விஷ்ணுபுரம் வாசிப்பு, கடிதம்

விஷ்ணுபுரம் மின்னூல்- வாங்க

விஷ்ணுபுரம் நூல் வாங்க
https://vishnupuram.com/  நாவல் பற்றிய பார்வைகளுக்காக

விஷ்ணுபுரம் பதிப்பகம் இணையதளம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நேற்றைய தினம் முழுவதும் வெறுமையாக இருந்தது. குழப்பமான கலவை உணர்ச்சிகள். வாழ்வின் அர்த்தமின்மை மிகப்பெரும் பிரும்மாண்டமாக முன் உயர்ந்து நிற்கிறது. அதை தொட்டு தடவி உலவக் கூடிய புலன்கள் கொண்டும் அதனுள் முயங்க முடியவில்லை.

ஆனால் மனம் நுட்பமாக விழித்திருந்தது. இந்த நிலை ஏற்படும் பொழுது அதனுள் இருந்துகொண்டே வெளியில் இருந்தும் பார்க்கிறேன். ஒரே நேரத்தில் இறந்தகாலமும் நிகழ்காலமும் நெருக்கிக் கொண்டு நிற்பது போல.

அதற்கு முந்திய நாள் தான் விஷ்னுபுரம் வாசித்து முடித்தேன். இதை ஏன் முன்னமே வாசிக்கவில்லை என்ற எண்ணம் தான் முதலில் தோன்றியது.

நவீன இலக்கியத்துடனான என்னுயை பரிச்சியம் துனைப்பாட பகுதிகளுடன் ஏற்பட்டது.  புதுமைப்பித்தனின் ஒருநாள் கழிந்தது தான் நான் முதலில் வாசித்த கதை என்ற ஞாபகம். அது தான் இன்றும் அழுத்தமாக பதிந்துள்ளது. பத்தாவது பொதுத்தேர்வில் பத்து மதிப்பெண் கேள்விக்கு ஒரு கதை எழுத சொல்லியிருந்தார்கள்.

அந்த வயதில் அது எனக்கு திருப்தியான கதையாக இருந்தது. எனக்கு தமிழில் நல்ல மதிப்பெண்னும் கிடைத்திருந்தது. அதற்குபின் தொடர்ச்சியாக நாவல்களை வாசித்தேன்.பெரியம்மா வீட்டு அண்ணனிடம் புத்தகங்களின் சேகரிப்பு இருந்தது. தீராநதியின் மூன்று வருட சேகரிப்பு இருந்தது.

தீராநதியில் சுந்தர ராமாசாமியின் கேள்வி பதில் வாசித்து சுந்தர ராமசாமியின்  வாசகனாகிவிட்டேன். பத்தாவது விடுமுறையில் காந்தியின் சத்திய சோதனை, தொ. பா வின் அழகர் கோவில், குடியரசு இதழ் தொகுப்புகளை வாசித்தேன். இன்றும் பசுமையான வாசிப்புகளாகவே அவை உள்ளன.

ஜீ. நாகராஜனின் ‘ நாளை மற்றொரு நாளே’ , அசோகமித்திரனின் ‘தண்ணீர்’, சுந்தர ராமசாமியின் ‘ஜே. ஜே சில குறிப்புகள்’, எம்டிவீயின் ‘ நாலுகட்டு’ தமிழ் மொழிபெயர்ப்பு என தொடர்ச்சியாக வாசித்தேன். மீஸான் கற்களும் பாத்துமாவின் ஆடும் அப்பொழுதுதான் வாசித்தேன்.

அதைத் தொடர்ந்து தமிழில் எழுதும் எழுத்தாளர்களை தொடர்ச்சியாக வாசித்தேன். என்ன உந்தேசத்தில் வாசித்தேன் எனத் தெரியவில்லை. லா.ச.ரா, நாஞ்சில் நாடன், அசோகமித்திரன் என கணக்கு வழக்கில்லாமல் கிடைப்பதை வாசித்தேன்.

