விக்கிப்பீடியாவுக்கு மாற்று

விக்கிபீடியா, ஓர் அயோக்கியத்தனம்

விக்கிபீடியாவிற்கு வெளியே

அன்புள்ள ஜெ,

விக்கிப்பீடியா பற்றி நீங்கள் எழுதியிருந்ததை வாசித்தேன். விக்கிப்பிடியாவின் கான்செப்ட்டின் பிரச்சினை அது.அதில் எவர் வேண்டுமென்றாலும் எடிட் செய்யலாம். பதிவுசெய்துகொண்டால் போதும். ஆகவே அங்கே ஒரு சமூகத்தின் சராசரி அறிவுத்தளம்தான் வெளிப்படும்.

தமிழின் சராசரி அறிவுத்தளம் தமிழ் விக்கிப்பீடியாவில் உள்ளது. சினிமா, அரசியல், கப்பித்தனமான மொழிபெயர்ப்பு அறிவியல், காலாவதியாகிப்போன கலைச்சொல்லாக்கம், தமிழ்வெறி எல்லாம்தான். அதில் நவீன இலக்கியத்துக்கு இடமில்லை. அதை எந்தவகையிலும் நடைமுறையில் பயன்படுத்தவும் முடியாது.

ஆங்கில விக்கிப்பீடியா என்பது அப்படி அல்ல.அது ஆங்கிலம் வாசிக்கும் மக்களின் சராசரியை வெளிப்படுத்துகிறது. அதற்கு ஓர் ஐரோப்பியப் பல்கலை ஆய்வுத்தரம் இல்லாமலிருக்கலாம். ஆனால் அதன் தரம் மிகமிக உயர்வானது.

இங்கே தமிழுக்கு எடிட்டர்கள் வந்தால் எப்படி இருப்பார்கள்? அசோகமித்திரன் இறந்தபோது எனக்குத் தெரிந்த ஒரு விக்கி எடிட்டர் ‘அசோகமித்திரனா, அவர் யார்?’ என்று கேட்டார். எவரென்றே தெரியாதவருக்கெல்லாம் ஏன் செய்தி வெளியிடுகிறார்கள் என்று வியந்தார். அவர் விக்கிப் பக்கத்தில் அசோகமித்திரன் பற்றிய கட்டுரையை அதிலுள்ள அடிப்படைச் செய்திகளைக் கூட மிகையானது என்று சொல்லி வெட்டிவிடுவார் இல்லையா?

விக்கிப்பீடியா பற்றி பொதுச்சூழலிலும் மிகப்பெரிய அறியாமை உள்ளது. தமிழ் விக்கியை பார்ப்பவர்கள் மிகக்குறைவு. பலருக்கு விக்கி என்றால் என்னவென்றே தெரியாது. விக்கி நன்கொடையில் இயங்கும் ஓர் அமைப்பு. காரணம் அது விளம்பரங்களை அனுமதிப்பதில்லை. அது தொடர்ச்சியாக நிதியுதவி கோருகிறது. ஆனால் தமிழ்நாட்டில்  நன்கொடை அளிப்பவர்கள் மிகக்குறைவு.

சென்ற சில ஆண்டுகளில் விக்கி நிதிச்சிக்கலில் இருந்தபோது ரூ 150 குறைந்தபட்ச நிதியுதவி செய்யலாம் என்றும், அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமென்றாலும் நிதியுதவி செய்யலாமென்றும் அறிவித்தனர். மின்னஞ்சல்கள் அனுப்பினர். என் அமெரிக்க நண்பர்களில் மிகப்பெரிய தொகை அளித்தவர்கள் பலர் உண்டு. நான் என் தமிழ் நண்பர்களிடம் கேட்டால் குறைந்தபட்ச தொகையான 150 அளித்தவர்கள்கூட மிகக்குறைவு.

ஏனென்றால் சமூகவலைத்தளத்தில் அதைப்பற்றிச் செய்திகளை எவருமே பகிரவில்லை. ஆகவே எவருக்குமே எதுவுமே தெரியாது. இவர்களின் உலகமே சமூகவலைத்தள வம்புகள்தானே?

