பூக்கும் தாழையின் மணம் – வி.தேவதாஸ்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

பா. திருச்செந்தாழை என்ற பெயரில் ஒலிக்கும் அழகிய ஓசை இவர் எழுதும் கதைகளெங்கும் தொடர்ந்து ஒலிக்கிறது. இவருடைய எழுத்துக்களின் மிகப் பெரும் பலம் இவரது மொழியழகு. சமீபத்தில் நடந்த இளங்கோ கிருஷ்ணனின் வியனுலகு வதியும் பெருமலர் நூல் வெளியீட்டு விழாவில் மனுஷ்ய புத்திரன் கூறியது போல் இன்றைய புனைவெழுத்துகள் கவிதையை நெருங்கும் மொழி கொண்டவை. கவிதையை நெருங்கும் என்பதை விட உரைநடையும் கவிதையும் முயங்கும் புள்ளியில் திகழ்வது இவரது மொழி. லா.சா.ராமாமிர்தம், தி. ஜானகிராமன் மரபில் அவர்களுக்கே உண்டான தனி நடையின் தொடர்ச்சி இவர். இவரது நடை தனித்துவமானது ஓசை நயத்திற்கு மட்டுமே மேற்கண்ட எழுத்தாளர்களுடனான ஒப்பீடு. உதாரணமாகக் கூற வேண்டுமானால் ஜெயமோகனின் எரிமருள், கேளி, மலை பூத்த போது போன்ற சிறுகதைகளுடன் ஒப்பிடத்தக்க மொழி நடை கொண்டது. ஆனால் இவர் எழுதும் களம் வியாபாரம் சார்ந்தது. அதிகம் எழுதப்படாத களத்தைப் புலனாகக் கொண்டது.

கதைகளின் பேசு பொருள் பெரும்பாலும் ஆதி உணர்வுகளான பசி, காமம், குரோதம், மோகம் முதலியனவே. ஆதி உணர்வுகளுக்கும் நவீன சமூக மனிதனின் பராம்பரிய அற விழுமியங்களான அன்பு, பாசம், நேசம், தன்னுணர்வு, தன்னறிதல், மனசாட்சி போன்றவற்றிற்கு இடையேயான முரண்களில் எது வெல்கிறது என்பதேயே நிறைய கதைகளின் பொருள்களாகக் கையாளுகிறார்.

இன்றைய முதலாளித்துவ நவீன சமூகத்தின் புதிய குணநலன்களான நுகர்வு, ரசனை, ஒப்பீடு, போட்டி உணர்வு ஆகிய நவீன சமூக உணர்வுகளை வியாபார, தனிநபர் பின்னணியிலும் இவர் தன்னுடைய சிறுகதைகளில் கையாளுகிறார். இது அதிகமாக எழுதப்படாத புதிய கதைக் களன் ஆகும்.

2008ல் எழுதப்பட்ட ஆண்களின் விடுதி அறை எண் 12ன் பேசுபொருள் காமம். பருவமடைந்த பின்னும் இணை சேர முடியாத ஆண்களின் பாலியல் வேட்கை, பொருளாதார நிர்பந்தங்களால் இணையைப் பிரிந்து வாழும் ஆணின் காம நுகர்வினைப் பேசும் கதை. சாதாரணமான பாலியல் கதையாக கவனம் பெறாமல் சென்றிருக்கக்கூடிய சிக்கலான கதையை தான் சொல்லும் மொழியாலே இலக்கிய ஆக்கமாக மாற்றுகிறார் ஆசிரியர். கழிப்பறையில் தனது இச்சையைத் தணித்துக் கொள்ளும் ஆணின் குற்றவுணர்வு நீங்கி காமம் வெல்வதை புனிதங்களால் நிரப்பப்பட்டிற்க்கும் உறவுகளின் எல்லையைக் கடந்தது வேட்கை என்ற வரிகளில் தான் சொல்ல வந்த கதையின் சாரத்தை இயல்பாக வாசகனுக்கு கடத்துகிறார். அடுத்து பொருளாதார நிர்பந்தங்களால் மனைவியைப் பிரிந்து வாழும் ஆண் அதே காரணங்களால் தன் உடலை நுகர்பொருளாக்கும் பெண்ணிடம் இயல்பாக துய்க்கும் காமம் மனைவியிடம் தொலை பேசியில் பேசும் போது குற்றவுணர்வாக மாறுவதை அப்பெண்னின் குழந்தைகள் பற்றிய காட்சி மனக் கண்ணில் விரியும் போது குரல் குளறலாக மாறுவதன் வழியாக வாசகனுக்கு உள்ளுறையாகச் சொல்லுகிறார். நிழல் வெளியை மௌனமாய் தின்று கொண்டிருந்தது பகல் என்ற சொற்களுடன் சமூக விழுமியங்களை ஆதி உணர்வான காமம் வெல்வதைச் சொல்லும் கதை.