உங்களுடைய எந்த கதைகளும் எனக்கு அறிமுகமாகவில்லை. அண்ணன் மார்கஸியவாதி. உங்கள் மேல் தீராத வெறுப்பில் இருந்தார். எந்த பத்திரிக்கையிலும் உங்களைப் பற்றிய அறிமுகம் கிடைக்கவில்லை. தீராநதியில் ஒரு பேட்டி வந்திருந்தது.

ஒரு எதிர்மறையான அறிமுகம் ஏற்பட்டிருந்த நிலையில் தான் கல்லூரியில் என்னிடமிருந்த யுவன் சந்திரசேகரின் பெரும் கதைத் தொகுப்பை வாங்கிக்கொண்டு ப.சிங்காரத்தின் இரண்டு நாவல்களின் தொகுப்பைுயம் இரவு நாவலையும் ஜெயமோகன் குறுநாவல்கள் தொகுப்பையும் யூஜி படித்த நன்பன் கொடுத்தான்.

ப. சிங்காரத்தின் மொழி முகப்பிலே என் பின் மண்டையில் அடித்து வெளியேற்றியது. குறுநாவல்கள் ஏனோ அப்பொழுது என்னை கவரவில்லை. இரவை வாசித்தேன். மிக எளிமையாக  சுவாரஸ்யமாக இருந்தது. சுவாரஸ்யமான எழுத்து நல்ல எழுத்தல்ல எனும் சிறுபத்திரிக்கை மந்திரத்தால் இரவை வணிக எழுத்து என முடிவுகட்டி ஓரங்கட்டிவிட்டேன்.

இலக்கியம் ஒவ்வாமையாக ஒருவித எளிய தொழில் நுட்பமாக மாறி அலுப்பூட்டியது. அப்பொழுது சிற்றிதழ் ஏற்படுத்திய சோர்வில் இருந்தேன்.தமிழில் நடந்த எந்த இணைய வம்பையும் அறியா எளியவனாக ஒதுங்கி இருந்தேன்.

வாசிப்பில் எனக்கு மீண்டும் நம்பிக்கையை கொடுத்தது தஸ்தேய்வ்ஸ்கியின் அசடன். பழைய புத்தகக்கடையில் அதை கண்டெடுத்தேன். அது ஒரு ஆச்சர்யம். அதை வாசித்து முடிக்க எனக்கு ஒன்றை மாதமாகியது. அதை தூக்கிக் கொண்டு பாங்காங்க் சென்றேன். எனக்கு மிக்ப்பிரியமான ஆளுமையாக தஸ்தேய்வ்ஸ்கி மாறினார்.

ஆனாலும் வாழ்வில் பிடிப்பில்லை. மிஷ்கினை வைத்துக்கொண்டு திணறிக்கொண்டிருந்தேன். அபத்தம். அதைத் தவிர வேறு வார்த்தை எதுவும் தெரியவில்லை. ஆனால் எனக்கு மிஷ்கினை மிகவும் பிடித்திருந்திருந்து. அதனால் அதை விடவும் பிடிக்கவில்லை. அன்னா கரினினா வாசிக்கும் வரை இந்த சிக்கல் இருந்தது. லெவினைப் பார்த்ததும் தெளிவு கிடைத்தது. லெவினின் உள்ளத்துக்குள் இருப்பது மிஷ்கின் தான் என கண்டுகொண்டதும் வாழ்க்கையை ஒரு மாதிரி கொண்டு சென்றுவிடலாம் எனத் தோன்றியது.

ஆனாலும் புத்தரைப் பற்றி வாசித்ததில் இன்பத்தை நாம் வலிந்து உருவாக்கவேண்டும் என கற்பிதம் செய்துகொண்டேன். என்ன செய்வது எனத் தெரியாமல் இலக்கில்லாமல் இரண்டு வருடம் அலைந்தேன்.

