செந்தில் ஜெகன்நாதன்: உணர்வுகளின் புனைவுலகம்- இரம்யா

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதனின் புனைவுலகம் உணர்வுகளால் நிரம்பித் ததும்புபவை. நுண்மையாக உணர்வுகளை ஊடுருவிப் பார்க்கும் திறத்தினால் அவை என் மனதிற்கு அணுக்கமானவையாக அமைந்தது.

ஒவ்வொரு ஆணுக்கும் தந்தை எனும் சித்திரம் எத்துனை முக்கியமான கதாப்பாத்திரமாகத் திகழ்கிறார் என்றே இந்தக் கதைகளின் வழி பார்த்து நிற்கிறேன். அப்பா பிரதானமாக இல்லாத கதைகளிலும் கூட அவரின் ஏதோ சுவடுகளும் எச்சங்களுமென திகழ்ந்து கொண்டே இருப்பதான பிரமையை ஏற்படுத்துகிறது.

”எவ்வம்” சிறுகதையில் பச்சை என்ற சிறுவனின் வழி திரவியம் என்ற தந்தையைப் பற்றிய சித்திரம் கதை முழுவதுமாக வருகிறது. குழந்தைப் பருவத்தில் நாம் மிகவும் அணுகி அறியக்கூடிய மனித உறவுகள் தாய் தந்தையர் மட்டுமே. எத்தனை கொடூரர்களாக அமைந்துவிட்டாலும் ஒரு குழந்தையால் எளிதில் அவர்களை வெறுத்துவிட முடியாது. இவர்களுடன் சேர்ந்து வாழ்வதை விட பிரிந்து தனித்திருப்பதே நிம்மதியை அளிக்கக் கூடியது என்று ஒரு குழந்தை மனம் முடிவெடுக்கும் தருணம் உச்சமானது. அது நோக்கி அது கடந்து வந்த வலி மிகுந்த பாதையை “எவ்வம்” சிறுகதை கூறுகிறது. பச்சை பேருந்தில் ஏறி பார்த்திருக்கும் அந்தத் தருணம் என் பதின்மூன்று வயதை மீட்டிக் காணித்தது. மிக தீர்க்கமாக விடுதியில் தங்கிக் கொள்ள முடிவெடுத்த ஒரு தருணம். பின் எப்போதும் வீட்டில் நான் இருக்கவே இல்லை. அந்த முடிவை நோக்கி நான் கடந்து வந்த பாதையின் வலி கொடியது. குழந்தைகளுக்கென ஒரு குழந்தைமை மனம் இருக்கிறது. அதை மிக விரைவிலேயே போக்கி பெரிய மனிதத்தனமையை இந்த சமூகம் அளிப்பது ஊழ் என்பதைத்தவிர வேறு எந்த வார்த்தையால் இட்டு நிரப்ப முடியும்? பச்சையின் அந்த ஊழை ஆசிரியர் மிக வலிமையாகக் கடத்தியிருக்கிறார்.

இத்தனைக்குப் பிறகும் நான் ஒரு போதும் என் பெற்றோரை நான் வெறுத்ததில்லை. அன்பை மட்டுமாவது தருவார்கள் என்று முதிர்வடையும் வரை காத்து நின்றிருந்திருக்கிறேன். அதையும் எதிர்பாராத முதிர்ச்சி வந்த பிறகு அதையும் கடந்துவிட்டேன். பச்சை தன் தந்தையைப் பற்றிக் கூறும்போது அவர் கடந்து வந்த வாழ்க்கை, வலிகளையும் சேர்த்தே நினைவுகூர்கிறான். குடித்து விட்டு அடிக்கும் அப்பா, தன் வலிகளையும் வேதனைகளையும் கனவுகளையும் புரிந்து கொள்ளாத அப்பா, தன் வாழ்க்கைக்குத் துணை நிற்காத அப்பா, நல்ல கணவனாக இல்லாத அப்பா, நேர்மையாக இல்லாத அப்பா, கவுரவமான தொழில் நடத்தாத அப்பா என அத்தனை எதிர்மறை பிம்பங்களுக்கும் மத்தியில் அன்பை அடியாழத்தில் பச்சை எதிர்பாராமல் இல்லை. ஒரு தருணமாவது தான் எதிர்பார்க்கும் அந்தத் தந்தையைக் காண ஆவலுடன் தேடியலையும் குழந்தை மனம் நம்மை ஏக்கமுறச் செய்கிறது.

