சின்ன வீரபத்ருடு கடிதங்கள்- 4

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3

அன்புள்ள ஜெ

சின்ன வீரபத்ருடு கவிதைகளை வாசிக்கையில் முதலில் ஒரு திகைப்பு. சாப்பாட்டின் நிறம் மாறியிருந்தால் உடனே ஒரு திகைப்பு வருகிறது அல்லவா அதுபோல. ஒரு சிவப்புநிற இட்லியை உடனே சாப்பிட முடியுமா? ஆனால் மெல்லமெல்ல இப்போது இவற்றின் மொழியும் அமைப்பும் பழகிவிட்டது.

ஒன்று மட்டும் புரிந்துவிட்டது. உன்னை நேசிப்பவர்களின்

நோய் தீரவேண்டும் என்றால் மருந்து நீ தான் அருந்தவேண்டும்.

என்று சிவனிடம் சொல்லும் கவிதை ஒரு படபடப்பையே அளித்துவிட்டது. ஒரு அதிநவீன பக்திக்கவிதை.

எஸ்.சிவக்குமார்

 

அன்புள்ள ஜெ,

வீரபத்ருடுவின் கவிதைகளில் எனக்குப் பிடித்தது இந்த  அழகான காதல் கவிதை. ஓவியப்பெண்ணிடம் காதல். சுக்தாயின் பெண். அவள் மிகமென்மையாக வரையப்பட்டவள். புகைபோல என்று தோன்றியது. அவளிடம் காதலை காட்டினால் அவள் அதில் காமத்தை பார்க்கிறாள்.

சத்தமேதும் இடாத இந்த ஏரியில் ஒரு தூண்டிலிட்டுள்ளார்கள்.

இத்தனை காலத்திற்குப்பின் மீன் ஒன்று அதன் குரலைக் கேட்டது.

என்று அந்த ஓவியத்துக்கு தன் உள்ளம் அளித்த எதிர்வினையைக் கவிஞர் சொல்கிறார். அவளிடம் தன் வேட்கையை

இந்த மண்அகலில் ஆறாத பிழம்பு.

என்கிறார். ஆனால் அடுத்தவரி, ரூமியின் வரியுடன் இணைந்து இக்கவிதையில் அமையும் விதம் அற்புதமானது

குமரியே,

ஒரு சொல் கேள், சுடரில் உள்ளதே விட்டிலிலும் உள்ளது.

மிக அழகான கவிதை. சமீபகாலத்தில் இப்படி மனம் கவர்ந்த ஒரு கவிதையை வாசிக்க நேரவில்லை

எம்.ரவீந்திரன்

சின்ன வீரபத்ருடு கடிதங்கள்-2

சின்ன வீரபத்ருடு கடிதங்கள் 1

முந்தைய கட்டுரைஜெய்ராம் ரமேஷ், இந்திரா காந்தி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் – லக்ஷ்மி மணிவண்ணன்