மார்க்ஸியவாதிகளுடன் பேசும்பொழுது மார்க்ஸியத்திற்கு எதிராகவும் பெரியாரியவாதிகளுடன் பேசும் பெரியாருக்கு எதிரியாகவும் இந்துத்துவர்ளிடம் பேசும் போது மார்கஸியவாதியாகவும் முத்திரைக் குத்தப்பட்டேன்.

எல்லோரும் என்னை குழப்பவாதி என்றனர். அதை தீவரமாக எடுத்துக்கொண்டு சிந்திக்க குழப்பவாதி ஆனேன். வெறுமையில் உழன்றேன். அப்பொழுதிருப்த மனநிலைக்கு சூன்யவாதம் என பேரிட்டுக்கொண்டேன்.

வெறுமனே இந்தியாவை சுற்றி வந்தேன். மீண்டபோதும் வெறுமை. வெறுமை செயலின்னையில் தள்ளியது. செயலின்மை நோயாளி ஆக்கியது. அந்த காலத்தில் தான் நான் உங்களை மறு கண்டுபிடிப்பு செய்தேன்.பெரும் வெறுமையிலும் செயலின்மையிலும் வாழ்வு அலுப்பானதாக இருந்தது.

பின்பு நெடு நாள் கழித்து யானை டாக்டரும் நதி கதையும் வாசித்தேன். அப்புறம் தொடர்ச்சியாக உங்கள் வலைப்பக்கத்தை வாசிக்க தொடங்கியிருந்தேன்.அதிலிருந்து மீண்டு வாழ்வை புதியதாக பார்க்க தங்கள் எழுத்துக்கள் உதவின.

நான்கு வேடங்கள் அந்த வகையில் எனக்கு முக்கியமான கட்டுரை. எழுத்தின் இருளும் அதே போல. அப்பொழுது உங்களை பார்க்க ஆசைப்பட்டேன்.

வெண்முரசை வாசித்துவிட்டு தான் தங்களை பார்க்க வேண்டும் என முடிவு செய்து வெண்முரசை வாசிக்கத் தொடங்கினேன்.வெண்முரசு வாசிப்பவனுக்கு ஒரு சவாலை அளிக்கிறது.  தற்போது காண்டீபத்தில் இருக்கிறேன்.

அதற்கு கிண்டிலில் விஷ்னுபுரம் வாசித்தேன். முன்னரே வாசித்திருந்தால் என்னுடைய பல சிக்கல்களை இது தெளிவாக்கியிருக்கும். அல்லது இவ்வளவு சிக்கல்களையும் கடந்துவந்து வாசிக்கும் பொழுது எழுத்து அர்த்தமானதாகிறதா. இத்தனை நாள் வாசிக்காததற்கு நானும் அதை முக்கியமாக பொருட்படுத்தவில்லை.

ஏனென்றால் என் சிக்கல்களின் மூலம் மரபு பற்றிய என் போதாமைகளும் என் சூழலில் இருந்த குற்றஉணர்ச்சியும்.ஆரம்பகாலத்தில் பாலியல் எழுத்தை வாசிப்பது போல மறைத்து மறைத்தே உங்களை வாசித்தேன்.

விஷ்னுபுரம் பல உச்ச முனைக்கொண்ட படைப்பு. பல்வேறு மலை முகடுகளை ஒருங்கே பார்க்கும் ஒரு சித்திரம் உருவாகிறது. கல்லூரி காலம் தொடர்ந்து மலையேற்றம் செல்லும் பழக்கம் கொண்டவன் நான். மலை ஏறிய பின் மனம் இறங்கும் வழிகைப் பற்றித்தான் சிந்திக்கும். உச்சி முனைகளில் நிலைத்திருக்க முடிவதில்லை.

