ஈரோடுக்குச் செல்வதும் சென்னைக்குச் செல்வதும் ஒருவகை அன்றாடச்செயல்பாடுகள் போல ஆகிவிட்டிருக்கின்றன. சென்ற டிசம்பர் 11 அன்று வழக்கமான கோவை ரயிலில் வழக்கமான பெட்டியில் வீட்டில் இருப்பதுபோலவே உணர்ந்தேன். மறுநாள் வி.ஜீவானந்தம் அவர்களின் நினைவு விழா.
நான் செல்லும் வழியெல்லாம் ஜீவா பற்றிய நினைவுகளை தொகுத்துக்கொண்டே இருந்தேன். ஆனால் ஒன்று கவனித்திருக்கிறேன், எழுதும்போது மட்டுமே நான் குவிய முடிகிறது, சீராக நினைவுகூரவும் முடிகிறது. நினைக்கத் தொடங்கினால் சிதறிச்சிதறிச் செல்கின்றன எண்ணங்கள்.
ஈரோட்டில் அன்று எனக்கு அணுக்கமாக இருந்தவர்களில் ஒருவரான நண்பர் ரிஷ்யசிருங்கர் இன்றில்லை. அண்மையில் இதயநோயால் மரணமடைந்தார். அவருடைய குடும்பம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. அந்நினைவுக்குச் சென்று வேறெங்கோ தவறி நெடுந்தொலைவில் தன்னுணர்வு கொண்டேன்.
காலையில் ரயில்நிலையத்தில் நண்பர் பிரகாஷ் என்னை வரவேற்று அறைக்கு அழைத்துச் சென்றார். சென்னை டாக்டர் தங்கவேல் அறைக்கு வந்தார். நான் அறைக்குச் சென்று இன்னொரு சிறு தூக்கம் போட்டேன். நண்பர்கள் அனைவரும் காஞ்சிகோயிலில் சென்னை செந்திலின் பண்ணைவீட்டில் தங்கி உரையாடி பின்னிரவில்தான் தூங்கியிருந்தனர். அவர்கள் கிளம்பி வர எட்டரை மணி ஆகிவிட்டது.
காலை பத்துமணிக்கு நிகழ்ச்சி. நான் மாலைநிகழ்ச்சி என ஏனோ நினைத்துக்கொண்டிருந்தேன். மாலையில் வேறு சந்திப்புகள் இருந்தன. குளித்து முடித்து கிளம்புவது வரைக்கும்கூட ஜீவா பற்றிய நினைவுகளை கோவையாக அமைக்க முடியவில்லை. குளித்துவிட்டு வந்தபோது ஜீவா குளியலுக்குப் பின் சற்று அமிர்தாஞ்சனத்தை ஒரு நறுமணப்பொருள்போல நாசியிலும் மோவாயிலும் போட்டுக்கொள்வார் என்பதை நினைவுகூர்ந்தேன். தொட்டுத் தொட்டு நினைவுகள் எழுந்தன.
எனக்கு ஜீவா அறிமுகமானவர் என்றாலும் அவர் என்னை ஓர் எழுத்தாளராகக் கவனித்தது சுபமங்களாவில் ஜகன்மித்யை வெளிவந்ததும்தான். என்னை தேடிவந்து தொலைபேசி நிலையத்தில் சந்தித்தார். முன்பு சூழியல் ஆர்வம் கொண்ட இளைஞர்களில் ஒருவராக மெல்லிய அறிமுகம் இருந்த என்னை அவர் புதிதாகக் கண்டடைந்தார் என நினைக்கிறேன். அல்லது முன்பு கண்டது நினைவில்லாமலும் இருந்திருக்கலாம்.
ஏனென்றால் நான் அதற்கு முன் என்னை எழுத்தாளனாக நினைத்துக் கொள்ளவில்லை. என்னை சூழியல்- சமூகச் செயல்பாட்டாளனாக எண்ணிக்கொண்டிருந்தேன். ஒரு அண்ணா ஹசாரே, பாபா ஆம்தே,சுந்தர்லால் பகுகுணா ஆகிவிடலாமென கனவுகண்டுகொண்டிருந்தேன். சுந்தர ராமசாமியுடனான நெருக்கம் அதை உடைத்து என்னை நான் ஓர் எழுத்தாளனாக கண்டடையச் செய்தது.
