அன்புள்ள ஜெ
விஷ்ணுபுரம் விருது தொடங்கப்பட்ட காலம் முதல் அதைக் கூர்ந்து கவனித்து வருபவர்களில் நானும் ஒருவன். பூமணிக்கு விருதளித்த நிகழ்வில் கலந்துகொண்டிருக்கிறேன். இவ்விருது மெல்லமெல்ல ஓங்கி இன்று ஒரு பெரிய கலாச்சார விழாவாக ஆகியிருக்கிறது.
உண்மையில் காலச்சுவடு இதழ் இந்த வகையான ஒரு கலாச்சார நிகழ்வைத்தான் உத்தேசித்தது. அவர்கள் 2000 த்தில் நடத்திய தமிழினி இலக்கிய விழா அவ்வகையில் ஒரு முக்கியமான முயற்சி. முன்னோடி முயற்சியும்கூட. சர்வதேச அளவில் தமிழுக்கான ஒரு கருத்தரங்கை அவர்கள் வெற்றிகரமாகவே நடத்தினார்கள். அந்நினைவுகள் இன்றைக்கும் இனியவை. அதைச்சார்ந்து அவர்கள் வெளியிட்ட மலர் முக்கியமான ஓர் ஆவணம்.
அதன்பின் அவர்கள் சேலம் முதலிய பல ஊர்களில் இலக்கிய விழாக்களை ஒருங்கிணைத்தனர். கோவையில் ஒரு சொற்பொழிவுத்தொடரை நடத்தினர். இலக்கியத்தை ஓர் இயக்கமாக முன்னெடுக்க அவர்கள் செய்த முயற்சி பாராட்டுக்குரியது. ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக அது நின்றுவிட்டது. ஏனென்று கேட்டால் அதில் மையப்புள்ளியாக சுந்தர ராமசாமி இருந்தபோது இருந்த ஒருங்கிணைப்பு இல்லாமலாகியதும் நோக்கம் திசைமாறியதும்தான் என்று நினைக்கிறேன். தமிழினி மாநாட்டில் சுந்தர ராமசாமி மையமாக இருந்தார். அவர் அழைத்தமையால்தான் அத்தனை எழுத்தாளர்களும் வந்து விழாவில் கலந்துகொண்டார்கள்.
அதன்பிறகு நிகழ்ந்த விழாக்களில் சுந்தர ராமசாமியை முன்னிறுத்தும் நோக்கம் இருந்தது. காலச்சுவடு குழுவின் இலக்கிய ரசனையும் நோக்கமும் முன்னெடுக்கப்பட்டது. அதனால் அடுத்த தலைமுறை எழுத்தாளர்கள் கொஞ்சம் ஆர்வமிழந்தனர். ஆனாலும் அந்த முயற்சிகள் தொடர்ந்து நடந்திருந்தால் நல்ல விளைவு உருவாகியிருக்கும் என்றுதான் எனக்குப் படுகிறது.
விஷ்ணுபுரம் விழா தொடங்கிய நாள் முதல் நீங்கள் உங்களை முன்னிறுத்தாமல் இருப்பது மிக முக்கியமான விஷயம் என நினைக்கிறேன். இந்த விழாவின் நம்பகத்தன்மைக்கு அதுவே காரணம். அத்துடன் தொடர்ச்சியாக மற்ற எழுத்தாளர்களை முன்னிறுத்துகிறீர்கள். அவர்களைக் கொண்டாடுகிறீர்கள். அவர்கள்மேல் உரையாடலை உருவாக்குகிறீர்கள். விருதுபெறும் படைப்பாளிகள் மட்டுமல்லாமல் இளம்படைப்பாளிகள் மேலும் பெரும் கவனம் விழும்படிச் செய்கிறீர்கள்.
உண்மையில் காலச்சுவடு செய்யத்தவறிய விஷயம் இதுதான். ஆ.மாதவன், பூமணி, தேவதேவன் என்று தொடங்கி நீங்கள் முன்னிறுத்தியதுபோல அவர்கள் மற்ற எழுத்தாளர்களை முன்னிறுத்தியிருக்கக்வேண்டும். ஆண்டுக்கொரு படைப்பாளியை அப்படி முன்வைத்திருந்தாலே போதும். மிகப்பெரிய ஒரு மாற்றம் நிகழ்ந்திருக்கும். ஏனென்றால் அந்த ஒவ்வொரு படைப்பாளியும் ஒவ்வொரு வகையான அழகியலும் கருத்தியலும் உடையவர். அவர்களை முன்வைப்பதனாலேயே பன்முகத்தன்மையை முன்வைக்கலாம். இலக்கியத்தின் எல்லா குரல்களையும் இடம்பெறச் செய்வதாக விழாக்களை ஆக்கிவிடலாம்.
