வேதசகாய குமார் நினைவில்…

அஞ்சலி- எம்.வேதசகாயகுமார்

இன்று, டிசம்பர் 17 வேதசகாயகுமார் மறைந்து ஓராண்டு ஆகிறது. ஒர் உற்ற நண்பரின் சாவின் ஓராண்டு என்பது சிக்கலானது. அவரை கடந்து வாழ்க்கை எவ்வளவு ஓடியிருக்கிறது என்னும் வியப்பு உருவாகிறது. கூடவே எண்ணியதுபோல அவர் கடந்துசெல்லவில்லை, அழுத்தமாக நினைவில் செறிந்திருக்கிறார்.

என்ன நடந்தது? முதலில் ஒரு நிலைகுலைவு. அதன்பின் அவருடைய சொற்கள் மற்றும் நினைவுகளைக்கொண்டு அவரை சுருக்கி ஒரு சொந்த வேதசகாயகுமாரை உருவாக்கிக் கொண்டேன். இதற்கு அவர் உடலுடன் குரலுடன் இருக்கவேண்டிய  தேவை இல்லை. இந்த வேதசகாய குமார் நினைவில் வந்துகொண்டே இருக்கிறார். எப்போதும் பேச்சில் எழுகிறார்.

வேதசகாயகுமார் எழுதியதை விட பேசியது மிக அதிகம். உரையாடல்தான் அவருடைய வழிமுறை. அதில் அவர் சொன்னவை என் பண்பாட்டுப்புரிதலை பலமடங்கு கூராக்கியவை. தமிழகச் சாதிகளின் வளர்ச்சி பற்றி, தமிழ் பொருளியலின் பரிணாமம் பற்றி, தமிழிலக்கியத்தின் வெவ்வேறு காலகட்டங்கள் பற்றி அவருக்கே உரித்தான ஆய்வுகள், பார்வைகள், ஊகங்கள் எப்போதுமிருந்தன. இந்த முப்பதாண்டுகளில் அவரும் அ.கா.பெருமாளும்தான் என் சிந்தனையை மிகப்பெரிய அளவில் பாதித்தவர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன் அவர் ஓர் உரையாடலில் சொல்லத் தொடங்கினார். ஆதன் என்னும் சொல் சங்க இலக்கியப்பரப்பில் எப்படிப் பயின்று வருகிறது. நல்லாதனார், ஆதனார், ஆதன் முதலிய பல பெயர்கள் சங்க இலக்கியத்தில் உள்ளன. ஆதன் என்றால் தந்தை, மூத்தவர் என பொருள். இந்த ஆதன்கள் ஒரு தனிக்குலமாக இருந்தார்களா? பண்பாட்டுக்குள் ஒரு தனிப்பண்பாடா?

அல்லது ஆதன் என்பது ஒரு தெய்வமா? பின்னாளில் சிவனை ஆதன், அத்தன் என்கிறார்கள். சிவனுக்கு முன் ஒரு தொல்தெய்வம், தெய்வத்தின் முதல்வடிவம் [Proto God] இருந்ததா?

வேதசகாயகுமாரின் உரையாடல்கள் அவ்வண்ணம் மின்னல்களை உருவாக்கிக்கொண்டே செல்பவை. ஆனால் அவர் பெரும்பாலும் அவ்வாறு சென்று உறுதியான கொள்கைகளை உருவாக்குவதில்லை. அதற்கான பொறுமை அவருக்கில்லை. அவர் விதைத்துவிட்டுச் செல்லவே விரும்பினார் என்று படுகிறது. அ.கா.பெருமாள் அவர்கள் சீரான, தெளிவான ஆய்வுநூல்கள் வழியாக தன் முடிவுகளை முன்வைத்துச் செல்வதுபோல வேதசகாயகுமார் செய்யவில்லை.

இருபதாண்டுகளுக்கும் மேலாக நான் வேதசகாயகுமார், அ.கா.பெருமாள் மற்றும் குமரிமைந்தன் ஆகியோரின் உரையாடல்களத்திலேயே இருந்திருக்கிறேன். மண்டையை வெடிக்கவைக்கும் பண்பாட்டு முடிச்சுகள், திகைப்பூட்டும் வரலாற்று ஆழங்களை கண்டுகொண்டே இருந்தேன். ஆகவேதான் ஏதாவது ஒரு மேலைநாட்டு கல்வியாளரின் இலக்கிய- பண்பாட்டுக் கொள்கையை பார்த்ததுமே பரவசமடைந்து, தலைமேல் ஏற்றுக்கொண்டு, பரவசக்கூச்சலிடும் தமிழ் முதிரா அறிவுஜீவிகளை ஒரு மென்மையான புன்னகையுடன் கடந்துசெல்கிறேன். நாம் இங்கே அகழவும் அறியவும் எல்லையற்ற நுட்பங்களும் ஆழங்களும் உள்ளன.

