ஜா.தீபா – கடிதங்கள்-3

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

[விஷ்ணுபுரம் விருந்தினர் படைப்புகளை படிக்க https://vishnupuramguests2021.wordpress.com/]

அன்பு ஜெ,

”ஒற்றைச் சம்பவம்” வாசிப்பிற்குப் பின் தற்கொலையைப் பற்றி, தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றி, மரணத்தைப் பற்றி என எண்ணங்களை நீட்டிக் கொண்டிருந்தேன். வாழ்க்கையை நோக்கி அதன் இருத்தலை நோக்கிய கேள்வியின் நுனியில் மரணத்தைப் பற்றிய சிந்தனைகள் வராமல் இருப்பதில்லை. நான் சாக வேண்டும் என்று நினைத்த தருணங்களையெல்லாம் நினைவுகூர்ந்தேன். பொதுவாக இன்ன காரணம்தான் என்று சொல்லமுடியவில்லை. உச்ச அழுத்தத்தின் விழைவில் “இனி என்ன? ஏன் இருக்க வேண்டும்? இனி இருந்தால் மட்டும் என்ன?” என்ற கேள்வியின் விளிம்பில் மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பேன். எனக்காக அழ வேண்டியவர்கள் பட்டியலை மனதில் ஓட்டிப் பார்ப்பேன். சில வேளைகளில் அந்த பட்டியலின் முதன்மை நபர்கள் மீது ஏற்படும் அதீத வெறுப்பின் உச்சத்தில் என் மரணத்தைப் பற்றி சிந்தித்துப் பார்த்து அது அவர்களுக்கு எத்தனை பெரிய தண்டனையாகும் என்பதை மனதில் ஓட்டுவேன். ஆனால் ஒருபோதும் சாவதற்கு எனக்கு துணிவிருந்ததில்லை. ஒருவன் தன்னைக் கொலை செய்வதற்கு மிகுந்த தைரியம் அல்லது பித்து கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றுமெனக்கு. என் வரையில் தற்கொலை செய்து  கொள்வதற்கு ஒரு நெஞ்சழுத்தம் வேண்டும். சுய வெறுப்பால் அல்ல. சுற்றியிருப்பவர்களின் மீதான வெறுப்பால். பிறரைக் குற்றவாளியாக்க வேண்டும் என்ற அதீத வெறுப்பால் அது சாத்தியம். அந்த நுண்மையை ஜா.தீபா அவர்கள் கதையில் கடத்தியிருந்தார்.

ஒருத்தர் தற்கொலை செய்துக்க காரணம் நிச்சயமா இருக்கணுமா? என்ற கேள்வியை மணிமாலாவின் வழி அவர் எழுப்பும்போது ”இல்லை” என்றே சொல்லத்தோன்றியது. தற்கொலைக்கு ஒரே ஒரு காரணமோ, பல காரணங்களோ இல்லை. உண்மையில் காரணங்களே இல்லாதது தற்கொலை. என் மிகவும் நெருங்கிய தோழியும் உறவினர் பெண்ணுமானவள் தன் பதினாறு வயதில் தற்கொலை செய்து கொண்டாள். தற்கொலை செய்து கொண்ட அறையின் ஜன்னலுக்கு வெளியே அவள் புத்தகங்களை கிழித்துத் தூக்கி வீசி எறிந்திருந்தாள். மூக்குக் கண்ணாடியை உடைத்து எறிந்திருந்தாள். அவள் இது நாள் வரை மறைத்து வைத்திருந்த செல்பேசியை நொறுக்கி அதிலுள்ள சிம்கார்டை இரண்டாக பிளந்து வீசியிருந்தாள். இறுதியாக தனக்கு மிகவும் விருப்பமான அந்தப் பையனுடன் பேசியிருக்கிறாள். தற்கொலை செய்யப்போவதாக அவனிடமும் சொல்லவில்லை. அவனை மிகவும் விரும்பியிருந்தால் அவனுக்காகவாவது அவள் வாழ்ந்திருக்கலாம். ஆனால் அதைவிட அதீத வெறுப்பை தன் தந்தையின் மேல் வைத்திருந்தாள் என இன்று நினைத்துக் கொள்கிறேன். அவளுடைய மரணம் அவள் தந்தையை குற்றவாளியாக்கவே. ஒப்பாரி வைக்கும்போது மாமாவைப் பார்த்து அத்தை “என் லட்சுமிய கொன்னுட்டியே பாவி..” என்று சொல்லிக் கொண்டே இருந்தாள். இங்கு நாதனுடைய தற்கொலையைப் பற்றி மணிமாலா சொல்வதாகச் சொல்லும்போது,

