காலம்!

நேற்று ஒரு வேடிக்கை. ஒரு நண்பரின் மனைவி சொன்னார். “டிவியே பாக்க மாட்டானுங்க. எப்ப பார் கம்ப்யூட்டர் கேம். அதில திரும்பத்திரும்ப ஒண்ணே தான் செய்றான்…நொய் நொய்னு…”

நான் “டிவி ஏன் பாக்கணும்?” என்றேன்

“டிவியிலே எவ்ளவு விஷயம் காட்டுறான்! எவ்ளவு சேனல். டிஸ்கவரி ஹிஸ்டரி டிஸ்கவரி வைல்ட், டிஸ்கவரி டர்போன்னு வண்டிகளைப் பத்திக்கூட இருக்கு. டிராவல் சானல் அவ்ளவு இருக்கு. ஃபுட் சானல் இருக்கு….ஹாலிவுட் சினிமாக்களைப் பாத்தாலே உலகம் பத்தி தெரியவருமே…இவனை பாத்தா…சரியான..”

“டிவி பாக்கச் சொல்லவேண்டியதுதானே?”

“எங்க பாக்கிறான்? எதப்பாத்தாலும் சரியான போர்னு பத்து நிமிசத்லே எந்திரிச்சு போய்டுறது. பொறுமை பத்தாது.இப்ப ஒரு சினிமான்னா ந்த ஏரியா, கேரக்டர் எல்லாத்தையும் எஸ்டாபிளிஷ் பண்ண கொஞ்சம் நேரமாகும் இல்லியா?”

“ஆமா” என்றேன். “ஆனா டிஸ்கவரி சேனல்ல சரசரன்னு காட்டுவானே?”

“அதுகூட இவனுகளுக்கு ஸ்லோதான். காட்டிட்டே இருக்கான், ஸ்டுப்பிட்னு திட்டுறான். கேம்லே எல்லாமே ஒன் செகண்ட்தான்….மனோவேகம்”

“ஆமா”

”என்ன பண்ணிட்டிருக்கே?” “ம்ம்? வாழ்க்கையிலே அர்த்தமும் சந்தோசமும் வந்து சேருறதுக்காக காத்திருக்கிற நேரத்திலே பொழுது போகணும்ல? டிவி பாக்கிறேன்”

“எனக்கு இவனுகள நினைச்சாலே கவலையா இருக்கு”

“நீங்க டிவி பாப்பீங்களா?”

“ஆமா, நான் சின்னப்பொண்ணா இருந்தப்ப அப்பா சாலிடெர் டிவி ஒண்ணு வாங்கினார். அப்பல்லாம் வெள்ளிகிழமையிலே ஒலியும் ஒளியும் போடுவான். அப்டி ஒரு பரவசமா இருக்கும். அப்றம் ராமானந்த சாகரோட ராமாயணம், பி.ஆர்.சோப்ராவோட மகாபாரதம்…”

“படிப்பீங்களா?”

“நான் எஞ்சீனியரிங்”

“அதில்ல, புக் படிப்பீங்களா?”

“அதிகம் இல்ல. சின்னவயசிலே சுஜாதாவோட மீண்டும் ஜீனோ படிச்சிருக்கேன்…அப்றம் பிரிவோம் சந்திப்போம்…அவ்ளவுதான்”

“உங்க வீட்ல படிப்பாங்களா?”

“அம்மா நெறைய படிப்பாங்க. அவங்க லக்ஷ்மியோட பெரிய ஃபேன். லெட்டர்லாம் போட்டிருக்காங்க. என்னை படி படின்னு சொல்லுவாங்க. எனக்கு பொறுமையில்ல. பழைய தொடர்கதைல்லாம் பைண்ட் பண்ணி வச்சிருப்பாங்க. அதிலே ஜோக் மட்டும் பாப்பேன்”

”ஓ” என்றேன்

“இவன் சொல்றத கேக்குறதே இல்ல. உங்க ஃப்ரண்டுக்கு நேரமே இல்ல. எப்ப பாத்தாலும் தலக்காணி மாதிரி எதாவது புக்க எடுத்து வச்சுகிட்டு… நீங்க எழுதினதுதானே வெண்முரசு?”

“ஆமா”

“அவ்ளவு பெரிய புக்கு…எப்டித்தான் படிக்கிறாங்களோ”

முந்தைய கட்டுரைஅபர்ணா கார்த்திகேயன் – பாலசுப்ரமணியம் முத்துசாமி
அடுத்த கட்டுரைஅறம் ஒரு கடிதம்