சின்ன வீரபத்ருடு – கடிதங்கள்

சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

சின்ன வீரபத்ருடு கவிதைகள்

அன்புள்ள ஜெ,

சின்ன வீரபத்ருடு  அவர்களின் கவிதைகள் உண்மைலேயே ஒரு புன்னகையை வரவைக்கிறது. நீங்கள் யாரை கவிஞன், எழுத்தாளர் என்று ஏற்றுக்கொள்கிறீர்கள் என்று தொடர்ந்து உங்களைப் படிக்கும்போது கண்டு கொள்கிறேன். மொழி, இனம் எல்லாம் நல்ல இலக்கியத்திற்கு இல்லை.

“சுற்றுக்கள் நிறைவடைகையில் விதை ஒன்று முளைவிடும்.
என் முனைப்புக்கு ஒரு உருவத்தை அருள்வித்து
அதிகாலை கதிரொளி ஒன்று உயிர் தெளிக்கும்.
மாமரங்கள் சாட்சியாக என் வாழ்க்கை அப்போதோரு
பச்சிளம் குழந்தையாக மாறும்”. இது நீங்கள் உங்கள் வாழ்க்கையைத் தொடங்கின இடத்தை காட்டுகிறது.

ஒரே நிலத்தடி நீர் கிணறாகவும், அடி பைப், நாம் மோட்டார் போட்டு நிரப்பும் தண்ணீராகவும் இருப்பதுபோல் ஒரே ஞானம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாய் வெளிப்படுகிறது. ஒரே வாழ்க்கை ஒவ்வொரு மொழியிலும், எப்படி எல்லாம் கைவரப்படுகிறது. ஆனால் அடிநாதம் ஒன்று இல்லையா? கவிதையோ, கதையோ அந்த மானுட மீட்பைத் தொட்டுவிட்டால் அதுவே சிறந்த படைப்பு. உங்களையும் மற்றவர்களையும் நேரில் சந்திக்க பயமாய் இருந்தாலும், ஒரு ஆசையும் துடிப்பும் இருக்கிறது.

வாழ்த்துகளுடன்

டெய்ஸி.

 

அன்புள்ள ஜெ

சின்ன வீரபத்ருடு அவர்களின் கவிதைகள் நாம் வாசித்துக் கொண்டிருக்கும் கவிதைகளில் இருந்து முற்றிலும் வேறொன்றாக இருக்கின்றன. அந்த அழகியலுக்குள் செல்ல கொஞ்சம் தாமதமாகியது. முதல் சிக்கலாகத் தோன்றியது நாம் நிறுத்தி நிறுத்தி உடைத்து எழுதும் தமிழ் இவற்றில் இல்லை. இவை நீளமான முழுமையான சொற்றொடர்களாக உள்ளன. அது மொழியாக்கத்தலும் இருக்கலாம். ஆகவே கவிதையை வாசிக்க கொஞ்சம் கவனம் எடுக்கவேண்டியிருந்தது.

ஆனால் அதைவிட முக்கியமானது இந்தக் கவிதைகளின் சென்ஸிபிலிட்டி முழுக்கமுழுக்க புதிசாக இருப்பதுதான். உதாரணம் இக்கவிதை

முரட்டு கம்பளியில் சுருண்டு கிடக்கும் மரங்கள்.
வெளியில் தெரியும் லோலாக்குகள் போல
எட்டி பார்க்கும் தளிர் இலைகள்.

பச்சைக் கம்பிளிக் குல்லாய் போல மரத்தின் இலைகள். லோகாக்கு காதுமடலில் எட்டிப்பார்ப்பதுபோல பொன்னிறத் தளிர்கள். புத்தம்புதிய உவமை. ஆனால் மரபார்ந்த கவித்துவம் கொண்டது.

ஆனால் அந்த மரபார்ந்த உவமையே ஒரு புதிய வரியால் வேறொன்றாக ஆகிவிடுகிறது. காலைவெயில் விழுந்த மாமரத்தளிர் மென்மையான சருமம் கொண்ட குழந்தை.

அதிகாலை கதிரொளி ஒன்று உயிர் தெளிக்கும்.
மாமரங்கள் சாட்சியாக என் வாழ்க்கை அப்போதோரு
பச்சிளம் குழந்தையாக மாறும்.

அந்த வரியை அடுத்து அவர் நீட்டிச்செல்லும்போது ஒரு புன்னகை உருவாகிறது. அதுதான் நவீனக்கவிதையின் அழகியல்.

பிள்ளையை தொட்டிலில் போடும் நாளில்
அனைவருக்கும் சொல்லி அனுப்புகிறேன்

தெலுங்குக் கவிதை பற்றி நான் இதுவரை கொண்டிருந்த எல்லா எண்ணங்களையும் மாற்றியமைத்துவிட்டன இக்கவிதைகள். மிகமிக நவீனமான கவிதைகள் அங்கே எழுதப்படுகின்றன. எப்படி தமிழர்களாகிய நாம் அரசியல்கூச்சல், சினிமா வழியாக வெளியே அறியப்படுகிறோமோ அதே விதிதான் தெலுங்குக்கும். இப்படி ஒரு நவீனக் கவிஞர் தன் புதிய கவிதைகளுடன் முன்வரும்போதுதான் நாம் எத்தனை பிழையாகப் புரிந்துகொண்டிருக்கிறோம் என்று தெரியவருகிறது

மோகன்குமார் ஆர்

தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு கவிதைகள்-4
அடுத்த கட்டுரைவசந்த், மாற்று சினிமா- கடிதங்கள்