1879: ஆசியாவின் ஒளி, நூல் பகுதி

ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்

ஜெய்ராம் ரமேஷ் எழுதிய The Light of Asia: The Poem that Defined The Buddha என்னும் ஆய்வுநூல் சர் எட்வின் ஆர்னால்ட் எழுதிய புகழ்பெற்ற காவியநூலின் பிறப்பு, செல்வாக்கு பற்றிய ஆய்வு. ஒரு நூலின் வாழ்க்கை வரலாறு எனலாம். அந்நூல் தமிழிலும் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளையால் ஆசியஜோதி என்ற பேரில் தழுவி எழுதப்பட்டுள்ளது. அந்நூலின் நான்காவது அத்தியாயம் இது. இதன் முன்னுரை ஏற்கனவே வெளியாகியிருக்கிறது

ஆசியஜோதியின் வரலாறு – முன்னுரை

1879 ஆம் ஆண்டு பிப்ரவரியில், இந்தியாவில் பௌத்த பாரம்பரியம் பற்றிய ஆரம்பகால புத்தகங்களில் ஒன்று வெளிவருகிறது. இது இந்திய தொல்லியல் துறையின் நிறுவனர் – இயக்குநர் ஜெனரல் அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாமால் எழுதப்பட்டது.

பர்ஹுத்தின் ஸ்தூபி   

 பௌத்த புராணம் மற்றும் வரலாற்றை விளக்கும் சிற்பங்களால் அணிசெய்யப்பட்ட கிமு மூன்றாம் நூற்றாண்டு பௌத்த நினைவுச்சின்னம்

என்ற நீண்ட தலைப்பு கொண்டது இப்புத்தகம்.

“பர்ஹுத்தின் சிற்பங்கள் மற்றும் கல்வெட்டுகள் எதிர்காலத்தில் இந்தியாவின் மத மற்றும் இலக்கிய வரலாற்றில் ஒரு உண்மையான மைல்கல்லாக இருக்கும். மேலும் சமஸ்கிருத அறிஞர்கள் இதுவரை வைத்திருந்த பல கோட்பாடுகள் அதற்கேற்ப மாற்றியமைக்கப்பட வேண்டியிருக்கும்.” என்று மேக்ஸ்முல்லர் சொல்கிறார்.

பர்ஹுத் அகழ்வாய்வுகள் 1870 களின் முற்பகுதியில் நடந்தன. அதன் பல அற்புதமான கண்டுபிடிப்புகள் இப்போது கொல்கத்தாவில் உள்ள இந்திய அருங்காட்சியகத்தில் உள்ளன. கன்னிங்ஹாம் இது குறித்து தனது நூலில் எழுதியிருக்கிறார்.

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம், இந்திய தொல்லியல் துறையின் தந்தை மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இந்தியாவில் புத்தமதம் மறுகண்டுபிடிப்பு செய்யப்பட்டதில் முக்கிய பங்கு வகித்தவர். அர்னால்ட் தனது புத்தகயாவின் மகாபோதி ஆலயத்தின் மீது பௌத்தக் கட்டுப்பாட்டை நிறுவுவதற்கான புத்த கயா பிரச்சாரத்திற்காக அர்னால்ட் அவரிடம் ஆலோசனைகள் பெற்றிருக்கிறார். (ஆதாரம்: இந்திய தொல்லியல் துறை)

அலெக்ஸாண்டர் கன்னிங்ஹாம்

1878 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இரண்டாம் ஆங்கிலோ-ஆப்கானியப் போர் தொடங்கியதில் இருந்தே, இங்கிலாந்தின் அரசியல் பேச்சுவார்தைகளில் ஆப்கானிஸ்தான் ஆதிக்கம் செலுத்தியது. ஆப்கானிஸ்தானின் அமீர் போர்நிறுத்தத்துக்கான வழக்குத் தொடர்ந்ததால், 26 மே 1879 அன்று கண்ட்மக் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஏறக்குறைய அதே நேரத்தில், மேக்ஸ் முல்லர் தனது புகழ்பெற்ற ‘கிழக்கின் புனித புத்தகங்கள்’ தொடரை வெளியிடத் துவங்கினார். உபநிடதங்களின் மொழிபெயர்ப்பு முதல் தொகுதியாக வெளிவந்தது.

அதற்கு முன், அர்னால்ட் ‘வைஸ்ராயாக டல்ஹௌசி’ என்ற ஆய்வுநூலை இரண்டு தொகுதிகளாக எழுதியிருந்தார். இரண்டு புகழ்பெற்ற இந்திய செவ்வியல் இலக்கியப்படைப்புகளின் மொழிபெயர்ப்புகளை வெளியிட்டிருந்தார். இவைதவிர, இந்தியக் கருப்பொருள்களைப் பேசும் பல முக்கியமான கவிதைகளை வெளிகொண்டுவந்தார். 1879 ஆம் ஆண்டில் ஒரு மாநிதியைக் கண்டுகொண்டதுபோல, உலகம் முழுவதும் எதிரொலிக்கப் போகும் ஒரு மாபெரும் படைப்பை வெளியிட்டார். புத்தர் அப்போது ஏற்கனவே பேசப்பட்டுக்கொண்டிருந்தார். ரைஸ் டேவிட்ஸ், மாக்ஸ்முல்லர் மற்றும் மேடம் பிளவாட்ஸ்கி ஆகியோர் புத்தர் மீது மிகுந்த ஆர்வத்தை உருவாக்கியிருந்தனர். அர்னால்டின் பின்புலமும் நாட்டமும் கொண்ட ஒருவர் இந்த கருப்பொருளில் ஒன்றை எழுதுவதற்கு ஈர்க்கப்படுவது இயற்கையானதே.

‘தி லைட் ஆஃப் ஏசியா’ (ஆசியாவின் ஒளி) என்ற இந்நூலில் ஒரு வலிமை வாய்ந்த அர்ப்பணிப்பு செய்யப்பட்டிருந்தது. கடமையில் தோய்ந்த அர்ப்பணிப்பு எனலாம்:

இறையாண்மைக்கு, 

கிராண்ட் மாஸ்டருக்கு  

மற்றும் இந்தியாவின் மிக உயர்ந்த நட்சத்திரத்தின் தோழர்களுக்கு

‘இந்தியாவின் மிக உயர்ந்த நட்சத்திரம்’ என்ற விருது 1861 ஆம் ஆண்டில் நடந்த கலகத்தைத் தொடர்ந்து அவ்வப்போது சிலரை அங்கீகரிப்பதற்காக நிறுவப்பட்டது. முக்கியமாக ஆங்கிலேய மணிமுடிக்கு இந்திய குடிகள் கொண்டுள்ள விசுவாசத்தை அங்கீகரித்து வெகுமதி அளிப்பதற்காக நிறுவப்பட்டது. ‘இறையாண்மை’ என்பது தெளிவாக விக்டோரியா மகாராணியைக் குறிப்பிடுகிறது.  ‘கிராண்ட் மாஸ்டர்’ என்பது வைஸ்ராய் லார்ட் லிட்டன் ஆவார். ‘தோழர்கள்’ என்ற குறிப்பு பெரும்பாலும் இந்திய அரச குடும்பத்தாரையும் இன்னும் சிலரையும் உள்ளடக்கியது, அவர்களில் அர்னால்ட்டும் ஒருவர்.

இந்நூலின் தலைப்புப் பகுதி இவ்விதம் இருக்கிறது:

ஆசியாவின் ஒளி

 அல்லது

 மகத்தான புறப்பாடு 

(மகாபினிஷ்க்ரமணம்)

 

இந்தியாவின் இளவரசர் மற்றும் பௌத்தத்தின் நிறுவனர் 

கவுதமரின் வாழ்வும் வாக்கும்

 (ஒரு இந்திய பௌத்தரின் வரிகளில்)”

தொடக்கத்திலிருந்தே அர்னால்ட் ஒரு புதிய நுட்பத்தைக் கையாள்கிறார் என்பது தெளிவாகிறது: பௌத்தத்தை நிறுவிய இந்தியாவின் இளவரசர் கௌதமரின் வாழ்க்கை, குணாதிசயம் மற்றும் தத்துவம் ஆகியவை  ஒரு கற்பனையான பௌத்த துறவியின் வாயிலாக சித்தரிக்கப்படுகின்றன.

Chulalonkorn

அவர் இதை செய்ததன் காரணத்தை இவ்விதம் குறிப்பிடுகிறார்:

“ஆசிய சிந்தனைகளின் உள்ளடக்கத்தைப் புரிந்துகொள்ள, அவை கீழைப்  பார்வையில் இருந்து பார்க்கப்பட வேண்டும்; இல்லையென்றால் இந்தப் படைப்பை உன்னதமாக்கும் அற்புதங்களையும் அதன் சாரமாகிய தத்துவங்களையும் இத்தனை இயற்கையாக உருவாக்கியிருக்க முடியாது.”

பூனாவில் இரண்டு வருட காலம் பணியில் இருந்த காலம் அர்னால்டில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்துள்ளது தெரிகிறது. அவர் தனது முன்னுரையில், நிர்வாணம், தர்மம், கர்மம் மற்றும் பௌத்தத்தின் பிற முக்கிய கருதுகோள்களை (மறுபிறப்பு  போன்றவை) தெளிவுபடுத்த விரும்புவதாகக் கூறுகிறார். சூன்ய நிலையே இருத்தலின் மேலான நிலை என்பது போன்ற கருத்துக்களில் உள்ளீடின்றி இருந்தால் மனிதகுலத்தின் மூன்றில் ஒரு பங்கு மக்கள்  ஒருபோதும் அதை நம்பியிருக்கமாட்டார்கள் என்பது அவரது உறுதியான நம்பிக்கையாகும். மரபுவழி கிறிஸ்தவ விமர்சகர்களை அவர் நேருக்கு நேர் எதிர்கொண்டிருக்கிறார்.