2006ல் வெளியான  தேவைகள் கதையின் மொழி நடை இயல்பானது. தந்போதைய கவிதை நடை இல்லாமல் கதைக்குத் தேவையான நடை. சிவசு அய்யா என்ற முதிய கிராமத்து சம்சாரியின் பசி அவர் அதுவரை கொண்டிருந்த நிலப் பிரபுத்துவ மனநிலையில் இருந்து அவரை விடுவித்து, பசியாறியதின் நிறைவு வழியாக விதவை மருமகளின் உடற்பசி குறித்து உணர்வதைச் சொல்லும் கதை. பசி எனும் ஆதி உணர்வு கௌரவம் எனும் சமூக விழுமியத்தை வெல்வதைச் சொல்லும் கதை. இக்கதை கிராம விவசாயத்தின் யதார்த்தத்தை நேரடியாகவும், மிகை இல்லாமலும் சொல்கிறது. 1990களின் விவசாய மனநிலையான கடன் வாங்க கூசும் சூழல், மகனை இழந்து தொழில் உதவிக்கு வேற்று நபரைச் சார்ந்திருக்கும் முதியவரின் கையறு நிலை, கிராம சாவடியில் மருமகளின் நடத்தை குறித்தான எள்ளல் பேச்சுக்கள், மருமகளை காவல் காக்க வேண்டிய சூழலினால் உண்ட சுய கழிவிரக்கம் முதலியன மிக இயல்பாக அமைந்துள்ளன. ஒரு கிராம சம்சாரியின் வீழ்ச்சியைச் சொல்லும் நாவலாக நீட்டக் கூடிய நல்ல கருவை மிகச் சுருக்கமான சிறுகதையாக எழுதி உள்ளார்.

டீசர்ட், மஞ்சள் பலூன்கள் மற்றும் த்வநதம் ஆகிய கதைகளின் பேசு பொருள் ஆண் பெண் இடையேயான உறவுச் சிக்கல்கள் (காமமும், மோகமும்). ஒரே பிரச்சனைக்கு வெவ்வேறு பின்ணணி கொண்ட கதை மாந்தர்கள் வெவ்வேறு தீர்வுகள் காண்கிறார்கள். மூன்று கதைகளும் தனித் தனியான வாசிப்பு அனுபவம் அளிப்பவை. டீ சர்ட் கதை எனக்கு தற்போதய நுகர்வு கலாச்சாரம் ரசனை என்ற பெயரில் மனிதனில் செலுத்தும் ஆதிக்கத்தைச் சொல்லுவதாகக் கூட தோன்றுகிறது. நடுத்தர வயதுள்ள அதிகாரமும், செல்வமும் கொண்ட ஆணின் இரண்டாவது மனைவியான இளம்பெண் ஆணின் ரசனை உணர்வுகளை டீ சர்ட் மற்றும் வீட்டலங்காரம் வழியாக மாற்றி இளைஞனாக உணரச் செய்து விட்டுப் பின் வேறொரு இளைஞன் மீது மோகம் கொண்டு அவனைப் பிரிந்து செல்கிறாள். மனைவியின் காதலன் மீது குரோதம் கொண்டு அவனை வீழத்த நினனக்கும் கணவனின் தன்னை விட உயர்வாக இந்த இளைஞனிடம் என்ன உள்ளது? தான் ஏன் தன் இளம் மனைவிக்கு தீர்ந்து போனோம்? (நன்றி அருஞ்சொல்) எனும் கேள்விகளே கதையின் முடிச்சு. கேளவிக்கு பதிலாக கணவனின் நண்பனின் விளக்கமாக வரும் செய்தியான ரசனை எனும் ஒரு புள்ளியில் ஆழ்மனதில் அவர்கள் ஒருவரையொருவர் நெருங்கியிருக்கலாாம் அல்லது உன்னை அழகுபடுத்தி சலிப்படைந்து புதிய இளமையான ஒருவரை அவளின் ரசிக மனது விரும்பியிருக்கலாம் என்ற கருத்தில் தன்னுணர்வு பெற்று ஆண் அவர்களை வாழ விட்டு விலகிச் செய்கிறான். பெண்ணின் மோகமும், குரோதம் நீங்கிய ஆணின் தன்னுணர்வும் வெல்வதைச் சொல்லும் கதை.