வேதசகாயகுமாரின் தனிப்பெரும் சாதனை என்பது தமிழ் இலக்கிய விமர்சன வரலாற்றுக் கலைக்களஞ்சியம். இணையத்தில் வெளியாகி நீண்டநாள் இருந்த அந்நூலை மேலும் செம்மைசெய்து அச்சுவடிவில் கொண்டுவர அவர் விரும்பினார். அதன்பொருட்டு இணையவடிவை விலக்கிக் கொண்டார். அதைச் செய்திருக்கக்கூடாது, இணையவடிவமே மிக உதவியானது என்பது என் எண்ணம். அவர் அவ்வண்ணம் நினைக்கவில்லை. அவருக்கு இணைய உலகமே அறிமுகமில்லை. அடையாளம் வெளியீடாக அந்தப் பெருநூல் வெளிவரவிருப்பதாகச் சொன்னார்கள். வெளிவரவேண்டும்.

இன்று காலை பத்துமணிக்கு வேதசகாயகுமாரின் கல்லறை திறப்பு என்று அவர் மகன் விஜய் கூப்பிட்டுச் சொல்லியிருந்தான். ஆனால் என் மனதில் எப்படியோ டிசம்பர் 16 என பதிவாகியிருந்தது. நேற்றே காலையில் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன்.திருமதி வான்மதி கௌசல்யா வேதசகாயகுமார் அவர்களை பார்த்துவிட்டு திரும்பி வந்தேன்.

இன்று காலையில் அவர்கள் வீட்டுக்குச் சென்றேன். அங்கிருந்து ஆசாரிப்பள்ளம் அருகே தனியாக அமைந்துள்ள கல்லறைத் தோட்டத்துக்கு சென்றோம். முப்பதுபேர், அனைவருமே குடும்ப உறுப்பினர்கள். வேதசகாய குமாரின் கல்லறை அழகாக அமைந்திருந்தது. கரியகல்லில் அவருடைய படம் புள்ளிகளால் வரையப்பட்டிருந்தது. மெல்லிய குறும்பு கொண்ட அச்சிரிப்பை உருவாக்க முடிந்திருந்தது.

“தீபச்சுடரை கொளுத்திக்கொண்டவன் அதை மறைத்துவைக்க மாட்டான். அனைவருக்கும் உதவும்படி அதை ஓர் உயர்ந்த மேடை மேல் பொருத்தி வைப்பான்” என்னும் பைபிள் வரி பொறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு உகந்த வரிதான்.

அமைதியான சூழலில் அவருக்காக ஒரு பிரார்த்தனை. மலர்கள் சூட்டி அவர் கல்லறையை வணங்கினோம். அதன்பின் திரும்பி வந்தேன். எனக்காக மலையாள இயக்குநர் வினோத் காத்திருந்தார்.  அவருடன் பேசினேன். சைதன்யாவின் தோழி கிருஷ்ணகிரி அன்பு வந்திருந்தாள். பேச்சின் வழியாக வேதசகாயகுமார் நினைவிலிருந்து அகன்றார்

 

மாலையில் லக்ஷ்மி மணிவண்ணனும் கோயில்பட்டியில் இருந்து உதவி இயக்குநர் மாரிமுத்துவும் நடிகர் பெருமாளும் வந்திருந்தனர். இருவருமே அங்காடித்தெருவில் பணியாற்றியவர்கள். பெருமாள் அதில் கழிப்பறை கழுவத் தொடங்கி மெல்ல அங்காடித்தெருவில் நிலைகொள்ளும் உழைப்பாளியாக நடித்தவர்.

நெல்லைமாவட்ட சாதிகளின் எழுச்சி வீழ்ச்சி பற்றிப் பேசிக்கொண்டிருந்தோம். நெல்லையின் பண்பாட்டுச் சிக்கல்களை நோக்கி பேச்சு சென்றது. நான் அதைப்பற்றி வேதசகாயகுமாரின் கருத்து என்ன என்று விரிவாகப் பேசிக்கொண்டிருந்தபோது சட்டென்று இன்று அவர் நினைவுநாள் என நினைவுகூர்ந்தேன். மணிவண்ணனிடம் அதைச் சொன்னேன். இனி அவ்வாறுதான் பிரியத்துக்குரிய குமார் என்னுடன் வாழ்வார்.

விரியும் கருத்துப் புள்ளிகள் : வேதசகாயகுமாரின் பண்பாட்டு விமரிசனங்கள்.

வேதசகாயகுமாரின் கலைக்களஞ்சியம்

வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்

எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்-நாகர்கோயில்

வேதசகாயகுமார்- கமல்ஹாசன் அஞ்சலி

வேதசகாயகுமார்- ஒரு நூல்

வேதசகாயகுமார், இயற்கைவேளாண்மை,வசை

வேதசகாயகுமார் விழா

வேதசகாயகுமார்’60

குமார் 60 கடிதங்கள்

 

 

முந்தைய கட்டுரைஅருண்மொழியின் முதல் புத்தகம்- அ.முத்துலிங்கம் முன்னுரை
அடுத்த கட்டுரைஅருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்