீரிய இலக்கியத்திற்கு எதிரானவையே. உதாரணமாக, தமிழ் ஹிந்து நடத்திய இலக்கியவிழாவுக்கு வைரமுத்துதான் நாயகனாக இருந்தார்.

இலக்கியமென்னும் இயக்கம் மீது நம்பிக்கை கொண்டு வந்துகொண்டே இருக்கும் இளைஞர்கள் இவ்விழா வ்வண்ணம் பெரியதாக மாற இன்னும் பெரிய காரணம். இதற்கான ஒரு தேவை நம் சூழலில் இருந்துகொண்டே இருக்கிறது. ஒன்றுகூட, உரையாட, கற்க.

வேறெந்த மொழியிலும் இல்லாத ஒரு போக்கு தமிழில் உண்டு. இங்கே இலக்கியத்தை நாம் நிறுவிக்கொண்டே இருக்கவேண்டும். இலக்கிய அடிப்படைகளை திரும்பத் திரும்பப் பேசி, கேளிக்கை எழுத்துக்கும் பிரச்சார எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான வேறுபாட்டைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும். ஏனென்றால் இலக்கியத்திற்கு எதிரான வணிக- அரசியல் சக்திகள் இங்கே மிகமிக ஆற்றல்கொண்டவை.

செந்தில்குமார்- விழா ஒருங்கிணைப்பாளர்

கேளிக்கை எழுத்து – பிரச்சார எழுத்து -இலக்கியம் என்னும் பிரிவினையை நாம் எத்தனை விளக்கினாலும் ஒரு வாசகர் தன்னளவில் வாசித்து உணர்ந்தாலொழிய அதைப் புரிந்துகொள்ள முடியாது. வாசிக்காதவர்கள் உண்டு. உணர்ந்துகொள்ளும் ஆற்றலற்றவர்களும் உண்டு. அவர்கள் தொடர்ச்சியாக இலக்கியத்தை மறுத்து வணிக எழுத்தை, பிரச்சார எழுத்தை முன்வைத்துக்கொண்டேதான் இருப்பார்கள். இலக்கியத்தை மட்டம்தட்டிக்கொண்டும் இருப்பார்கள். ஏனென்றால் இலக்கியம் அவர்களின் இருப்பையே கேள்விக்குரியதாக்குகிறது. இலக்கியம் வணிக எழுத்தோ, பிரச்சாரமோ அல்ல என்பதன் கண்கூடான சான்றே அத்தளங்களில் உள்ளவர்கள் அடையும் பதற்றமும், அவர்களின் தொடர் எதிர்ப்பும்தான்.

இலக்கியத்தின் அழகியல் சார்ந்த தனி இயக்கமுறையை எவருக்காகச் சொல்கிறோம் என்றால் அதை உணரும் திறன்கொண்டவராக இருந்தும் சூழலால் திசைதிருப்பப்படும் இளைய தலைமுறையினரை நோக்கி மட்டுமே. அவர்களிடம் சென்றபடியே இருக்கவேண்டியிருக்கிறது. தலைமுறைக்குச் சிலர் என ஒரு வட்டம் அதற்கு உருவாகும். அதற்குள் இலக்கியம் திகழும். உலகமெங்கும் அவ்வாறே. அமெரிக்காவில் அவ்வட்டம் பெரியது, நம்முடையது மிகச்சிறியது, அவ்வளவுதான் வேறுபாடு. அவ்வட்டத்தை நாம் முடிந்தவரை விரித்தெடுக்க முயலவேண்டும். இவ்விழாக்களின் நோக்கம் அதுவே.

அறுபடாமல் இவ்வியக்கத்தை நிலைநாட்டுவது ஒன்றே எங்கள் இலக்கு. நேற்று சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், பிரமிள், க.நா.சு, சி.சு.செல்லப்பா புதுமைப்பித்தன் என பலர் அவ்வியக்கத்தை தலைமுறை தலைமுறையாக நடத்தி நமக்குக் கையளித்திருக்கிறார்கள். அது நம் கையில் இருந்து முன்செல்லும். பழிக்கப்பட்டாலும் ஒதுக்கப்பட்டாலும் தளராமல் அது என்றும் இப்பண்பாட்டின் மையமென நீடிக்கும். அதை அவ்வண்ணம் கொண்டுசெல்லும் கடமை நமக்குண்டு.

