அன்புள்ள ஜெ
தெலுங்குக் கவிதையா என ஓர் ஆர்வமின்மையுடன்தான் வாசிக்க ஆரம்பித்தேன் என்பதை மறுக்க மாட்டேன். ஆனால் சட்டென்று ஆச்சரியம். எவ்வளவு வேறுபட்ட அழகியல் கொண்ட கவிதைகள். எவ்வளவு புதியவை. சென்ற ஆண்டுக்கு முந்தைய ஆண்டு கே.ஜி.சங்கரப்பிள்ளை வந்தபோது வெளியான கவிதைகளில்தான் இப்படி முழுக்கமுழுக்க புதிய ஓர் அழகியல் வெளிப்பட்டது.
[இதை நினைக்கும்போது ஒன்று தோன்றுகிறது. ஒரு சூழலில் உள்ள கவிதைகள் எல்லாமே எவ்வளவு வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் ஒரே அழகியலைத்தான் கொண்டிருக்கும். சங்ககாலம் முதல் அப்படித்தான். ஏனென்றால் கவிதை மிகவும் அகவயமானது. புனைகதைகள் வெளியுலகை வைத்து வேறு அழகியலுக்குள் செல்லமுடியும். கவிதை ஒரு சமூகத்தின் கலெக்டிவ் அன்கான்சியஸின் வெளிப்பாடு]
தெலுங்கிலிருந்து வந்த இந்தக் கவிதையை தமிழில் எவரும் எழுதிவிடமுடியுமா? குன்றிமணியின் கருப்பு- சிவப்பு பக்கங்கள் சூரியனுக்கும் மண்ணுக்கும் இடையே உள்ள இணைப்பு என்கிறார். கருப்பும் சிவப்பும் இணையாக இருக்கும் ஒரு அறிவிப்பு அது. ராகத்தில் உள்ள ஆரோகணம் அவரோகணம்போல. சூரியனும் மண்ணும் சமமாக கலந்தது. அப்படி ஒன்றை படித்த தன்னால் உருவாக்கமுடியாது. அந்த கொடி வெளிப்படுத்திவிட்டது. சின்னவீரபத்ருடு சின்னவீரபத்ருடுவாகவே இருந்தால் அதை எழுதியிருப்பான் என்று சொல்கிறார். அவருடைய எளிய கிராமப்பின்னணியை அது சுட்டுகிறது.
அந்தப் படிமத்தை அவர் வெறும்பேச்சாகவே சொல்லியிருப்பது, வெறும் குறிப்பீட்டின் பலத்திலேயே அக்கவிதை நிலைகொள்வது ஓர் அற்புதம்தான்
ராமச்சந்திரன் எஸ்
அன்புள்ள ஜெ
சின்ன வீரபத்ருடுவின் கவிதைகளை ஆர்வத்துடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன்
இஸ்மாயில் என்னும் கவிஞரைப் பற்றிச் சொல்லும்போது
நீர் நிறைந்த ஜாடியின் புனித மௌனம்
விடாது எழுந்தமைகின்றன அலைகள்
என்னும் வரி வருகிறது. ஒரு கவிஞனைப் பற்றிச் சொல்ல மிகச்சிறந்த வரிகள் இவை. அமைதியானவன், நிறைந்தவன். ஆனால் உள்ளே எழுந்தமைந்துகொண்டே இருக்கின்றன அலைகள்.
சரவணக்குமார்
அன்புள்ள ஜெ
என்றென்றைக்குமாக நறுமணம் நம்மை காயப்படுத்தியபோது ஓர் அழகான கவிதை. அந்த தலைப்பே அழகானது. காதலைப் பற்றி எழுதப்பட்ட ஒரு மகத்தான கவிதை. காதலித்தவர்களுக்குத் தெரியும் சில நறுமணங்கள் வாளால் ஓங்கி வெட்டுவதுபோல நம் மீது வந்து விழும் என்று.
ஒருவரிடமிருந்தொருவர்
பெறக்கூடியதையெல்லாம் ஈர்த்துக்கொண்டு
எஞ்சியவற்றை
மொய்க்கும் வண்டுகளுக்கும்
தென்றலுக்கும்
தேவதூதனுக்கும் விட்டுச்சென்றோம்
நறுமணத்தை வண்டுகளுக்கும் தென்றலுக்கும் தேவதூதனுக்கும் விட்டுச்சென்றோம் என்னும் வரியை எண்ணிக்கொண்டே இருக்கிறேன். அது கோடையின் நறுமணம்.வேம்பின் மணம். என் ஊர் முழுக்க அந்த மணம். விடுமுறைக்காலத்தின் மணம். ஆறுவிட்டுச்சென்ற தடம்போல அந்த மணம் மட்டும் எஞ்சுகிறது என்று வாசித்தபோது நெஞ்சு விம்மிவிட்டது. அவ்வளவு நினைவுகள், ஏக்கங்கள். இழந்தகாதல் என்பது ஒரு பெரிய காயம்
எஸ்