குமரித்துறைவி – அய்யனார் விஸ்வநாத்

நூல்கள் வாங்க

https://www.vishnupurampublications.com/

இரண்டு நாட்களுக்கு முன்பு ஜெயமோகனின் குமரித்துறைவி நாவலை வாசித்தேன். வாசித்து முடிக்க இரண்டு அல்லது மூன்று மணி நேரங்கள் ஆகியிருக்கலாம். காலமும் இருப்பும் முடிவின்மையில் உறைந்த கணங்கள் என்றே அதைச் சொல்ல வேண்டும். ஜெ, இந்தக் குறுநாவலை இரண்டு நாட்களில் எழுதி முடித்ததாகச் சொல்லியிருக்கிறார். அதிசயம் ஒன்றுமில்லை. அவருக்கு இது இயல்புதான்.

முதல் அத்தியாயம் என்னை- தர்க்கங்களில் உழலும் என் மனதை, அவ்வளவு எளிதாக உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. மெல்ல மெல்ல அந்தக் காலமற்ற வெளிக்குள் நுழைந்தபோது அகாலம் திறந்து வழிவிட்டது. இந்த நாவல் தமிழிலும் மலையாண்மையிலும் எழுதப்பட்டிருக்கிறது. கடந்தப் பதினைந்து வருடங்களாக மலையாளம் என்கிற மொழியோடே புழங்குவதால், ஆரல்வாய்மொழி, ஆளூர், சுசீந்திரம் உள்ளிட்ட வேளிமலைத் தொடரின் நிலப்பரப்புச் சார்ந்த நண்பனோடே என் பேச்சுக்கள் முகிழ்வதால் இந்தக் கதைக்குள் இன்னும் நெருக்கமாக என்னைப் பொருத்திக் கொள்ள முடிந்தது.

ஒரு தந்தை தனக்கு இணக்கமான நண்பனின் உதவியோடு தன் மகளுக்குத் திருமணம் செய்து வைப்பதுதான் கதை. இதை அவர் எங்கு பொருத்துகிறார், யாரை கதாபாத்திரங்களாக மாற்றுகிறார் என்பதுதான் புனைவின் உச்சம்.

மதுரை மீனாட்சியை உலகாளும் மீனாட்சி அம்மையாகவோ அல்லது வேடிக்கையும் விளையாட்டுக்களும் குறும்பும் நிறைந்த சிறுமியாகவோ கற்பனை செய்து கொள்ள வேண்டிய சுதந்திரம் நம்முடையது.

இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருக்கும்போது மூன்று இடங்களில் நான் நடுங்கினேன். மனம் விம்மிய முதல் இடம் சிறமடம் திருமேனி, மீனாட்சி திருக்கல்யாணம் என்கிற தீர்வை மகிழ மரத்தடியில் நின்று கேட்டுக்கொண்டிருக்கும் மார்த்தாண்டனிடம் சொல்லுமிடம்.

இரண்டாவதாக அதே திருமேனி “மகன் மூத்து தந்தை, தந்தை மூத்து மகன்” என்று சொல்லுமிடம். இந்தச் சொல் என்னைக் கிட்டத்தட்ட உலுக்கிப் போட்டது. காலம் மொத்தமும் உதறிக் கொண்டு என் கண் முன்னால் நின்றது. ஆம் என் தந்தைக்கு நான் மகனாகவும் இருந்தேன், தந்தையாகவும் இருந்தேன். இந்த எண்ணம் நினைவுகளின் வலுவோடு இன்னும் ஆழமாகச் செல்லச் செல்ல ஒரு மகத்தான விடுதலை உணர்வை அடைந்தேன். என் தந்தைக்கு நான் தந்தையாகவும் இருந்தேன் என்கிற நிம்மதியும் இறுமாப்பும் மேலெழுந்து என் இதுநாள் வரைக்குமான குற்ற உணர்வை விரட்டியடித்தது. இந்த எண்ணம் மெல்ல மெல்ல வலுப்பெறுகையில் என் உடல் நடுங்கியது. அதே நேரம் வேறெதிலும் கிடைத்துவிடாத நிம்மதியை கிட்டத்தட்ட நான் காத்துக் கொண்டிருந்த அந்த நொடியை இந்தச் சொற்கள் வழங்கின.

மூன்றாவது நடுக்கம் மீனாட்சியம்மையின் குழந்தை விளையாட்டு. அவள் ஆரல்வாய்மொழி நீங்கி மதுரை செல்லும் காலையில் காணிக்கும் திருகல். அது மார்த்தாண்டனின் உயிரைக் குடிக்குமே எனப் பதறும்போது வந்து சேரும் செய்தியும், அவள் தன் வளையலை விட்டுச் சென்ற அர்த்தமும் பிடிபடும்போது மனம் விரிந்து ஹா வென்றானது.இதையெல்லாவற்றையும் வாசக மன நிலையைத் தாண்டி எழுதுபவனாக வாசிக்கும்போது எப்பேர்ப்பட்ட ட்விஸ்ட் இது என மனம் வியப்பிலாழ்ந்தது.

இந்த நாவல் மொத்தமுமே மங்கலச் சொற்களால் நிறைந்தது. மரண ஓலங்களும் வெறுமையும் இழப்பும் நம்பிக்கைகளற்ற சூனியமும் நிறைந்த இந்தக் காலவெளிக்குள் நின்று வாசிக்கும்போது குமரித்துறைவி தந்த நிச்சலனமான அமைதி, நிறைவு எனும் சொல்லை திரட்டி அளித்தது. இரண்டு நாட்களாக நிறைந்து தளும்புகிறேன்.

தவிர மதுரையில் சில காலம் வாழ்ந்திருந்தேன். பழி வாசித்தவர்களுக்கு அந்தப் பகுதியின் துல்லியம் தெரிந்திருக்கலாம். வார இறுதிகளில் மதுரை மீனாட்சியின் தெப்பக் குளமே என் புகலிடமாக இருந்தது. அந்தக் காலகட்டங்களில் நான் மீனாட்சியைக் கவனிக்காது கையோடு கொண்டுவந்திருந்த தடிமனான புத்தகங்களில் ஆழ்ந்திருந்தேன்.

இந்த அவநம்பிக்கை சூழ் யதார்த்த வாழ்வில் இனியொரு தருணம் நான் அங்கு செல்வேனா எனத் தெரியாது. அப்படி ஒரு நொடி கிடைத்தால் அந்த அம்மையின் குறும்புக் கண்களை பார்த்தே விட வேண்டும்.

அய்யனார் விஸ்வநாத்
முந்தைய கட்டுரைஅயோத்திதாசர் மேலும்…
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விழா- கல்பனா ஜெயகாந்த்