விஷ்ணுபுரம் முதல் விருதுவிழா 2010ல் நிகழ்ந்தபோதே அவ்வண்ணம் இது முன்செல்லும் என்னும் நம்பிக்கையை அடைந்தேன். அன்று புதிதாக வந்து சேர்ந்த இளைஞர்கள் பலர் இருந்தனர். அவர்களில் பலர் விழாவை தாங்கள் ஏற்றுக்கொண்டு முன்னெடுத்தனர். இந்த பன்னிரண்டு ஆண்டுகளில் அவர்கள் தொடர்ச்சியாக வந்துகொண்டே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் இன்று அறியப்படும் எழுத்தாளர்கள். இன்று விழா பலமடங்கு பெரிதாகிவிட்டிருக்கிறது.

ஜெய்ராம் ரமேஷுடன் ராம் குமார்

இது என்னைச் சார்ந்து நிகழலாகாது. என் படைப்புகள் பேசப்படவே கூடாது என்பது ஒருபக்கம். அது நான் என்னை முன்வைப்பதாக ஆகிவிடும். இந்த விழாவின் நாயகர் விருதுபெறுபவர். முக்கியத்துவம் விருந்தினர்களாக வரும் படைப்பாளிகளுக்கு மட்டுமே. முதல் விழா முதல் நெறி இதுவே. அதை விட முக்கியமானது இவ்விழா நடப்பதிலும் நான் முதன்மைப் பங்கு வகிக்கலாகாது, இது தானாகவே நடக்கவேண்டும் என்பது.

ஆகவே நான் கூடுமானவரை அனைத்தில் இருந்தும் என்னை விலக்கிக் கொண்டிருக்கிறேன். இன்று விழா ஒருங்கிணைப்பு, விருந்தினர்களை முடிவுசெய்வது உட்பட எதிலும் என் பங்கென ஏதுமில்லை. முழுக்க முழுக்க விஷ்ணுபுரம் நண்பர்களின் பெரும்பணி இது. ஒவ்வொரு ஆண்டும் என் பங்களிப்பை திட்டமிட்டே குறைக்கிறேன். நான் முற்றாக இல்லாமலாகும் போதும் இது தொடரவேண்டும் என விரும்புகிறேன். இளைய தலைமுறையினரின் வழி இது தொடருமென்னும் நம்பிக்கையையும் அடைந்திருக்கிறேன்.

இசை, ஏ.வி,மணிகண்டன்

அந்நம்பிக்கை மீண்டும் உறுதியான நாள் இன்று. நான் டிசம்பர் 24 அன்று காலையிலேயே கோவை வந்துவிட்டேன். நண்பர்களுடனான அரட்டையும் சிரிப்புமாக ஒருநாள் சென்றது. காலையிலேயே பல நண்பர்கள் வந்தனர். மாலை சென்னை நண்பர்கள். விஷ்ணுபுரம் சந்திப்புகள் என்றால் நிரந்தரமாக ஒரு கல்லூரிச் சூழல் நிலவும். கேலியும் சிரிப்பும். இந்த விழாக்கள் இத்தனை தீவிரமாக நீடிப்பதற்கான காரணம் அந்த நட்புச்சூழலே.

நான் முன்னரே ஒரு முடிவை எடுத்திருந்தேன், இம்முறை  விவாத அரங்குகளிலும் கூடுமானவரை பேசலாகாது என்று. வழக்கமாக அரங்குகள் சற்று சம்பிரதாயமாக ஆகின்றனவா, ஆழ்ந்துசெல்லாமல் இருக்கின்றனவா, கேட்டாகவேண்டிய கேள்விகள் தவறுகின்றனவா என்று ஐயம் வந்தால் நான் எழுந்து கேள்விகள் கேட்பேன். அரங்கில் இளம் படைப்பாளிகள் இருந்தால் சற்று கூடுதலாகவே கேள்விகளைக் கேட்பேன். இம்முறை அதை தவிர்த்து என் இன்மை எந்த அளவுக்கு தெரிகிறது என்று பார்த்தேன். எவ்வகையிலும் அது அங்கே ஒரு பொருட்டாக இல்லை. அது நிறைவளித்தது.

யோகேஸ்வரன்

விஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கின் முழுவிவாதமும் அரங்கின் கூட்டான உளவிசையால் முன்னெடுக்கப்பட்டது. இன்றைய வாசிப்புச் சூழலில் இயல்பாக எழும் எல்லா வினாக்களும் எழுந்து வந்தன. அவற்றுக்கான பதில்களில் எப்போதுமே ஒரு ஆச்சரியம் எஞ்சும். இலக்கியம் சார்ந்த பதில்கள் ஊகிக்கக்கூடியவை, ஆனால் அந்த ஊகம் எப்போதும் தோற்கடிக்கவும்படும். அதுவே நேருக்குநேர் சந்திப்பின் ஆற்றல்.