ஜெ-வின் இந்த வரிகளைக் கொண்டு இந்தக் கதையை நிறைவு செய்து கொண்டேன். //தந்தைமையும் தாய்மையும் எழுந்த தருணங்களை நினைவில் கொள்வதற்கு இலாது, தன் பெற்றோரை மானுடர்களாக மட்டுமே உணரக்கூடிய தீயூழ் கொண்டவர்கள் சிலரே. அவர்கள் அத்தெய்வங்களால் கைவிடப்பட்ட மனிதர்கள். அத்தெய்வங்களின் இடத்தில் அவர்கள் பிரிதொன்றை வைத்தாக வேண்டும். அதற்கென புதிய தெய்வங்களைக் கண்டு கொள்கிறார்கள். அவற்றுள் சில அருளும் தெய்வங்கள், சில மருட்டி ஆட்படுத்தும் கொடிய தெய்வங்கள்// பச்சை அப்படியான தெய்வங்களை நோக்கிய பயணத்தில் என் புனைவுகளில் என்னைப் போலவே அலைந்து கொண்டிருப்பான்.

”அன்பின் நிழல்” சொல்வதும் கூட ஒரு குடிகாரத்தந்தையைப் பற்றி தான். ஆனாலும் ஏன் அந்தத் தந்தை அப்படி இருக்கிறார் என்பதை கரிசணத்தோடு உணரக்கூடிய ஒரு சிறுவனாக, இளைஞனாக கதை சொல்லி இருக்கிறான். //`அவர் இப்படி இருந்து எல்லோரையும் கஷ்டப்படுத்துவதற்கு, செத்தேபோகலாம்’ என்று கூடத் தோன்றும்.// என்று நினைக்கும் ஓர் மகன் தன் தந்தையில் இருக்கும் ஒரு குழந்தைமையை கண்டறியும் ஒரு தருணத்தை நோக்கி கதை நகருகிறது. பிள்ளைகள் பெற்றோரின் தொடுதலை ஸ்பரிசத்தை எதிர்பார்த்திருப்பவை என பல தந்தைகள் உணர்வதேயில்லை. என் நினைவறிந்து என் தந்தையை நான் தொட்டதே இல்லை. ஒரு முறை கூட இறுக்கமாக அணைத்துக் கொண்டதில்லை. திருமணச் சடங்குகள் முடிந்து வீட்டிலிருந்து பிரியும் ஒரு தருவாயில் அவர் கைகளைத் தொட்டேன். அது குளிர்ந்திருந்தது. அவ்வளவு தான் நினைவுகள். முதல் முறையாக ஆசிரியர் ஜெயமோகன் தோளோடு தோள் சேர்த்து அணைத்துக் கொண்ட போது கலங்கியதாக, மிகவும் ஆழமான உணர்வு நிலைக்குச் சென்றதாக செந்தில் கூறினார். ஒரு ஆணுக்கு இப்படியென்றால் பெண்கள் இன்னும் தொடப்படாதவர்கள் என்று தோன்றும் எனக்கு. முதல் முறை சந்திப்பின் போது ஜெ தோள் சேர்த்து அணைத்துக் கொண்டபோது நானும் கலங்கிப் போனேன். அணைத்துக் கொள்ளப்படாத குழந்தைகளுக்கு சிறு தொடுதலின் உணர்வு அளிக்கக் கூடியதன் ஆழம் சொல்லி விளங்க வைக்க முடியாது. //பயமாக இருந்தாலும் தயங்கியபடியே அப்பாவின் நெற்றியில் முத்தமிட்டேன். இந்த இருபத்தெட்டு வயதில் நினைவுக்குத் தெரிந்து அப்பாவுக்கு நான் கொடுத்த ஒரே முத்தம் இதுதான்.// என்ற வரிகள் கலங்கச் செய்தது. அந்த உணர்வுத் தருணத்தை நோக்கி கதை அழைத்திச் செல்லும் பாதை இனிமையானது.