ஜூல்ஸ் பார்த்தேலேமி செயின்ட் ஹிலேர்-இன் புத்தரைப் பற்றிய புகழுரைகளை மேற்கோள் காட்டுவதைத் தவிர, அர்னால்ட் தனது கவிதைக்கு குறிப்பாக எடுத்தாளும் ஒரே ஆதாரம் ‘ஸ்பென்ஸ் ஹார்டியின் படைப்பில் உள்ள அபூரண பௌத்த மேற்கோள்கள்’ மட்டுமே. செயின்ட் ஹிலேர் ஒரு பிரெஞ்சு தத்துவஞானி மற்றும் அரசியல்வாதி ஆவார். அவர் எழுதிய “புத்தரும் அவருடைய சமயமும் (Le Bouddha et sa Religion)” 1860-இல் முதன்முதலில் வெளியானது. அர்னால்டு இவ்விதம் குறிப்பிடுகிறார்:

“பார்த்தேலேமி செயின்ட் ஹிலேர் கூட பௌத்த மதத்தின் பல புள்ளிகளை முற்றிலும் தவறாக மதிப்பிட்டு எழுதியிருக்கிறார். இளவரசர் சித்தார்த்தாவைப் பற்றி பேராசிரியர் மாக்ஸ் முல்லர் நன்கு குறிப்பிட்டிருக்கிறார்: அவரது வாழ்க்கை முற்றிலும் கறைபடியாதது. . . அவரது நிலையான வீரம் அவரது உறுதிப்பாட்டுக்கு நிகராக இருந்தது;  மேலும் அவர் முன்வைத்த கோட்பாடு தவறானது என்றாலும், அவர் அளித்த தனிப்பட்ட உதாரணங்கள் மறுக்கமுடியாதவை. அவர் உபதேசித்த அனைத்து நற்குணங்களுக்கும் அவரே முன்னுதாரணமாக இருந்தவர்; அவரது துறவு, அவரது சேவை, அவரது கலையாத கனிவு ஒரு கணம் கூட தவறியதில்லை. . .அவரது ஆறு வருட தனிமைக் காலம் மற்றும் தியானத்தின் போது அமைதியாக அவர் தனது கோட்பாட்டை கண்டடைந்தார்; அரை நூற்றாண்டுக்கும் மேலாக அவர் முற்றிலும் தன் சொல்வன்மையாலும் அதன் வழி மக்களை இணங்க வைப்பதன் வழியாகவுமே அதைப் பிரசங்கம் செய்தார். மேலும் இறுதியாக அவர் தனது சீடர்களின் அரவணைப்பில் உயிர்துறந்த போது ஒரு ஞானியின் அமைதியுடன் இருந்தார், அவர் உண்மையைக் கண்டறிந்துவிட்ட உறுதியோடு இருந்தார்.”

ஸ்பென்ஸ் ஹார்டி ஒரு ஆரம்பகால பிரிட்டிஷ் மெதடிஸ்ட் மிஷனரி. ஏப்ரல் 1868 இல் அவர் இறப்பதற்கு முன்பு 1825-65 க்கு இடையில் பத்து வருடங்களுக்கும் மேலாக அவர் இலங்கையில் இருந்தார். ஹார்டி ‘புத்தமதத்தின் நவீன வளர்ச்சி – ஒரு கையேடு'(A Manual of Buddhism in its Modern Development) நூலை, சிங்களத்தில் கிடைத்த கையெழுத்து ஏடுகள் மற்றும் இலங்கையில் இருந்தபோது அவரது சொந்த அவதானிப்புகள் ஆகியவற்றிலிருந்து எழுதினார். இது முதன்முதலில் 1853 இல் வெளியிடப்பட்டது. ஆயினும் முன்னர் குறிப்பிட்டது போல ரைஸ் டேவிட்ஸ் இதை 1860 என்று என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் குறிப்பிட்டுள்ளார். அவரது இறுதிப் படைப்பான ‘கிறித்துவம் பௌத்தம் ஒப்பீடு’ (Christianity and Buddhism Compared) 1874 இல் வெளியிடப்பட்டது. ஹார்டி அர்னால்டு போலல்லாமல் கிறிஸ்தவ மதத்தின் இறையாண்மையில் உறுதியான நம்பிக்கை கொண்ட ஒரு பக்தி நிறைந்த கிறிஸ்தவராக இருந்தார்.   அர்னால்டு இந்தியா வருவதன் முன்னரே, ஆக்ஸ்போர்டில் இருபத்தொரு வயது இளங்கலைப் பட்டதாரியாக இவ்விதம் எழுதியிருக்கிறார்:

“மனிதர்களுக்கான கடவுளின் தெய்வீக வாக்குகள் ஒரு வாயில் மூலமாகவோ அல்லது ஒரு பாதை மூலமாகவோ மட்டும் அறியப்படவில்லை. .”

அறிஞர்கள் அர்னால்ட் தனது நூலுக்கு எவற்றை ஆதாரமாகக் கொண்டார் என்றறியப் போராடினர். அவருடைய விரிவான வாசிப்பு மற்றும் இந்தியாவில் அவர் பெற்ற அறிவை கணக்கில் கொள்ள மறந்துவிட்டார்கள். 1954 ஆம் ஆண்டில், ஏ.எல். பாஷம் அவரது மிகவும் மதிக்கப்படும் படைப்பான “இந்தியா என்னும் அற்புதம்” (The Wonder that was India) நூலில், ‘தி லைட் ஆஃப் ஏசியா’  லலிதாவிஸ்தாரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று குறிப்பிடுகிறார். 1960-ல் இன்னொரு பார்வை முன்வைக்கப்படுகிறது:

“’தி லைட் ஆஃப் ஏசியா’வின் முக்கிய ஆதாரம், பேராசிரியர் பீலின் அபினிஷ்க்ரமண சூத்திரத்தின் மொழிபெயர்ப்பாகும். இது தவிர ஸ்பென்ஸ் ஹார்டியின் நூல் மற்றும் அர்னால்டின் பௌத்தம் மற்றும் இந்திய வாழ்க்கையின் நேரடி அனுபவத்திலிருந்து இணைந்து இக்கவிதையின் கருப்பொருளை உருவாக்குகிறது.”

1972-ல் மற்றொரு முடிவு முன்வைக்கப்படுகிறது:

“அர்னால்ட் 1879 இல் கிடைத்த புத்த மதத்தைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்திருந்தார். ஆனால் அவருடைய கவிதை நூல் அடிப்படையாக நான்கு ஆதாரங்களை சார்ந்தது: சாமுவேல் பீல் ‘அபினிஷ்க்ரமண சூத்திரத்தின்’ சீனப் பதிப்பிலிருந்து மொழியாக்கம் செய்த ‘சாக்கிய புத்தரின் கற்பனாவாத புராணக் கதைகள்’ என்ற நூல், ஸ்பென்ஸ் ஹார்டியின் ‘புத்தமதத்தின் நவீன வளர்ச்சி – ஒரு கையேடு’,  வெஸ்லியன் மிஷனரி நீண்ட காலம் நடத்திய இலங்கையின் தேரவாத பௌத்தம் பற்றிய ஒரு நீண்ட ஆய்வு, புத்தகோஷாவின் நீதிக்கதைகள் மற்றும் அதே தொகுதியில், எஃப். மாக்ஸ் முல்லரின் தம்மபதத்தின் மொழிபெயர்ப்பு – இது புத்த பழமொழிகளின் ஞானத்தின் தொகுப்பாகும்; மற்றும் டி.டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸின் பௌத்தம் – இருபதாம் நூற்றாண்டுக்கு முன்னர் ஆங்கிலத்தில் பௌத்தம் குறித்து எழுதப்பட்ட சிறந்த பொதுஅறிமுகப் புத்தகமாக இருக்கலாம். இவற்றில் பீலின் நூல் மிக முக்கியமானது; ஏனென்றால் அது இக்கவிதையின் கருப்பொருளாகிய புத்தரின் வாழ்க்கை வரலாறு குறித்த நூல்.”

Holmes

யார் இந்த சாமுவேல் பீல்? பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் சீனாவில் பிரிட்டிஷ் கடற்படையில் பணியாற்றிய ஆங்கிலிகன் திருச்சபையைச் சேர்ந்த அவர், சீன மொழியில் புலமை பெற்றவராக இருந்தார். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இங்கிலாந்தில் புத்த மதம் குறித்த சீனப் படைப்புகளின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளராக அவர் வெளிப்பட்டார். பீலின் ‘சாக்கிய புத்தரின் கற்பனாவாத புராணக் கதைகள்’ (The Romantic Legend of Sakya Buddha) நூலை 1875 இல் ட்ரூப்னர் அண்ட் கோ. வெளியிட்டனர். பீல் தனது முன்னுரையில் குறிப்பிடுவது போல:

“இந்த நூல், ​​கி.பி. ஆறாம் நூற்றாண்டின் இறுதியில், ட்சுய் வம்ச காலகட்டத்தில், சீனாவில் வசித்த வட இந்தியாவைச் சேர்ந்த பௌத்த மதகுருவான ஞானகுடாவால் சீன மொழியில் எழுதப்பட்ட ‘அபினிஷ்க்ரமண சூத்ரத்தின்’ மொழிபெயர்ப்பாகும்.”