மஞ்சள் பலூன்கள் இன்றைய நகர மாந்தரின் காதலைச் சொல்கிறது. முன்னர் மிகு காதலும் பின்னர் ஒருவர் மீது மற்றவர் கசப்படைந்து காயப்படுத்திக் கொள்ளலுமாக ஆடலும், ஊடலும் உளவியல் ரீதியில் எழுதப்பட்டுள்ளது. பிரிய நினைத்து கடைசியாக சந்திக்கும் ஆணையும், பெண்ணையும் கட்டில் மீண்டும் இணைக்கிறது. காமமும், மோகமும் வெல்வதைச் சொல்லும் கதை. கதையின் நடுவில் பெண்ணின் கூற்றாக வரும் “யசோதரையை நள்ளிரவில் பிரிந்து செல்லும் சித்தார்த்தனின் கண்ணிலிருந்து விழும் ஒரு துளி கண்ணீர் அவருக்கு பெரும் தோல்வியல்லவா? எனும் வரி ஆணைக் கட்டிப் போட்டு அவனை பிரிந்து செல்வதிலிருந்து தடுப்பதாக எனக்குப் பட்டது.

த்வந்தம் எல்லா காலத்திற்குமான ஒரு செவ்வியல் கதை (All time Classic). மீக நீண்ட காலத்திற்கு இக்கதை பேசப்படும் என நான் நினைக்கிறேன். கதை சொல்லப்பட்ட விதமும், கதையின் புதிய களமும், நிலக் காட்சிகளின் சித்திரமும், கதை மாந்தரின் குண இயல்புகளைக் காட்டும் விதமும், கதையின் இறுதித் திருப்பமும் இதை ஒரு சிறந்த சிறுகதையாக ஆக்கியுள்ளது. த்வந்தம் என்ற சொல்லுக்கு சம பலம் உடைய இரு நபர்களுக்கு இடையே நடக்கும் யுத்தம் என கதாசிரியர் அறிமுகப்படுத்தியிருந்தார். அவ்வண்ணமே கதையை நான் புரிந்துகொண்டேன். மதுரையையும் அதன் அண்டை மாவட்டங்களையும் பின்னணியாகக்  கொண்டே இவர் பெரும்பாலான கதைகளை எழுதியிருக்கிறார்.

ஆனால் இக்கதையின் தொடக்கம் நாஞ்சில் நாட்டில் நிகழ, நிலக்காட்சிகளும, கதை மாந்தரின் குண இயல்புகளும் அழகிய மொழியில் வாசகனின் மனதில் பதிகின்றன. நெய்யாற்ங்கரை பாலத்தில் புகைவண்டியின் வேகம் படிப்படியாக குறைய அதிகாலை வெளிச்சம் தோப்புகளின் விளிம்புகளிலும், எங்கெங்கும் தேங்கியிருக்கும் நீர்மைகளிலும் சுடரென பற்றிக் கொண்டன எனும் வரிகளில் தென்படும் அழகு கதையின் இறுதிவரை குன்றாமல் சுடரென ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறது. கதை மாந்தர்களான தீபனின் அசிரத்தையும், அப்பாவித்தனமும், லீலாவின் அழகும், இயல்பும், குழந்தை சசிதரனின் நோயும் கதை சொல்லியின் பார்வையில் காட்சிகள் வழியாக அறிமுகப்படுத்தப் படுகின்றன.