அத்துடன் என் அப்பா அம்மாவின் சாவு உருவாக்கிய வெறுமையை இலக்கியம் மட்டுமே நிகர்செய்ய முடியுமென்றும் கண்டுகொண்டிருந்தேன். படுகை, போதி, மாடன்மோட்சம்,திசைகளின் நடுவே ஆகிய கதைகள் வெளியாகி எனக்கு ஓர் இலக்கிய இடத்தையும் உருவாக்கியிருந்தன.
செயல்பாட்டாளனாக என்னை எண்ணிக்கொள்வதை விட்டுவிட்டிருந்தேன் என்பது மட்டுமல்ல அதெல்லாம் வெட்டிவேலை என்றும் அந்த அகவைக்குரிய முதிர்ச்சியின்மையுடன் எண்ணிக்கொண்டும் இருந்தேன். இலக்கியவாதியின் பரிணாமத்தில் அது ஒரு கட்டம். எழுதுவது தவிர வேறு அனைத்துமே பயனற்றவை என்று நினைக்கும் ஒரு நிலை.
அந்த படிநிலைகளை இன்று எண்ணும்போது புன்னகைதான் வருகிறது. முதிரா இளமையில் நம்மை நாம் ஓர் இலட்சியவாதி, உலகைக் காக்கும் பொறுப்பு கொண்டவர், உருவாகிவரும் வரலாற்று ஆளுமை என எண்ணிக்கொள்கிறோம். அப்போது ஒருவகை இலட்சியவாத வெறி உருவாகிறது. அதன்பின் அந்த நம்பிக்கை இல்லாமலாகி அந்த இடத்தில் இளம் அறிவுஜீவிக்குரிய உருவாகும் அவநம்பிக்கையும் ஏளனமும் உருவாகிறது.
இலக்கியவாதியின் இருள் என்பது ஆணவம். அது இல்லாமல் எழுதமுடியாது. ஆனால் அந்த இருளால் நம் பார்வை சிறைப்படாமல் இருக்கவேண்டுமென்றால் இலக்கியத்துக்கு அப்பால் ஒரு பிடிமானமும் தேவை. ஒருவகை கயிற்றுமேல் நடை அது.
அதாவது, நாம் ’உப்பக்கம்’ காணும் திறன் கொண்டவர்கள், இலட்சியவாதிகளும் செயல்பாட்டாளர்களும் ஒருவகை அப்பாவிகள் என்னும் எண்ணம் நமக்கு எழுகிறது. நாம் சில நூல்களை வாசித்துவிட்டோம், சிலவற்றை எழுதிவிட்டோம் என்பதனாலேயே அனைத்தையும் அறிந்து மதிப்பிடும் தகுதிகொண்டவர் என எண்ணிக்கொள்கிறோம். அந்த ஆணவம் இல்லாமல் எழுதமுடியாது.ஆனால் அங்கேயே நின்றுவிடும் எழுத்தாளன் மிகச்சிறிய படைப்பாளி.
அனைத்து மானு ட இருள்களையும், அத்தனை வரலாற்றுச் சிடுக்குகளையும் உணர்ந்தபின் அந்த இலட்சியவாதத்தின் பெறுமதியை உணர்ந்தவனே மெய்யான படைப்பாளி. அது புறத்தை நோக்கி, அகத்தை பரிசீலித்து சென்றடையவேண்டிய ஓர் நுண்மையான இடம். ஒரு சமநிலைப்புள்ளி.
என் கசப்பு, எள்ளல், எதிர்மறை நிலை ஆகியவற்றில் இருந்து ஜீவா வந்து மீட்டார். என்னை மீண்டும் சூழியல் செயல்பாடுகளின் உலகுக்கு கொண்டுவந்தார். ஆனால் இம்முறை துண்டுப்பிரசுரங்களை எழுதுவது தவிர எதிலும் நான் பங்கெடுக்கவில்லை. ஒன்றிரண்டு நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தேன். காந்தி பற்றி சித்தார்த்தா பள்ளியில் நிகழ்ந்த ஓர் உள்ளரங்க விவாதத்தில் பேசினேன். அக்கட்டுரை ஓர் இதழில் வெளியானது. மற்றபடி அவருக்கு நெருக்கமானவனாக இருந்தேன் என்று மட்டுமே சொல்லமுடியும். நான் என் இலக்குகளையும் என் எல்லைகளையும் கண்டுகொண்டிருந்தேன்.
