திருச்செந்தாழை கதைகள் பற்றி… 

பா. திருச்செந்தாழை விக்கி பக்கம்
விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்
[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

அன்புள்ள ஜெயமோகன்,

அழுக்கேறிய மெழுகுவர்த்திகளையும்,  அதிலிருந்து சிந்தும் பளிங்குக் குமிழ்களையும் பார்த்துக் கொண்டிருந்தேன்.  சித்திரையும் மரியமும் உருப்பெற்று எழுகிறார்கள்.

பிழைக்கத்தெரியாமை,  தந்திரங்கள் அற்ற எளிய வாழ்தல்,  குழந்தைமை,  திருப்தி கொள்ளுதல்,  அதன் மறுதலிக்க முடியாத தீர்க்கம்.

தந்திரங்களின் உவகை,  வன்மம்,  திருப்தியின்மை,  ஆதிக்கம் செலுத்துதல்,  பொருளாதார முன்னேற்றம்,  கட்டுப்பாடுகளின்மை,  ஜெயித்தலின், அது நிகழ்ந்து கொண்டே இருக்க வேண்டிய அத்தியாவசியத்தின் அகோரப் பசி.

இருமைகளினுள் பகடைகள் போல முட்டி மோதி சிதறுதல்.  முன்னோக்கி சென்று கொண்டே இருப்பதற்கும்,  ஆட்டம்  தேவையின்றி வெறுமனே வெளியில் அமர்ந்திருப்பதும்.  அப்படி வெளியே இருப்பதன் மூலமாகவே வேறொரு வகையில் வெற்றியின் திண்மையை தனக்கே தனக்கான உலகில் உருவாக்கி விடுதலுமான கள்ளமற்ற தன்மை.

அவர்கள் இருவருமே வேறு வேறு வகையில் ஜெயிக்கிறார்கள். தோற்கிறார்கள். அதன் இருமையின் உச்சிமுனைகளைத் தொட முயலும் ஆடல் போல இருந்தது.

கரிசனத்திற்கான முதலீடு எனும் சொல்லிலிருந்து எந்தப்புள்ளியில் சிங்கி விலகித் தான்  தீர வேண்டும் எனும் அடுக்குகளுக்குள் மெல்ல மெல்ல லீலா முளைத்து எழுகிறாள்.

அப்பா பலசரக்கு கடையில் தான் வேலை பார்த்தார். ஒரு 35 வருடங்களாக. சிறந்த உழைப்பாளி. பொருட்களின்,  அளத்தலின்,  வாக்கின்,  மனிதர்களுடன் புழங்குவதில் எல்லா நுணுக்கங்களும் அறிந்தவர். ஆனால் சொந்தமாக வியாபாரம் செய்த பொழுதெல்லாம் தோற்றார்.  கேட்டால் பலவித ஜோசியக்கணக்குகளையும்,  கர்மபலன் இப்படி ஏதாவது சொல்வார்.  ஆனால் அவரால் அந்த அரசமூட்டுக் கடையை விட்டு வெளி வர முடியவில்லை.  பொறுப்புகளை ஏற்கும் நிதானிக்கும் தைரியம் இல்லை.  புரிந்து கொள்ளுதலும்,  சொந்தத் திணவும் இருக்கவில்லை.  உண்மையில் எல்லாவற்றிற்கும் யாரையோ சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருந்தது.  அவருடைய வியாபாரம் ஒவ்வொரு முறை நசிவடையும் பொழுதும் திரும்பவும் அதே கடைக்கு அதே போல சென்று விடுவார்.  அங்கு அது ஒரு இளைப்பாறும் இடமாக சுதந்திரங்களுடனும்  நிம்மதியாகவும் வியாபாரப்  பொறுப்பற்றும் உழைக்க முடியும்.

வியாபார நுணுக்கமற்ற எளிய மனிதர்களின் தோல்விகள்,  அவர்கள் ஒரு பால்ய சிறுவன் போலத் திரும்பத் திரும்ப பெண்மையிடம் ஒளிந்து கொள்ளுதல்.  மனைவி தன்னை ஒரு குழந்தையைப் போல பாவிக்கும் பொழுது அவர்கள் அமைதியடைகிறார்கள்.

வியாபாரமெனில் எல்லாமே வியாபாரம் தான். எல்லாமே நிறைக்கு நிறை அளத்தல் தான். அது எப்பொழுது நாம் ஒன்றை விற்று மூன்றாக்க முடிகிறதோ அப்பொழுது நம்முள் நிரந்தரமாக படிந்து விடுகிறது. பின் உறவுகள் உணர்வுகள் எல்லாமே அந்த லாபக்கணக்குடன் தொடர்புடையது. அது உண்மையில் ஒரு லாகிரி போல. அவர்களால் வியாபாரம் அற்று எதனிலும் தொடர்புபடுத்தவே முடியாது. அவர்களே சிறந்த வியாபாரியாகிறார்கள்.