சிங்கிக்காரன் என அழைக்கப்படும் கதை சொல்லி இராமநாதபுர மாவட்டத்தின் கடும் வெயிலிலும், எதிர்காற்றிலும் சைக்கிள் மிதித்து ஒவ்வொரு பைசாவாகச் சேர்க்கும் அவன் தந்தையிடமிருந்து காசின் அருமையும், வியாபாரமும் கற்றுக் கொண்டு ஊர் ஊராகச் சுற்றி பல்வேறு வியாபாரங்களின் நுண் விபரங்களையும், வியாபார நுட்பங்களையும், மனிதர்களை எடை போடவும் கற்றுக் கொள்கிறான். பராம்பரியமாக தானிய மண்டி வியாபாரம் செய்யும் குடும்பத்தில் மூன்றாவது தலைமுறை நபரான தீபன் வசம் அவன் வியாபாரம் கற்கு முன் தந்தை இறந்து விட மண்டி வருகிறது. இயல்பிலேயே அப்பாவியான அவன் போட்டியாளர்களாலும், சம்சாரிகளாலும் ஏய்க்கப்பட மண்டி நஷ்டத்தில் நடக்கிறது.

அப்படிப் பட்ட சூழலில் தவறான காலத்தில் தவறான விலைக்கு வாங்கப்பட்ட நவதானிய மூட்டைகள் மக்குப் பிள்ளைகள் என அவனைச் சூழ்ந்திருக்க நடுவில் அபத்தப் புன்னகையோடு நின்றிருக்கும் தீபனை கதை சொல்லி சந்திக்கிறான்.தீபனை ஏய்த்து விட்டு கேலி செய்யும் தரகனைப் பார்த்து அடுத்த தடவை சரி பண்ணிக்கிறோம் சார் என்று எதிராளியை அந்நியப் படுத்தி தீபனுக்கு உதவுகிறான். ‘சார்’ என்ற வார்த்தையை வணிக மண்டியில் பயன்படுத்துவது நீ அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவன் என்றைக்காவது நீ வியாபாரிக்கு எதிராய் திரும்புவாய் என்பதை உள்ளுறையாகக் கூறுவது. அவரிடம் வியாபாரம் குறித்த செய்திகள் பகிரப்படாது. எனவே அவன் அந்நியபடுத்தப்படுவான் அவனால் தொடர்ந்து வியாபாரம் செய்ய முடியாது. இதை நுட்பமாக ஆசிரியர் சொல்கிறார்.

தீபனின் அப்பாவிதனத்தால் ஈர்க்கப்பட்டு அவனுடைய தானிய மண்டியை நடத்த அவ்வியாபாரத்தில் அனுபவமற்ற கதை சொல்லி உதவுகிறான். வியாபாாரத்தின் முக்கிய அடிப்படை செய்திகளும், அதை நிர்வகிப்பதும் தான். இது எல்லா வியாபாரங்களுக்கும் பொருந்தும். சிங்கிக்காரனாக கிராமங்களில் சுற்றும் போது நவதானியங்கள் பற்றிய நுண் செய்திகளை அறிந்து தானிய மண்டியை நடத்த உதவுகிறான். தீபனின் மனைவி லீலா மண்டிக்கு மதிய உணவு கொண்டு வர தீபனை விட சூட்டிகையாய் அவள் வியாபார நுட்பங்களை புரிந்து கொள்வதைப் பார்த்து அவளை கல்லாவில் ஒரு மணி நேரம் அமர வைத்து சம்சாரிகளிடமும். தரகர்களிடமும் கேள்விகள் கேட்க வைத்து படிப்படியாக  வியாபார நுண்மைகளை கற்பிக்கிறான். அவளும் விரைந்து கற்றுக் கொண்டு மண்டியில் அதிக நேரம் செலவழிக்கத் தொடங்குகிறாள். ஓரளவு மண்டி நஷ்டம் நீங்கி செயல்படத் தொடங்குகிறது. அவளுடைய கற்றுக் கொள்ளும் திறனாலும், தன்னையொற்றி சிந்திக்கும் விதத்தாலும், ஆளுமையாலும் ஈர்க்கப்பட்டு கதை சொல்லி சலனமடைந்து வியாபாரத்தில் தவறுகள் செய்கிறான்.