நாய் பற்றிய எந்த சிறுகதையும் எனக்கு ஜெயகாந்தனின் ”நிக்கி” சிறுகதையை நினைவுபடுத்தக் கூடியது. எந்த நாயையும் நிக்கியின் வாழ்க்கைப் பயணத்தை ஓட்டியே புரிந்து கொள்ள முற்படுவேன். இப்போழுதெல்லாம் “பின் தொடரும் பிரம்மம்” என்ற வரியும் கருப்பனின் நினைவும் சேர்ந்து தொற்றிக் கொள்கிறது. ”நேசன்” சிறுகதையில் ஒரு நாயின் மீது வெறுப்பு கொண்டவன் அது உடையும் புள்ளியை நோக்கி பயணப்படுவதாக நீள்கிறது.

//முதன்முறையாக ஒரு நாயைத் தொட்டுத் தூக்கினேன். எடையற்று முறுக்கிப் போட்ட வெல்வெட்  துணியைப் போல இருந்தது.. அதன் மெல்லிய சூடான தேகம் பட்டவுடன் என் ரோமங்கள் எல்லாம் சிலிர்த்து நின்றன. சுமை இறக்கி வைத்த கரங்களில் தோன்றும் எடையற்ற தன்மையால் கன்னத்தில் நீர்த்துளி வழுக்கியது.. ஒன்றரை அடியில் ஒரு நாலுகால் ஜீவன் “ஐயோ தெய்வமே. இதுகிட்டயா நான் இவ்வளவு நாள் பகையோட இருந்தேன்?” முகம் விரிந்து எனக்குள் சிரிப்பாக வந்தது.// என்ற தருணத்தை நோக்கி கதைசொல்லி பயணித்து அதை உரியவர்களிடம் சேர்க்கும் எண்ணத்தை கை கொள்ளும் உணர்வுத் தருணத்தை நோக்கி அழைத்துச் செல்கிறார்.

நிஜமாகவே முத்தங்களோ அணைப்புகளோ அத்துனை சுலபமானது இல்லை. விரல் விட்டு எண்ணக்கூடிய முத்தத் தருணங்களை கதை சொல்லி சொல்லும்போது என்னையுங்கூட அங்கு பொருத்திப் பார்த்துக் கொண்டேன். அதுவும் காமத்துடன் கூடிய முத்தத் தருணம் பருவ வயதுகளில் பல வகையான கற்பனைகளைக் கொண்டது. மிக எளிதாகக் கிடைத்துவிடக் கூடியதாக அவற்றைப் பேசுபவர்களைப் பார்த்தால் எப்போதுமே ஆச்சரியமாகத்தான் இருக்கும். அவை புனைவுக் கதைகள் போல சுவாரசியமாக கல்லூரிகளில் பேசிக் கொள்வோம். என்றோ முதிர்ந்த ஒரு தருணத்தில் எனக்குக் கிடைத்த அந்த முதல் முத்த தருணத்தை “முத்தத்துக்கு” சிறுகதை அசை போட வைத்தது. உண்மையில் உடலெல்லாம் கிட்டித்துப் போய் வெல வெலத்து அதன் பின் தூக்கமில்லாது அலைந்து திரிந்து அந்த முதல் முத்தததை பல மாதங்களாக சுமந்து திரிந்தேன்.