இந்த விருந்தினர் அரங்கு கலவையானது. இலக்கியத்திற்குள் நுழையும் படைப்பாளிகள் முதல் சாதித்தவர்கள் வரை பலதரப்பட்டவர்கள் இங்கே அவைகொள்கின்றனர். ஒவ்வொருவரிடமும் வாசகர்களுக்குக் கேட்க ஏதேனும் சில உள்ளன. என்னென்ன கேள்விகள் வரும் என்பதை எவராலும் ஊகிக்கமுடியாது.

அதேபோல கேள்விகளுக்கு பதிலளிப்பதில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாணி உள்ளது. காளிப்பிரசாத் பெரும்பாலான கேள்விகளை ஒருவகையான விலக்கத்துடனும் நகைச்சுவையுடனும் எதிர்கொண்டார். மாறாக செந்தில் ஜெகன்னாதன் நடுக்கத்துடன், வாழ்க்கைப்பிரச்சினையை எதிர்கொள்பவர் போல பதில் சொன்னார். விக்ரமாதித்யனோ சோ.தர்மனோ ஒரு கேள்வியில் இருந்து நெடுந்தொலைவு சென்றனர். செந்தில் ஜெகன்னாதன் சுருக்கமான சரியான பதில்களை மட்டும் சொன்னார்.

அதேபோல எம்.கோபாலகிருஷ்ணன் கேள்விகளுக்கு கோட்பாடாகவோ கொள்கையாகவோ எதையும் ஆக்கிவிடக்கூடாது, தனிப்பட்ட அபிப்பிராயம் என்னும் எல்லைக்குள் நின்றபடியே எதையும் சொல்லவேண்டும் என்னும் தமிழ்ச் சிற்றிதழ்மரபுக்குரிய எச்சரிக்கையுணர்ச்சியுடன் பதில் சொன்னார். பெரும்பாலான கேள்விகளுக்கு அறுதியான எதையும் சொல்லாமல் தன் புனைவுலக அனுபவம், தன் வாசிப்பனுபவம் சார்ந்து மட்டுமே விளக்கம் அளித்தார். இத்தகைய விளக்கங்கள் பெரும்பாலும் எதையும் குறிப்பாக உணர்த்தாதவையாக, ஆனால் அந்த ஆசிரியனின் புனைவுலகம் மற்றும் அவன் ஆளுமைக்குள் செல்லும் வழிகளாக அவை திகழ்கின்றன.

இன்னொரு எல்லையையும் குறிப்பிட்டாகவேண்டும். கோகுல் பிரசாத் ஒருவகையான ’தூய’ அகவய உலகை இலக்கியத்தில், கலையில் எதிர்பார்ப்பவர் என்று உரையாடல்கள் காட்டின. நேர் மறு எல்லையில் ஜா. தீபா எல்லாவற்றையும் சமூகச்சூழலில் வைத்துப்பார்ப்பவராக, சமூக விசைகளின் விளைவாக அலைக்கழிக்கப்படுவதாக வாழ்க்கையை அணுகுபவராகத் தோன்றினார். தீபாவின் உலகம்தான் சோ.தர்மனுக்கும். புனைவின் யதார்த்தம் வழியாக உலகை சித்தரிக்கும் பா.திருச்செந்தாழையும் புனைவின் உருவகத்தன்மை, தொன்மங்கள் வழியாக ஓர் உலகை உருவாக்கும் சுஷீல்குமாரும் இரு எல்லைகள்.

கலைடாஸ்கோப்பை திருப்புவதுபோல ஒருமணிநேரத்திற்கு ஒருவர் என வெவ்வேறு படைப்பாளிகள் மேடையிலமர்ந்து தங்களை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதென்பது ஓர் அரிய இலக்கிய அனுபவம். இலக்கியவிழாக்களின் கொடை என்பது இதுதான்.

விவாதங்களில் பங்கெடுத்தவர்களில் பலரும் தமிழின் முதன்மையான இலக்கிய ஆளுமைகள். சு.வேணுகோபால், லக்ஷ்மி மணிவண்ணன், போகன் சங்கர், சாம்ராஜ், பாவண்ணன், விஷால்ராஜா, அமிர்தம் சூரியா என தங்களுக்கான தனி அழகியல் பார்வையும் நிலைபாடுகளும் கொண்டவர்களின் கருத்துக்களே அரங்கை தமிழிலக்கியக் களத்தின் மாதிரிவடிவமென ஆக்கின. இங்கு பேசப்பட்ட கருத்துக்கள் வெளியிலும் நீட்சிபெறும் என நினைக்கிறேன்.