அந்த அம்சத்தால்தான் விஷ்ணுபுரம் விழா முக்கியமானதாக ஆகிறது. ஆ.மாதவன் உள்ளிட்ட படைப்பாளிகள் எவ்வளவு தூரம் இலக்கியக் கவனத்தில் இருந்து விலகி மறைந்திருந்தார்கள் என்று எனக்குத் தெரியும். திருவனந்தபுரம் செல்லும்போது நான் ஆ.மாதவனைச் சென்று பார்ப்பேன். அவர் தன்னுடைய காலம் முடிந்துவிட்டது என்றுதான் சொல்வார். தமிழினி வெளியீடாக நீங்களும் வேதசகாயகுமாரும் முன்னுரை பின்னுரை எழுதி வெளிவந்த கதைத்தொகுதிதான் அவருக்கு அவரும் சூழலில் இருக்கிறார் என்ற நம்பிக்கையையே அளித்தது.
விஷ்ணுபுரம் விருது அவருக்கு ஒரு மறுபிறப்பு போல. என்ன கைம்மாறு செய்யப்போகிறேன் என்று ஒரு கூட்டத்தில் அவர் பேசினார். அதன்பிறகு சாகித்ய அக்காதமி விருதும் வந்தது. இப்படி படைப்பாளிகளுக்கு இவ்விருது அளிப்பது ஒரு பெரிய அங்கீகாரம். பெரும் கவனம். வெறும் விருது அல்ல. அவர்களைப்பற்றிய உரையாடலையே உருவாக்குகிறது. அது சாதாரண விஷயம் அல்ல.
ஆனால் அதற்குச் சமானமாக அந்த எழுத்தாளர்களும் இந்த விஷ்ணுபுரம் அமைப்புக்கு பெரிய அடையாளத்தை அளித்திருக்கிறார்கள். வண்ணதாசன் ஒருபக்கம் ராஜ் கௌதமன் மறுபக்கம். தேவதேவன் ஒருபக்கம் ஞானக்கூத்தன் இன்னொரு பக்கம். ஞானக்கூத்தனை தேவதேவன் கவிஞர் என்றே ஏற்கமாட்டார். ஏனென்றால் அவருடைய ஆசிரியரான பிரமிள் ஏற்பதில்லை. ஆனால் அவர்களெல்லாம் ஒரே அரங்கில் கலந்துகொள்ளும்போது அந்த அரங்குக்கு ஒரு முழுமையான தன்மை உருவாகிறது. எல்லா குரல்களும் ஒலிக்கும் மேடையாக அது ஆகிறது.
ஆகவேதான் இன்றைக்கு இளம்படைப்பாளிகள் அங்கே பேசும்போது அவர்களுக்கு மதிப்பு உருவாகிறது. இடதுசாரிகளான வெயில் போன்றவர்களுக்கும் இடமிருக்கிறது. தூய அழகியல் பேசுபவர்களுக்கும் இடமிருக்கிறது. இந்த பொதுவான தன்மைதான் தமிழிலக்கியத்தின் சரியான அடையாளம் கொண்ட மேடையாக அமைந்திருக்கிறது. இதை ஒரு குழு, ஓர் அமைப்பின் குரல் அல்ல என்று காட்டுகிறது. இது தொடரவேண்டும். அவர்கள்தான் நம் முகம்.
அன்புடன்
எம்.சிவராமன்
பிகு
நீங்கள் விருதளிக்கையில் முதல் பரிசீலனை என்பது சாகித்ய அக்காதமி விருது பெறாத முக்கியமான இலக்கியவாதிகளுக்கு என்பது தெரியும். இருந்தாலும் நீல பத்மநாபனுக்காக ஒரு நல்ல நிகழ்வாவது நடத்தவேண்டும் என்று கோருகிறேன். இன்று மறக்கப்பட்ட கலைஞராக இருக்கிறார். தமிழில் அவருடைய இடம் எவராலும் மறுக்கப்படக்கூடியது அல்ல.