விஷ்ணுபுரம் விழாவை ஒட்டி விருந்தினர்களாகக் கலந்துகொள்பவர்களைப் பற்றி விக்கிப்பீடியா பக்கங்களை உருவாக்கினேன். தகவல்களை எல்லாம் அவர்களிடமே கேட்டு பதிவுசெய்தேன். மிகக்குறைந்தபட்ச தகவல்கள். அவர்களின் பெயர், ஊர், பிறந்த தேதி, எழுதிய நூல்கள். அவ்வளவுதான். இரண்டு மணிநேரத்தில் நந்தகுமார் என்ற ஆசாமி அத்தனை பதிவுகளையும் அழித்துவிட்டிருக்கிறார். விக்கிப்பீடியா அந்தச் செய்தியை பதிவு செய்திருக்கிறது. அவை ‘ஆதாரமில்லாத’ செய்திகளாம். சேர்த்துவைத்த செய்திகளும் அழிந்துவிட்டன.
கூகிளில் முதலில் வருவதனால், ஓர் உலகளாவிய அமைப்பு என்பதனால் விக்கிப்பீடியா ஒரு பெரிய வாய்ப்பு. அதை இவரைப்போன்றவர்கள் வந்தமர்ந்து திட்டமிட்டு அழிக்கிறார்கள். நான் என்பெயரில் பதிவிடுவதில்லை. பதிவிட்ட ஐந்து நிமிடங்களுக்குள் திரண்டு வந்து அழித்துவிடுவார்கள். இப்போது விஷ்ணுபுரம் விழாவை வைத்தே கண்டுபிடித்து அழிக்கிறார்கள்.
தமிழ் அறிவியக்கத்துக்கு இவர்களால் எந்தப் பயனுமில்லை. ஆனால் தீராக்காழ்ப்புடன் அழிவுப்பணிகளைச் செய்துகொண்டே இருக்கிறார்கள். தமிழகத்திற்கே உரிய மனநோய் போலும் இது