நான் பலமுறை சென்று அமர்ந்து பேசிய ‘நலந்தா மருத்துவமனை’ வளாகம். [நாளந்தா அல்ல. நலம் தா என்பதன் சுருக்கம்] அதை புதுப்பித்து ஜீவா நினைவிடமாக ஆக்கியிருந்தனர். அங்கே சமூகப்பணி, சூழியல்பணிகளுக்காக நிகழ்ச்சிகளை நடத்தலாம். பணியாளர்கள் வந்தால் தங்கிக் கொள்ளலாம். நூலகம் மற்றும் நிகழ்வுக்கூடம் உண்டு. ஜீவா பேரில் நிறுவப்பட்டுள்ள அறக்கட்டளையின் கட்டுப்பாட்டில் அந்த இடம் இருக்கும்.
ஏற்கனவே முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியும் சமூகநீதிச் செயல்பாட்டாளருமான சந்துரு வந்திருந்தார். அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். நண்பர்களை அறிமுகம் செய்து வைத்தேன். ஜெய்பீம் பற்றிய பேச்சு வந்தது. ஜெய்பீம் சினிமா என்னும் ஊடகத்திற்குரிய மிகை கொண்டது. குறிப்பாக அது நீதிமன்றம் பற்றி அளிக்கும் சித்திரம் மிகையானது. சினிமாவில் நீதி ஓரிரு மாதங்களில் கிடைத்துவிட்டது. மெய்வாழ்க்கையில் நீதிமன்றத்தில் 14 ஆண்டுகள் வழக்கு நடைபெற்றபின்னரே குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனர்.
சந்துரு அவருடைய அனுபவம் ஒன்றைச் சொன்னார். ஆந்திரத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் ஜெய்பீம் பார்த்துவிட்டு நடிகர் சூரியாவின் படத்தை மட்டும் எடுத்துக்கொண்டு சென்னைக்கு வந்துவிட்டனர். அந்த வழக்கறிஞரைப் பார்த்தால் தங்களுக்கு நீதி கிடைக்கும் என அவர்கள் நம்பினர். ஆட்டோ ஓட்டுநர் அவர்களிடம் பேச்சுக்கொடுத்து, அவர்களின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு, சந்துரு இல்லத்துக்கு கூட்டிவந்துவிட்டார்.
சந்துருவைக் கண்டு அவர்களுக்கு அவநம்பிக்கை. அவர்கள் நம்பி வந்த வழக்கறிஞர் வேறு. ஜெய்பீம் படத்தின் உண்மையான வழக்கறிஞர் இவர்தான் என நம்பவைக்க நெடுநேரம் ஆகியது. அதன்பின் அவர்கள் தங்கள் பிரச்சினையைச் சொன்னார்கள். காவலர்கள் குடும்பத்தலைவரை கைதுசெய்து கொண்டுசென்றுவிட்டனர். அவர் எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர்களுக்கு ஆந்திராவின் நீதிமன்ற எல்லை வேறு என்றும், அங்கே நல்ல வழக்கறிஞர்கள் பலர் உள்ளனர் என்றும் சொல்லி புரியவைக்க பெரும் போராட்டம் தேவைப்பட்டது.
அத்துடன் அவர்களுக்கு திரும்பிச் செல்ல பணமும் கொடுக்க வேண்டியிருந்தது. அவர்கள் அந்த சினிமாக் கதைநாயகனை தெய்வம்போல நம்பி, அவரிடம் வந்தால் எல்லாமே சரியாகிவிடும் என எண்ணி, கிளம்பியிருந்தனர். அதைச் சொல்லிவிட்டு “இங்கே இன்னும்கூட தனிமனிதர்களின் சாகசம், கதைநாயகத்தன்மை ஆகியவற்றையே நம்புகிறார்கள். தெய்வநம்பிக்கையின் இன்னொரு வடிவம். கொள்கைகள், அமைப்புகள் ஆகியவற்றை மக்கள் நம்புவதில்லை” என்றார் சந்துரு.