இம்முறை நிகழ்வுக்கு முந்தைய ஆண்டுகளை விட பங்கேற்பு மிக அதிகம். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். அதை சின்ன வீரபத்ருடு மேடையில் வியந்து சொல்லிக்கோண்டே இருந்தார்.  நான் சிறிய இடைவேளைக்காக அரங்கைவிட்டு வெளியே சென்றாலும் புகைப்படம் எடுத்து, நூல்களில் கையெழுத்திட்டு, ஒவ்வொருவரிடமும் ஓரிரு சொற்கள் பேசி அரங்குக்கு மீள நெடுநேரமாகியது.

அடிப்படையான சில வினாக்கள் வினாக்களாக எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டன. ஒன்று, புனைவெழுத்தாளர் எந்த அளவுக்கு ஒரு சூழலில் ஒட்டுமொத்தமாக முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு தன்னை கொடுக்கலாம் என்பது. ஜா.தீபா அரங்கில் மணிவண்ணன் அதை முன்வைத்தார். உண்மையில் நாம் நம் அனுபவத்தை ஒட்டி சிந்திப்பதாகவே எண்ணுவோம். ஆனால் நம்மையறியாமலேயே சூழலில் உள்ள பொதுக்கருத்துக்களைச் சொல்லிக்கொண்டிருப்போம். கருத்தியல் எழுத்தாளனின் அந்தரங்க உண்மை நோக்கி அவன் செல்வதை தடுக்கிறது என்று அவர் சொன்னார்

இன்னொரு விவாதம் புனைவுமொழியில் கவிதைத்தன்மை எந்த அளவுக்கு உதவியானது என்பது. கவிதை தன் இயல்பான சுதந்திரத்துடன் முன்னகர்கிறது. அது விட்டுச்சென்ற தடங்களைத் தொடர்ந்து சென்று அதன் பலவீனமான நகல்களை உரைநடையாளர்கள் புனைவுமொழியில் உருவாக்குகிறார்களா? புனைவுமொழியில் தன்னியல்பான கவிதை சாத்தியமா? பா.திருச்செந்தாழை அரங்கில் போகன் அந்த வினாவை எழுப்பினார்.

தொன்மங்களை உண்மையான வாழ்க்கை அனுபவங்களுக்கு மாற்றாக முன்வைக்க முடியுமா, அது ஒருவகையில் பழமைக்கு தப்பிச் செல்வதல்லவா என்ற கேள்வி சுஷீல்குமார் அரங்கில் எழுந்து வந்தது. வெறும் யதார்த்தச் சித்திரம் மட்டுமே புனைவுக்கு போதுமா என்ற கேள்வி செந்தில் ஜெகன்னாதன் அரங்கில் எழுந்து வந்தது. ஏற்கனவே விஷால்ராஜா கட்டுரையாக எழுதிய கேள்விதான் அது. கோகுல் பிரசாத்திடம் அவர் ஹெர்ஷாக் போன்ற திரைப்படைப்பாளிகளைப் பற்றிப் பேசும்போது அவர்களுக்கு பண்டைய ஓப்பராக்களின் காலம் முதல் இருந்து வரும் அழகியல் தொடர்ச்சியை பற்றி அறியாமல் பொதுவாக மதிப்பிடுகிறாரா என்ற வினா எழுப்பப்பட்டது.

இத்தகைய அடிப்படைக் கேள்விகளுக்கு அந்த ஆசிரியரிடம் அவருடைய பதிலைக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாமே ஒழிய அறுதியான முடிவை நோக்கிச் செல்லமுடியாது.அவற்றை அரங்குகளுக்கு வெளியேதான் பேசி நீட்சிபெறச் செய்யவேண்டும். ஆனால் அவை அங்கே ஆக்கபூர்வமான ஓர் உரையாடற்களத்தை உருவாக்கின.

