அருண்மொழியின் நூலும் சீரோ டிகிரியும்- பதில்

பனி உருகுவதில்லை. அருண்மொழி நங்கை. சீரோ டிகிரி பதிப்பகம்- வாங்க

அன்புள்ள ஜெ

நலம்தானே?

தங்கள் மனைவி அருண்மொழி நங்கையின் முதல் புத்தகம் பனி உருகுவதில்லை வெளிவந்திருப்பதை அறிந்தேன். முக்கியமான நூல் அது. அதன் முழுக்கட்டுரைகளையும் நான் வாசித்திருக்கிறேன். மிக இயல்பான ஒழுக்கு கொண்ட கதைபோன்ற கட்டுரைகள். நுட்பமான படிமங்கள் வழியாக மையத்தைச் சுட்டுபவை. குறிப்பாக இரட்டைப் படம் கொண்ட ஒரு டாலரை சிறுமி கடித்து ஒன்றாக்குவது, பிரிப்பது வழியாக அவளுடைய ஆழ்மனம் வெளிப்படும் ஒரு கட்டுரை ஒரு ரேமண்ட் கார்வர் சிறுகதையின் அமைதியை கொண்டிருந்தது.

நான் கேட்பது ஒரு சின்ன வம்புதான். ஏன் ஸீரோ டிகிரி பதிப்பகம் அந்நூலை வெளியிடுகிறது? விஷ்ணுபுரம் பதிப்பகம் வழியாக உங்களுடைய நூல்கள் மட்டுமே வெளியாகும் என்ற கட்டுப்பாடு ஏதாவது உண்டா?

அர்விந்த்

 

அன்புள்ள அர்விந்த்,

விஷ்ணுபுரம் பதிப்பகத்தில் இப்போது என் நூல்கள் மட்டுமே வெளிவருகின்றன. ஆனால் எதிர்காலத்தில் எல்லா நூல்களும் வெளிவரும். அருண்மொழியின் நூலும் அதில் வெளிவந்திருக்கலாம். ஆனால் அவள் ஸீரோ டிகிரி பதிப்பகம் வழியாக அது வெளியே வரவேண்டுமென விரும்பினாள். காரணம் சாரு நிவேதிதா மீது கொண்டிருக்கும் பிரியம்.

நெல்லை, குமரி மாவட்டத்தினருக்கு ஊர்ப்பற்று அதிகம் என்று ஒரு பேச்சு உண்டு. ஆனால் தஞ்சைக்காரர்களுக்கு இருப்பது நம்மூர் மொழியில் சொல்வதென்றால் ’அதுப்பு’. அவர்களைப் பொறுத்தவரை தஞ்சையில் பிறந்தால் இலக்கியம், சங்கீதம் எல்லாம் தானாகவே வரும். மற்றவர்களுக்கு என்னதான் செய்தாலும் அந்த அளவுக்கு வராது, கஷ்டப்படவேண்டும். அருண்மொழி மாயூரம் வேதநாயகம் பிள்ளை தொடங்கி சுரேஷ்பிரதீப், மயிலன் சின்னப்பன் வரை ஒரு பட்டியல் போடுவாள். அருண்மொழி கணக்கில் சிதம்பரம்காரரான மௌனிகூட தஞ்சாவூர்தான். அது எப்படி என்று கேட்பவர்களுக்கு நுண்ணுணர்வு போதாது என்று பொருள். ஏன் வம்பு?

அருண்மொழிக்கு சாரு நிவேதிதா, அ.மார்க்ஸ் எல்லாம் அவளுடைய ஊர்க்காரர்கள். அதற்கு அப்பால் சாரு தன்னிச்சையான அகஓட்டம் கொண்ட ஒரு படைப்பாளி. கட்டுரைக்கும் புனைவுக்கும் இடையேயான வேறுபாட்டை அழித்த கலைஞர். சாரு நிவேதிதா அவள் கட்டுரை எழுத ஆரம்பித்ததுமே அழைத்து பாராட்டியதனால் பரவசம். ஆகவே சீரோ டிகிரி பதிப்பகமே அவள் நூலை வெளியிடவேண்டும் என்று விரும்பினாள்.

அவளுடைய ‘சொந்த’ எழுத்தாளர் என்று யுவன் சந்திரசேகரைச் சொல்லலாம். இசை அவர்களுக்கிடையே பொதுவானது. அவருடைய இசை பற்றிய நாவல்களுக்காக மட்டும் ஒரு கருத்தரங்கு அமைக்கும்படிச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். தமிழின் எழுத்தாளர்கள் பலருடன் அவளுக்கு நல்ல நட்பு உண்டு. எம்.கோபாலகிருஷ்ணன், தேவதேவன் எல்லாம் அவளுக்கு இருபத்தைந்தாண்டுக்காலப் பழக்கம். பதினைந்தாண்டுகளுக்கு முன்பு, அவள் ஒரு வரியும் எழுதாமலிருந்தபோதே ”ஒரு புத்தகம் எழுதினால் அசோகமித்திரன் அல்லது அ.முத்துலிங்கம்தான் முன்னுரை எழுதணும்” என்றாள்.

அவளுடைய இலக்கிய வாசிப்பு, ரசனைகள் தனியானவை. இருபதாண்டுகளுக்கு முன்பு நான் சுந்தர ராமசாமியின் ‘குழந்தைகள் ஆண்கள் பெண்கள்’ நல்ல நாவல் அல்ல என்று ஒரு கட்டுரை எழுதினேன். அடுத்தவாரமே அது ஒரு சிறந்த நாவல் என அவள் ஒரு கட்டுரை எழுதினாள். அதில்தான் பெண்கள் ரொமாண்டிஸைஸ் பண்ணப்படாமல் வெளிப்பட்டிருக்கிறார்கள் என்பது அவள் பார்வை. அந்நாவல் பற்றி வந்த சிறந்த மதிப்பீடு அதுவே என்று சுந்தர ராமசாமி கடிதம் எழுதினார். “நான் ஓர் இலக்கியவாதியைப் பார்க்கிறேன், தொடங்குங்கள்” என அதில் எழுதியிருந்தார்.

ஆனால் அவள் எழுத ஆர்வம் காட்டவில்லை. நிறைய வாசிப்பவர்களுக்கு அந்தத் தயக்கம் வருவதுண்டு. இசை கேட்பதும் எழுதாமலாக ஒரு காரணம். யுவன் சந்திரசேகர் அவன் வாழ்க்கையில் நடுவே ஒரு பத்தாண்டுகளை அப்படி இசையில் விட்டிருக்கிறான்.  தன் தம்பியின் இழப்பு உருவாக்கிய ஆழமான உளநெருக்கடியை கடக்கும்பொருட்டு அருண்மொழி எழுதினாள். அது அவளை மீட்டது. இதிலுள்ளது ஒரு அந்தரங்கமான காலப்பயணம். அதில் நான் எவ்வகையிலும் தலையிடவில்லை. அது அவள் விருப்பபடியே வெளியாகிறது.

ஜெ

அ.முத்துலிங்கம் முன்னுரை

https://www.vishnupurampublications.com/

முந்தைய கட்டுரைவேதசகாய குமார் நினைவில்…
அடுத்த கட்டுரைசின்ன வீரபத்ருடு -கடிதங்கள் 2