https://www.vishnupurampublications.com
அன்புள்ள ஜெ,
குமரித்துறைவி அச்சுநூலை வாங்கினேன். விஷ்ணுபுரம் பதிப்பக வெளியீடாக வெளிவந்துள்ள நூல்கள் அனைத்தும் நேர்த்தியான அச்சும் அழகான உருவாக்கமும் கொண்டிருக்கின்றன. வாழ்த்துக்கள். குமரித்துறைவியை ஏற்கனவே இரண்டுமுறை வாசித்துவிட்டேன். அச்சுநூலை என் அம்மாவுக்காகவும் அக்காவுக்காகவும் வாங்கினேன்.
குமரித்துறைவி பற்றிப் பேசும்போது அதை ஒரே மூச்சில் எழுதியதாகச் சொல்கிறீர்கள். அது தனிப்பட்ட வாழ்க்கை கதை அல்ல. வரலாறு. பலவகையான வரலாற்றுச் செய்திகள், பண்பாட்டுச் செய்திகள் அதில் உள்ளன. அதை எப்படி ஒரே மூச்சில் எழுதமுடியும் என்பது புரியவில்லை. இப்படி கேட்கிறேன். அதை நான் எழுதவேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
எம்.பிரகாஷ்
அன்புள்ள பிரகாஷ்,
நீங்கள் கேட்டபடியே சொல்கிறேன். ஒரே மூச்சில் குமரித்துறைவி போன்ற வரலாற்றுக் கற்பனையை எழுத வேண்டும் என்றால் என்ன செய்யவேண்டும்?
நாற்பதாண்டுகள் ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு மணிநேரம் வரலாற்று நூல்களை ஆழ்ந்து வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட வரலாற்று வட்டத்தைச் சேர்ந்ததாக இருக்கவேண்டும், அப்போதுதான் ஆழ்ந்து செல்லமுடியும்.
உதாரணமாக நான் குமரிமாவட்ட வரலாற்றில் மட்டுமே தீவிர ஆர்வம் கொண்டவன். அதன் விரிவாக , தென்மதுரை வரலாறு. சோழர், பல்லவர் வரலாறுகளில் வரலாற்று ஆர்வலனுக்குரிய பொதுவான வாசிப்பு மட்டுமே உள்ளது. இந்திய வரலாறு ஒரு பகைப்புலமாகவே எனக்கு முக்கியம். ஆனால் அதையும் கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
அடுத்ததாக, உங்கள் பகுதியின் அத்தனை வரலாற்றாசிரியர்களுடனும் நேரடியான தொடர்பு இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் ஆய்வுகளை உங்களுடன் விவாதிக்க வேண்டும். அவர்களின் களத்தில் நீங்களும் இருந்து கொண்டிருக்கவேண்டும்.
அத்தனை வரலாற்று இடங்களுக்கும் நீங்கள் நேரடியாகச் செல்லவேண்டும். ஒரு கல்வெட்டு தெரியவந்தால் அதை உடனே நேரில் பார்த்தாகவேண்டும். ஓர் இடம்கூட விடப்படக்கூடாது. அத்தனை மூலநூல்களையும் பார்த்தாகவேண்டும். அனைத்தைப் பற்றியும் விரிவாக குறிப்புகள் எடுத்துக்கொண்டிருக்கவேண்டும். நேரிலும் நூல்களிலும் பயணம்செய்தபடியே இருக்கவேண்டும்.
அதாவது ஒரு தீவிரமான முழுநேர வரலாற்றாய்வாளனாகவே முழு வாழ்க்கையையும் வாழவேண்டும். ஆனால் நேரடியாக வரலாற்று ஆய்வை நிகழ்த்தலாகாது. வரலாற்றை தெரிந்துகொள்ளவும், அதில் உளம்மூழ்கவுமே அந்தத் தோய்ந்த வாழ்க்கை தேவையாகிறது.
அவ்வண்ணம் கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்காலம் வாழ்ந்தால் ’குமரித்துறைவி’ போன்ற ஒரு நாவலை கரு தோன்றியதுமே ஒரே வீச்சில் எழுத முடியும். இதுவே வெண்முரசுக்கும். முப்பதாண்டுக்காலம் ஆய்வுசெய்த பின்னரே அதன் முதல் வரி எழுதப்பட்டது. இருபத்திரண்டு விரிவான இந்தியப்பயணங்களுக்குப் பின். நூற்றைம்பது வரலாற்று நூல்களை முழுமையாகவே குறிப்புகளாக மாற்றி கையால் எழுதிக்கொண்டபின். அதாவது கிட்டத்தட்ட ஐந்தாயிரம் கையெழுத்துப் பக்கங்கள்.