”நாதன் எனக்காக தற்கொலை செய்துட்டாரு.. அவர் தனக்குத்தானே திருப்திபடுத்த முடியாம செத்துப் போயிட்டாரு. ஒவ்வொரு தற்கொலையிலும் யாருக்கான செய்தியோ இருக்கும் மேடம்.. நாதனோட மரணத்துல அவரே அவருக்கான செய்தியை சொல்லிக்கிட்டாரு.” என்கிறாள்.

இந்த வரிகளுக்குப் பின் மீண்டும் என் தோழியின் தற்கொலை நாளை ஓட்டிப் பார்த்தேன். அவள் தற்கொலை செய்த போது நான் கல்லூரி முதலாமாண்டு படித்துக் கொண்டிருந்தேன். செய்தியைக் கேள்விப்பட்டதும் சென்னையிலிருந்து நண்பர்கள் இரவோடு இரவாக பேருந்தில் ஏற்றி விட்டார்கள். ஊருக்கு வரும் வரை அவளை நோக்கி ஒற்றை வரியை கேட்டுக் கொண்டே வந்தேன். “என்கிட்ட சொல்லியிருக்கலாமே. என்கிட்ட சொல்ல முடியாத அந்த தீர்க்க முடியாத பிரச்சனை உனக்கு என்ன? என்ன மறந்துட்டல்ல” என்று தான் அணத்திக் கொண்டே வந்தேன். நாங்கள் பகிர்ந்து கொள்ளாத விடயங்களே இல்லை. அவளுக்கு என்னை மிகவும் பிடிக்கும். நான் அறியாத ரகசியங்கள் எதுவுமே அவளிடமில்லை என்று தான் அன்று வரை நினைத்தேன். ஆனாலும் இன்ன காரணத்திற்காகத் தான் தற்கொலை செய்திருப்பாள் என்று இன்று வரை என்னால் அமைய முடியவில்லை.

”அஞ்சு நிமிஷத்துக்குள்ள ஒரு வாழ்க்கையை சொல்லச் சொல்றீங்க.. எங்க ரெண்டு பேரோட மனநிலையை பேசணும்னு சொல்றீங்க.. ஒரு மனுஷன் ஏன் செத்துப் போனான்னு செத்த அவனுக்கேத் தெரியுமான்னு தெரியாது..” என்ற தீபாவின் வரிகள் ஆழமானவை. அவை கொண்டு நோக்கினால் எந்தத் தற்கொலையையும் ஒற்றைக் காரணத்தை, ஒற்றைச் சம்பவத்தைக் கொண்டு மட்டும் விளக்கிவிட முடியுமா என்றே ஐயம் எழுகிறது.