தமிழ் விக்கி இன்றைய அளவில் நம்பகமற்றது. அரைகுறையானது. பெரும்பாலும் பயன்படுத்தப்படாதது. அதை முழுக்கவே புறக்கணிப்பதுதான் உகந்த வழி.

இன்று தமிழ்விக்கிக்கு வெளியே ஓர் இணையதளம் ஆரம்பித்து இலக்கியச் செய்திகளை திரட்டுவது மிகப்பெரிய பணி. உடனடியாகச் செய்யவேண்டியது. அடுத்த தலைமுறைக்குக் கையளிக்கப்படவேண்டியது. விக்கி போலவே அதற்கும் நன்கொடைகள் பெறலாம். விக்கிபோல குறைந்தபட்சம் 150 என்றே வைக்கலாம்.

தமிழ் விக்கியிலுள்ள பெரும்பாலான நவீன இலக்கியம் பற்றிய செய்திகள் இரண்டு நூல்களில் இருந்து எடுக்கப்பட்டவை. மு.வரதராசனார் எழுதிய தமிழிலக்கிய வரலாறு. இன்னொன்று, நீங்கள் எழுதி வெளியிட்ட  நவீனத்தமிழிலக்கிய அறிமுகம். அதிலுள்ள தரவுகள் பற்றி ஒருமுறை உங்களுக்கு எழுதிக்கேட்டிருந்தேன். பெரும்பாலும் அந்தந்த எழுத்தாளர்களிடம் நேரில் தொடர்புகொண்டு கேட்டவை என எழுதியிருந்தீர்கள். அவற்றையே எடுத்து விக்கிப்பக்கமாக ஆக்கினார்கள்.

தனியொருவராக நீங்கள் செய்தவற்றை ஒரு திறன்வாய்ந்த குழுவின் உதவியுடன் மேலும் விரிவாக செய்துவிடமுடியும். ஆனால் சில விஷயங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.

அனைவரையும் பங்களிப்பாற்ற விடுவது என்ற விக்கி நடைமுறை தமிழுக்கு சரிவராது. குப்பைகளாக வந்து குவியும். அவற்றை எடிட் செய்யலாம் என்றால்கூட மிகப்பெரும் பணி அது. அனைவரையும் எடிட் செய்ய விட்டால் நாளும் வந்து திருத்திக்கொண்டே இருப்பார்கள். காழ்ப்புகளையும் வசைகளையும் கொட்டுவார்கள். அதை கண்காணிப்பது மிகக் கடினம்.

ஆகவே நல்ல ஒரு எடிட்டர் குழுவை அமைத்து பதிவுகளை போடுவதே உசிதமானது. பதிவுகளைப் போட விரும்புபவர்கள் நேரடியாக அந்த ஆசிரியர்குழுவுக்கே அனுப்பலாம். படிப்படியாகச் செய்துகொண்டிருந்தால் காலப்போக்கில் மிகப்பெரிய ஒரு தரவுத்தொகுதியாக ஆகும்.

அந்த கலைக்களஞ்சியத்துக்கு எந்த வகையான மொழிக்கொள்கையும் கருத்தியலும் இருக்கக்கூடாது. அப்படியென்றால்தான் அனைவரையும் உள்ளே கொண்டுவர முடியும். தனித்தமிழ்க்கொள்கை என்று சொல்லிக்கொண்டு பெயர்களை திருத்தியமைப்பது, பிராண்ட் பெயர்களை மொழிபெயர்ப்பது போன்ற கூத்துகளுக்கு இடமிருக்கக் கூடாது.

ஆசிரியர் குழுவை ஆண்டுதோறும் விரிவாக்கிக் கொண்டே இருக்கவேண்டும். ஆங்கிலம் தமிழ் இரண்டுக்கும்.