பீல் அப்போதைய இந்திய ஆட்சியாளர்கள் தனக்குப் பெரிதும் உதவியதை அங்கீகரிக்கிறார் – முதலில் ஆவணக் காப்பகத்தில் இருந்த சீன உரையை அணுக அனுமதித்ததும், பின்னர் மொழிபெயர்ப்பை முடிக்க அவருக்கு ஒரு தற்காலிக வேலை கொடுக்கப்பட்டதையும் சொல்கிறார். புத்தர் மறைவுக்கு சுமார் நான்கு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, ‘கி.பி. 69 அல்லது 70க்கு முன்’ இந்தியாவில் இதன் மூல சமஸ்கிருத உரை புழக்கத்தில் இருந்திருக்கலாம் என்று பீல் சுட்டிக்காட்டுகிறார். 1876 ​​ஆம் ஆண்டு பௌத்தம் பற்றிய பிரிட்டானிக்கா என்சைக்ளோபீடியா குறிப்பைப் படித்தால் வெளிப்படையாகத் தெரியாத ஒன்றை அவர் சுட்டிக்காட்டுகிறார்: அபினிஷ்க்ரமண சூத்திரம் வேறு சில பௌத்த குழுக்களால் லலிதவிஸ்தாரா என்றும் அழைக்கப்படுகிறது. எனவே, பாஷம் தவறு செய்திருக்க முடியாது, அவருக்கு ஒரு ஆதரவாளர் இருக்கிறார். ஆஸ்திரேலிய அறிஞரான பிலிப் ஆல்மண்ட், 1988 இல் எழுதும் குறிப்பில், அர்னால்ட் தனது ‘தி லைட் ஆஃப் ஏசியாவை’ பிலிப் எட்வார்ட் ஃபூகாக்ஸின் லலிதாவிஸ்தாராவின் பிரெஞ்சு மொழிபெயர்ப்பை  அடிப்படையாகக் கொண்டதாகக் கூறினார். இந்த ஃபூகாக்ஸ் பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவின் முன்னணி திபெத்தியலாளர் ஆவார்.

‘தி லைட் ஆஃப் ஏசியா’வுக்கான ஆதாரங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 2008 ஆம் ஆண்டில் ஒரு பிரபல அமெரிக்க அறிஞரால் மறுபரிசீலனை செய்யப்பட்டன. அர்னால்ட் பர்மிய மூல நூல்களில் இருந்து பெறப்பட்ட ரெவ். பி.பிகாண்டட்டின் ‘கௌதமரின் வாழ்வு அல்லது புராணம்’ (The Life or Legend of Gautama) (1858) மற்றும் சிங்கள மூல நூல்களிலிருந்து பெறப்பட்ட ஸ்பென்ஸ் ஹார்டியின் பௌத்தத்தின் கையேடு (1860) ஆகியவற்றைப் படித்திருக்கலாம். ஆனால் அந்நூல்கள் புத்தர் மற்றும் பௌத்த மதத்தின் மீது  ஆதரவான நோக்கோடு பார்த்தவை அல்ல, என்பதனால் அவற்றை அவர் தன் நூலுக்கான ஆதாரமாகக் கொண்டிருக்கவியலாது என்று குறிப்பிடுகிறார். மாறாக அமெரிக்க கல்வியியலாளர் ஜெஃப்ரி ஃபிராங்க்ளின் இவ்விதம் எழுதியிருக்கிறார்:

“1871 ஆம் ஆண்டில், ஹென்றி அலபாஸ்டர் அவரது புகழ்பெற்ற படைப்பான “தர்ம சக்கரம்: பௌத்தம் சியாமிய மூலங்களிலிருந்து விளக்கப்பட்டது(The Wheel of the Law: Buddhism Illustrated from Siamese Sources)” என்னும் நூலை வெளியிட்டார். இது புத்தரின் வாழ்க்கையை நேர்மறையாக மறுபரிசீலனை செய்வது குறிப்பாக மேற்கத்திய வாசகர்களுக்கு அறிமுகம் செய்வது. . . மேலும் இரு முக்கியமான ஆதார நூல்கள் சாமுவேல் பீலின் ‘சாக்கிய புத்தரின் கற்பனாவாத புராணக் கதைகள்’ (1875) மற்றும் டி.டபிள்யூ. ரைஸ் டேவிட்ஸின் பரவலாகப் வாசிக்கப்பட்ட “பௌத்தம்: கௌதம, புத்தரின் வாழ்க்கை மற்றும் போதனைகளின் சித்திரம்” (1877)( Buddhism: Being A Sketch of the Life and Teachings of Gautama, the Buddha.”

ஹென்றி அலபாஸ்டர் முதலில் சியாமில் அரசர் நான்காம் ராமாவின் ஆட்சிக்காலத்தில் ஆங்கிலேயர்களுக்காகப் பணிபுரிந்தார். அதன் பிறகு அரசர் ஐந்தாம் ராமாவின் முக்கிய உதவியாளராக 1888 இல் அவர் இறக்கும் வரை சுமார் பதினைந்து ஆண்டுகள் இருந்தார். அவரது பெயர் இன்றும் தாய்லாந்தில் நினைவுகூரப்படுகிறது. இந்த கதையின் முடிவில் அவரது பெயர் மீண்டும் எழுந்துவரும்.

‘லைட் ஆஃப் ஏசியா’ ‘வசன கவிதை வடிவில் எட்டு புத்தகங்களாக, ஒவ்வொன்றிலும் ஐந்நூறு அல்லது அறுநூறு வரிகளுடன்’ அமைந்தது. அர்னால்ட் ஒவ்வொரு புத்தகத்திற்கும் தலைப்பு ஏதும் கொடுக்கவில்லை; அதன் காலவரிசைப்படியே குறிப்பிடுகிறார்.

முதலாம் புத்தகம் சித்தார்த்தரின் பிறப்பு, குழந்தைப் பருவம் மற்றும் இளமைப் பருவம் ஆகியவற்றைப் பேசுகிறது, 436 வரிகளைக் கொண்டுள்ளது.

இரண்டாவது புத்தகம் அவரது பதின்ம வயதுகள் தொடங்கி யசோதராவுடனான அவரது திருமணம் வரை பேசுவது, 515 வரிகளைக் கொண்டுள்ளது.

மூன்றாவது புத்தகம், அவர் ஒரு கணவனாகவும் தந்தையாகவும் வாழும் ஆடம்பர வாழ்க்கையைப் பற்றியது, ஆனால் ஒரு முதியவர், ஒரு நோய்வாய்ப்பட்டவர், ஒரு சடலம் மற்றும் ஒரு அலைந்து திரியும் துறவியைப் பார்த்த பிறகு அவருக்கு அதிகரிக்கும் சந்தேகங்கள் ஆகியவையும் இதில் வருகிறது. இதில் 601 வரிகள் உள்ளன.

நான்காவது புத்தகம் அவரது பெரும் துறவு மற்றும் மனித இருப்பில் துன்பங்களுக்கான தீர்வு குறித்த அவரது தேடலின் தொடக்கத்தைப் பற்றியது. இது 568 வரிகளில் அமைந்துள்ளது.

ஐந்தாவது புத்தகம், அலைந்து திரியும் துறவிகளின் சகவாசத்தில் அவர் தன் உடலைத்தானே அழித்துக்கொண்டதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது, 560 வரிகளைக் கொண்டுள்ளது.

ஆறாவது புத்தகம், ஒரு தன்னைத் துன்புறுத்திக்கொள்வதன் வழியாக ஞானத்தை அறிய முற்படுவதில் அவர் ஏமாற்றமடைந்ததை விளக்குகிறது, சுஜாதாவின் அன்பளிப்பான பாலை அவர் உட்கொண்டு தனது உண்ணாநோன்பை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் போதி மரத்தடியில் ஞானமடைந்து புத்தர் ஆவது வரை இது பேசுகிறது. இப்பகுதி மிக நீளமானதாக 780 வரிகளைக் கொண்டது என்பதில் ஆச்சரியமில்லை.

ஏழாவது புத்தகம் அவரது பிரிவுக்குப் பின்னர் வீட்டில் தந்தையின் துக்கம், அவரது மனைவியின் வேதனை மற்றும் அவர் இல்லாததால் அவரது மகனின் திகைப்பு, பின்னர் அவர் வீட்டிற்கு வருதல் மற்றும் அவர் செயலை அவர்கள் அங்கீகரிப்பது ஆகியவற்றைக் கையாள்கிறது. இதில் 520 வரிகள் உள்ளன.

எட்டாவது புத்தகம் 611 வரிகள் கொண்டது, வாசிக்க எளிதானது. மேலும் புத்தரின் போதனைகள் மற்றும் துறவிகளின் வரிசையை நிறுவுதல் மற்றும் கோட்பாடுகளின் விளக்கங்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது இக்கவிதையின் மிகவும் தாக்கம் ஏற்படுத்தும் பகுதியாகும்.

‘தி லைட் ஆஃப் ஏசியா’வில் மொத்தம் 5300 வரிகளும் 41,000 சொற்களும் உள்ளன. கவிதை இப்படித் தொடங்குகிறது:

“உலகின் ரட்சகரின் வேதம்,

கடவுள் புத்தர்-பூமியில் சித்தார்த்தன் என –

பூமியிலும் சொர்க்கத்திலும் நரகத்திலும் ஒப்பிலாத,

மேன்மையும் அறிவும் சிறப்பும் கனிவும் கொண்ட,

பரிநிர்வாண மற்றும் தர்மத்தின் ஆசிரியர் என

இவ்வாறு அவர் மனிதர்களுக்காக மீண்டும் அவதரித்தார்.”