அதேபோல் உடற்குறைபாடுகள், மன நலக் குறைபாடுகள் கொண்ட மனிதர்களைப் பற்றி சிந்திக்கும் போது எப்போதும் எனக்குத் தோன்றும் ஒன்றுண்டு.. அவர்களின் உலகில் நாமெல்லாம் மாற்றுத்திறனாளிகள் தானே. நிறங்களைக் காணவியலாதவருக்கு, குறிப்பிட்ட நிறத்தை வேறாகக் காண இயல்பவருக்கு அவற்றை வேறு விதமாகக் காணும் நாம் மாற்றுத் திறனாளிகள் தானே. பெரும்பான்மை மனிதர்கள் காண்பதையே நாம் காண்பதால் மட்டுமே நாம் இயல்பில் இருக்கிறோம் என்று சொல்வதே முட்டாள்தனமாக இருக்கிறது இப்போதெல்லாம். இந்த இயல்பிலிருப்பவர்கள், பெரும்பான்மைக்காரர்கள் கட்டமைத்த பொருளாதாரக் கட்டமைப்பில் வேறு வழியில்லாமல் தானே இந்த வித்தியாசமானவர்கள் என நாம் கருதுபவர்கள் போட்டி போட வருகிறார்கள். அவர்களுக்கு சலுகைகள் வழங்குவதாலேயே நாம் ஏதோ கொடையாளி போல பெருந்தனமைவாதிகளாக காட்டிக் கொள்வது எவ்வளவு அபத்தம். நிர்பந்திக்கப்பட்ட இந்த ஓட்டத்தில் அவர்கள் இழப்பது தன் சுயமதிப்பைத்தான். சுயமதிப்பு இல்லாதவனுக்கு இதைப்பற்றிய அக்கறை இல்லை. இதைப் பற்றி பேசுவது கூட ஒரு பொருளில்லை. ஆனால் வலிகளைக் கடந்து அதில் வந்து சாதித்து நிற்பவர்களிடம் தான் கணம் கணமும் இந்த சுயமதிப்பு பறிக்கப்படுகிறது

”நான் உடைக்க நினைக்கறேன் மேடம். எனக்கு இந்த சமூகம் செய்யற ஒவ்வொன்னும் இயல்பா இருக்கணும்னு நினைக்கறேன். ஆனா ஒவ்வொரு முறையும் நான் தோற்கடிக்கப்படறேன். எப்பவும் எல்லாருக்கும் நன்றியுள்ளவளா இருக்கணும்னு கட்டாயபடுத்தப்படறேன். அது என் வீட்டுல இருந்தே தொடங்கும்போது அதோட வலியை எப்படி மேடம் ஒரு சம்பவமா சொல்ல முடியும்?” என்ற வரிகள் வலி மிகுந்தவை. “விருதுகள் எனக்கல்ல.. இழந்த என் கண்களுக்கானவை” என்ற வரிகளில் வெற்றியின் பொருட்டும் அவமானப்பட வேண்டும்போது வாழ்வே பொருளற்றதாக அல்லவா மாறிவிடுகிறது என்றே நினைத்தேன்.

கண் தெரிந்த மணிமாலா ஆக விரும்பியது ஒரு ஓவியராக. ஐந்து வயதிற்குப் பிறகு கண் பார்வை இல்லாத மணிமாலா அதன் தொடர்ச்சியாக ஆக விரும்பியது கற்பனாவாதியாக. The job of the artist is always to deepen the mystery” என்ற பிரான்சிஸ் பேகனின் வரிகளைப் பிடித்த மணிமாலாவை எத்துனை நுண்மையாக தீபா சித்தரித்திருக்கிறார்.

மர்மங்களை கண்டடையறது தான் ஒரு கற்பனைவாதியோட வேலையா இருக்க முடியும் இல்லையா? நான் மர்மங்களை கண்டடைய விரும்பினேன்… அஞ்சு வயசுல எனக்கு கண்ணு போச்சு.. அதுக்கப்புறம் ஒவ்வொருத்தர் மனசுலேயும் உள்ள மர்மங்களை நான் தேட ஆரம்பிச்சேன்.. ஒரு ஓவியரா ஆக முடியலேனாலும் பேகன் சொன்ன மாதிரி மர்மங்களைக் கண்டுபிடிக்க நினைக்கற ஒவ்வொருத்தருமே ஓவியர் தான்.. என்ற வரிகளின் மணிமாலாவை ஆரத்தழுவ வேண்டும் போல் இருந்தது.