தனக்குக் கிடைத்த முத்தங்களின் விவரணைகளை கதை சொல்லி பல வகைகளில் சொன்ன விதம் மிகப் பிடித்திருந்தது. சிறுவயதில் சாக்லேட் சுவையில் இருக்கும் முத்தம், மாம்பழ சுவையோடு கூடிய அத்தாச்சி குடுத்த முத்தம் என்பதிலிருந்து காதலிக்குக் கொடுக்கப் போகும் அவளுக்குப் பிடித்த பூரி மசால் சுவையுடைய முத்தம் வரை அவன் கனவுகளில் நீள்கிறது. அந்த முதல் முத்தத் தருணம் நிகழ்ந்த பின்னான அவனின் நினைவுகள் மிகப் பிடித்திருந்தது.

//இது தான் என் முதல் முத்தத்தின் வாசனை எனத் தோன்றியது! அப்பிக் கொண்டால் சில மணிகளில் அழியக்கூடிய பவுடர்தான் ஒரு முத்தத்தால் இனி எப்போதும் அழியாமல் நினைவில் படிந்திருக்கப் போகிறது.// என்ற வரிகளில் தீற்றல் சிறுகதையை நினைத்துக் கொண்டேன். இனிமையான நினைவுகளை பத்திரப்படுத்தும் எந்த ஒன்றும் தீற்றல் கதையின் கவிதைத்தருணத்தையே எனக்கு நினைவு படுத்துகிறது. இந்த “முத்தத்துக்கு” சிறுகதை வந்து சேர்ந்திருப்பதும் அப்படியான கவிதைத் தருணத்தைத் தான். இது ஒரு சாமனியனின் கதையல்ல என்று தோன்றியது. நுண்மையானவனின் கதை. வாழ்வை போராட்டங்களினூடே எதிர்கொண்டு ஒரு காமத்துடன் கூடிய முத்தத்திற்காக நாற்பது வயது வரை காத்திருந்து சுவைத்து அதன் நினைவுகளை தீற்றலாக்கி ரசித்திருப்பவனின் கதை. அவனைப் பிடித்திருந்தது.

”ஆடிஷன்” சிறுகதையில் பிரிந்து போன காதலி கொணர்ந்து அந்தக் காதலன் முன் நிறுத்துவது அவள் அவனில் ரசித்திருந்த பிம்பத்தையே என்று தோன்றியது. பிரிந்து போய்விட்ட காதல்கள் தான் சேர்ந்திருப்பதை விட மிக ஆழமாக நினைவுகளால் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. அப்படி பிரிந்து போன அவர்கள் இருவருக்குமிடையில் அங்கு மெளனமாக நிகழ்ந்து கொண்டிருக்கும் காதலின் சாட்சியாக குழந்தை நடித்துக் கொண்டிருக்கிறது. “அந்த அறையில் அதைவிடவும் தத்ரூபமான நடிப்பை நடித்துக்கொண்டிருந்தார்கள் நந்தனும் அனிதாவும்!” என்ற வரிகளில் அவர் வந்து சேர்ந்த கவிதையின் புள்ளி மிகப் பிடித்திருந்தது.

“நித்தியமானவன்”  வாழ்வை நோக்கி நித்தியமாக வாழ்த்துடிக்கும் ஒவ்வொரு கலைஞனும் தான் என்று உணரக் கூடிய கதை. ”பிறந்த நாளை நினைவில் வைத்துக் கொள்ளும் அளவிற்கு காலம் ஒன்றும் நட்புடன் இல்லை என்னிடம்” என்ற சித்திரத்துடனான ஒரு கலைஞனின் வாழ்விலிருந்து அவன் தன்னை நித்தியமானவனாக உணரக்கூடிய புள்ளியை நோக்கி கதை நகர்கிறது.