எட்டாவது புத்தகம்தான் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் சாராம்சமாகும். புத்தரின் தத்துவம், போதனைகள், நான்கு உன்னத உண்மைகள், எண்வழிப்பாதை பற்றிய அவரது விளக்கங்கள், நன்நடத்தைக்கான அவரது ஐந்து விதிகள் மற்றும் கர்மா குறித்தும் நிர்வாணக் கோட்பாடுகளின் விளக்கங்கள் குறித்தும் இதில் உள்ளன. இக்கவிதை நூலில் உள்ள எல்லாவற்றையும் விட, எட்டாவது புத்தகத்தின் நிறைவுப் பகுதி வாசகர்களின் கற்பனையை மிகவும் கவர்வதாக இருக்கிறது:

“நான் எழுதுவது இங்கு நிறைவுறுகிறது

நம்மை நேசிக்கும் இறையின் மீது நாம் கொண்ட அன்பிற்காக

சிறிதே அறிந்தேன் சிறிதே பகிர்ந்தேன்

ஆசிரியரையும் அவரது அமைதியின் வழிகளையும் தொட்டபடி.

அதன்பிறகு நாற்பத்தைந்து மழை பொழிந்தன

பல மொழிகளிலும் பல நிலங்களிலும் உள்ளவற்றைக் காட்டி,

ஆசியாவுக்கு ஒளி கொடுத்தார்,

அதன் அழகு அப்படியே இருக்கிறது,

சொல்லை ஆளும் மாபெரும் கருணை;

புனித நூல்களில் சொல்லப்பட்டவை,

அவர் எங்கு சென்றாலும்

பேரரசர்கள் பாறைகள் மற்றும் குகைகளில்

அவரது இனிய  சொற்களை செதுக்கினர்:

புத்தர் மறைந்தார், ததாகடா

மனிதனாக வந்தாலும் பூரணம் அடைந்தவர்

அன்றிலிருந்து ஆயிரம் கோடி பேர்

அமைதி நிலவும் நிர்வாணத்தை   நோக்கிய

அப்பாதையில் நடந்திருக்கின்றனர்”

——–

ஆ! அருளும் ஆண்டவரே! ஓ வழங்குபவரே!

உமது உயரிய அன்பை சிற்றறிவால் அளவிடும்

இந்த எளிய உரையை மன்னியுங்கள்.

காதலரே! சகோதரரே! வழிகாட்டியே! தர்மத்தின் விளக்கே!

நான் புத்தரிடம் சரணம் அடைகிறேன்!

நான் தர்மத்திடம் சரணம் அடைகிறேன்!

நான் சங்கத்திடம் சரணம் அடைகிறேன்!

தாமரை மீது பனித்துளி! – எழுக கதிரே!

எனது இலையை அகற்றி அலைகளில் என்னை சேர்த்துவிடு.

தாமரை அமர்ந்த அருமணியே, கதிர் எழுகிறது!

ஒளிரும் கடலில் பனித்துளி கரைகிறது!

1879 ஆம் ஆண்டு ஜூலை மத்தியில் முதல் பதிப்பு வெளியானது:

“பக்கத்துக்கு எட்டு பகுதிகளாக அச்சிடப்படும் ஆக்டாவோ(octavo) தொகுதியாக, மஞ்சள் துணியில் ஒரு எளிய பைண்ட் செய்யப்பட்ட புத்தகமாக ட்ரூப்னர் நிறுவனத்தின் பெயருடன் வெளிவந்தது. தலைப்புப் பக்கம் ஏழு வெவ்வேறு எழுத்துருக்களால் ஆனது. இந்த முதல் வெளியீட்டின் அழகுணர்வற்ற தகடுகள் அடுத்த ஐம்பது ஆண்டுகளுக்கு ஆங்கில மற்றும் அமெரிக்க பதிப்புகளின் அடையாளமாக இருந்தது.”

இருப்பினும், இந்த பதிப்பில் எந்த விளக்கமும் இல்லை. இருந்தபோதிலும், ஒரு வெற்றிகரமான வெளியீடாக அமைந்தது. ‘ஆசியாவின் ஒளி’யின் மூல கையெழுத்துப் பிரதி என்ன ஆனது? 1920 ஆம் ஆண்டு அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில்துறை அதிபரின் சுயசரிதை வெளியிடப்படும் வரை அதன் தலைவிதி தெரியவில்லை.

அதற்கு முந்தைய ஆண்டு ஆண்ட்ரூ கார்னகி காலமானார். அவரது மனைவி அவர் விட்டுச் சென்ற நினைவுக் குறிப்புகளை வெளியிட முடிவு செய்தார். அதில் அவர் ஒரு இடத்தில் நினைவுகூர்கிறார்:

“எட்வின் அர்னால்டின் “தி லைட் ஆஃப் ஏசியா” இந்த நேரத்தில் வெளிவந்தது. நான் சமீபத்தில் வாசித்த எந்தவொரு கவிதைப் படைப்பையும் விட எனக்கு இது மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. நான் சமீபத்தில் இந்தியா சென்றிருந்தேன், இப்புத்தகம் என்னை மீண்டும் அங்கு அழைத்துச் சென்றது. அதன் மீதான எனது பாராட்டு ஆசிரியரின் காதுகளை எட்டியது. பின்னர் லண்டனில் எனக்கு அவர் அறிமுகமானார், புத்தகத்தின் மூல கையெழுத்துப் பிரதியை என்னிடம் வழங்கினார். இது எனது விலைமதிப்பற்ற பொக்கிஷங்களில் ஒன்றாகும்.”

ஸ்காட்லாந்தைச் சேர்ந்த கார்னகி அமெரிக்காவில் மிகவும் தீவிரமான வணிகர்களில் ஒருவராக இருந்தார். அதேநேரம் மிகவும் மனிதநேயம் மிக்க ஒருவராகவும் இருந்தார். அவர் தன்னை ‘தொழில்துறை முதலாளித்துவத்தின் தார்மீக தத்துவவாதி’ என்று கருதினார். ஜூலை 6, 1883 அன்று அர்னால்ட் அவருக்கு இவ்விதம் எழுதியிருந்தார்:

“அன்புள்ள திரு. கார்னகி: . . .

‘தி லைட் ஆஃப் ஏசியா’ ஆக்கத்தில் எனது உழைப்புக்கு அமெரிக்காவில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் பாராட்டுக்கள் கிடைத்தன, எனினும் உங்களை விட வேறு எவரும் இபடைப்போடு தங்களைப் போல அணுக்கமாக உணரவில்லை. எனவே என் கைப்பட எழுதப்பட்ட, கவிதையின் கையெழுத்துப் பிரதியை ஒரு நினைவுப் பரிசாக ஏற்றுக்கொள்ளுங்கள். வருங்காலத்தில் ஒருவேளை இன்று உங்கள் அன்பான விழிகளில் தெரியும் அந்த மதிப்பை, பிறரும் அறியக் கூடும், அன்று இதற்கு மதிப்பு இருக்கும்.”

இந்த 230 பக்க கையெழுத்துப் பிரதி இப்போது வாஷிங்டன் டிசியில் உள்ள லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் உள்ள கார்னகி சேகரிப்பில் உள்ளது. சுவாரசியமான ஒரு விஷயம், இக்கவிதைக்கான அர்னால்ட் முதலில் வைத்த தலைப்பு ‘ஆசியாவின் நற்செய்தி'(The Gospel of Asia). பின்னர் அவர் அதை ‘ஆசியாவின் ஒளி’ (The Light of Asia) என்று மாற்றினார்.

இப்போது வாஷிங்டன் டிசியின் லைப்ரரி ஆஃப் காங்கிரஸில் உள்ள தி லைட் ஆஃப் ஏசியாவின் மூல கையெழுத்துப் பிரதியின் தலைப்புப் பக்கமும் கடைசிப் பக்கமும்.

நூல் வெளியான உடனேயே ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் விமர்சனங்கள்  வெளிவரத் தொடங்கின. அந்நூலின் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்து வந்தது போல் இருந்தது. 1 ஆகஸ்ட் 1879 அன்று ‘டெய்லி ரிவ்யூ’ இப்படி எழுதியது:

“. . . ஆனால், திரு.அர்னால்டின் இலக்கியத் திறமைக்கான பாராட்டுகளைத் தவிர, கவிதையின் அருமையையும்  அழகையும் இன்னும் அதிகமாகச் சொல்லவேண்டும். இது உண்மையில் மற்றொரு “ஐடில்ஸ் ஆஃப் தி கிங்” தான். அதன் ஹீரோ ஆர்தருக்குப் பதிலாக கெளதமரையும், கிறிஸ்தவ புனித கிரெயிலுக்கு பதிலாக நிர்வாணத்தையும் கருவாகக் கொண்டது. . . தனது கிழக்காசிய படிப்பில் ஓய்வின்றிக் காலம் கழித்த ஒருவர், இப்படி ஒரு வசனகவிதையை எழுதுவதற்கான நேரத்தையும் மன அமைதியையும் எவ்விதம் அடைந்தார் என்றும் வியக்கிறோம். .பௌத்தத்தின் மீது மிகவும் ஆர்வமுள்ள மதத்துறவியர் சொல்லக்கூடிய சிறந்தவற்றை இதில் காணலாம். பராமபிதாவின் மைந்தனாகிய கிறிஸ்துவை அறிந்தவருக்கு இது வருத்தமாக இருக்கலாம், ஆனால் எல்லா மக்களுக்கும் மகிழ்ச்சியின் நற்செய்தியை அறிவிக்க உண்மையான கிறிஸ்தவரைத் தூண்டுகிறது. ”

எட்டு நாட்களுக்குப் பிறகு, ‘தி ஏதெனியம்’, மிகவும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட கர்மா மற்றும் நிர்வாணம் போன்ற கருதுகோள்களை விளக்கியதற்காக அர்னால்டைப் பாராட்டியது. ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் அமைப்பு மற்றும் நடையில் ஜான் கீட்ஸ் மற்றும் ஆல்ஃபிரட் டென்னிசனின் செல்வாக்கையும் சுட்டிக் காட்டியது. இதை ஒரு விமர்சனமாக முன்வைத்து, ஆனால் அதே நேரத்தில் ‘இந்தக் கவிதை கவனத்திற்குரியது அதன் பாடுபொருள் மட்டுமல்ல; தன் கவிதைத் தகுதியால் சிறப்பானது, மேலும் இதன் வர்ணனைகள் மிகவும் அழகானவை.’ என்று கூறியது.

