விக்ரமாதித்யன் -நாடோடியின் கால்த்தடம்

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

விஷ்ணுபுரம் விருதுபெறும் படைப்பாளி குறித்து ஒரு நூல் வெளியிடவேண்டும் என்பது தொடக்கம் முதல் இருந்த எண்ணம். 2010ல் ஆ.மாதவன் விருது பெற்றபோது அவரைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்று நூல் வெளியிடலாமென நினைத்தோம். ஆனால் அதை ஆ.மாதவன் விரும்பவில்லை. ஆகவே அம்முயற்சியை கைவிட்டு அதை ஆ.மாதவன் பற்றிய விமர்சன நூலாக ஆக்கிக்கொண்டோம். அந்நூலை நான் எழுதினேன்.

ஆ.மாதவன், பூமணி, தேவதேவன் ஆகியோர் பற்றி நானே நூல்களை எழுதினேன். 2014ல் நான் வெண்முரசு எழுத ஆரம்பித்து அந்த பெருஞ்சுமையில் இருந்தமையால் நூல் எழுத முடியவில்லை. ஆகவே கே.பி.வினோத் ஞானக்கூத்தன் பற்றி எடுத்த ஆவணப்படம் அதற்குப் பதிலாக விழாவில் திரையிடப்பட்டது

தெளிவத்தை ஜோசப், சீ.முத்துசாமி இருவருக்கும் அவர்களின் ஒரு நூலை இங்கே வெளியிடுவதை நூல்வெளியீடாக வைத்துக் கொண்டோம். தெளிவத்தை ஜோசப்பின் குடைநிழல்,  சீ.முத்துசாமியின்  ஆகியவை வெளியிடப்பட்டன.

தன்னைப் பற்றி ஒரு நூல் வெளியிட்டிருக்கலாம் என ஞானக்கூத்தன் பின்னர் சொன்னார். ”நாம ஒரு சூழலை நோக்கி பேசிட்டே இருக்கோம். சூழல் திரும்ப நம்ம கிட்ட சொல்ற வார்த்தைகள்னுதான் புத்தகத்த எடுத்துக்கணும்” என்றார். எழுத்தாளர்களுக்கு நூல் எத்தனை முக்கியமானது என்னும் எண்ணம் உருவானது

அடுத்த ஆண்டு முதல் ஆவணப்படமும் நூலும் வெளியிடப்படும் வழக்கம் உருவாகியது. தேவதச்சன், வண்ணதாசன், ராஜ் கௌதமன், சுரேஷ்குமார இந்திரஜித் ஆகியோர் பற்றிய நூல்கள் வெளியாயின.

இந்நூல்களின் அமைப்பு என்பது ஞானக்கூத்தனின் எண்ணத்தை ஒட்டியது. தமிழ் வாசிப்புலகம் அப்படைப்பாளிக்கு அளிக்கும் வாசிப்பு அது. பலதரப்பட்ட இலக்கிய வாசகர்கள், விமர்சகர்களின் எதிர்வினைகளின் தொகுப்பு.

பொதுவாக ‘அலசி ஆராயும்’ விமர்சனங்களின் மேல் எழுத்தாளனாக எனக்கு பெரும் ஒவ்வாமை உண்டு. அவை அந்த விமர்சகனின் அவசியமற்ற சிந்தனைகள், அவன் அரைகுறையாகக் கற்ற கோட்பாடுகளின் குவியலாகவே அமையும். படைப்புக்களை அணுகுவதற்கு அவற்றைப்போல பெரும் தடை வேறில்லை.

கல்வித்துறையில் அந்தவகையான ஆய்வுகளுக்குs சில பயன்பாடுகள் உண்டு. பெரும்பாலும் வேறொரு துறைசார்ந்து இலக்கியப்படைப்பை அணுகும் முயற்சிகள் அவை. சமூகவியல் சார்ந்து ஒருவர் பூமணி கதைகளை ஆராய்ந்தால் அது சமூகவியல் ஆய்வே ஒழிய இலக்கிய ஆய்வல்ல, அங்கே இலக்கியம் எளிய தரவுத்தொகுதியே ஒழிய படைப்பு அல்ல. இலக்கியத்தின் உணர்வும் எழிலும் அவர்களுக்கு கிடைப்பதில்லை. உலகமெங்கும் அப்படித்தான்.

