விஷ்ணுபுரம் விருது அறிவிப்பு

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

தமிழ்ச்சூழலால் மதித்துக் கொண்டாடப்படவேண்டிய படைப்பாளிகளை அடையாளம் காட்டும்பொருட்டு உருவாக்கப்பட்டது விஷ்ணுபுரம் விருது. 2010 முதல் விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் அமைப்பால் வழங்கப்படும் இவ்விருது இதுவரை ஆ.மாதவன், பூமணி, தேவதேவன், தெளிவத்தை ஜோசப், ஞானக்கூத்தன், தேவதச்சன், சீ.முத்துசாமி, வண்ணதாசன், அபி, ராஜ் கௌதமன், சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது கவிஞர் விக்ரமாதித்யனுக்கு வழங்கப்படுகிறது

1947ல் இந்தியா சுதந்திரம் அடைந்து நாற்பது நாட்களுக்குப் பின் திருநெல்வேலி மாவட்டம் வாசுதேவநல்லூரில் பிறந்தவர் விக்ரமாதித்யன். இயற்பெயர் நம்பிராஜன்.இதழாளராகப் பணியாற்றியவர் பின்னர் முழுநேரக் கவிஞராகவே வாழ்க்கையை அமைத்துக்கொண்டார். நிலையற்ற நாடோடி வாழ்க்கையை மேற்கொண்டிருந்தாலும் இடைவிடாமல் கவிதையில் ஈடுபட்டிருந்தார். இருபதுக்கும் மேல் கவிதைத் தொகுதிகள், பதினாறு கட்டுரைத் தொகுதிகள், இரு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

விக்ரமாதித்யனின் கவிமொழி நேரடியானது. இயல்பான படிமங்களும் உள்ளடங்கிய சந்தமும் கொண்டது. பெரும்பாலும் தற்கூற்றாக அமையும் கவிதைகள் அவருடையவை. மரபார்ந்த ஓர் உள்ளம் நவீனச் சூழலை எதிர்கொண்டமையின் விளைவுகள் என அவருடைய கவிதைகளைச் சொல்ல முடியும். தமிழ்ச்சமூகத்தை நோக்கி ஒரு கவியுள்ளம் ஆற்றிய எதிர்வினைகள் அவை. ஆனால் விமர்சனமோ அறைகூவலோ கசப்போ அவற்றில் ஓங்கி ஒலிப்பதில்லை. அவை தன்னியல்பான வெளிப்பாடுகளாகவே நிகழ்கின்றன.

எளிய மக்களின் நடுவே இன்னொரு எளிய மனிதராக தன் முழு வாழ்க்கையையும் செலவிட்ட விக்ரமாதித்யனின் கவிதைகள் அந்த எளிய மனிதர்களின் குரல்கள் எனவும் சொல்லத் தக்கவை. ”மாயக்கவிதை எழுத மற்ற ஆளைப் பாரு, நானெல்லாம் நொம்பலப்பட்ட ஆத்மா” என தன்னை முன்வைப்பவர் விக்ரமாதித்யன். “எனக்கில்லையென்றாலும் என் சந்ததிக்கேனும் விடுதலை எப்போது பூக்கும்?” என ஏங்குபவர். ’ரத்தத்தில் கைநனைத்ததில்லை நான் எனினும் ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில் தங்க நேர்கிறது எனக்கு” என ஆற்றாமை கொள்பவர்

ஆனால் காட்டுப்பூ போல தானாகவே உருவாகி வரும் கவிதையில் நம்பிக்கை கொண்டவர். ’வண்ணத்துப் பூச்சிகளின் வாழ்க்கையில்
வன்கொலைச் சாவுக்கு இடமில்லை’ என தன் கவிதையின் இயல்பைப் பற்றிய தெளிவை அடைந்தவர். ’இவ்வடுப்புகள் இன்றெரியாது போயினும் எங்கெங்கோ அடுப்புகளில் தீ’ என தமிழ்ச்சமூகத்தைக் கண்டு வாழ்த்துபவர். ஔவையார் முதல் காளமேகம் வரை, படிக்காசுப்புலவர் முதல் ஆண்டான் கவிராயன் வரை தமிழ் மரபு உருவாக்கிய கவிமரபின் இன்றைய நீட்சி. சமூகத்துக்கு வெளியே நிற்பவர், பண்பாட்டுக்கு மையமாகவும் நிலைகொள்பவர்.

விக்ரமாதித்யனின் சொற்கள் தமிழர் இன்னும் பல தலைமுறைக் காலம் நினைவில் கொள்ளவேண்டியவையாக நீடிக்கும். நம் காலகட்டத்தின் பெருங்கவிஞர்களில் ஒருவருக்கு விஷ்ணுபுரம் அமைப்பின் பணிவும் வணக்கமும்

26-12-2021

கோவை

விக்ரமாதித்யன் நூல்கள் 

விக்ரமாதித்யன் விக்கிப்பீடியா

விக்ரமாதித்யன் ஆங்கில விக்கிபீடியா

 

முந்தைய கட்டுரைஉள்வட்டமா?
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் அமைப்பின் முகங்கள்