1879 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் தேதி பால் மால் கெசட் எனும் இதழில் இதைப் பற்றி விரிவாக எழுதி, “இப்படைப்பின் உண்மையான சிறப்பு இந்திய உணர்வுகளுக்கு உண்மையாகவும், புத்தரின் தத்துவம் மற்றும் புனைவுகள் குறித்த நீண்டகால பயனுள்ள ஆய்வின் அறிதல்களை உள்ளடக்கியதாகவும் உள்ளது’ என்று கூறி  இவ்விதம் நிறைவு செய்தது:

“புத்தரின் தனித்துவமான கோட்பாடுகளை முன்வைப்பதே திரு. அர்னால்டின் பணியின் மிகவும் கடினமான பகுதியாகும். பௌத்த இறையியலின் சிக்கலான மற்றும் புரிந்துகொள்ளக் கடினமான நுட்பங்களில் இருந்து மேற்கத்திய மனங்களுக்கு புரியக் கூடிய ஒரு சாரத்தை வெளிக்கொணர வேண்டியிருந்தது. ஆனாலும் கௌதமரின் சொற்கள் மற்றும் போதனைகளை உண்மையாக வெளிப்படுத்தி இருந்ததிலும் அவர் நன்றாக வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.. ஒரு கவிதையாக அவரது பணி மதிப்புக்குரியது; பௌத்தத்தின் தத்துவ மற்றும் மத உள்ளடக்கத்தையும், அதன் நிறுவனரையும் தெளிவாக முன்வைப்பதால், அது புகழ்பெறத் தகுதியானது.”

ஆகஸ்ட் 31, 1879 இன் “தி அப்செர்வேர்’ அர்னால்டை  ‘இந்தியநிலக் காட்சிகளின் தெளிவான மற்றும் உண்மையான விவரணைகள் நிறைந்த ஒரு சிறந்த கவிதை மூலம் நமது இலக்கியத்தை வளப்படுத்தியதற்காக’ பாராட்டியது. கவிதையில் இருந்து நீளமாக மேற்கோள் காட்டி, ‘ஆசிரியர் பொதுவாக பௌத்தம் தொடர்பாக பொதுவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட சில கருத்துக்களை மாற்றியமைத்துள்ளார், ஆனால் இந்தியாவைப் பற்றிய ஆசிரியரின் பரந்த அறிவும், எடுத்துக்கொண்ட பொருளில் உண்மையான ஆர்வமும் அவரது ஆராய்ச்சிகளின் மதிப்பை உயர்த்துகிறது. மேலும் அவரது கருத்துக்கள் மேல் மரியாதையை ஏற்படுத்துகிறது, அதே சமயம் அவரது வர்ணனை வாசகரை உடன் அழைத்துச் செல்லும்.’ என்றது.

இங்கிலாந்தில் உள்ள அனைத்து முக்கிய வெளியீடுகளும் இந்நூல் வெளியான சில வாரங்களுக்குள் அதை மதிப்பாய்வு செய்தன. ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் ஆரம்ப எதிர்வினை சிறப்பாக இருந்தது. ஆனால், உண்மையைச் சொன்னால், பௌத்தத்தில் வல்லுனர்கள் என்று கருதப்படுபவர்கள் கூட எதிர்பாராதது. உதாரணமாக, ரைஸ் டேவிட்ஸே, இந்நூல் பற்றிய தனது மதிப்பாய்வை இவ்வாறு கூறியிருக்கிறார்:

“திரு. அர்னால்ட் ஒரு பௌத்த ஆர்வலரின் நிலையை மிகுந்த இசைவுடன் தொடர்ந்து கைக்கொண்டிருக்கிறார்; ஒரு புராதன சமயத்தின் நம்பிக்கையை பாராட்டத்தக்க துல்லியத்துடனும் ஆதுரத்துடனும் அணுகியிருக்கிறார். .”

இதை அங்கீகரித்த பிறகு:

“. . . விமர்சன நோக்கு மற்றும் வரலாற்று துல்லியம் ஆகியவை கதையை சொல்ல வேண்டிய கதாபாத்திரத்திற்கு முரணாக இருந்திருக்கும். . .”

என்றும் மேலும்:

“ஒரு கதையின் கவிதை வடிவம் மிகவும் பழக்கமான சம்பவங்களால் ஆனதென்றால் அதன் அனைத்து சுவாரஸ்யத்தையும் இழக்கக் கூடும்; மற்றும் கதைக்காட்சியின் புனைவுத்தன்மை மற்றும் நிதர்சனத்தில் இருந்தான தூரம் வாசகரின் நேரத்தையும் அறிவார்ந்த முயற்சியையும் கோருவது. இத்தகைய நிர்பந்தங்களுக்கு இடையே எழுதும் ஒரு எழுத்தாளரின் படைப்பு மக்களின் ரசனையை ஈர்க்கும் என்று எதிர்பார்ப்பது அரிது.”

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பௌத்தத்தின் மிகப் பெரிய பிரிட்டிஷ் அறிஞர் என்றறியப்பட்டவர் கணித்தது தவறென்று மிக விரைவில் நிரூபிக்கப்படுகிறது. ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் பிரமிக்க வைக்கும் வெற்றியானது, பொதுமக்களின் பாராட்டுக்களையும் வணிகரீதியான வெற்றியையும் அடையாமல் பல வருடங்களை  இதில் செலவழித்தவர்களிடையே திகைப்பையும் எரிச்சலையும் ஏற்படுத்துகிறது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, ‘தி லைட் ஆஃப் ஏசியா’ புத்தமதத்தின் மீது ஏற்படுத்திய  ஆர்வம், அதற்கு முந்தைய ஆண்டு வெளியிடப்பட்ட ரைஸ் டேவிட்ஸின் பௌத்தம் மீதான நூலின் விற்பனையை பெரிதும் ஊக்குவிக்க உதவியது என்று கூறப்படுகிறது.

அட்லாண்டிக் பெருங்கடலுக்கு அப்பால் அது பெறும் வரவேற்பால் இக்கவிதை நூல் இன்னும் பெரிய ஊக்கத்தைப் பெறுகிறது. இந்த அமெரிக்க வரவேற்பு இங்கிலாந்தில் இப்படைப்பின் மதிப்பை மேலும் அதிகரிக்கிறது, விரைவிலேயே ஐரோப்பாவும் அந்த அலையில் ஆழ்கிறது. ஆனால் அமெரிக்க விமர்சனத்திற்கு வருவதற்கு முன், இந்தியாவில் ஒரு மதிப்பாய்வை நான் குறிப்பிட வேண்டும், இது இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் ‘ஆசியாவின் ஒளி’யை பிரபலப்படுத்துவதில் பெரும் செல்வாக்கு செலுத்தியது. இந்தியாவில் வெளிவந்த மூன்று விமர்சனங்கள் குறிப்பிடத்தக்கவை.

‘தி பயோனியர்’ அப்போது அலகாபாத்தில் இருந்து வெளியான இந்தியாவின் முன்னணி செய்தித்தாள்களில் ஒன்று. ருட்யார்ட் கிப்ளிங் பல ஆண்டுகளுக்குப் பிறகு அதனோடு தொடர்புகொண்டவராகிறார்.  அதன் ஆசிரியர் ஆல்ஃபிரட் பெர்சி சின்னெட் ஒரு ஆரம்பகால இறையியலாளர், 1921 இல் அவரது வாழ்க்கையின் இறுதி வரை அவ்விதம் இருந்தவர். அது வெளியிட்ட மதிப்புரையில் 1812 மற்றும் 1818 க்கு இடையில் நான்கு பகுதிகளாக வெளிவந்த லார்ட் பைரனின் ‘சைல்ட் ஹரோல்டின் யாத்திரை’க்குப் பிறகு ‘தி லைட் ஆஃப் ஏசியா’வே  மிகச் சிறந்த  கவிதை என்று கூறியது. 13 செப்டம்பர் 1879 இல், டைம்ஸ் ஆஃப் இந்தியா பால் மால் கெசட்டின் மதிப்பாய்வை மீண்டும் வெளியிட்டது.

ஆனால் ‘தியோசோபிஸ்ட்’ தொடக்க இதழில் இடம்பெற்ற மதிப்புரை மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியது. பம்பாயில் இருந்து தொடங்கப்பட்ட தியோசோபிஸ்ட் இதழ், ‘மனோவசியம், ஆன்மீகம், மற்ற பிற மறைஞான தத்துவங்களைத் தழுவி கிழக்காசிய தத்துவம், கலை, இலக்கியம் மற்றும் தந்திரம் ஆகியவற்றைப் பேசும்  ஒரு மாத இதழ்’ என்று தன்னை வகுத்துக் கொண்டது. தியோசோபிகல் சொசைட்டியின்(பிரம்மஞான சபை) இவ்வெளியீடு, தன்னை ‘மனசாட்சியின் குடியரசு’ என்று அழைத்தது. இது ஓரியண்டலிஸ்டுகளின் ‘இடைவிடாத உழைப்பில்’ இருந்து உத்வேகம் பெற்றதாகக் கூறியது. ‘வேத, பௌத்த, ஜோராஸ்ட்ரியன் மற்றும் உலகின் பிற பழைய மதங்களுக்கு சமமான மரியாதை மற்றும் போற்றுதலை வெளிப்படுத்துவதாகவும், மற்றும் இந்து, சிங்களம், பார்சி, ஜெயின், ஹீப்ரு மற்றும் கிறிஸ்தவ உறுப்பினர்களிடம் இயற்கையில் வெளிப்படும் தெய்வீகத்தின் மாணவர்களாக ஒரு சகோதர உணர்வைப் பேசுவதாகவும் கூறியது.