என் விமர்சனங்கள் படைப்பை  அணுகிப் புரிந்துகொள்வதற்குரிய முயற்சிகளாகவே நிலைகொள்ள வேண்டும் என எண்ணுவேன். அவை அந்த ஆசிரியரின் வாழ்க்கைப்புலம், அந்நூலின் பண்பாட்டுப்புலம் ஆகியவற்றை முதன்மையாக கவனிப்பவை. அப்படைப்புகளின் அடிப்படையான படிமங்கள், பண்பாட்டுக் குறிப்புகள் ஆகியவற்றை தொகுத்துக் கொள்பவை. அப்படைப்பு அளிக்கும் அந்தரங்கமான உணர்வுநிலைகளை புனைவுக்குரிய மொழியில், அகவயமாகவே ,வெளிப்படுத்த முயல்பவை.

ஆகவே மூர்க்கமான ஓர் ஒற்றைப்படை வாசிப்பை அலசல் என்னும் பாவனையில் முன்வைக்கும் அறிவுப்பாவனை விமர்சனங்களை நான் இந்நூல்களில் கருத்தில் கொள்வதில்லை. அவற்றை எழுதுபவர்களை ஒருவகை பிரியத்துக்குரிய அசடுகள் என்றே கருதுகிறேன். உலகமெங்கும் பெரும்பாலும் எல்லா படைப்பாளிகளும் அவ்வண்ணமே எண்ணுகிறார்கள். அவர்கள் பாவப்பட்ட ஆத்மாக்கள், அல்லும் பகலும் இலக்கியத்திலேயே கிடப்பார்கள், ஆனால் கடைசிவரை இலக்கியம் பிடிபடுவதில்லை.

இத்தொகுதிகளில் வாசக எதிர்வினைகளையே முக்கியமாகக் கருதி சேர்த்திருக்கிறேன். படைப்பாளிகள் உண்மையில் விரும்புவது அதைத்தான். தன் படைப்பின் முன் வாசகன் ஆய்வாளனாக அல்ல, உணர்வுரீதியாக தன்னை அளிப்பவனாகவே நின்றிருக்கவேண்டுமென அவன் எதிர்பார்க்கிறான்.

ஆகவே இந்த நூல்கள் அனைத்தும் மிக முக்கியமான இலக்கிய ஆவணங்கள் என்று நான் நினைக்கிறேன். இவற்றிலுள்ள பல்வேறுபட்ட வாசகப்பார்வைகள் ஒரு காலகட்டம் ஒரு படைப்பாளியை எதிர்கொண்டமைக்குச் சான்றுகள் இவை.

விக்ரமாதித்யன் பற்றிய இந்நூலில் விக்ரமாதித்யனுடன் வாழ்ந்தவரும், அவருக்கிணையான கவிஞருமான லக்ஷ்மி மணிவண்ணன் முதல் சென்ற இரண்டு ஆண்டுகளுக்குள் கவிதை வாசிக்க தொடங்கிய இளம் வாசகியான இரம்யா வரை பல்வேறுபட்ட பார்வைகள் விக்ரமாதித்யனை எதிர்கொண்டிருக்கின்றன. விக்ரமாதித்யன் மீதான அன்பும், மதிப்பும் கொண்டவர்களின் பார்வைகள். அவரை ஒரு கவிதைவாசகருக்குரிய ஆழ்ந்த உணர்வுநிலையில் அறியமுயல்பவை

விஷ்ணுபுரம் விருது – விமர்சனநூல்கள்

விக்ரமாதித்யன் நூல்கள் 

விக்ரமாதித்யன் விக்கிப்பீடியா

விக்ரமாதித்யன் ஆங்கில விக்கிபீடியா

 

முந்தைய கட்டுரைஜா.தீபா – கடிதங்கள்-4
அடுத்த கட்டுரைவிக்கிப்பீடியாவுக்கு மாற்று