”எல்லோர் நினைவிலும் வாழ்கிறவனுக்கு இறப்பு ஏது?உண்மையில் இறப்பு என்பது ஒரு வாழ்க்கை கொண்டவனுக்கு தானே. உயிரை தன் கலைக்குள் வைத்திருப்பவனுக்கு மரணம் இல்லை தானே?” என்ற வரிகள் தான் கலைஞனை தான் இதுகாறும் பயணப்பட்டு வரும் துன்பமான பாதையை நோக்கி மேலும் உந்தித் தள்ளுபவை. தன் கலையின் வழி தான் நித்தியத்துக்கும் வாழ முடியும் என்று ஒரு கலைஞன் உணரும் போது அவன் திரும்புதலில்லாத கலைப் பாதையில் பயணப்பட முடிவெடுக்கிறான். அந்த முனையை அடைந்து விட்ட பிறகு அவனுக்கு பணமோ, புகழோ ஒரு பொருட்டல்ல என்று தோன்றுகிறது. அதைத் தேடிக் கொண்டு உழல்பவர்கள் அந்த முனையை கண்டடையவில்லை அல்லது தன்னை நித்தியமானவனாக இன்னும் உணரவில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது.

”ஜெயிக்கனும்ங்கிற வெறிய அவமானத்தையும் பசியையும் விட வேற ஏதும் கொடுக்க முடியாது” என்ற வரிகள் கதையின் ஆரம்பத்தில் வருகிறது. அது நிதர்சனமான உண்மை தான். ஆனால் கலைஞன் தன்னை நித்தியமானவனாக உணர்வதற்கு முன்பு வரையில் இந்த உந்து சக்திகள் அவனை உந்தித் தள்ளலாம். ஆனால் அவன் தன்னை உணர்ந்தபின் ஒருபோதும் கலைப்பாதையிலிருந்து அவனுக்கு மீட்பில்லை. அந்தப் புள்ளியை வந்து தொட்டவிதம் மிகப் பிடித்திருந்தது. எல்லோர் நினைவிலும் அப்படி நித்தியமாக வாழும் கலைஞர்களை இந்தக் கதையில் நினைத்துக் கொண்டேன்.

”காகளம்” ஒரு துரோகம் பொதிந்த கதை. துரோகம் செய்பவன் மேல் ஒட்டுமொத்த எதிர்மறை பிம்பமும் ஏறி நின்றிருக்க வேண்டுமென அவசியமில்லை. ”காம்போடு இருக்கும் ஒவ்வொரு பூ மீது அடி வைக்கும்போதும் உள்ளங்காலில் கோழிக்குஞ்சு மிதிபடும் பதற்றத்தை நெஞ்சம் உருவாக்கியதால் கவனத்தோடு கூட்டத்திற்குள் எட்டு வைத்தேன்.” என்ற மென்மையின் பிம்பத்தையும் அவன் கொண்டிருக்கலாம். துரோகம் இழைத்தவனின் பார்வையிலிருந்து சொல்லப்படக் கூடிய ஒரு கதை சொல்லல். முதலாளியைப் பற்றி, முதலாளிக்கும் தனக்குமான உறவைப் பற்றிய சித்திரமாக “காகளம்” சிறுகதை நீள்கிறது. ”தாயை ஓடித் தொடுவதற்காகவே தாயைப் பார்த்து முதலடி நடைபழகும் குழந்தையைப் போல முதலாளியைப் பார்த்தே எல்லாவற்றையும் கற்றுக்கொண்டேன்.” என்று நெகிழ்ச்சி பொங்க கதைசொல்லி முதலாளி எனும் சித்திரத்தை நம்முள் பதிக்கிறார். அதன் பின் மனித மனத்தின் நொய்மை, பாவங்கள்,  நம்பிக்கை துரோகம் என தன்னையே கூராக்கி பிளந்து காட்டும் ஒரு சித்திரத்தை கதைசொல்லி அளிக்கிறான்.

”தூரம் போகப் போக ஒலி குறையும்தானே? ஆனால் முன்னே நடக்க நடக்கக் கிளாரினெட் இன்னும் வளர்த்தியான ஒலியாகக் காதருகே கேட்டது.” என்ற கதையின் இறுதி வரியைப் போலவே கதை முழுவதுமாக காகளம் போல எக்காளமிட்டு நினைவுகள் முழங்கிக் கொண்டிருக்கிறது. துரோகமாக, உணர்வுகளாக, நினைவுகளாக அவனில் அது தூரம் போகப் போக ஒலி அதிகரித்துக் கொண்டே வதைக்கிறது.