அக்டோபர் 1879 இல் தியோசோபிஸ்ட் பத்திரிகையின் முதல் இதழில் மேடம் பிளாவட்ஸ்கியின் கையொப்பமிடப்பட்ட ‘பாரசீக ஜோராஸ்ட்ரியனிசம் மற்றும் ரஷ்ய காழ்ப்புணர்ச்சி’ என்ற கட்டுரை வந்திருந்தது. இது ஏப்ரல் 1875 இல் ஆர்ய சமாஜத்தை நிறுவிய சமூக சீர்திருத்தவாதியான தயானந்த சரஸ்வதியின் சுயசரிதையிலிருந்து ஒரு பகுதியைக் கொண்டிருந்தது. அவர் பிரம்மஞான சபையுடன் முதலில்   தொடர்பில் இருந்தார், ஆனால் பின்னர் அதை முறித்துக் கொண்டார். தியோசோபிஸ்டுகளின் நோக்கங்கள், குறிக்கோள்கள் மற்றும் வாழ்க்கைக்கான அணுகுமுறை பற்றிய நீண்ட கட்டுரையைத் தவிர யோகா மற்றும் பண்டைய ஆரிய முக்கோணவியல் பற்றிய கட்டுரைகளும் அதில் இடம் பெற்றிருந்தன. இவை அனைத்திற்கும் இடையில் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் கையொப்பமிடப்படாத விமர்சனம் வைக்கப்பட்டது. மேடம் பிளாவட்ஸ்கி இதை எழுதியதாக நம்பப்படுகிறது. அதை எழுதியது ஹென்றி ஆல்காட்டாகவும் இருந்திருக்கலாம். ஆனால் அது வேறு யாரோ, பம்பாயில் இருந்த ஒரு அறிஞர், அவருடைய அடையாளத்தை நாம் அறிய முடியாது என்பது என் கருத்து.

தியோசோபிஸ்ட் அர்னால்டின் சமீபத்திய படைப்பை, ‘சரியான தருணத்தில் கவிதை வடிவில் வெளிவந்த படைப்பு; அதன் வெளிப்புறத் தோற்றம் சரியானதாக இருந்தாலும் அதன் உட்பொருள் விவாதத்தையும் கசப்பான விமர்சனங்களையும் தூண்டும் என்பது உறுதி’ என்று கூறியது. மேலும் இவ்விதம் குறிப்பிட்டது:

“. . . தத்துவ சிந்தனை மற்றும் மத உணர்வு நிரம்பிய இலக்கியத்திறம் நிரம்பிய கவிதையாக கருதுகிறோம். . . மில்டன் தன்மை கொண்ட வசனகவிதை  செழுமையானது, எளிமையானது மற்றும் சக்தி வாய்ந்தது. . .”

இது கவிதையிலிருந்து விரிவாக மேற்கோள் காட்டி,

‘பௌத்தம் அதன் தொடக்கத்திலிருந்தே இந்தியாவை மட்டுமல்ல, கிட்டத்தட்ட அனைத்து ஆசியாவின் தார்மீக அம்சத்தையும் மாற்றியுள்ளது’ என்று குறிப்பிட்டது. ‘திரு அர்னால்டின் கருத்துக்கள் இன்றைய பெரும்பாலான ஓரியண்டலிஸ்டுகளின் கருத்துகளாகும். அவர்கள் இன்று ஒரு முடிவாக நிர்வாணம் என்பது – மொழியியல் ரீதியாக, தத்துவரீதியாக, தர்க்கரீதியாக எதைக் குறித்தாலும் முற்றழிவைக் குறிக்கவில்லை என்ற அறிதலுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள்’ என்றது.

அமெரிக்காவில், இக்கவிதை வெளியானபின்  வெகு விரைவில், ‘நியூயார்க் டெய்லி ட்ரிப்யூன்’, ஆகஸ்ட் 12, 1879 அன்று, ‘கருப்பொருளின் புதுமை, அதை வெளிப்பாட்டில் வீரியம் மற்றும் அதன் விரிவான பத்திகளின் நேர்த்தியான அழகு கொண்ட வசீகரிக்கும் கவிதை’ என்று அழைத்தது. ஆனால் ‘தி லைட் ஆஃப் ஏசியா’ அங்கு ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது மட்டும் வழிவகுக்கவில்லை. அமோஸ் ப்ரோன்சன் அல்காட் ஒரு அமெரிக்க தத்துவஞானி மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் எழுத்தாளர். டிரான்ஸ்சென்டெண்டல் கிளப் என்று அழைக்கப்படும் ஒரு முன்னணி குழுவின் உறுப்பினர்.  அனைத்து சமயங்களுக்கிடையே ஒருமை இருப்பதாக நம்பிய பாஸ்டன் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்ந்த ஒத்த எண்ணம் கொண்ட ஆண்கள் (மற்றும் சில பெண்கள்) கொண்ட குழு. இந்த இயக்கத்தின் மூன்று பெரிய பெயர்கள் ரால்ப் வால்டோ எமர்சன், ஹென்றி டேவிட் தோரோ மற்றும் வால்ட் விட்மேன். 1879 ஆம் ஆண்டு ஆகஸ்ட் நடுப்பகுதியில், ஆல்காட் தனது நண்பரான வில்லியம் ஹென்றி சானிங்கிடமிருந்து ஒரு கடிதத்தைப் பெறுகிறார், அவர் அர்னால்டின் மாமனார் ஆவார். சானிங் ஆல்காட்டுக்கு ‘ஆசியாவின் ஒளி’யின் ஒரு நகலை அனுப்பினார், ‘கிழக்கையும் மேற்கையும், பண்டைய யுகத்தையும் மற்றும் நவீன யுகத்தையும் ஒன்றிணைக்க, ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையில் பாலமாக சேவை செய்யும் தேசத்தால் இக்கவிதையும் கவியும் நன்கு அறியப்பட்டு, மனதார வரவேற்கப்பட வேண்டும்.’ என்று எழுதினார்.

‘தி லைட் ஆஃப் ஏசியா’ லண்டனில் முதன்முதலில் அறிமுகமான ஒரு மாதத்திற்குள், அல்காட் 1879 ஆகஸ்ட் 19 அன்று பாஸ்டனில் இந்நூலைப் பெற்றார். ஆல்காட்டிலிருந்து, ஆலிவர் வென்டெல் ஹோம்ஸ் கைக்கு சென்றது. ஆலிவர் வெண்டல் ஹோம்ஸ், ஒரு பல்கலை வித்தகர் மற்றும் ‘பாஸ்டன் பிராமின்’ என்ற சொற்றொடரை உருவாக்கியவர், அது அவருக்கே மிகவும் பொருத்தமானதும் கூட. ஹோம்ஸ் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வை வெறும் விமர்சனம் மட்டும் செய்யாமல், நியூயார்க்கில் இருந்து வெளிவரும் மாத இதழான ‘இன்டர்நேஷனல் ரிவியூ’வில் இருபத்தேழு பக்கங்கள் கொண்ட சிறு ஆய்வறிக்கையை எழுதுகிறார்.

1880 ஆம் ஆண்டின் முற்பகுதியில் பாஸ்டனில் இருந்து வெளிவந்த புத்தகத்தின் அமெரிக்க பதிப்பிற்கும் ஹோம்ஸ் தான் காரணம். அந்த நேரத்தில் பிரிட்டிஷ் படைப்புகள் அமெரிக்காவில் பதிப்புரிமையால் பாதுகாக்கப்படவில்லை.நீண்ட அறுபத்தைந்து மாத கால பொருளாதாரச் மந்தநிலையில் இருந்து வெளிவந்த அமெரிக்காவை ‘தி லைட் ஆஃப் ஏசியா’ புயலென வென்றது. முன்னர் எப்போதும் இல்லாத வகையில் செல்வச் செழிப்பும் அபாரமான தனிமனித செல்வக் குவிப்பும் நிகழ்ந்த  ‘வழுக்கும் யுகம்’ என்று அழைக்கப்பட்ட காலகட்டத்தில் அந்த நாடு இருந்த சமயத்தில், புத்தரையும் பௌத்தத்தையும் அமெரிக்காவிற்கு அறிமுகப்படுத்திய புத்தகமாக இது விவரிக்கப்படுகிறது. இந்த கொந்தளிப்பான காலங்களில் ஆசியாவின் ஒளி ஒரு தார்மீக திசையை காட்டுவது போல் இருந்தது.

