தெலுங்குக் கவிதை – கடிதங்கள்

தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

அன்புள்ள ஜெ

தெலுங்கு கவிதையின் அறுபதாண்டுகளைப் பற்றிய இஸ்மாயில் அவர்களின் கட்டுரை ஒரு சுருக்கமான தெளிவான அறிமுகம். தமிழில் நமக்கு நம் அண்டை மொழிகளின் கவிதையுலகம் பற்றிய அறிமுகம் அறவே இல்லை. இங்கே இலக்கியம்பேசிக்கொண்டிருப்பவர்களில் எத்தனைபேருக்கும் கன்னடம், தெலுங்கு கவிதைகளைப் பற்றிய ஓர் அறிமுகம் இருக்கும் என்பது கேள்விக்குறிதான். நம்மைப்பற்றி அவர்களுக்கும் அறிமுகம் இல்லை என்பதும் யதார்த்தம்.

தொடர்ச்சியாக இலக்கிய உரையாடல்களை நடத்துவதன் வழியாகவே இந்த இடைவெளியை நிரப்ப முடியும். ஆனால் அது நிகழ்வதில்லை. டெல்லியில் 18 மொழிகளில் இருந்தும் கவிஞர்களை வரவழைத்து மேளா நடத்துவதில் பயனில்லை. இரண்டுமொழிகள் நடுவே இலக்கியப் பரிமாற்றம் நடப்பதுபோல கருத்தரங்குகள் உருவாக்கப்படவேண்டும். ஆனால் அத்தகைய அரங்குகள் இப்போது இல்லை. இன்றுள்ள பாரதிய ஜனதா அரசு மதம்சார்ந்த கலாச்சார அரங்குகளையே நடத்திக்கொண்டிருக்கிறது. நவீன இலக்கியத்துக்கு நிதியொதுக்குதல் இல்லை. ஆகவே நிகழ்ச்சிகளும் நடப்பதில்லை. இச்சூழலில் இப்படி அமைப்பு சாராமல் நிகழ்ச்சிகளை நடத்துவதே உகந்தவழியாகும்.

தெலுங்குக் கவிதைகளில் திகம்பரக் கவிஞர்கள் பற்றித்தான் எல்லாருக்கும் தெரியும். அவர்களின் இடதுசாரி ஆதரவுத்தளம் அவர்களை இந்தியா முழுக்க கொண்டுசென்று சேர்த்தது. அவர்கள் நம் வானம்பாடிகளுக்கு ஒருபடி கீழானவர்கள்தான். அதிலும் கத்தார், சேரபந்தராஜு எல்லாம் வெறும் கூச்சல் மட்டும்தான். கட்டுரையாசிரியரான இஸ்மாயில் அந்த அலையை தெலுங்கு கவிதையை தேக்கமுறச் செய்த ஒரு நிகழ்வு என்றுதான் மதிப்பிடுகிறார். அவர்களில் நக்னமுனி, மகாஸ்வப்னா இருவரை மட்டும்தான் கொஞ்சம் பொருட்படுத்தப்படவேண்டியவர்கள் என்கிறார். ஆனால் அவர் மார்க்ஸியத்துக்கு எதிரானவர் அல்ல. ஸ்ரீஸ்ரீயின் மார்க்ஸிய ஆதரவுக் கவிதைகள் மிகச்சிறந்தவை என்றுதான் சொல்கிறார். கவிதையில் கூப்பாடு போடுவதைத்தான் எதிர்க்கிறார்.

மிகக்கறாரான விமர்சனபூர்வமான தொகுப்பு இஸ்மாயில் அவர்களுடையது. அவரே முக்கியமான கவிஞர். அந்த விமர்சன அளவுகோலே ஆச்சரியமளிப்பது. ஏனென்றால் இங்கே ஆங்கிலத்தில் எழுதுபவர்கள் பேராசிரியர்களாகவே இருப்பார்கள். அவர்களுக்கு எண்ணையும் புண்ணாக்கும் வேறுபாடு தெரியாது. பெரிய பட்டியலாகப் போட்டு உயிரை எடுப்பார்கள். அல்லது கலைச்சொற்களை நிரவிப்போட்டு அபத்தமாக ஏதாவது சொல்லி வைத்திருப்பார்கள். இஸ்மாயில் எது கவிதை என்பதை அறிந்தவர், மொத்த வரலாற்றையும் ஒற்றைவீச்சில் சொல்லத்தெரிந்தவர் என்று தெரிகிறது. இந்தவகையான ஓர் அளவுகோல் தெலுங்கில் இருப்பதே அங்கே தரமான இலக்கியம் இருப்பதற்கான சான்று என நினைக்கிறேன்.

திகம்பரக் கூப்பாடுகளில் மறைக்கப்பட்ட தெலுங்குக் கவிதை இனிமேலாவது வெளிவரவேண்டும்,

எஸ்.பாஸ்கர்

நக்னமுனி

அன்புள்ள ஜெ,

இஸ்மாயில் அவர்களின் கட்டுரை வழியாக தெலுங்குக் கவிதையின் ஒரு கோட்டுச் சித்திரம் உருவாகி வந்ததை காணமுடிகிறது. முதலில் ஒரு நவீன இலக்கிய அலை. அது கந்துகூரி வீரேசலிங்கம் அவர்களில் தொடங்குகிறது. அதன்பின் பிரிட்டிஷ் காவிய மரபை அடியொற்றிய ஒரு ரொமாண்டிக் அலை. அதன்பின் ஸ்ரீஸ்ரீ வழியாக ஒரு மார்க்ஸிய அலை. அதன்பின் நவீனத்துவ அலை.

இந்த அடுக்கு இந்தியா முழுக்க எல்லா மொழிகளிலும் சீராகவே இருக்கிறது. தமிழில் அந்த மார்க்ஸிய அலை என்றால் வானம்பாடிகள். ஆனால் அவர்களை இங்கிருந்த நவீனத்துவ அழகியல் அடித்து அப்பால் தள்ளிவிட்டது. ஒரு பத்தாண்டுகள்கூட அவர்களால் நீடிக்கமுடியவில்லை. அதுதான் வேறுபாடு.

அர்விந்த்

அன்புள்ள ஜெ

நான் ஹைதராபாதில் இருந்தபோது ஸ்ரீஸ்ரீ சிலையை பார்த்திருக்கிறேன். நம் கண்ணதாசன் போல ஒரு சினிமாக்கவிஞர் என்ற எண்ணம்தான் எனக்கு இருந்தது. என்டிஆர் சினிமாக்களுக்கு நிறைய பாட்டுக்கள் எழுதியவர். ஆனால் இஸ்மாயில் அவர்களின் மிகக்கறாரான அழகியல் விமர்சனத்தில்கூட தெலுங்கின் மிகமுக்கியமான பெருங்கவிஞர், மொழியில் ஒரு திருப்புமுனை என்று அறிந்துகொண்டேன். ஆச்சரியமாக இருந்தது

ராஜன் நல்லுச்சாமி

தெலுகு கவி பிங்கலி சூரண்ணா

 

முந்தைய கட்டுரைதழல் – மூன்று கவிதைகள்
அடுத்த கட்டுரைபூக்கும் தாழையின் மணம் – வி.தேவதாஸ்