ஒரு வியாபாரி தன்னுடைய முதல் கண்டடைதலின் கணம், கண்களால்,  சொற்களால்,  உடல் மொழியால் அறிதலை ஸ்திரமாக்கும் லாவகம். கதைகளின்  ஊடாக அதைத் திரும்ப திரும்ப அனுபவிக்கிறேன்.

கனவுத் தன்மையும்,  அதற்கான மொழியும்,  மர்மங்களின் பல்வேறு குரல்களை அவிழ்த்து விடும் கட்டற்ற புனைவும் வேறொரு தளத்தில் உலவ விடுகிறது.  காப்பில் அந்தக் கிழவனும் அவனும் வெயிலினுள் சைக்கிள் மிதிக்கும் பொழுது இரு நெருப்புத் துண்டங்களாக உருமாறும் பொழுது எத்தனை பகல்களில் இந்த துபாயின் வெயிலில் கம்பெனி broucher களை வைத்துக் கொண்டு நடந்தே எத்தனைக் கதவுகளைத் தட்டியிருக்கிறேன் என்று தோன்றியது.  ஒரு சக  நெருப்புத்துண்டமாக ஆவதன் மூலமே அதன் ஒரு பகுதியாக நாமும் எரிகிறோம்.

புனைவின் வழி உருவாகின்ற காட்சிகள், குழிக்குள் உருண்டு கொண்டே இருக்கின்ற யானைக்குட்டி போல,  இறுதியில் முகங்கள் ஒவ்வொன்றாக கோர்க்கும் கண்ணியில் சட்டென்று தாழையின் மர்மம் ஊடும் பொழுது எல்லாம் தூரத்தே ஒரு திரவ மினுக்கம் போல சட்டென்று எழுந்து அணைகிறது.  சற்று 10 நிமிடம் தாமதித்தவனாக பராக்கு பார்த்துக் கொண்டிருந்தேன்.

துடி மூலமாய் அப்பா எனும் ஆளுமையை திரும்ப  அசை  போட்டுக் கொண்டிருந்தேன்.

லெட்சுமண சித்தப்பாவையையும்,  சுடலையாண்டி தாத்தாவையையும் நினைக்கத் தோன்றியது.

லெட்சுமண சித்தப்பா எனும் ஆளுமை,  ஒரு தகப்பன்,  ஒரு குடி காரன், ஒரு கலகவாதி,  சுதந்திரமானவன், ஒரு ஆண்,  அதன் மொத்த திரட்சியையும் ஒருங்கே கொண்டவன்.

அப்படித்தான் நம் அப்பாக்கள் இருந்திருக்கிறார்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் அரசியல் பேசியவர்கள் யாரும் இருக்கிறார்களா.

அவ்வளவு மூர்க்கத்துடன் உறவு கொண்டவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் காமம் மூண்டவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் அன்பைப் பொழிந்தவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் அருக்கமர்ந்தவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் வெறுக்கப்பட்டவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் பொறுப்பிழந்தவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் தன் சந்ததிகளுக்கு வடு உண்டாக்கியவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் எதிரிடை நின்றவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் வாரி அணைத்தவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் தோல்வியடைந்தவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் காறி உமிழ்ந்தவர்கள்.

அவ்வளவு மூர்க்கத்துடன் சராசரியாய் வீழ்ந்து கண்கள் தாழ்ந்து நின்றவர்கள்.

அவ்வளவு ஆதுரத்துடன்  பாக்கெட்டில் கை விட்டு காசு எடுத்துக் கொள்பவர்கள்.

எம்பிள்ளைக்கு காசுல குடிக்கது அமிர்தம் குடிக்கது மாறில்லா என்றுசொல்லிச் சென்றவர்கள் .

இந்த அப்பாக்கள் மிக மலினமாக்கப்படலாம்.ஆனால் அப்பாக்கள் நமக்கு தருவது என்பதும் அப்பாக்கள் மூலமாய் நாம் உருமாற்றம் அடைவதும் வேறு வேறு.

நாம் அப்பாக்கள் ஆகும் பொழுது மட்டுமே அப்பாக்களை நாம் அறிகிறோம்.

நன்றி,

நந்தகுமார் 

நுண்வினை ஆபரணம் – ரா.செந்தில்குமார்

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

 

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு, கடிதங்கள்-5
அடுத்த கட்டுரை1879: ஆசியாவின் ஒளி, நூல் பகுதி