ஹோம்ஸ் அந்தக் கவிதையை ஒரு அழகான படைப்பு என்று அழைத்தார், மேலும் அதை இவ்விதம் புகழ்ந்து பேசினார்:

“இது தீவிர ஆர்வத்தின் கதையைச் சொல்கிறது, அதில் ஒரு கணமும் பின்னடைவதில்லை; அதன் வர்ணனைகள் ஒரு கவிஞரின் பார்வையுடன், ஒரு நிபுணரின் தேர்ச்சியுடன், ஒரு தேர்ந்த வல்லுநரால் வரையப்பட்டவை; அதன் தொனி மகத்தானது, புதிய ஏற்பாட்டைத் தவிர வேறு எதையும் இதனுடன் ஒப்பிட முடியாது; அது பல்வகை உணர்வுகளால் நிரம்பியுள்ளது, ஓரிடத்தில் அழகாக இருக்கிறது, ஓரிடத்தில் இரக்கத்துடன் இருக்கிறது, ஓரிடத்தில் சிந்தனை மற்றும் நோக்கத்தின் உன்னதமான பகுதிகளாக உயர்கிறது;  அதன் பல்வேறு எண்ணங்கள் மற்றும் உணர்வுகளை அணிசெய்ய மொழி அனைத்திலும் ஊடுருவி, சரளமாக, உயரியதாக, உணர்ச்சிவசப்பட்ட, இசைமையுடன் இருக்கிறது… நாம் பார்த்துக்கொண்டிருக்கும் இக்கவிதையின் வாசகருக்கு முன்னால் உலகின் மிகச்சிறந்த சிறந்த பாத்திரங்களில் ஒன்று உள்ளது. கிழக்கின் குறிப்பிடத்தக்க புராணங்களில் சிலவற்றை உள்ளடக்கிய கதையை, மிகச்செறிவான ஆங்கில மொழிப்புலமையுடன் வலுவான சொற்களில் கூறப்பட்டுள்ளது…”

ஹோம்ஸின் ‘தி லைட் ஆஃப் ஏசியா’ பற்றிய குறிப்பு, அமெரிக்காவில் அர்னால்டின் பெரும் நற்பெயருக்கு வழிவகுத்தது.

ஆலிவர் வென்டெல் ஹோம்ஸ் சீனியர், 1879 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வை அமெரிக்காவின் கவனத்திற்குக் கொண்டுவந்தவர். அதே பெயரைக் கொண்ட அவரது மகன் பின்னர் அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றும் போது அமெரிக்காவின் மிகவும் மரியாதைக்குரிய நீதிபதிகளில் ஒருவராக ஆனார். (மூலம்: விக்கிப்பீடியா)

‘தி லைட் ஆஃப் ஏசியா’ முதன்முதலில் வெளிவந்த ஐந்து மாதங்களுக்குப் பிறகு, அர்னால்டு 5 டிசம்பர் 1879 தேதியிட்ட இந்தக் கடிதத்தை பாங்காக்கிலிருந்து பெற்றார்:

“ஐயா,

எனது தந்தை தனது மதம் சார்ந்த படிப்பிற்கும் அறிதலுக்கும் அதிக நேரத்தை செலவிட்டார், நான் இளமையிலேயே  அரியணைக்கு அழைக்கப்பட்டாலும், அவரைப் போல ஒரு அறிஞராக ஆவதற்கு எனக்கு நேரமில்லை. ஆனால் எனக்கும் புனித நூல்களைப் படிப்பதில் ஆர்வம் உண்டு. . . லண்டனில் உள்ள எனது அமைச்சர் மூலம் எனக்கு தாங்கள் அனுப்பிய “ஆசியாவின் ஒளி” கவிதையின் பிரதிக்கு நன்றி. . . . “ஆசியாவின் ஒளி” என்ற உங்கள் கவிதை, இதுவரை தோன்றிய புத்தமதத்தின் மிகவும் சிறப்பான படைப்பு என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும். . . கிழக்கின் மக்கள் மீதான உங்கள் நன்மதிப்பைப் பற்றிய எனது நல்ல அபிப்பிராயத்தையும், மற்றும் பௌத்தர்கள் அனைவருக்கும் அவர்களின் மதத்திற்கு நீங்கள் ஆற்றி வரும் சேவையைப் பாராட்டுவதற்கும், உங்களை எங்களின் மிக உயர்ந்த கௌரவமாகிய வெள்ளை யானை அணியின் அதிகாரியாக நியமிப்பதில் நான் மிகவும் திருப்தி அடைகிறேன். . . .

தங்கள் உண்மையுள்ள,

(மனு ரெஜியா) சுலாலோங்கோர்ன், அரசர்”

அந்தப் பட்டம் கருப்பு, சிவப்பு மற்றும் பொன்னில் பொறிக்கப்பட்டு இவ்விதம் இருக்கிறது:

சோம்டெல்ச் பிரா பரமேந்தர் மகா சுலாலோங்கோர்ன்,  பிரா சுலா சோம் க்லாவ், சியாமின் அரசர்,  தற்போதைய வம்சத்தின் ஐந்தாவது இறையாண்மை, இது வடக்கு, தெற்கு மற்றும் அதன் சார்பு பிரதேசங்கள்,  லாவோஸ், மலாய்கள் மற்றும் கொரியர்களின் மேலாதிக்கம் செலுத்தும்  சியாமின் தலைநகரான பாங்காக்கில் கட்டான கோசிந்தர் மஹிந்தர் அயுத்தியாவில் ஆட்சியை நிறுவியது. ‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் ஆசிரியரான எட்வின் அர்னால்ட்,அவரைக் கௌரவிக்கும் வகையில் வெள்ளை யானையின் மிக உயர்ந்த அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டும் என்று கருதுகிறோம். பிரபஞ்சத்தின் மிக உயர்ந்த சக்தி அவரைக் காத்து, அவருக்கு மகிழ்ச்சியையும் செழிப்பையும் வழங்கட்டும்! நமது அரண்மனை பரம ராஜா மஹோலார்மில், செவ்வாய் கிழமை சந்திர மாதமான மிகுசிராவின் 11வது தேய்பிறை நாளில், சியாமிய சகாப்தத்தின் 1241 ஆம் ஆண்டு டோ எகாசோக் ஆண்டின் குளிர் காலத்தின் முதல் மாதத்தில், ஐரோப்பிய தேதியான டிசம்பர் 9, 1879ல், கிறிஸ்தவ சகாப்தம், நமது ஆட்சியின் 4046வது நாள் அதாவது 12வது ஆண்டு வழங்கப்படுகிறது.

(மனு ரெஜியா) சுலாலோங்கோர்ன், அரசர்”

இந்த விருது கிறித்துவ மிஷனரிகளின் தாக்குதலுக்கு உள்ளான சியாமின் பண்டைய பௌத்த பாரம்பரியத்திலிருந்து பெறப்பட்ட ‘மென்மையான ஆளுமையை’ முன்னிறுத்துவதற்கான அரசரின் வழியாக இருக்கலாம். அவரது தந்தை ‘தம்மயுத்’ என்ற புதிய பிரிவை நிறுவினார், இது சியாமில் உள்ள பாரம்பரிய பௌத்தத்தின் நவீனமயமாக்கப்பட்ட வழியாகும். மேலும் ‘தி லைட் ஆஃப் ஏசியா’வை அங்கீகரிப்பது சுலாலோன்கார்ன் அவரது தந்தையின் மரபுக்கு அதிக சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதற்கான ஒரு வழியாகும்.

சியாமின் மன்னர்  சுலாலோங்கோர்ன், 1879 ஆம் ஆண்டு ‘தி லைட் ஆஃப் ஆசியா’ வெளியானபோது அதனால் வசீகரிக்கப்பட்டார். அவர் அர்னால்டின் பெரும் அபிமானி ஆனார். (ஆதாரம்: விக்கிபீடியா)

சியாம் மன்னரிடமிருந்து கடிதம் கிடைத்தவுடன், அர்னால்ட் தனது குடும்ப உறுப்பினர்களுடன் 8 டிசம்பர் 1879 அன்று நைல் நதியில் நான்கு மாத பயணத்திற்கு புறப்பட்டார். மன்னர் சுலாலோங்கோர்ன் , ஜூலை 1896 இன் தொடக்கத்தில் ஜாவாவில் உள்ள பரந்த போரோபுதூர் கோயில் வளாகத்திற்குச் சென்று பாங்காக்கிற்கு நிவாரணப் பொருட்களையும் சிலைகளையும் எடுத்துச் சென்றார். 1904 ஆம் ஆண்டில், பாலியிலிருந்து முப்பது ஜாதக கதைகளை தாய் மொழியில் அவரது மொழிபெயர்ப்பை வெளியிட்டார். சியாம் வரலாற்றில் இது ஒரு மைல்கல்லாகும்.

‘தி லைட் ஆஃப் ஏசியா’வின் ஆதாரங்களைக் கண்டறிய பல்வேறு அறிஞர்கள் முயற்சித்ததைப் பற்றி நான் குறிப்பிட்டிருந்தேன். பாலி நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளின் தாக்கம் மற்றும் சமஸ்கிருத நூல்களின் பிரெஞ்சு மொழிபெயர்ப்புகளின் தாக்கத்தை சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.  அர்னால்ட் மிக நன்கு படித்த அசாதாரணமான மனிதர் என்பதையும், இந்தியாவில் சமஸ்கிருதம் கற்றுக்கொள்வதில் தீவிரமான ஈடுபாட்டுடன் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக செலவிட்ட ஒரு மனிதர் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் மேற்கு இந்தியாவில் நிலவிய புத்தரின் வாழ்க்கை குறித்த  வாய்வழி தொன்மங்கள் பற்றிய அறிதலும் அவருக்கு இருந்திருக்கும். ‘ஆசியாவின் ஒளி’க்கு முன், புத்தரை விஷ்ணுவின் ஒன்பதாவது அவதாரமாக சித்தரிக்கும் ‘கீதகோவிந்தத்தை’ அவர் மொழிபெயர்த்திருந்தார். மேலும், சமஸ்கிருதக் கவிதைகள் படிக்கும் ஒரு மாணவராக அர்னால்டுக்கு கிபி முதல் நூற்றாண்டில் சமஸ்கிருதத்தில் இயற்றப்பட்ட சிறந்த காவியமாகிய அஸ்வகோஷாவின் ‘புத்தசரிதா’ தெரிந்திருக்காது என்று நான் எண்ணவில்லை.

