விஷ்ணுபுரம் விவாதமேடை -கடிதங்கள்

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் பற்றிய குறிப்புகளை வாசித்தேன். நான் இந்தப் பரிந்துரைகள் இல்லையென்றால் இந்தப் படைப்புகளை உடனடியாக வாசித்திருக்க வாய்ப்பில்லை. இவர்களைப்பற்றிய விரிவான விவாதங்களும் சுட்டிகளும் மிகவும் உதவின. படைப்பாளிகள் பற்றிய இந்த அறிமுகம் மிகமிக முக்கியமான ஒன்று. முன்பு சங்கீதத்திற்கு திருவையாறு தியாகராஜ உத்சவம் இப்படி ஒரு நல்ல அரங்கேற்ற மேடையாக இருந்தது. சென்னையில் அரங்கேற்றம் செய்யலாம்தான். ஆனால் அங்கே சொந்தக்காரர்கள்தான் வருவார்கள். நாலைந்துபேர் தேறினாலே அதிசயம். அதுக்கு நல்ல சாப்பாடுவேறு போடவேண்டும். அதெபோலத்தான் புத்தகம் வெளியிடும் மேடை. சொந்தச்செலவில் ஏற்பாடு செய்யலாம். ஆனால் பார்வையாளர்கள் வரமாட்டார்கள். திருவையாறில் நல்ல இசையறிந்த ஆயிரம்பேர் அரங்கிலே இருப்பார்கள். அவர்கள் முன் பாடி அப்ளாஸ் வாங்குவது என்பது ஒரு நல்ல தொடக்கம். பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, காயத்ரி எல்லாருமே முதலில் தெரியவந்தது திருவையாறு வழியாகத்தான். அதேபோல விஷ்ணுபுரம் மேடை இருக்கிறது. இளம் படைப்பாளிக்கு இருநூறுபேர் கொண்ட ஒரு மேடை என்பது மிகச்சிறந்த அனுபவம்.

ஆனால் இதை ஓர் அறிமுகமாக எடுத்துக்கொள்ளலாமே  ஒழிய பாராட்டுவிழாவாக எடுத்துக்கொண்டால் அந்த எழுத்தாளரின் பயணம் குறைந்துவிடும். அந்த அபாயம் உண்டு. இப்படிச் சொல்லுவதனால் நான் எவரையும் புண்படுத்தவில்லை என நினைக்கிறேன். ஏனென்றால் இப்போதெல்லாம் எல்லா மூத்த எழுத்தாளர்களும் பாராட்டு மட்டுமே சொல்கிறார்கள். சின்ன விமர்சனத்துக்கே கடுமையாக இளம் எழுத்தாளர்கள் புண்படுகிறார்கள். ஆனால் தமிழ் சிறுகதையின் மரபு மிகப்பெரியது. அதை ஞாபகப்பத்த்திக்கொண்டே இருந்தாகவேண்டும். இவர்கள் தங்கள் சிறந்த சிறுகதைகளில் மிகப்பெரிய சாத்தியங்கள் இருப்பதை காட்டியிருக்கிறார்கள். தொடர்ந்து வாசித்தும் எழுதியும் அந்தை அடையவேண்டும்

எம்..மகாதேவன்

 

அன்புள்ள ஜெ

இளம் எழுத்தாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சி மிக முக்கியமானது. அவர்களுக்கு இந்த மேடை அவர்களின் வாசகர்கள் என்ன நினைக்கிறார்கள், எப்படி வாசிக்கிறார்கள் என்பதை காட்டுவதாக அமையவேண்டுமென நினைக்கிறேன். எந்த எழுத்தாளரும் வாசகருக்காக எழுதக்கூடாது. ஆனால் எழுத்து எனபது நுட்பமான வாசகர்களுடன் நிகழ்த்தப்படும் ஓர் உரையாடல்தான். ஆகவே அவர்களுக்கு நல்ல வாசகர்களைச் சந்திக்கும் வாய்ப்பு அமையவேண்டும். நல்ல வாசகன் தாகம் கொண்டவன்.நிறைய எதிர்பார்ப்பவன். அப்படி எதிர்பார்ப்பவன் மட்டும்தான் தேடித்தேடி வாசிப்பான். இன்றைய இணையச்சூழலில் கதைகள் வந்து கொட்டிக்கொண்டிருக்கின்றன.நடுவே ஒரு நல்ல கதைக்கும் ஆசிரியருக்கும் வாசகர்களிடம் கவனம் கிடைப்பது மிகச்சிறந்த விஷயம்.

சண்முகசுந்தரம்

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

முந்தைய கட்டுரைவிக்கிரமாதித்யனுக்கு விருது – கடிதம்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர் அரங்கு, இன்றைய நிரல்