அபிப்ராய சிந்தாமணியை இனையாக வாசித்தபடி விஷ்னுபரத்தை வாசித்தேன். அது மலைச்சிகரங்களை கடந்து இறங்கி வரும் பள்ளதாக்கில் ஓடும் ஆற்றில்குளித்து நீந்தி கடந்து அடுத்த சிகரத்தை நோக்கி போவது போன்ற உணர்வை தருகிறது. முக்கியமாக ஞானகண்ட விவாதத்தில் ஏற்பட்ட வெறுமையில் இருந்து அபிப்ராய சிந்தாமணி லகுவாக்கியது. அந்த வகையில் அது முக்கியமான நூலாக கருதுகிறேன். விஷ்னுபுரத்திற்கு இணையாகவே. அந்த உச்சமுனைகளை கானும் உலகியல் மனத்தில் தோன்றும் ஒருவித எள்ளல். அதன் வழியாக இன்னும் ஆழமாக தெளிவாக அந்த உச்சங்களை அறியலாம் எனத் தோன்றுகிறது.

மாபெரும் கனவுக்குள் இருந்துவிட்டு வந்த உணர்வைத் தருகிறது விஷ்னுபுரம். இதை ஒரு இந்திய நாவலாக முன்வைக்கலாம். இந்த பண்பாட்டின் மொத்தம் திரண்டு கனவாக எழுந்துள்ளது. விஷ்னுபுரம் வாசிக்கும் ஒருவர் இந்தியராக மாறுவர் எனத் தோன்றுகிறது. நான் சொல்வது இந்த நிலத்தின் கண்டடைதல் மூலமாக அதன் ஆழப்படிமங்களைக் கொண்டு தன்னை கண்டுகொள்ள முடியும்.

ஆரியதத்தர் வரும்போதெல்லாம் சுந்தர ராமசாமியின் நினைவு வருகிறது. அதேபோல் சந்திரகீர்த்தி ஸ்டாலின் போல.மணிமுடி ஸ்டாலின் கால ரஷ்யாவின் சரிவு போல் இருக்கிறது. மார்க்ஸியர்களுக்கான பதில் போல் உள்ளது.

ஆனால் இதற்குள் அபாரமான தரிசனங்கள் உள்ளன. உறுதியான தகவல்களும் அபாரமான கற்பனையும் நிரம்பியுள்ளது. இப்பொழுதுதான் அதைக் கண்டடைந்தேன். வானத்துக்கும் நிலத்துக்குமிடையில் இருத்தப்பட்டதுபோன்ற ஒரு நிலை. இதுதான். இப்படித்தான் இருப்தது அந்த உணர்வு. இப்பொழுது யோசிக்கையில் முதல் பகுதி வெளிச்சமாக உள்ளது. அது உணர்வுகளால் பிண்ணப்பட்டுள்ளது. அதை மட்டும் வாசித்தால் உடல்களால் ஆன உணர்வுகளின் பிண்ணி நெழியும் உறவுகளின் சித்திரம் வருகிறது. காமமும் அதன் அடிநாதமான உடலும் பசியும் உறவும் பல்வேறு சாத்தியங்களுடன் உருவாகியுள்ளது. அதில் யாராலும் அப்த உடலில் இருந்து விடுபட முடியவில்லை. பிங்கலனும் திருவடி இரண்டு எதிர் வழிகளில் அதன் உச்சத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.

அவர்கள் உருவாக்கும் வட்டத்தை சுற்றி அடுத்த வட்டம் ஞானகண்ட விவாதங்கள். அதுதான் அற்புதம். தத்துவத்தின் தர்க்கத்தின் உச்சத்திற்கு அடுத்த அத்தியாயத்தில் பிராமணர்கள் உணவுக்காக அடித்துக் கொள்ளும் பகுதி.

