தூர்வை எனும் நாவல்

மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்

நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்

பனையுள் இருந்த பருந்தது போல

நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே

”மனையுள் இருந்தவர் மாதவர் ஒப்பர்”அதாவது இன்று மினுத்தானும் மாடத்தியும், சற்று அதிகமாக மாடத்தி.  நன்கு உழைப்பவர்கள், உணவளிப்பவர்கள் (ஆர்க்கும் இடுமின் அவரிவர் என்னன்மின்), அனைவர்மீதும் அன்புடையவர்கள்.  தமக்குழைத்த தாம்பெறாத பிள்ளை குருசாமிக்கு தன் பிள்ளைக்கு இணையாக திருமணம் செய்வித்து சொத்தினை பகிர்ந்தவர்கள்.

”நினைவுள் இருந்தவர் நேசத்துள் நிற்பர்”

மினுத்தானையும் மாடத்தியையும் சொல்ல வேண்டியதில்லை, சீனியம்மாள், குருசாமி, பெரியசோலை, பொன்னுத்தாய், முத்தையா (என்ன கொலை செய்துவிட்டான்.  சரி போகட்டும்), கிருஷ்ணப் பருந்தைப் பார்க்காமல் சாப்பிடக் கூடாது என்றிருந்த சாத்தன், துணிவெளுக்கும் வேலை இல்லாதபோது முயல் வேட்டைக்குப் போகும் சிவனான் (ராத்திரி வெள்ளெலி வேட்டை), பஞ்சாயத்து பேசச்செல்லும் மேக்காட்டு சண்டியர் கருமலையான், சண்டைச் சேவல் வளர்க்கும் உளியன். கொலை செய்தவர் என்று சந்தேகிக்கப்படும் நல்லவரான பொன்னுத்தேவர், சிலம்பாட்ட வாத்தியார் ராமுக்கிழவன், பேய்கதைகள் சொல்லும் கிழவன் முத்துவீரன், உருளக்குடி சமுசாரிகள் என நீளும் பட்டியல்.

வனவாசியின். கோபல்ல கிராமத்தின், மண்ணும் மனிதரும் நாவலின், தூர்வையின் என நியாபகத்தில் நிற்கும் பாத்திரங்கள் அனைவரும் நேசிக்கப்படுவர்.

பனையுள் இருந்த பருந்தது போல

– இங்கு திருமூலரின் அனுமதியுடன் பருந்தை ஆந்தையாக மாற்றிக்கொள்ள முடியுமோ என்று எண்ணுகிறேன்.  அது எதை நினைத்து திடீரென்னு அலறுமோ.  ஒருவேளை நல்ல கதைசொல்லிகள் கூறக்கேட்ட கதைகளை நினைத்து அலறும் போலும்.  நான் பனைமரத்து ஆந்தையின் அலறலைக் கேட்டதேயில்லை.  அதைக் கேட்கும் ஆசை நிறைவேற கூகைச்சாமி அருள்புரிய வேண்டும்.

நினையாத வர்க்கில்லை நின்இன்பந் தானே

– அதுபோல நல்ல நாவல் வாசிப்பின்பம் வாசிக்க வேண்டும் என்று நினையாதவர்க்கு இல்லை.

இப்போது சற்று திமிராகவே பலரிடமும் சொல்லுவேன் எங்களிடம் கிரா இருக்கிறார், விபூதி பூஷன், சிவராமகராந்த், பூமணி, சோ. தர்மன், நாஞ்சில் நாடன், ஜெமோ அப்படியே அப்படியே நீளும் பட்டியல் எனப்பல நல்ல கதைசொல்லிகள்  இருக்கிறார்கள்.

சோ. தர்மன் அவர்களின் தூர்வை வனவாசி, மண்ணும் மனிதரும் நிரையில் எனக்கு இவ்வாறான நிறைவளித்த ஒன்று.  மண்ணும் மனிதரும் என்ற தலைப்பு கோபல்ல கிராமத்திற்கும் தூர்வைக்கும் பொருந்துவதல்லவா.

உய்த்துணரப்பெற்று உயிர்ப்புடன் வாழப்பெறும் உலகியல் மெய்மையின் கதவுகளைத் திறக்கிறது.  மெய்மையின் கோணத்தில் உலகியலும் மெய்மையே எனினும் வாழப்பெறாத உலகியல் மெய்மை ஆவதில்லை.  வாழ்கை வாழப்பெற நல்ல கதைசொல்லிகளின் அருள் தேவைப்படுகிறது.