லீலா சில வியாபாரங்களை தனியாக கையாண்டு வெல்கிறாள். பெண் இயல்பாகவே உள்ள தன்னுணர்வால் ஆணின் சலனங்களையும் அவனது உள்ளுணர்வுகளையும் அறிந்து கொள்கிறாள். தனது எண்ணங்களை அவள் அறிவதைக் கண்டு கதை சொல்லி பதட்டமடைகிறான். இச்சூழலில் குழந்தைக்கு மருத்துவம் செய்வதற்காக தீபனும், லீலாவும், கதை சொல்லியும் திருவனந்தபுரம் பயணிக்கிறார்கள். மருத்துவமனையில் நான்கு நாட்கள் தங்க வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தீபன் குழந்தையுடன் தங்க முதல் அறுவடை முடிந்து வரும் தானியங்களை வாங்க வேண்டி மண்டியைத் திறக்க கதை சொல்லியுடன் லீலா ஊர் திரும்ப ரயிலேறுகிறாள். ரயிலில் இருவருக்கும் நடைபெறும் வியாபாரம் குறித்தான உரையாடலில் முதன் முதலாக மண்டிக்கு வரும் தானியங்களை அவை எத்தரதிலிருந்தாலும், நட்டம் ஏற்படுத்தினாலும் சம்சாரிகளின் நம்பிக்கை பெறவும் பின்னால் வரும் வியாபாரத்திற்காகவும் வாங்க வேண்டியதை “கரிசனத்தின் முதலீடு” என லீலா குறிப்பிடுகிறாள்.அவ்வார்த்தை கதை செல்லியின் மனசாட்சியைத் தொட அவன் லீலா உறங்கிக் கொண்டிருக்கும் போது தனது கீழ்மை எண்ணங்களை உதறி ஏதோ ஒரு நிறுத்தத்தில் ரயிலை விட்டிறங்கிச் சொல்கிறாான். எஸ். ராமகிருஷ்ணன் அவரது உரைகளில் அடிக்கடி சொல்வார்.

ஒரு மனிதனின் மனசாட்சியைத் தொட்டு விட்டால் அவனைத் தீயவற்றிலிருந்து விலக்கி விடலாம் என. அது இக்கதையில் நிகழ்கிறது இதில் கதை சொல்லியும் லீலாவும் ஒருவரின் எண்ணங்களை மற்றவர் அறிந்தவர்கள். பீஷ்மரின் மனதில் பரசுராமரைப்  போல், அர்ஜுனன் மனதில் கர்ணனைப் போல, பீமன் மனதில் துரியன் போல எதிரியாயினும் உயர் மதிப்புடனே திகழ்வார்கள். ஏனெனில அவர்கள் சம பலம் பொருந்தியவர்கள். வெற்றியையும், தோல்வியையும் தீர்மானிப்பது ஊழின் மெல்லிய இழை என்பதை அவர்கள் அறிவார்கள்.எனவே எதிரியின் உள்ளத்தில் உயிர் பீடத்திலேயே வீற்றிருப்பார்கள். கற்றுக் கொண்டு செயல்படுவதன் வழியாக பெண்ணும், துறந்து செல்வதின் வழியாக ஆணும் துலாவின் முள்ளன நிகர் நிலையில் ஒருவரையொருவர் சமன் செய்கிறார்கள்.

விலாஸம் மேற்சொன்ன எந்த வரையறைக்குள்ளும் அடங்காத கதை. ஒரு வியாபாரி அல்லது தொழிலபதிரின் வென்று செல்லும் வேட்கை குறித்த கதை. இக்கதையின் சாரத்தை விளக்குவது கடினம். வியாபாரம் பற்றிய பல நுண் தகவல்களும், கூரிய அவதானிப்பின் வழி நுணுக்கங்களை கற்றுக் கொள்வதன் சித்திரமும், வியாபாரியின் தனித்துவமான சிந்தனை ஓட்டமும், எல்லா நிகழ்வு களிலும் வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் நிதானமும், எச்சூழலிலும் உணர்வுகளின் மீதான ஆளுமை போன்ற  பல விஷயங்கள் கதையெங்கும் சம்பவங்களின் ஊடே விளக்கப்பட்டுள்ளன.

