ஜெய்ராம் ரமேஷ், இந்திரா காந்தி- கடிதங்கள்

ஜெய்ராம் ரமேஷ் – பாலசுப்ரமணியம் முத்துசாமி

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்

அன்புள்ள ஜெ

இந்த விஷ்ணுபுரம் விழாவுக்கு ஜெய்ராம் ரமேஷை அழைத்தது ஓர் இனிய ஆச்சரியம். காங்கிரஸ் கட்சிக்கு கட்சியரசியலுக்கு அப்பார்பட்டு யோசிக்கும் சிந்தனையாளர் அணி ஒன்று இருந்தது. அதிலொருவர் ஜெய்ராம். அடிப்படையில் பொருளியலாளர், நிர்வாகவியலாளர். இலக்கியவாசிப்பும் கொண்டவர். விழாவை பரவலாக கவனிக்க வைக்க அவருடைய வருகை உதவும். விக்ரமாதித்யன் போன்று திட்டமிட்டே பெரிய ஊடகங்களும் அரசமைப்புகளும் கடந்துசெல்லும் ஓர் ஆளுமைக்கு இப்படி ஒரு புகழ்பெற்ற அறிவுஜீவி வந்து விருதளித்துக் கௌரவிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஜெய்ராம் ரமேஷ் பற்றி பாலசுப்ரமணியம் முத்துசாமி எழுதியிருக்கும் குறிப்பு சுருக்கமானது. பயனுள்ளது. ஆனால் இந்த வகையான கட்டுரைகளில் ‘சுருக்கென தைக்கும்’ வரிகள் இருக்கக் கூடாது. அவை ஒரு பத்தாண்டுகளுக்கு அப்பாலும் வாசிக்கத் தக்கவையாக இருக்கவேண்டும். நிதானமான பொதுவான மொழியில் எழுதப்படுவது அதற்கு அவசியமானது. முகநூலில் அதிகமாகபுழங்குபவர்களிடையே பாலிமிகல் மொழி உருவாகி வந்துவிடுகிறது. அதைத் தவிர்ப்பது நல்லது.

எம்.மாணிக்கவாசகம்

 

அன்புள்ள ஜெ,

ஜெய்ராம் ரமேஷின் இந்திரா காந்தியின் சூழியல் உணர்வு பற்றிய நூலை [இந்திரா காந்தி – இயற்கையோடு இயைந்த வாழ்வு  ] வாசித்துக் கொண்டிருக்கிறேன். மிகமிக முக்கியமான நூல் அது. உலகமெங்கும் சூழியலுணர்வு என்பது அரசுக்கும் அமைப்புக்கும் எதிரான போர்க்குரலாகத்தான் அறிமுகமாகியது. அரசுகள் அதை மிகக்கடுமையாக எதிர்த்தன. இடதுசாரிகளும் சரி, முதலாளித்துவப் பொருளியலாளர்களும் சரி,  சூழியலை ஒருவகையான மேட்டிமைத்தனமாகப் பார்த்தனர்.

அதற்குக் காரணம் உண்டு. அன்றுவரை உலகசிந்தனையில் இருந்த பார்வையை மனிதமையவாதம் எனலாம். மார்க்ஸியத்தின் சாராம்சம் அதுதான். உலகம் மனிதர்களுக்காகப் படைப்பக்கப்பட்டிருக்கிறது என்ற செமிட்டிக் மதங்களின் பார்வையே மார்க்ஸியத்திலும் இருந்தது. 1950 முதல்தான் மனிதன் இயற்கையின் ஒரு உறுப்பு மட்டுமே என்னும் பார்வை ஐரோப்பியச் சிந்தனையில் உருவாக ஆரம்பித்தது. நூறாண்டுகளுக்கு முன்னரே பிரிட்டிஷ் பிரெஞ்சு இயற்கைவாதிகள் அதை பேச ஆரம்பித்திருந்தாலும் அதற்கு பொதுச்சிந்தனையில் இடமிருக்கவில்லை. வளர்ச்சி என்பது மனிதர்களின் வறுமையை ஒழித்து வசதிகளை பெருக்குவது என்ற அளவிலேயே யோசித்தனர்.

