சந்திப்புகள், விழாக்கள்

அன்புள்ள ஜெ,

விஷ்ணுபுரம் விழா பற்றிய பதிவுகளை பார்த்துக்கொண்டிருக்கிறேன். வாசித்து வாசித்து தீரவில்லை. சென்ற பதினொரு ஆண்டுகளில் நிகழ்ந்த இலக்கிய இயக்கத்தின் வரலாறு பிரமிக்கச் செய்கிறது. தமிழ் நவீன இலக்கிய வரலாற்றில் இதைப்போல இன்னொன்று இல்லை என்றுதான் நினைக்கிறேன்.

நான் கேட்க விரும்புவது ஒன்று உண்டு. நான் ஓர் இலக்கிய வாசகன். எழுதவேண்டுமென்ற ஆசை உண்டு. நிறைய வாசிக்கிறேன். இரண்டு ஆண்டுகளாகத்தான் இலக்கிய அறிமுகம். எனக்கு பொதுவாகவே பொதுநிகழ்ச்சிகளில் ஆர்வம் குறைவு. சந்திப்புகளை தவிர்ப்பேன். ஆகவே இதுவரை எந்த இலக்கிய நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதில்லை.

இதனால் எனக்கு என்ன நஷ்டம் வரப்போகிறது? நான் ஏன் கலந்துகொண்டே ஆகவேண்டும்?

ஆர்

அன்புள்ள ஆர்,

நான் தொழிற்சங்கச் செயல்பாடுகளில் இருந்தபோது ஒரு சீர்திருத்தம் வந்தது. தொழிற்சங்கச் சந்தாவை நிர்வாகவே சம்பளத்தில் வசூல் செய்து நேரடியாக சங்கத்துக்கு அளித்துவிடும். வாக்களிப்பில் ஊழியர் எந்த சங்கம் என சொன்னால்போதும்.

ஆரம்பத்தில்அது தொழிற்சங்கத்துக்கு வசதியானதாகத் தெரிந்தது. முன்பெல்லாம் 75 சதவீதச் சந்தாப்பணம்தான் வசூலாகும். இப்போது நூறுசத வசூல். அதுவும் வசூலுக்கான செலவு இல்லாமல் மொத்தமாக.

ஆனால் சில ஆண்டுகளிலேயே தொழிற்சங்க இயக்கமே வலுவிழந்து கிட்டத்தட்ட இல்லாமலேயே ஆகிவிட்டது. ஏனென்றால் தொழிற்சங்க இயக்கம் நிகழ்வதே அந்த சந்தாவசூல் வழியாகத்தான். அதன்வழியாக சங்கம் ஒவ்வொரு ஊழியரையும் மாதந்தோறும் தொடர்பு கொள்கிறது. அந்த தனிப்பட்ட தொடர்பு மிகமிக முக்கியமானது. அது அவர் தனியாக இல்லை, அவர் ஒரு பேரமைப்பின் ஒரு பகுதி என்னும் உணர்வை அளிக்கிறது.

கட்சிகள் நடத்தும் மாநாடுகள், கருத்தரங்குகளின் நோக்கம் இதுவே. திருவிழாக்களின் நோக்கமும் இதுவே. நாம் ஒரு திரள் என உணர்கிறோம். அது நம் தனிமையை இல்லாமலாக்குகிறது. தனிமையின் விளைவான பொருளின்மையுணர்வை அழிக்கிறது. இலக்கியத்திற்கும் அந்த திரளுணர்வு அவ்வப்போதேனும் தேவையாகிறது.

தீவிர இலக்கியத்தில் செயல்படுபவர்கள் எவராயினும் இங்கே தனியர்கள்தான். அரசியல்கட்சியைச் சேர்ந்தவர்கள் எப்போதும் கும்பலாகவே இயங்குகிறார்கள். இலக்கியவாதி அவ்வண்ணம் இயங்கலாகாது. கூடாது. அவனுடையது தனிமையின் வழி. அகத்தே செல்ல தனிமையே வாசல்.

ஆனால் அவ்வப்போது ஓர் வெறுமையுணர்வு எழுகிறது. உரையாட இணைநெஞ்சர் எவருமில்லை என்னும் உணர்வு முதன்மையாக. இலக்கியவாதிக்கு அந்த உரையாடல் முக்கியமானது. அதை இலக்கிய அரட்டை என்றே நான் சொல்வதுண்டு. அது இலக்கியவாசகனின் கொண்டாட்டங்களில் முக்கியமானது. அவன் வேறெந்த வழியை விடவும் இலக்கிய அரட்டைகளிலேயே அதிகமாகக் கற்றுக்கொள்கிறான்.

