உள்வட்டமா?

அன்புள்ள ஜெ,

என் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும்போது வந்த ஒரு கேள்வி இது. விஷ்ணுபுரம் இலக்கிய வட்ட நிகழ்ச்சிகளைப் பற்றிச் சொன்னேன். அப்போது இரண்டு நண்பர்கள் சொன்னார்கள் ‘இது ஒரு வகையான உள்வட்ட நிகழ்ச்சி. நாடு பலவகையான சிக்கல்கள் வழியாகச் சென்று கொண்டிருக்கிறது. நெருக்கடிகள் உள்ளன. இன்று இப்படி ஒரு சிறு வட்டங்களை உருவாக்கிக்கொள்வது ஒன்று மேட்டிமைப்பார்வை. அல்லது குறுகல் மனப்பான்மை அல்லது தப்பித்தல்” நான் அவர்கள் சொன்னதை எழுதியிருக்கிறேன். நான் அவர்களுக்கு என்னைப்பொறுத்தவரை இதனால் என்ன பயன் என விளக்கினேன். உங்கள் கருத்து என்ன?

ராஜ் சுந்தர்

 

அன்புள்ள ராஜ்,

இதைச் சொல்பவர்கள் பெரும்பாலும் அரசியல் ஈடுபாடு உள்ளவர்கள். அல்லது அரசியல்பற்று கொண்டவர்களாகக் காட்டிக்கொள்பவர்கள். அது அவர்களுக்கு ஒருவகை அடையாளத்தை அளிக்கிறது. சிறு நட்புக்குழு ஒன்றை திரட்டித் தருகிறது. அவர்களின் அன்றாடவாழ்க்கையிலுள்ள சுரண்டல், சமரசங்கள், செயலின்மை ஆகியவற்றின் விளைவான குற்றவுணர்ச்சியை சமன் செய்ய உதவுகிறது.

அவர்கள் ஏதேனும் களத்தில் ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபட்டிருந்தால் இக்கேள்வியின் அபத்தம் அவர்களுக்கே உறைத்திருக்கும். எந்தத் தளத்தில் செயல்பட்டிருந்தாலும் அதை ஒட்டுமொத்த சமூகத்தில் ஓர் உள்வட்டமாக வரையறை செய்துகொண்டுதான் செயல்படமுடியும். அன்றி, செயல்பாடே இல்லை.

உதாரணமாக, கோவையில் ஒரு தொழிற்சங்க மாநாடு நிகழ்கிறது. அங்கே நூறுபேர் அமர்ந்து பேசுகிறார்கள். அவர்களைப் பற்றி இதையே கேட்கலாமே. சூழியல் செயல்பாட்டாளர்கள் ஓர் அரங்கு கூட்டுகிறார்கள். அங்கும் இதையே சொல்லலாமே? இன்று பெரிய கட்சிகள் ஒன்றிரண்டை தவிர அத்தனை கட்சிகளையுமே சிறுவட்டம் என்று சொல்லிவிடலாம்.

தொழிற்சங்கக் கூட்டத்தில் பங்கெடுப்பவர்கள் தமிழ், இந்திய சமூகத்தின் உறுப்பினர்களே. சூழியல் அரங்கில் அமர்திருப்பவர்களும் பொதுமக்களே. அவர்கள் அங்கிருந்து கிளம்பி பொதுச்சமூகம் நோக்கித்தான் செல்கிறார்கள். அங்கேதான் வாழவும் பணியாற்றவும் போகிறார்கள். அவர்கள் ஒளிந்து திரியும் தலைமறைவுக்குழுவினர் அல்ல.

எந்த ஓர் அறிவுசார்ந்த இயக்கமும் தன்னை ஒரு தனிவட்டமாகத் திரட்டிக்கொண்டுதான் மேலே செயல்பட முடியும். அந்த வட்டத்திற்குள் வருபவர்கள் அந்த அறிவுசார்ந்த இயக்கத்தின் அடிப்படைகளை அறிந்தவர்கள், மேலும் அறிய ஆர்வம் கொண்டவர்கள், அதன்பொருட்டு நேரம் ஒதுக்க தயாரானவர்கள், அதன் அடிப்படை விதிகளை கடைப்பிடிப்பவர்கள், அவ்வளவுதான்.

இந்தவகையான தனிவட்டங்கள் ஒவ்வொரு அறிவுத்துறைக்கும் உண்டு. ஒவ்வொரு திறன்சார் துறைக்கும் உண்டு. இதே தமிழகத்தில் கானியலாளர்களின் பறவையியலாளர்களின் தொல்லியலாளர்களின் மண்ணியலாளர்களின் வட்டங்கள் பல செயல்படுகின்றன. கட்டுமானத்துறை, மின்னணுத்துறை தொழில்நுட்ப வட்டங்கள் செயல்படுகின்றன. வெறும் ஆர்வத்தால் நான் கட்டுமானத்துறை வட்டங்களை சென்று கவனிப்பதுண்டு.