உலகியலின் வாழ்தல் எனில் நுகர்தல்.  நுகர்தல் எனில் கதைகேட்டல்.  கதையின் துணைகொண்டு நுகர்வு பயில்தல்.  நுகர்வு கலாச்சாரம் என்கிறார்கள் இல்லையே எதையும் உண்மையில் நுகர்வதே இல்லையே பண்டக்குவிப்பு கலாச்சாரம் திணிப்பு கலாச்சாரம் என்றல்லவா இருக்க வேண்டும்?.  கம்மங்கஞ்சியை சுவைக்கும் தூர்வையின் உழைக்கும் சம்சாரிகளும் பெண்களும் – அது நுகர்வு.  சுவைக்க வேண்டியதில்லை பலவகை உணவுகளைத் வெறுமே தின்றுகொண்டிருக்கலாம்.  நடக்கவேண்டியதில்லை ஏராளமான காலணிகள் வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வாங்கி வைத்துக்கொள்ளலாம் எதையும் வாசிக்க வேண்டியதில்லை.  வலியினை அறியவேண்டியதில்லை சந்தேகத்தின் பேரில் மாத்திரைகள் விழுங்கி வைக்கலாம்.  எந்த ஒன்றையும் முழுமையாக அறிந்துகொள்ளாமல் உதிரிக் கருத்துக்களில் உருண்டு புரளலாம் என்பதல்லவே நுகர்வு.  உண்மையில் நுகர்வு கலாச்சாரம் நல்லது வந்தால் வரவேற்கப்பட வேண்டியது.  முன்பு கொஞ்சம் அது நன்றாக இருந்தது எனத்தோன்றுகிறது.  மிகுதி வந்தன பொருட்கள் போயினது நுகர்வு.

உலகியல் நுகர்வின் வழி உலகு தன் கருணையால் கனிந்து வழங்கும் மெய்மை – அவ்வாறு வழங்குவது உலகின் கடமையாகவும் உள்ளதல்லவா.  முழுமை பெறும் உலகியல் ஆன்மிகமாக – இங்கு மீண்டும் கதைசொல்லிகளின் கருணை தேவை என்கிறேன்.  இல்லாவிட்டால் புலன்கள் எவ்வாறு தெரிவு கொள்ளும்? அவற்றின் எல்லை உணர்த்தி எது மனதை தகுந்தவை கொண்டு நிரப்பும்? நிலத்தை எவ்வாறு அறிந்துகொள்வோம், மலைகளை, நீரை எவ்வாறு அறிவோம்.  மரங்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், வெயில், காற்று என உலகை எவ்வாறு உள்ளம் கொள்ளும்? உலகை உணர்வு கொள்ளாதவன் எவ்வாறு உலகின் பரிசாம் மெய்மை கொள்ளமுடியும்? கதைசொல்லிகள் இல்லாமல் மனிதஉலகு எவ்வாறு ஆளப்பட  (உள்ளும் புறமும்) முடியும்?

இன்று சாக்கு தயாரிக்கும் தொழிலுக்கும் தீப்பெட்டித் தயாரிக்கும் தொழிலுக்கும் விளைநிலத்தைக் கொடுத்துவிட்டு மனிதர்கள் மாற்றம் கொள்ளும் சூழலைச் சொன்னது தூர்வை.  புறம் அவதானிக்கப்பட்டு அகம் என்றானது எனக்கு.  உணவு தவிர்த்து உடல்நீத்த மாடத்தி என் தெய்வங்களுள் ஒருவரானார்.  வெண்முரசும் வனவாசியும் போல தூர்வை என் ஆன்மிக அனுபவம்.

பிறகு பல சம்பவங்கள் நிகழக்கூடும் குறிப்புணர்த்தி தூர்வையை முடித்திருக்கிறார் ஆசிரியர்.

நல்லதொரு நாவல்.  வாசிப்பின்பம் என்பேன்.  யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று விழைகிறேன்.

அன்புடன்

விக்ரம்

கோவை

தூர்வை வாங்க

முந்தைய கட்டுரைசெந்தில் ஜெகன்நாதன்: உணர்வுகளின் புனைவுலகம்- இரம்யா
அடுத்த கட்டுரைஜா.தீபா – கடிதங்கள்-4