ஆழமாக வேரூன்றிய மனிதமையவாதச் சிந்தனையை தவிர்த்து இயற்கைமையவாதச் சிந்தனையை ஏற்பது அவ்வளவு எளிய மாற்றம் அல்ல. ஒரு  paradigm shift அது. அந்தக்காலத்து எழுத்தாளர்களில் எத்தனைபேருக்கு அந்தப்பார்வை இருந்தது, எத்தனை கவிஞர்களுக்கு அந்தப்பார்வை இருந்தது என்று பார்த்தாலே அது எத்தனை அரிதானது என்று தெரியும். எழுபதுகளில் உலகமென்கும் இருந்த பொதுச்சிந்தனை மானுடம் பேசுவதுதான். அந்தக்காலத்தில் சூழியல் சிந்தனைகளை இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டதும், நடைமுறைப்படுத்தியதும் மிகமிக ஆச்சரியமான விஷயங்கள்.

உலக அளவில் அவர்தான் சூழியல்சிந்தனைகளை முதன்மையாக ஏற்றுக்கொண்ட முதல் அரசியல்தலைவர் என நினைக்கிறேன். அன்று அந்த நடவடிக்கைகளுக்கு ஓட்டு ஏதும் விழாது. அறிவுஜீவிகளும் புரிந்துகொள்ள மாட்டார்கள். இருந்தாலும் இந்திராகாந்தி அதைச் செய்தார். இந்தியாவில் சூழியல் சிந்தனைகள் வந்ததெல்லாம் எழுபதுகளுக்குப்பிறகுதான். தமிழகத்தில் எண்பதுகளில். ஆனால் இந்திராகாந்தி அறுபதுகளிலேயே ஆழ்ந்த புரிதலுடன் இருந்திருக்கிறார். ஜெய்ராம் ரமேஷே இரண்டாயிரத்த்துக்குபிறகுதான் அந்தப்புரிதலை அடைகிறார். ஆச்சரியமான புத்தகம் இந்திரா காந்தியை புதிய ஒளியில் காட்டுகிறது. இந்த நூலுக்காக ஜெய்ராம் ரமேஷ் நன்றிக்குரியவர்.

சாரதி

 

அன்புள்ள ஜெ,

பாலசுப்ரமணியம் முத்துசாமி [அருண் மதுரா] அவருடைய கட்டுரையில் [இந்திரா காந்தி – சூழியல் அரசியலின் முன்னோடி! ] இந்திராகாந்தியின் சுற்றுச்சூழலியல் புரிதலைப் பற்றி அவரிடம் முதலில் பேசியவர் நீங்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் நான் நீங்கள் எங்கும் அதைச்சொல்லி கேட்டதில்லை. இவ்வளவு எழுதியபிறகும்கூட நீங்கள் உங்களுடன் தனிப்பட்டமுறையில் பேசுபவர்களிடம் மேலும் புதியவற்றைச் சொல்கிறீர்கள் என்பது உண்மையிலேயே திகைப்பானதுதான். உங்களுக்கு இந்திரா காந்திமேல் மதிப்பு உண்டு என்பதே ஆச்சரியமான செய்திதான்.

குமார் பழனிவேல்

 

அன்புள்ள குமார்,

நான் சூழியல் இயக்கங்களுடன் தொடர்ச்சியாகச் செயலாற்றியிருக்கிறேன். ஆனால் முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்பு. பின்னர் இலக்கியத்தை என் மையக் களமாகக் கொண்டேன்.  சுற்றுச்சூழல் சார்ந்த விஷயங்களை நான் அதிகமாக எழுதியதில்லை. உலகத் தலைவர்களிலேயே இந்திராகாந்திக்குத்தான் சூழியல் சார்ந்த விழிப்புணர்வு மிகுதி. அவர்தான் முன்னோடி. அவருடைய விழிப்புணர்வு ஐரோப்பிய, சீன தலைவர்களுக்கு இருந்திருந்தால் உலகச்சூழியல் பெரிதும் காப்பாற்றப்பட்டிருக்கும்.

ஐரோப்பாவில் பசுமையரசியல் விசைகொண்ட பிறகே அங்குள்ள சிந்தனையாளர்களுக்கு புரிதல் ஏற்பட்டது. அரசியல்தலைவர்களுக்கு கட்டாயம் உருவாகியது. மக்களுக்கு விழிப்புணர்வு உருவாகியது.  அதைப்போன்ற பலவற்றையும் உரையாடல்களில் பேசியிருக்கிறேன். நான் இலக்கியம் தவிர்த்து வரலாறு, சூழியல், வேதாந்தம் சார்ந்த களங்களில் ஆர்வம் கொண்டவன். அவற்றில் எழுதுவதைவிட பேசுவதே மிகுதி.

ஜெ

முந்தைய கட்டுரைகாளிப்பிரசாத் கட்டுரைகள்
அடுத்த கட்டுரைசின்ன வீரபத்ருடு கடிதங்கள்- 4