ஜெயகாந்த் ராஜு

விழாக்களில் மட்டுமே நம்மால் ஒருநாளுக்கு நான்கு சினிமா பார்க்கமுடியும். பன்னிரண்டு மணிநேரம் இசைகேட்க முடியும். எட்டு மணிநேரம் இலக்கியம் பேச முடியும். களியாட்டாக நிகழும் கல்வியே மெய்யான கல்வி. இந்நிகழ்வை விழா என ஆக்கிக்கொள்ளவேண்டும் என்னும் ஆவல் இருந்தது. மெல்லமெல்ல பெரிய விழாவாக ஆகிக்கொண்டிருக்கிறது. ராஜகோபால் விவாத அரங்கை ஒருங்கிணைக்க அனங்கன், கதிர்முருகன், ஷாகுல் ஹமீது ஆகியோர் உதவிசெய்தனர்.

அரங்குகள் முடிய இரவு ஒன்பது தாண்டிவிட்டது. அதன்பின் உணவு.  இம்முறை எல்லா அரங்குகளிலும் ஏறத்தாழ நாநூறு பேர் கலந்துகொண்டனர். மதிய உணவுக்கு ஐநூறு பேர். ஒரு நடுத்தரத் திருமணம்போல. சிறப்பான விருந்து உணவு. வழக்கம்போல என் பிரியத்திற்குரிய விஜய்சூரியனின் ஏற்பாடு.

அதன்பின் வழக்கம்போல அரட்டைகள். என் அறைக்குள் நண்பர்கள் வந்தபடி இருந்தனர். வசந்த் உடனிருந்தார். ஒருகட்டத்தில் அறைக்குள் ஐம்பதுபேர் வரை நெருக்கியடித்து அமர்ந்திருந்தனர். வேடிக்கைகள் சிரிப்புகளினூடாக சென்ற நூறாண்டுகளில் தமிழ் வார இதழ்கள், வணிக இலக்கியம் வளர்ந்து வந்த பாதையும் அவ்வுலகின் மையமான ஆளுமைகளும் பற்றி நினைவுகூர்ந்து பேசிக்கொண்டே இருந்தோம். நண்பர் மது சம்பது அவற்றைப்பற்றி ஒரு நூலாவது நான் எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்

பன்னிரண்டு மணிக்கு வலுக்கட்டாயமாக அவையை கலைத்தோம். வெவ்வேறு இடங்களில் அரட்டை சிறப்பாக நடைபெற்றது என்றார்கள். விக்ரமாதித்யனும் லக்ஷ்மிமணிவண்ணனும் பேசிய ஒரு கூட்டமும், சோ.தர்மன் பேசிய ஒரு கூட்டமும் கலைந்து நண்பர்கள் திரும்பி வந்தனர். மீண்டும் ஒரு உரையாடல் என் அறையில். அவர்களைக் கலைக்க இரண்டரை மணி ஆகியது. அதன்பின் நானும் கிருஷ்ணனும் அஜிதனும் ஷாகுல் ஹமீதும் மீண்டும் பேச ஆரம்பித்து நான்கு மணி ஆகியது.

ஷாகுல் அவர் தூங்கி இரண்டுநாள் ஆகிறது என்று பரிதாபமாக கோரினார். சரி என்று நான் படுத்துக்கொண்டேன். கிருஷ்ணன் வேண்டுமென்றே அவர் அருகே சென்று அமர்ந்து கப்பல் பற்றிய ஐயங்களை கேட்டார். கையால் தலையை முட்டுக்கொடுத்து குழறும் குரலில் அந்த ஐயங்களுக்கு பதில் சொன்னார். ஒருவருக்கு நன்கு தெரிந்த ஒன்றை ஐயமாக நாம் கேட்டால் அந்தப்பதிலைச் சொல்லாமல் அவரால் தூங்க முடியாது என்பது கிருஷ்ணனின் கண்டுபிடிப்பு

நாங்கள் நான்கு மணிக்கு தூங்கி ஆறு மணிக்கே எழுந்தோம். ஷாகுலை நாலரை மணிக்கே வந்து சேரும் விருந்தினர்கள் கூப்பிட்டு எழுப்பிவிட்டனர். அவர் கிளம்பிச் சென்றிருந்தார். காலையில் எழுந்தபோது நடுவே கொஞ்சநேரம் தூங்கியதாகவே தோன்றவில்லை. ஒரேநாளின் நீட்சி என்றே தோன்றியது.

அனைத்துப் புகைப்படங்கள்: இணைப்பு1

அனைத்துப் புகைப்படங்களும் இணைப்பு 2

முந்தைய கட்டுரைஎழுதும் முறை எது?
அடுத்த கட்டுரைஎன் உரைகளின் பிரச்சினைகள்