சமீபகாலமாக அரசியலாளர் மற்றும் பொதுவான வம்பாளர் இலக்கியவாதிகள் மேல் தொடுக்கும் கூட்டான தாக்குதல் உச்சமடைந்துள்ளது.  முன்பெல்லாம் இலக்கியக் களத்தில் குரலே அற்றிருந்த இலக்கியமறியாத கும்பல் ஒன்று இணையம் வழியாக இன்று எங்கும் ஊடுருவி ஓசையிடுகிறது. அவர்களிடம் எதுவும் பேசமுடியாது. எதை எப்படி பேசினாலும் அவர்களுக்கு தெரிந்த சிலவற்றைக் கொண்டே புரிந்துகொள்வார்கள். ஆனால் அவர்களின் குரல் ஒலிக்காத சூழலே இல்லை.

இவர்கள் எந்தக் கருத்தையும் பேசவிடாமல் திரித்து, வசைபாடி, திசைமாற்றி கொண்டுசெல்கிறார்கள். எந்த இலக்கியவாதியையும் அவர்கள் போற்றுவதில்லை – கட்சி முகங்களைத் தவிர. அத்தனை இலக்கியவாதிகளையும் வசைபாடுகிறார்கள். இது அளிக்கும் சோர்வை பல வாசகர்களிடம் காண்கிறேன்.

அச்சோர்வுச் சூழலில் இத்தகைய இலக்கியக் கூடுகைகள் ஆழ்ந்த நம்பிக்கையை அளிக்கின்றன. நீங்கள் எவராயினும் உங்களுக்கு நிகருளம் கொண்ட ஒருசிலரை இங்கே கண்டடைய முடியும். அண்மையில் காளிப்பிரசாத் ஓர் ஏற்புரையில் பள்ளி, கல்லூரி நாட்களுக்குப் பின் வாடாபோடா என அழைக்கும் நண்பர்களை இலக்கியச் சூழலிலேயே பெற்றேன் என்கிறார். அது இயல்பானது. வேறெவரிடமும் இலக்கியவாசகன் அண்மை கொள்ள முடியாது.

ஆகவே கூடுமானவரை சந்தியுங்கள். உரையாடுங்கள். சேர்ந்து பயணம் செய்யுங்கள். எந்த வகையான சந்திப்பு வாய்ப்புகளையும் தவறவிடாதீர்கள். இலக்கியக்கூட்டங்கள், கருத்தரங்குகள், புத்தகக் கண்காட்சிகள் எவற்றையும். மாதந்தோறும் சந்திக்கும் நிகழ்வுகளை நடத்த முடிந்தால் மேலும் நல்லது.

சந்திப்புகள் நம் ஆர்வத்தை புத்துயிர் பெறச்செய்கின்றன. இலக்கியமென்னும் இயக்கம் மேல் நம்பிக்கை கொள்ள செய்கின்றன. எந்தக் கூட்டத்திலும் கலந்துகொள்ளாத பலரை எனக்குத் தெரியும். அவர்கள் மெல்ல மெல்ல தனிமைகொண்டு இலக்கியத்தில் இருந்தே விலகிச் செல்வதை கண்டிருக்கிறேன். பல முகங்கள் நினைவிலெழுகின்றன. விலகிச்சென்று அவர்கள் ஒன்றும் சுகப்படவும் இல்லை. ஏனென்றால் அவர்களின் மெய்யான மகிழ்ச்சி இருப்பது இங்கேதான்.

எழுதிக்கொண்டிருப்பவர்களுக்கு வாசகர்கள் இருக்கிறார்களா என்னும் ’இருட்டுமலைப்பு’ அவ்வப்போது உருவாகும். தமிழ்ச்சிற்றிதழ்ச்சூழலில் அதை தவிர்க்கவே முடியாது. இத்தகைய கூடுகைகளில் அவர்கள் வாசகர்களைச் சந்திக்க முடியும். யுவன் சந்திரசேகர், இரா முருகன், சரவணன் சந்திரன், பாவண்ணன், தேவதேவன் என பலதரப்பட்ட எழுத்தாளர்கள் இந்தச் சந்திப்புகளில் அவர்களுக்கான வாசகர்களை சந்தித்திருக்கிறார்கள் என குறிப்பிட்டிருக்கின்றனர்.

’விர்ச்சுவல்’ சந்திப்புகள், காணொளிகள், இணைய உரையாடல்கள் உதவியானவையா? தொடர்பில் இருக்க அவை உதவுகின்றன. ஆனால் அவை மட்டுமே என்றால் தனிமை பெருகுகிறது என்பதே அனுபவ உண்மை.

ஜெ

முந்தைய கட்டுரைவிக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் – லக்ஷ்மி மணிவண்ணன்
அடுத்த கட்டுரைவிக்கிபீடியா, ஓர் அயோக்கியத்தனம்