ஆனால் அந்தக் குறிப்பிட்ட படைப்புகளுக்காக ஆய்வு ஏதும் செய்யப்படவில்லை. நான் எழுத்தாளர்கள் அனைவரிடமும் சொல்வது இதுவே. ஒரு நாவலுக்காக ஆய்வு செய்யாதீர்கள். அவ்வாறு செய்தால் அது ஆய்வாக அமையாது. ஒரு படைப்புக்கு என்ன தேவை என்பதை எழுதும் முன் நம்மால் சொல்லிவிட முடியாது. எழுதும்போது தேவையானவை தானாகவே உள்ளத்தில் எழவேண்டும். அங்கே நிறுத்திவிட்டு தேடினால் அது படைப்பியக்கத்துக்கு எதிரான உளநிலையை உருவாக்கும்.
இலக்கியத்துக்கு தேவை ‘முறைப்படுத்தப்பட்ட’ ஆய்வு அல்ல. எதை எழுதுகிறோமோ அதில் வாழ்தல். ஆகவே முற்றிலும் புதிய ஒரு களத்துக்குச் சென்று, அங்கே தரவுகள் சேகரித்து, எழுதமுடியாது. நாம் அறிந்தவை நமக்குள் சென்று நம் நினைவுகளாகத் தேங்கவேண்டும். அங்கே அவை படிமங்களாக, அடையாளங்களாக, உணர்வுத்துளிகளாக உருமாறவேண்டும். அதன்பின்னரே அவை புனைவென எழமுடியும்.
நான் எப்போதும் சொல்லும் உவமைதான். ஊற்று மண்ணுக்கு அடியில் இருந்து எழுவது. ஆனால் ஊற்று எழவேண்டும் என்றால் பெருமழை பெய்திருக்கவேண்டும். இலக்கியவாதி அவன் உள்ளம் தோயும் களங்களில் ஒவ்வொருநாளும் என வாழவேண்டும். இந்த தளத்தை வாசிப்பவர்கள் அதைக் காணலாம். நான் எப்போதுமே என் அகத்துக்கு உகந்த வரலாற்றுக் களங்களில், பண்பாட்டுப்பரப்பில், நிலவெளியில் சுற்றிக்கொண்டே இருக்கிறேன்.
எது எப்போது கலையென ஆகுமெனச் சொல்லமுடியாது. மீனாட்சி அன்னை இருந்த பரகோடி கண்டன் சாஸ்தா ஆலயத்துக்கு நான் பத்துமுறைக்குமேல் சென்றிருக்கிறேன். அதில் ஒரு நாவல் உள்ளது என்று தோன்றியதில்லை. தோன்றியபோது முழுநாவலாகவே எழுந்தது. இப்போது அ.கா.பெருமாள் அவர்கள் குமரிமாவட்ட அடிமை ஆவணங்கள் என ஒரு நூலை எழுதியிருக்கிறார். முதல்பிரதியை எனக்கு கொண்டுவந்து அளித்தார். எனக்கும் அருண்மொழிக்கும் சமர்ப்பணம் செய்யப்பட்ட நூல். [முன்பு அவர் எழுதிய முதலியார் ஓலைகள் நூல் எனக்குச் சமர்ப்பணம் செய்யப்பட்டது]
அந்நூலை திரும்பத் திரும்ப படிக்கிறேன். குறிப்புகள் எடுத்துக்கொள்கிறேன். அதை ஒட்டிய ஆவணங்களை மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் பார்க்கிறேன். ஆனால் இப்போது எனக்கு எந்த ஆய்வு நோக்கமும் இல்லை. வெறும் ஆர்வம்தான். ஐந்தாண்டுகளோ பத்தாண்டுகளோ கழித்து அதிலுள்ள ஒரு வரியில் இருந்து நான் ஒரு நாவலை எழுதுவேன் என்றால் அப்போது அமர்ந்து ஆய்வுசெய்ய வேண்டியதில்லை. அது நான் வாழ்ந்த ஒரு களமாகவே இருக்கும். என் சொந்த நினைவு போலவே அதை எழுத முடியும். உலகமெங்கும் இலக்கியப் புனைவுகள் இவ்வண்ணமே எழுதப்படுகின்றன.
ஜெ