”மழைக்கண்” என் மனதிற்கு அணுக்கமான கதை. ஒரு சிறுவனின் கண்கள் வழியே தான் கதை அம்மா என்ற பிம்பத்தினை நமக்கு அறிமுகம் செய்கிறது. அந்தப் பாத்திரம் கனம் நிறைந்ததாக நம்மை நிறைக்கிறது. பருத்தி விதைப்பு என் பாட்டியை ஞாபகப் படுத்தியது. சிறு வயதில் பருத்திக் கொட்டை ஆட்டுவது, அந்த மணம் நிறைந்த எங்கள் வீடு, பருத்தி வெடிப்புக்கு சிண்டு கட்டிக் கொண்டு சிறுவயதில் ஓடி ஆடித்திரிந்தது என பல நினைவுகள் பருத்தியோடு எனக்கு உணடு. என் பாட்டி இந்தக் கதையில் வரும் அம்மாவைப் போலானவள். விவசாயக் குடும்பத்தினை கடந்து வந்த பலரும் அதன் பெண்களை தொடர்பு படுத்திக் கொள்ளக் கூடிய கதை. அத்தனை உடல் வலியையும் மன வலியையும் உடைத்து அவள் வெறி கொண்டு அழும் ஒரு தருணத்தை உணர்ச்சிகரமாகக் கடத்தியிருந்தார் எழுத்தாளர். கதையின் போக்கில் மயங்கி நிற்கும் ஒரு தருணத்தில் அதன் இறுதி கலங்கடிக்கிறது.

//“சுத்தமான பருத்திப் பொடவ பாப்பா” என்று அவரிடம் பதில் சொன்னார். பிறந்த குழந்தையின் தலைமுடியைப் போல மிகுந்த மென்மையுடன் இருந்த புடவைகளைத் தொட்டுத் தடவிப் பார்த்துக்கொண்டிருந்த அம்மா, எதையோ நினைத்து புடவையில் முகம் புதைத்து கதறி அழத்தொடங்கினாள்.”// கதையில் முடிவு என்பதில்லை. அது உணர்வாக நீட்டி முழக்கி மனதை நிறைகிறது.

இந்த எட்டு கதைகளையும் எழுத்தாளர் செந்தில் ஜெகன்நாதன் அவர்கள்  உணர்வுகளையே மையமாக்கி எழுதியிருக்கிறார் என்று தோன்றியது. அந்தச் சிறுவனின்/இளைஞனின் புனைவுலகத்தின் வழி செல்லக்கூடிய நிலம், மனிதர்கள், உறவுகள் உணர்வுகளால் நிரம்பித் ததும்புகிறது. தான் மட்டுமே சொல்ல முடிந்த சில அனுபவங்களையும், அறிதல்களையும், வாழ்க்கையையும் எழுத்தின் வழி காணித்திருக்கிறார். மழைக்கண் சிறுகதையில் வரும் பருத்தி விதைப்பு பற்றிய தகவல்கள், நித்தியமானவன் சிறுகதையில் பிணமாக நடித்த பின் கேமராவைப் பார்த்து மூன்று முறை சிரிக்கும் சடங்கு, காகளம் சிறுகதையில் வியாபாரத்தைப் பற்றிய தகவல்கள் என யாவுமே தன் அனுபவத்தால் அறிதல்களால் அவர் மட்டுமே கடத்தக் கூடிய உலகம் என்பதை விளங்கச் செய்கிறது. மனித உணர்வுகளையே மையமாகக் கொண்டு தன் உணர்வுகளாலேயெ கதை சொல்லும் செந்திலின் புனைவுலகம் மனதிற்கு அணுக்கமாகியிருக்கிறது.

-இரம்யா

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

 

முந்தைய கட்டுரைதம்மம் தந்தவன் -லோகமாதேவி
அடுத்த கட்டுரைதூர்வை எனும் நாவல்