காந்தியப் பல்கலையின் முன்னாள் துணைவேந்தர் மார்க்கண்டன் , பழங்குடிகளுக்காகச் செயல்படும் வி.பி.குணசேகரன் அருஞ்சொல் இதழாசிரியர் சமஸ், பச்சைத்தமிழகம் நிறுவனர் உதயகுமார், பாடகர் கிருஷ்ணா, எழுத்தாளர் செந்தில் ஜெகன்னாதன், காந்திய ஆய்வாளர் சித்ரா பாலசுப்ரமணியம் ஆகியோர் வந்திருந்தனர். அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தேன். குக்கூ -தன்னறம் நண்பர்கள்தான் விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். சிவராஜ், சிவகுருநாதன், அய்யலு குமாரன், பொன்மணி, மைவிழிச்செல்வி என எல்லாமே தெரிந்த முகங்கள்.
சற்றுநேரத்தில் மேதா பட்கர் வந்தார். அவரை எதிர்கொள்ள நானும் மற்றவர்களுடன் சென்றேன். அவர் சட்டென்று என்னை அடையாளம் கண்டுகொண்டு “நாம் பார்த்திருக்கிறோம்” என்றார். “ஆமாம், புனேயில்” என்றேன். ஆம் என்றார். அது முப்பதாண்டுகளுக்கு முன்பு. அன்று நான் எதிலும் எவ்வகையிலும் பங்கேற்க முடியாத குழம்பிய, பயனற்ற முதிரா இளைஞன். அவருக்கு நினைவிருப்பது வியப்புதான். அந்நாளை மகிழ்ச்சியாக ஆக்கியது அது.
ஜீவா நினைவிடத்தை மேதாபட்கர் திறந்துவைத்தார். ஜீவா சிலையை நான் திறந்து வைத்தேன். சந்துரு ஜீவா நினைவு சந்திப்புக் கூடத்தை திறந்துவைத்தார். அழகிய கூடம். அதில் ஜீவாவின் வெவ்வேறு புகைப்படங்கள்.
பதினொரு மணிக்கு சித்தார்த்தா பள்ளி வளாகத்தில் பொதுநிகழ்வு. ஜீவா குறித்த நினைவுகள் மற்றும் அவருடைய இலட்சியங்கள் பற்றி மேதா பட்கர், சந்துரு, வி.பி.குணசேகரன், சமஸ், உதயகுமார் ஆகியோர் பேசினர். ஜீவா நினைவுமலர் வெளியிடப்பட்டது. ஜீவா அறக்கட்டளையின் இலக்குகள் திட்டங்கள் பற்றி ஜீவாவின் தங்கையும் அறக்கட்டளைப் பொறுப்பாளருமான ஜெயபாரதி பேசினார்.
ஜீவா நினைவு பசுமைவிருதுகள் பாடகர் கிருஷ்ணா, சமஸ், விஷ்ணுப்ரியா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. விருதுகளை மேதா பட்கர் வழங்கினார். விழாவில் நான் இருபது நிமிடம் ஜீவா நினைவு, அவருடைய சிந்தனைகள் ஆகியவற்றைப் பேசினேன். அதன்பின் மேதா பட்கருடன் ஓரு கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழா முடிந்து வழக்கம்போல இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக வாசகர்களுடன் உரையாடி, நூல்களில் கையெழுத்திட்டு அளித்து அங்கே நின்றிருந்தேன்.சிவராஜ் அறிமுகம் செய்துவைத்த தாமரை மிக இனிய பாடல் ஒன்றை எனக்காக பாடினார். இயல்பாகவே சுருதியும் பாவமும் இணைந்த அழகான குரல்.
நினைவுகளால் நிறைந்த இனிய நாள். ஜீவா இன்றில்லை. அறக்கட்டளை என்பது அவருடைய ஆளுமையே ஒரு நிறுவனமாக ஆனதுபோலத்தான். அது நீடித்து வளரவேண்டும்.