தனராஜ் என்ற வியாபாரியின் வளர்ச்சி அவர் மகனின் பார்வையில் சொல்லப்படுகிறது. தேனி நகரத்தின் பணப் புழக்கத்தை தீர்மானித்துக் கொண்டிருந்த ராம விலாஸில் நாற்பதாண்டுகளுக்கு முன் சிறுவயதில் வேலைக்குச் சேர்ந்த தனராஜ் 20 ஆண்டுகள் அந்நிறுவனத்தில் நசிந்து அப்பேரால மரத்தின் கீழ் உள்ள சிறு விதையை கண்டு கொள்கிறார். ராமவிலாஸின் பல்வேறு வியாபாரங்களில் சிறுதானியங்களும் அடங்கும் சர்க்கரை நோய் பரவலாக ஆரம்பித்த காலங்களில், சிறுதானிய வியாபாரத்தில் உள்ள வாய்ப்புகளை அறிந்து ராம்விலாஸிருந்து விலகி அத்தொழிலில் ஈடுபடுகிறார். தவிடு வீணாவதைத் தடுத்து அதிலிருந்து எண்ணெய் தயாரித்து அதன் மnற்று உபயோகத்திற்கான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அந்த தொழிலின் போட்டியாளர்களின் விலாஸங்களை நீக்கி தனிக் காட்டு ராஜாவாகி ராமவிலாஸை விட நான்கு மடங்கு பெரிதாக வளர்கிறார்.

இறுதியில் ராம விலாஸின் கிட்டங்கிகளை தனராஜிடம் குத்தகைக்கு விட ராம விலாஸ் நிர்வாகம் முடிவெடுக்க அவரது வெற்றி நிறைவு பெறுகிறது. வெற்றியின் மகிழ்ச்சியைப் புறக்கணித்து தனது அடுத்த வேலையான மழையிலிருந்து தானியங்களை காக்க ஊக்குடன் மூட்டை தூக்கச் செல்ல கதை நிறைகிறது. உழைப்பு, உணர்வுகளுக்கு இடமின்றி எல்லா இடங்களிலும் லாபம் குறித்த சிந்தனை, பொறாமை கொண்டு வார்த்தைகளில் விஷம் தடவி பேசுவோரை உதாசீனப்படுத்தி தன் வென்று செல்லும் ஆற்றலாலேயே சிறு மதியாளர்களைச் சிறுமை கொள்ளச் செய்வது போன்ற பல வியாபார மனநிலைகளும், நுட்பங்களும கதையின் மிக முக்கிய பெறுதல்கள் ஆகும். கதையின் சுவை கருதி ஆங்காங்கே மெல்லுணர்வுகளான காதலும், பாசமும் கோடி காட்டப்படுகின்றன.

துடி குரோதத்தை பாசம் வென்று செல்வதைச் சொல்லும் கதை. வெயிலின் வெக்கை, பனை மரங்களின் தனிமை, கணவாய் நரிகளின் ஊழை இவற்றுக்கிடையே வாழும் அடித்தட்டு குடும்பத் தலைவனின் மிகை கோபம் பாசத்தால் கனிவாக மாறுகிறது. கதையின் ஆரம்பக் காட்சியின் வன்முறை வாசகனின் மனதை பதற வைக்கிறது. ஒரு திகில் திரைப்படத்தை சீட்டின் நுனியில் அமர்ந்து காண்பதைப் போல அதீத வன்முறைக் காட்சிகளுடன் ஆரம்பிக்கும் கதை இறுதியில் கும்மிருட்டில் சைக்கிளை இரு பிள்ளைகளுடனும், மனைவியுடனும், வீட்டுச் சாமான்களின் பொதியுடனும்  பாதை யூகித்து மிதித்துச் செல்லும் காட்சி ஒரு செவ்வியல் திரைப்படக் காட்சி போல் நிறைவு பெறுகிறது. இடையில ஒரு சில காட்சிகளில் வரும் மனைவியின் கதாபாத்திரம் பல செவ்வியல் கதை நாயகிகளை நினைவு படுத்தும் சீதையின் வடிவம். மூத்த பையன் பார்வையில் சொல்லப்படும் ஆற்றில் தகிக்கும் மணலில் சைக்கிள் மிதிக்கும் போது வலியில் தகப்பனின் கண்ணில் துளிர்க்கும் நீர்த்துளியை காணும் பிள்ளையின் வாத்சல்யமும் அதை அவன் மறைக்க முயலும் முயற்சியும் வன்முறைகளுக்கிடையில் நெகிழ்வான தருணம்.