தான் செய்ய வேண்டும் என்று நினைக்கும் விடயங்களிலிருந்து விலக்கி “நீ இயல்பானவன் அல்ல. நீ ஒரு பெண். நீ ஒரு தலித். நீ ஒரு சிறுபான்மையாளன். நீ ஒரு மாற்றுத்திறனாளி. நீ ஒரு மூன்றாம் பாலினத்தவர்” என்று எத்தனை வளையங்கள் நம்மை நோக்கி வீசப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மேலெழுந்து வரும்போது அவனின் திறமையினாலன்றி இன்ன காரணத்திற்காக கவனிக்கப்படுகின்றான் எனும்போது ஏற்படும் வலி அதைவிடக் கொடியது. விளக்கமுடியாதது. வளையங்கள் மாட்டப்பட்டு விட்டதாலேயே அந்த வளையத்திற்கு உட்பட்ட விடயங்களில் மட்டுமெ ஈடுபடச் சொல்வது அபத்தத்தின் உச்சம்.  அந்த ஒட்டு மொத்த சித்திரத்தை மணிமாலாவின் ஆற்றாமையின் வழி ஜா.தீபா சொல்ல முற்பட்டிருக்கிறார்.

நாதன் போன்றோர்களைப் பார்த்து ”யாராவது யாரையாவது உருவாக்க முடியுமா?” என்று கேட்கத் தோன்றுகிறது. “விருதுகள் எனக்கல்ல.. இழந்த என் கண்களுக்கானவை” என்ற வலி அளப்பறியது.

இந்த எண்ணங்கள் யாவும் மனதிற்குள் உழன்று வரவே நீங்கள் கோவை கவிதை முகாமின் மாலையில் சிறிய நடை செல்லும் போது பகிர்ந்து கொண்ட அந்தச் சம்பவம் நினைவிற்கு வந்தது. நீங்கள் கொரனா வார்டில் சந்தித்த செவிலியப் பெண்ணைப் பற்றிய சம்பவம் அது. இந்த நோயச்ச காலத்தில் ஆபத்தான இந்தப்பணி வேண்டாம் இல்லையேல் பிரிந்து விடலாம் என்ற கணவனிடம் தைரியமாக “நான் என் பிள்ளையள பாத்துக்கிடுதேன். வேலைய விட்டுத்தான் உன்கூட இருக்கனும்னா வேணாம், நீ போ” என்று அவனை மறுத்தவளைப் பற்றி மிகப் பெருமையாக எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தீர்கள். ”தான் இல்லாமல் ஒரு பொம்பளையால இயங்கிட முடியும் என்பதை எந்த ஆம்பளையாலயும் உடனே தாங்கிக்க முடியாது. அதுக்கப்பறம் அவன் வேலைய விடறத பத்தி பேசவே இல்லனு அவ சொன்னா” என்று கூறி வாய்விட்டுச் சிரித்தீர்கள். “பொம்பளைக்கு அப்படி ஒரு கெத்து வேணும்லா. அந்த நிமிர்வு முக்கியம்” என்று எங்களைப் பார்த்துச் சொன்னீர்கள். என்னை நீங்கள் முதல்முறை பார்த்த போது சொன்ன வார்த்தையும் அது தான். அன்பில் குழைந்து நின்றிருந்த என்னை அருகணைத்து “நிமிர்வோட இருக்கனும்” என்று தோள் சேர்த்துக் கொண்டீர்கள். அன்பிலும் கூட அந்த நிமிர்வை பெண்கள் விட்டு விடக்கூடாது என்ற உங்களின் எண்ணம் பிடித்திருந்தது.