1879 இல் ஆசியாவின் ஒளி வெளியானது. பின்னாளில் ‘தேசத்தந்தை’ என்று போற்றப்படும் ஒரு இந்தியருக்கு அப்போது பத்து வயது. அவருக்கு நியமிக்கப்பட்ட அரசியல் வாரிசாக இருக்கும் மற்றொரு இந்தியர் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கிறார். மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி மற்றும் ஜவஹர்லால் நேரு ஆகியோரின் பிறப்புக்கு இடையில் ‘தி லைட் ஆஃப் ஏசியா’ வெளியாகி இருக்கிறது.   1879 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகவும் திறமையான ஆங்கிலக் கவிஞர்களில் ஒருவரான சரோஜினி நாயுடு பிறந்தார். 1896 ஆம் ஆண்டில் அவர் அர்னால்ட் மற்றும் ஆல்ஃபிரட் ஆஸ்டினை ‘அரிய மேதைகள் மற்றும் உண்மையான கவிஞர்கள்’ என்று போற்றியிருக்கிறார். 1905 ஆம் ஆண்டில், அவரது ‘த கோல்டன் த்ரெஷோல்ட்’ என்ற தொகுப்பு லண்டனில் வெளியிடப்பட்டது, அதில் கடைசி கவிதை ‘தாமரை மீது அமர்ந்த புத்தருக்கு’ என்று அழைக்கப்பட்டது. ஆக்ஸ்போர்டு ஆங்கில மறைஞான வரிகள்  புத்தகத்தில்(1917) அக்கவிதை சேர்க்கப்பட்டது. அதே தொகுதியில் “தி லைட் ஆஃப் ஏசியா’வின் எட்டாவது புத்தகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட பகுதிகள் இருந்தன. சரோஜினி நாயுடு மட்டுமே இந்தத் தொகுப்பில் இருக்கும் ஒரே இந்தியர். விசித்திரமாக, அப்போதே இலக்கியத்துக்கான நோபல் பரிசை பெற்றிருந்த ரவீந்திரநாத் தாகூர் கூட அதில் இடம் பெறவில்லை.

1882 செப்டம்பரில் அர்னால்ட் தனது “நம்பிக்கையின் முத்துக்கள்” (Pearls of the Faith) நூலுக்கு முன்னுரை எழுதினார் – இது அல்லாஹ்வின் தொண்ணூற்றொன்பது பெயர்களைப் போற்றும் கவிதை. அவர் அதற்கு முன்னர் அமெரிக்காவிற்கு ஒரு வெற்றிகரமான பயணத்தை முடித்திருந்தார். எனவே இந்த புத்தகம் 1883 இன் ஆரம்பத்தில் இந்த அர்ப்பணிப்புடன் வெளியானது:

“தி லைட் ஆஃப் ஏசியாவின் ஆசிரியரின் அமெரிக்க நண்பர்கள் (தெரிந்தவர்களுக்கும் தெரியாதவர்களுக்கும்)”

நம்பிக்கையின் முத்துக்களின் முன்னுரையில், அர்னால்ட் இவ்விதம் விளக்குகிறார்:

“நான் நீண்டகாலமாக எழுதிவந்த ‘ஓரியண்டல் ட்ரைலாஜி’யை நிறைவு செய்துவிட்டேன். எனது “இந்தியப் பாடல்களின் பாடல்களில்” நான் நுட்பமான மற்றும் அழகான சமஸ்கிருத இந்து இறையியல் கவிதைகளை ஆங்கிலக் கவிதைகளில் மொழியாக்கம் செய்ய முயன்றேன். எனது “ஆசியாவின் ஒளி”யில் புத்த மதத்தை நிறுவிய அந்த மாபெரும் ஹிந்து இளவரசரின் மென்மையான மற்றும் தொலைநோக்கு கோட்பாடுகளை வெளிப்படுத்தினேன், மற்றும் அவரது கதையை விவரித்தேன். இதில் புகழ்பெற்ற அரேபியாவின் நபியைப் பின்பற்றுபவர்களின் சில எண்ணங்களையும் நம்பிக்கைகளையும், இஸ்லாத்தின் எளிய, நம்பகத்தன்மை கொண்ட, அதேசமயம் அதன் சொந்தக் கண்ணோட்டத்தில்- முன்வைக்க முயற்சித்திருக்கிறேன்.”

இதுவே ‘ஆசியாவின் ஒளி’ ஏன் எழுதப்பட்டது என்பதற்கான மிக நேரடியான விளக்கம் ஆகும். அர்னால்ட் தனது முப்படைப்பு தொகுப்புக்கான “ஹிந்து” தேர்வாக கீதகோவிந்தை எடுத்துக்கொள்வது மற்றும் இஸ்லாத்தை ஒரு “இந்திய” மதமாக கருதுவது சுவாரஸ்யமானது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது ‘தி சாங் செலஸ்டியல்’ அல்லது பகவத் கீதை வெளியிடப்பட்டது. இது படித்த இந்து சமூகங்கள் மத்தியில் அவரை இன்னும் அதிக புகழ் பெறச் செய்தது. இந்த புத்தகம், ‘தி லைட் ஆஃப் ஏசியா’ போன்றது, அவரை அழியாப் புகழ் கொண்டவராக்கும், ஆனால் அர்னால்ட் அதை தனது முப்படைப்பு தொகுப்பின் ஒரு பகுதியாக கருதவில்லை.

‘ஆசியாவின் ஒளி’ எழுதப்பட்டதற்கான மற்றொரு காரணம் பல ஆண்டுகளுக்குப் பிறகு 1942 இல் அர்னால்டின் மகனால் வெளிப்படுத்தப்பட்டது. அதற்குள் ஜூலியன் அர்னால்ட் எழுபத்தி ஒன்பது வயதை அடைந்திருந்தார். மற்றும் பல தசாப்தங்களாக அவர் சந்தித்த பிரபலமான நபர்களின் நினைவுத் தொகுப்பை எழுதியிருந்தார். அவரைப் பொறுத்தவரை, அவரது தந்தை ரஷ்யாவிற்கும் துருக்கிக்கும் இடையேயான மோதலில் ஆங்கிலேயர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதிவிட்டு மீண்டபிறகு அந்த அரசியலில் இருந்து விடுபடவும், அவரது மூளையை இலகுவாக்கவும், ‘தி லைட் ஆஃப் ஏசியாவை’ எழுதினார். ஜூலியன் அர்னால்ட் இவ்விதம் நினைவு கூர்கிறார்:

“ஒரு போர்க்கால பத்திரிகையாளரின் ஆர்வங்களில் இருந்து வித்தியாசமான இலக்கியப் பணிகளைத் தேர்ந்தெடுப்பது கடினமாக இருக்கும். புத்தரின் ஆன்மீகத்தின் தெளிவான, அற்புதமான, வண்ணமயமான விளக்கம் காவிய வடிவில் எழுதப்பட்டிருக்கிறது. ஒரு மலை நீரோட்டத்தைப் போல அவர் தனது நாட்டின் பாதையில் இருந்த அனைத்து தடைகளையும் துடைக்க உதவினார் – பின்னர் ஒரு கவிஞரின் மனநிலைக்கு மாறினார். எண்ணக்குளங்களில் நித்திய குன்றுகள் பிரதிபலிக்கும் ஆழ்ந்த அமைதியை உருவாக்கும் நிலைகளுக்குச் சென்றார்.ஓய்வை விரும்பாத அவர், அறிவார்ந்த ஆற்றலுடன் வேண்டுமென்றே தனது அன்றாட வேலைகளுக்கு ஒரு எதிர்-சமநிலையைத் தேர்ந்தெடுத்தார். அது அவரை எளிதாக்கியது.”

ஜூலியன் அர்னால்ட் தனது தந்தை அழியாத கவிதையை எவ்வாறு எழுதினார் என்பதை நினைவுகூர்கிறார்:

“‘ஆசியாவின் ஒளி’யை எழுதும் முறையும் அதை அவர் தொடங்குவதற்கு தேர்ந்தெடுத்த நேரத்தைப் போலவே குறிப்பிடத்தக்கது.அவர் ரயிலிலோ அல்லது வண்டியிலோ அல்லது அவர் எங்கிருந்தாலும், சில வரிகள்  அவருக்குத் தோன்றும்போது, ​​அவர் அப்போது படித்துக் கொண்டிருந்த செய்தித்தாள்களின் ஓரங்கள் அல்லது உறைகளின் உட்புறங்கள் போன்ற ஏதேனும் ஒரு துண்டு காகிதத்தைப் பயன்படுத்தி எழுதுவார்.இரவு உணவின் போது அவரது உணவுப்பட்டியலின் பின்புறம். . . வீட்டில், மாலை வேளைகளில், தன்னைச் சுற்றி நடக்கும் உரையாடல்களைக் கண்டு மனம் கலையாமல் நீண்ட பத்திகளை எழுதுவார்.

அந்த துண்டு துண்டான எழுத்துக்களை அவர் “செங்கல் குவியல்” என்று ஒரு புத்தகமாகச் சேகரித்தார். மேலும் அவர் அதன் உள்ளடக்கங்களைத் திருத்தி, விரிவுபடுத்தி, மெருகூட்டிய பிறகு, முழுவதையும் மற்றொரு புத்தகமாக நகலெடுத்தார்.அந்த இறுதி கையெழுத்துப் பிரதி அவரது வெளியீட்டாளர்களுக்கு ‘ஆசியாவின் ஒளி’ என்று நாம் அறிந்த இணக்கமான அழகிய கவிதையாக அனுப்பப்பட்டது.”

தமிழாக்கம் சுபஸ்ரீ

ஆசிய ஜோதி டிஜிட்டல் லைப்ரரியில் வாசிக்க

Light Of Asiya வாசிக்க

ஜெய்ராம் ரமேஷ், இந்திரா காந்தி- கடிதங்கள்

முந்தைய கட்டுரைதிருச்செந்தாழை கதைகள் பற்றி… 
அடுத்த கட்டுரைவிழா- ஒரு கோரிக்கை