துலாத்தான் தானிய வியாபாரத்தில் தரகராக நீண்ட காலம் செயல்படும் அய்யாவு என்ற பெரியவரின் கதை. தானிய வியாபாரியையும், சம்சாரிகளையும், சக போட்டியாளர்களையும், இலாப நட்டங்களையும் துல்லியமாக எடை போடும் இவரால் தனது மகள், மனைவி, மருமகன் போன்ற குடும்ப உறுப்பினர்களை எடை போட்டு வெல்ல முடியாதாதன் சோகத்தைச் சொல்லும் கதை. மிகக் கடினமான சூழலில் மக்காச்சோளம் வியாபாரத்தில் வரும் போட்டியை மனிதர்களை எடை போட்டு சாதுர்யமாக வெல்கிறார். வெற்றியின் களிப்பில் நிம்மதியாக தூங்கி எழுபவரின் நினைவில் சொந்த மகளை வாழவைக்க முடியாமையின் துயரம் தாக்க அழுகையில் முடிக்கிறார். துலாவின் தட்டு தரகராகத் தாழ்ந்தும், தந்தையாக உயர்ந்தும் நிற்க நிகர் செய்ய முடியாததின் துயர அலைக்கழிப்பை அழகிய மொழி நடையில் சூழலுக்கு ஏற்ற சம்பவங்களைக் கோர்த்து சிறப்பாக கட்டப்பட்டுள்ள கதை.

ஆபரணம்- எது ஆபரணம் என்ற கேள்வியை வாசகர்களின் முன் வைக்கும் கதை. பீரோவெங்கும் ஆபரணங்களும், அழுக்கு நோட்டுகளும், காசுகளும் நிறைந்த மரியம், பழைய அழுக்கு மெழுகுவர்த்தியின் ஸ்படிகத் துளிகளென மூன்று குழந்தைகள் சூழ இருளுக்குள் நிற்கும் சித்திரை. இவர்கள் இருவரிடம் உள்ள எந்த செல்வம் ஆபரணம் என்பதே கதை. வாழையடி வாழையென வாழைகளுக்கு இடையில் கன்றுகள் ஈன்ற வாழையென நிற்கும் சித்திரையிடம் உள்ள குழந்தைச் செல்வமே ஆபரணமாக எனக்குத் தோன்றியது. அருமணிகளும், உலோகங்களும் நிரம்பிய மரியத்தின் செல்வத்தை விட சித்திரையின் செல்வம் உயர்வானது என்பது எண்ணம்.

காப்பு – ஒரு மர்மமான வாசம் கதையெங்கும் கமழ்ந்து கொண்டே இருக்கிறது. திரு உத்திரகோசமங்கையின் நீண்ட பிரகாரத்தின் முன் உள்ள தெருவில் வாலை ஆட்டியடி படுத்திருக்கும் தெருநாயிடம் ‘ பின்னே அலைச்சலா’ என்று கேட்கும் நடராஜரின் சித்திரம் 30 ஆண்டுகளுக்கு முன்பான காலத்திற்கு நம்மை காலப்பயணம் செய்விக்கிறது, இராமநாதபுர மாவட்டத்தின் தகிக்கும் வெயிலும், வறண்ட சமவெளிகளும், வான் நோக்கி உயர்ந்திருக்கும் பனைமர கூட்டம் தவிர வேறு அணிகலன் அற்ற செம்மண் நிலமும், நிலமும், வெயிலும் புணரும் போது உருவாகும் கந்தக மணமும், எண்ணெய் வழியும் கிராமங்களும், வெயிலில் காய்ந்த மனிதர்களும், உத்திரகோச மங்கையின் மூன்று தென்னைகளும், பாசி படர்ந்த குளமும், வெயிலில் வெளிறிய கோபுரத்தின் தேமலைப் போலான தோற்றமும் என கதையின் மொழி வாசகனை வசீகரித்து மயங்க வைக்கிறது.