மணிமாலா அப்படிப்பட்ட நிமிர்வானவள்.அவரோட உதவியில்லாம நான் வாழ முடியுங்கறதை அவரால ஏத்துக்க முடியல. இத்தனை நாள் என்னோட வெளிச்சம்னு அவர் எல்லார்கிட்டயும் வாங்கின பேரை, என் சாதனைக்கு பின்னாடி ஒளிவட்டமா அவர் இருந்ததை நிரூபிக்க நான் இல்லாமப் போனதை அவரால தாங்கிக்க முடியல.. என்கிட்டே தோற்றத்தை அவரால ஏத்துக்க முடியல. அவரோட சாவுல என்னைத் தோற்கடிக்க நினைச்சாரு… இதை நான் ஒரு சம்பவமா எப்படி சொல்றது மேடம்? மாற்றுத்திறனாளி என்பதற்காக கணகணமும் அவள் நிமிர்வை கேள்விக்குள்ளாக்கும் சமூகத்திடம் அவள் இத்துனை தெளிவாக இருப்பது பிடித்திருக்கிறது.  ஒற்றைச் சம்பவத்தால் மட்டும் விளக்க முடியாத கதையிது. இங்கிருந்து விரிந்து விரிந்து பல வகையான மணிமாலாக்களின் உள்ளத்திலும், நாதன்களின் உள்ளத்திலுமென விரித்துக் கொண்டே செல்லக் கூடியது.

 

பிரேமையுடன்

இரம்யா

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஜா. தீபாவின் மறைமுகம் கதை எளிய பெண்ணிய கதை போன்ற பாவனை செய்கிறது. வரலாற்று வீரனை மணந்த எளிய பெண்ணின் புலம்பல்கள் போல, தன் இயாலமைகளை அடுக்கி, அதுவும் அப்பாவியான பெண் அவன் குறைகளை கூறாமல், தன் அறியாமையால் அந்த தீவிரத்தை அறிய முடியாதவள் போல கதை அமைந்துள்ளது. ஆனால் பாலகனகனின் சொற்களாக வரும் இந்த வரி ஒரு முக்கியமான முரணை மௌனமாக முன்வைக்கிறது.

”துன்பத்தில் உழன்று தன்னையே காப்பாற்றிக்கொள்ள வழியில்லாத ஒருவரைத் தெய்வமாகக் கொண்டாடுபவர்கள் எல்லாம் இந்த நாட்டின் நரம்புக்குள் விஷமாய் புகுந்திருக்கிறார்கள் என்று கூச்சலிடுவான் ”.

இது காந்தியையே குறிக்கிறது என கொள்ளலாம். அப்படியென்றால் பாலகனகன் வரலாற்றில் நிற்பதாக நினைத்து செய்யும் யத்தனம் அர்த்தமற்று போகிறது. அப்படியென்றால் காமாட்சி, பாலகனகன் போராடும் பாரததின் குறியீடே. அவனின் போராட்டமும் அவனின் நொய்ந்த குழந்தை போல இறந்துவிடுகிறது. வரலாற்று உணர்வற்ற அந்த போராட்டம் அவளை கருத்தில் கொள்வதேயில்லை. அத்தகைய பெண்களை கொண்டுதானே காந்தியின் சுதந்திர இயக்கம் நடந்தது. காமாட்சி இறந்த பாலகனகனை வாசனை மூலமாக அறிய முயன்று தோற்பது ஒரு கோரமான குறியீடு. கண்களற்ற வரலாறு அவன் இருப்பை அறியாமல் வெளியே தள்ளுகிறது.

இந்த கதையை வாஞ்சிநாதனுடன் இணைத்துகொள்வதற்காண சாத்தியங்களை கொண்டது. ஆனால் பாலகனகன் தீவிர போராளிகளின் பிரதிநிதியே.

அன்புடன்

ஆனந்தன்

ஜா.தீபா கடிதங்கள்-2

ஜா.தீபா கடிதங்கள்


 

விஷ்ணுபுரம் விருந்தினர்-1, கோகுல் பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-2, காளிப்பிரசாத்

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, எம்.கோபாலகிருஷ்ணன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4, பா.திருச்செந்தாழை

விஷ்ணுபுரம் விருந்தினர்-5, சுஷீல்குமார்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6, செந்தில் ஜெகன்னாதன்

விஷ்ணுபுரம் விருந்தினர் -7, ஜா தீபா

விஷ்ணுபுரம் விருந்தினர்-8, சோ.தர்மன்

முந்தைய கட்டுரைவசந்த், மாற்று சினிமா- கடிதம்
அடுத்த கட்டுரைஊர்த்துவதாண்டவம், கடிதங்கள்