பின் அழிவு. பிரளயம். இதில் வேடிக்கை நான் ஒரு கதை எழுத நினைத்திருந்தேன். பிரளயம் பற்றி. அதில் நீர்தான் அதன் ஆயுதம். எங்கு தொடங்குவது எனத் தெரியாமல் அந்தரத்தில் நிற்கிறது. இது பெரும்பாலும் மழையும் சாம்பல் நிறத்துடனும் இருக்கிறது.

விஷ்னுபுரம் காண்பிப்பது ஒட்டுமொத்தத்தை. முழுமையை. முடிவின்மையை. அதற்குள் கிடைக்கும் கதகதப்பை. எனக்கு முன்னும் பின்னும் நீடித்திருக்கும் இந்த முடிவிலியின் ஒரு சித்திரத்தை. அதுதான் அதை முக்கியமானதாக ஆக்குகிறது.

வெண்முரசுக்குள் ஆழமாக உட்செல்ல அதேபோல அபிப்ராய சிந்தாமணி இரண்டாம் தொகுப்பு வந்தால் நன்றாக இருக்கும்.

அன்புடன்

E.K. ஆதவன்

அன்புள்ள ஆதவன்,

பரவாயில்லை, ஒரு சுற்று முடித்துவிட்டு விஷ்ணுபுரத்திற்கு வந்திருக்கிறீர்கள். விஷ்ணுபுரம் நீங்கள் சென்ற அலைக்கழிப்புகளின் கதைதான். கொள்கை, கோட்பாடு, மதம், சாதி, அரசியல் என நிலைபாடுகள் கொண்டுவிட்டவர்களுக்கு உரியது அல்ல. சிந்தனையில் தன்னிலிருந்து தொடங்குபவர்களுக்கு உரியது. தானே கண்டடைய முற்படுபவர்களுக்குரியது. அவர்கள் தத்தளிப்பார்கள், சோர்வடைவார்கள், தனிமை கொள்வார்கள். எங்காவது பொருத்திக்கொள்ள முயல்வார்கள், எல்லா இடத்திலும் விலக்கப்படுவார்கள்.

அந்த அலைக்கழிப்பை அகவயமாக, எளிய அன்றாடவாழ்க்கையில் மட்டுமே வைத்துப் பார்ப்பவை நாமறியும் நாவல்கள். விஷ்ணுபுரம் அதை வரலாற்றில், பண்பாட்டின் பெரிய பரப்பில் வைத்துப் பார்க்கிறது. காலந்தோறும் அது எவ்வண்ணம் நிகழ்ந்துள்ளது, நீடிக்கிறது என்று பார்க்கிறது. அதில் எல்லாவகை அலைக்கழிபவர்களும் ஏதோ ஒருவடிவில் வந்தமைகிறார்கள். சமரசம் செய்துகொள்கிறார்கள், சமரசமில்லாமல் அழிகிறார்கள், தனக்குத்தானே நடிக்கிறார்கள், உண்மையாக இருந்து மட்கிவிடுகிறார்கள். விஷ்ணுபுரம் நாவல் எவ்வகையிலேனும் அந்த அலைக்கழிப்பை அடைந்தவர்களுக்கு ஆழமாகப் பொருள்படுவது.

வெண்முரசு அதன் மாபெரும் விரிவாக்கம். ஆனால் அலைக்கழிப்பிலிருந்து மேலே செல்லும் ஒன்று அதில் அமைகிறது. தத்துவத்தின் சாரமென திரண்டுவரும் ஒன்றின் வழியாக. அபிப்பிராய சிந்தாமணி எனக்கும் ஒரு வடிகாலாக இருந்தது – வெண்முரசுக்கு அதைப்போல சொல்லவேண்டுமென்றால் அதன்பின் எழுதிய கதைகளைச் சொல்லவேண்டும். அவற்றில் பெரும்பாலானவை இளவெயில்போல் இனியவை.

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- காளிப்பிரசாத்
அடுத்த கட்டுரைபுனல் பொய்யாப் பொருநை-க.மோகனரங்கன்