தாழையின் வாசம் குறித்தும் அதன் மர்ம மணம் பற்றிய விவரணைகளும் இனம் புரியாத இனிமையில் ஆழ்த்துகிறது. கணவன் தரும் துன்பத்தை பொறுக்க முடியாமல் அவனைக் கொன்ற பெண்ணை காபந்து செய்து காக்கும் ஒரு கிழவரின் கதை ஒரு நிதானமான, தாழம்பூ மணத்தில் மனதைப் பறி கொடுத்த, உன்னிப்பாக முகங்களை கவனித்து கனவுகளுக்குள் ஆழ்ந்திருக்கும் சிறுவனின் பார்வையில் சொல்லப்படுகிறது. முப்பதாண்டுகளுக்குப் பிறகு மதுரையில் அவன் சந்திக்கும் அவனுக்குப் பரிச்சயமான உடல் மொழி கொண்ட மனிதர் யார் என்பது தாழம்பூவின் மணம் போன்று இரகசியமாகவே உள்ளது. கதை வாசித்து முடித்து நீண்ட நேரத்திற்குப் பின்னும் தாழையின் மர்ம மணம் நம் நாசிகளை விட்டு மறைவதில்லை.

திருச்செந்தாழை இக்கதைகளில் காட்டும் வியாபாரிகள், தரகர்கள், பெண்கள் ஆகியோரின் குணச்சித்திரம் வெவ்வேறு வண்ணங்களை காட்டுபவை. தானிய வியாபாரியாய் ஆரம்பித்து பெரும் தொழிலதிபரான தனராஜின் வென்று செல்லும் வேட்கை,,தனக்கு நட்டம் ஏற்பட்டாலும் பரவாயில்லை தான் வழக்கமாக வாங்கும் சம்சாரிகளைக் கைவிடாத தீபனின் அப்பாவித்தனம், தானியேல் நாடாரின் எடை போாடும் திறனும், நீண்ட கால விளைவுகளை முன் யோசிக்கும் வியாபாரத் திறனும் (துலாத்தான்). தம்பியிடமும் தன் வியாபார சூழ்ச்சியையும், தந்திரத்தையும் பிரயோகிக்கும் திரவியம் (ஆபரணம்) என வியாபாரிகளில் தான் எத்தனை வண்ணங்கள். பிரதிபலன் எதிர்பாரமல் தீபனுக்கு உதவும் சிங்கிக்காரன், குடும்பஸ்தரான அய்யாவுவின் வியாபார, தரகு, மனிதர்களை எடை போடும் திறன் குடும்பப் பெண்களிடம் பலனளிக்காமை என இரு வேறு விதமான தரகர்களின் வண்ணங்கள்.

மரபான குடும்பப் பெண்களான லீலா (த்வந்தம்), சாம்பா (துடி), சித்திரை (ஆபரணம்) ஆகிய மூவரின் குணநலன்களும் வெவ்வேறானவை. துலாத்தானின் யசோதரை கணவனின் தொழிலில் உள்ள பாவச் செயல்கள் தான் தன் மகளின் வாழ்வை பாதித்ததோ எனும் குற்றவுணர்வு கொண்டவள், அவளின் மகளான குழந்தமை மாறா பரமு,  காசைப் பாதுகாத்துப் பெருக்கும் மரியம் (ஆபரணம்), தனது ஓரகத்தி சித்திரையின் மீதான வன்மமும், குழந்தையின்மையின் துயரமும் நிறைந்தவள் என வித்தியாசமான குணநலன் கொண்ட பெண்கள். நவீனப் பெண்களான டீசர்ட்டின் இளம் மனைவியும், மஞ்சள் பலூன்களின் நிரஞ்சனாவும் வேறு வேறு வாழ்க்கைப் பார்வை கொண்டவர்கள்.

தன்னுடைய அழகிய மொழியாலும், சிறப்பான காட்சி சித்தரிப்புகளாலும், வியாபார நுண் தகவல்களாலும், மனிதர்களின் வெவ்வேறு குண நலன்களை புனிதப் படுத்தாமல் உள்ளதை உள்ளபடி காட்டுவதாலும் இக்கதைகள் சிறந்த இலக்கியப் படைப்புகளாகின்றன.

நுண்வினை ஆபரணம் – ரா.செந்தில்குமார்

 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

முந்தைய கட்டுரைதெலுங்குக் கவிதை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைவிக்ரமாதித்யன் ஆவணப்பட முன்னோட்டம்