அன்புடன்

ரமேஷ் கிருஷ்ணசாமி

 

அன்புள்ள ரமேஷ்,

விஷ்ணுபுரம் விழாவின்போது நண்பர்களுடன் சந்தித்து இதைப்பற்றி முடிவெடுக்கலாமென நினைக்கிறேன். நீங்கள் சொல்வதுபோல ஒரு விரிவான ஆசிரியர் குழுவை அமைக்கவேண்டும். எழுதித்தருபவர்களுக்கு பணம்கொடுத்து பணியமர்த்தவும் செய்யலாம்.

நிதி தேவை. ஆனால்  குறைந்தபட்சம் 150 ரூபாய் என்றெல்லாம் வகுத்தால் தமிழ் உள்ளம் அதிகபட்சம் 150 என்றுதான் புரிந்துகொள்ளும். இந்த விக்கிப்பீடியா குற்றவாளிக்கும்பலை எதிர்கொண்டே ஆகவேண்டும்

 

ஜெ

 

அன்பு ஜெ,

எனக்கு மிகவும் அயர்ச்சியாக இருக்கிறது. சில மணி நேரங்கள் செலவழித்து காளிப்ரஸாத் என்ற பெயரில் ஆங்கில தமிழ் விக்கி பதிவுகள் எழுதினேன் – 26 ஆதாரங்களுடன்.

காலையில் எழுந்து பார்த்தால் ஆங்கில விக்கி பக்கத்தை டிலீட் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்கள். ஏனென்றால் ஆதாரமாக தந்த ஆனந்த விகடன், இந்து தமிழ் திசை, வல்லினம், எஸ் ரா தளங்கள் எதுவும் Notable அல்லவாம்

தமிழ் விக்கியில் காளிப்ரஸாத் பற்றி அகரமுதல்வன் பேசும் யுடியுப் விடியோ லிங்க்கை டிலீட் செய்கிறார்கள். ஏனென்றால் யுடியுப் unreliable source என்கிறார்கள்.

தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் இப்படி டிலீட்,எடிட் செய்திருப்பது ஒரே அட்மின் அக்கவுண்ட் தான். அந்த நந்தகுமார் போல வெளிப்படையாக ப்ரொபைல் வைத்துக்கொள்ளவில்லை. ஆனால் 2016லும் இதே அக்கவுண்ட் தான் என் ப்ரொபைலை ‘நீ பல அக்கவுண்ட் வைத்து மற்றவர்களுடன் சேர்ந்து எடிட் செய்கிறாய்’ என்று தடை செய்வதாக பயமுறுத்தியது. இவர் நிச்சயம் தமிழ் தெரிந்த, இலக்கிய உலகம் தெரிந்தவராகத்தான் இருக்கவேண்டும்.

விக்கிபீடியா நல்ல தரமுள்ள கலைக்களஞ்சியமாக வருவதற்கு இப்படிப்பட்ட முட்டிமோதல் செய்யவேண்டும் என்றால் இது தான் விதி. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு அட்மினிடம் first principlesலிருந்து துவங்குவது அயர்ச்சி தருகிறது

விக்கிப்பீடியா பற்றி சிட்னி கார்த்திக் நல்லவிதமாக எழுதியிருந்தார். நீங்களும் பதிலளித்திருந்தீர்கள். நான் இந்த அயர்ச்சியாலேயே அந்த உரையாடலில் பங்கெடுக்கவில்லை.

மதுசூதன் சம்பத்

 

அன்புள்ள மது,

கார்த்திக் போன்றவர்கள் செய்திகளை வாசித்து, தேவையானவற்றை நம்பும் நல்லெண்ணம் கொண்டவர்கள். ஏதாவது ஒரு துறையில் செயல்பட ஆரம்பித்தால்தான் எதிர்மறைச் சக்திகளின் விசை தெரியும். 

விக்கியை விடுங்கள். அதனுடன் போராடி நேரத்தை வீணடிக்கவேண்டியதில்லை. நாம் வேறொன்றை தொடங்குவோம்

ஜெ

இன்னொரு பெருமுயற்சி

கணினிநிரல் எழுத்து, சில புதிய வாசல்கள்…

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யன் -நாடோடியின் கால்த்தடம்
அடுத்த கட்டுரைவிக்கிரமாதித்யனுக்கு விருது – கடிதம்