இலக்கியம் தனிமனித அகவெளிப்பாடு சார்ந்தது. ஆனால் அவ்வெளிப்பாடு மொழியில், இலக்கிய வடிவங்களில் நிகழ்கிறது. அந்த களத்தில் அது ஓர் அறிவுத்துறையும் ஒரு திறன்சார்துறையும்கூடத்தான். அதற்குப் பயிற்சி தேவை. தொடர்ச்சியான ஈடுபாடு தேவை. அவற்றை அடைய இதைப்போன்ற வட்டங்கள் தேவை. இவை உலகம் முழுக்க உள்ளன.

பிறநாடுகளில் பெரும்பாலும் கல்வித்துறை சார்ந்து இவை உருவாகின்றன. சென்ற நூற்றாண்டில் முழுக்கமுழுக்க இலக்கியவாதிகளைச் சார்ந்தே இவை உருவாயின. ஓரிரு இலக்கியவாதிகள் அத்தகைய வட்டங்களுக்கு மையமாக இருந்தனர். தமிழில் நமக்கு கல்வித்துறை சார்ந்து இவ்வகை களங்கள் உருவாக வாய்ப்பில்லை. ஆகவே நாம் இன்னும் தனிமனிதர்களைச் சார்ந்தே செயல்படவேண்டியிருக்கிறது.

ஏற்கனவே முற்போக்கு எழுத்தாளர் சங்கம் போல கட்சியின் துணையமைப்புகளாக இதைப்போன்ற வட்டங்களை உருவாக்கியிருக்கிறார்கள். அவை கட்சிக்கு ஆள்சேர்க்கவும், கட்சியை பிரச்சாரம் செய்பவர்களை உருவாக்கவுமே முயன்றன. அவற்றுக்குள் இலக்கியவாதிகளாக மலர்ந்தவர்கள் காலப்போக்கில் வெளியேற நேர்ந்தது. உங்கள் நண்பர்களிடம் கேட்டுப்பாருங்கள், அவர்களுக்கு அந்த வட்டம் பற்றி எந்தப் புகாரும் இருக்காது. அப்படியென்றால் அவர்களின் தரப்பு உண்மையில் என்ன?

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் போன்றவை முழுக்கமுழுக்க இலக்கியத்தை மட்டுமே முன்வைப்பவை. இங்கே இலக்கியவாதியின் கருத்தியல் அடையாளம் பொருட்டாகக் கொள்ளப்படுவதில்லை. ஆனால் அவருக்கு இலக்கியம் முதன்மையானதா என்று பார்க்கப்படும். கட்சிக்கூச்சலை இலக்கியமென நினைப்பவர்களுக்கு இங்கே இடமில்லை. இத்தனை கட்சிசார்ந்த வட்டங்கள் இருக்கின்றனவே, ஒன்று கட்சிசாரா இலக்கியத்துக்கும் இருக்கட்டுமே. ஏன் அதன்மேல் இத்தனை காழ்ப்பு? ஏன் அதன் இருப்பையே எதிர்க்கிறார்கள்? அதுவும் தங்களைப்போல கட்சிக்குழுவே என நிறுவ ஏன் முயல்கிறார்கள்? அவர்களைப் படுத்தி எடுப்பது என்னவகை உபாதை?

எந்த அறிவுசார் வட்டத்தையும்போல இங்கே இத்தளத்தில் சாதித்தவர்களுக்கே முன்னுரிமை. சாதிக்கப்போகிறவர்களுக்கும் முக்கியமான இடம். அவர்களிடமிருந்து கற்றுக்கொள்பவர்களுக்கும், இலக்கியம் மீது அடிப்படையான ஈடுபாடுள்ளவர்களுக்கும் இடமுண்டு. எஞ்சியவர்களுக்குரிய இடம் அல்ல இது. இப்படி எல்லை வகுக்காவிட்டால் எதையுமே பேசமுடியாது. எப்போதும் எந்த அறிவுத்துறைக்கும் இதுதான் நெறி.

இங்கே பேசப்படுவது இலக்கிய அழகியல். இங்கு வருபவர் இதற்கு வெளியே சூழியல் ஆர்வம் கொண்ட செயல்பாட்டாளராக இருக்கலாம். தொல்லியலாளராக இருக்கலாம். அரசியல் களத்திலும் இருக்கலாம். தன் எழுத்துக்கான ஊற்றுக்களை அவர் அங்கே கண்டடையலாம். அது அவருடைய தனிப்பட்ட பயணம். இங்கிருந்து கிளம்பி அவர்கள் தமிழ்வாழ்க்கையின், தமிழ்ப்பண்பாட்டின் எல்லா களங்களுக்கும் செல்கிறார்கள்.

இந்த வட்டம் மொத்த தமிழ்ப்பண்பாட்டையும், மொத்த தமிழிலக்கியத்தையும், மொத்த தமிழ்ச்சமூகத்தையும்தான் விவாதிக்கிறது. இந்தவட்டம் இந்த வட்டத்தை மட்டும் விவாதித்துக்கொண்டு தனக்குள் ஒடுங்கவில்லை. இது விவாதத்திற்காக, உரையாடலுக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு களம் மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு ஒரு குறிப்பு
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருது அறிவிப்பு