அபாரமான, உணர்வு மேலிடும், உத்வேகம் கொள்ள வைக்கும், பரவசமான காட்சி அது. தண்டியின் ஆட் கடற்கரை. 61 வயதாகும் அம்மெலிந்த உடல்கொண்ட மனிதர் நிலம் குனிந்து ஒரு கைப்பிடி உப்பெடுத்து வான் நோக்கி கை உயர்த்தி “ஒரு சத்தியாக்கிரகியின் கையில் இருக்கிற உப்பு இந்த தேசத்தின் கௌரவம். நம் உயிரே போனாலும் நம் கை தாழ்ந்துவிடக் கூடாது” என்று அறைகூவல் விடுத்த அந்த கணம் மெய்சிலிர்த்து மனம் நிறைந்து “வந்தே மாதரம்” என்று இதயத்தின் அடி ஆழத்திலிருந்து குரல்கள் உயரவைத்த ஒரு பொற்கணம். அதன்பின் இந்திய மண்ணில் விடுதலைப் போராட்டக் களத்தில் அஹிம்சையின் வெண்மைத் துணைகொண்டு அரங்கேறியவையெல்லாம் சரித்திரத்தில் ஆழமாய்ப் பதிந்துபோன அதிசயத் தடங்கள்.
இந்தியாவில், ஆங்கிலேய காலனி அரசால் 1885-ல், உள்நாட்டில் உப்பிற்கு வரி விதிக்கப்படுகிறது. உற்பத்தி செலவைவிட அதற்கான வரி அதிகம். 1885-ல் துவங்கப்பட்ட இந்திய தேசிய காங்கிரஸ் 1888-ம் ஆண்டு கூட்டிய முதல் கூட்டத்தில், எடுக்கப்பட்ட தீர்மானங்களில் பிரதானமாய் இடம்பெற்றது உப்பு வரியை நீக்கக் கோரும் கோரிக்கைதான். கோகலே அதற்கான போராட்டங்களை தலைமையேற்று நடத்துகிறார். வைஸ்ராய் கர்சனால் இரண்டு வருடங்கள் உப்பு வரி நீக்கப்படுகிறது. உப்பு வரி ஆங்கிலேய அரசாங்க்கத்திற்கு மொத்த வரி வசூலில் பத்து சதவிகிதம். அரசு கஜானாவில் வரி வசூல் குறைய மறுபடியும் உப்பு வரி அமலாக்கப்படுகிறது. அந்த வருமானத்தை இழக்க அரசு விரும்பவில்லை.
1930. காந்தியின் மனம், எப்படி ஒட்டுமொத்த இந்திய மக்களையும் சட்டமறுப்பு இயக்கத்திற்குள் ஈர்த்துக் கொண்டுவருவது, என்னென்ன வழிமுறைகளை, எத்தகைய அஹிம்சைப் போராட்டங்ககளை வடிவமைப்பது என்பதைப் பற்றியே சதா சிந்தித்துக் கொண்டிருக்கிறது. 1920-ல் ஆரம்பித்த ஒத்துழையாமை இயக்கம் அஹிம்சையில் தொடங்கி வன்முறையில் முடிந்தது போல் மறுபடியும் ஆகிவிடக்கூடாது என்பதில் அவர் மனம் உறுதியாய் இருக்கிறது. எதேச்சையாய் டேபிளின் மேல் அரசுக்கு அனுப்பியிருந்த பதினோரு அம்சக் கோரிக்கையில் நான்காம் கோரிக்கையின் (உப்பு சம்பந்தமானது) மேல் அவர் பார்வை செல்ல, அவர் மனதில் மின்னலென ஒரு திட்டம் உதிக்கிறது.
மார்ச் 2 1930 அன்று இர்வின் வைஸ்ராய்க்கு “அன்புள்ள நண்பருக்கு…” என்று ஆரம்பித்து கடிதம் எழுதுகிறார். உப்புச் சத்தியாகிரகம் பற்றிய தன் திட்ட முடிவைக் கூறி, அரசு உப்பு வரியை நீக்காவிட்டால், தண்டி வரை நடைபயண யாத்திரை மேற்கொண்டு, அங்கு சட்டத்தை மீறி உப்பு காய்ச்சப் போவதாகத் தெரிவிக்கிறார். எல்லாவற்றையும் முன் கூட்டியே எதிரணிக்குச் சொல்லிவிட்டு சொல்லிவிட்டு சரியாய் நடைமுறைப்படுத்துவதுதான் அக்கதாநாயகனின் பாணி. “As the Independence Movement is essentially for the poorest in the land the beginning will be made with this evil” என்ற அக்கடிதத்தின் வரி எந்த சிறந்த அபுனைவு எழுத்தாளரின் வரியை விடவும் அபாரமானது. “இது என்ன கோமாளித்தனம்” என்று நினைத்த அரசு உப்பு வரியை நீக்கவில்லை. வேடிக்கையாக எளிமையாக எடுத்துக்கொள்ளப்பட்ட அந்தப் போராட்டம் ஏற்படுத்தப்போகும் பிரம்மாண்ட அதிர்வலைகளை ஆங்கிலேய அரசு அப்போது கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.
சபர்மதி யாத்திரைக்குத் தயாராகிறது. தண்டி யாத்திரைக்கு முந்தைய நாள் காந்தியின் அந்த மந்திரச் சொற்கள்…
“நான் ஆரம்பித்த வேலையை முடிக்க இந்தியாவில் மனங்கள் இருப்பதாக நான் நம்புகிறேன். நமது காரணத்தின் நீதியிலும், நமது ஆயுதங்களின் தூய்மையிலும் எனக்கு நம்பிக்கை உள்ளது. வழிமுறைகள் மாசற்றதாக இருக்கும் இடத்தில், கடவுள் சந்தேகத்திற்கு இடமின்றி அவருடைய ஆசீர்வாதங்களுடன் நிறைந்திருக்கிறார். இந்த மூன்றும் இணைந்த இடத்தில் தோல்வி என்பது சாத்தியமற்றது. கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். நாளை தொடங்கும் போராட்டத்தின் பாதையில் எழுகிற அனைத்துத் தடைகளையும் அவரவர் ஆத்மபலத்தால் மீறி முன்செல்லுங்கள்”
வார்த்தைகளைக் கவனித்தீர்களா? “ஆயுதங்களின் தூய்மை”. ஆயுதங்கள் நாசப்படுத்துபவையாகவும், ஊறு விளைவிப்பதாயும், துயரங்கள் உண்டாக்குபவையாகவும்தான் இருக்க வேண்டுமா என்ன?. அஹிம்சையின் ஆயுதங்கள் எப்போதும் தூய்மையானவைதானே?.
12.03.1930 சபர்மதி ஆசிரமத்திலிருந்து காந்தி மற்றும் ஆசிரமத்தைச் சேர்ந்த 79 பேருடன் தண்டியை நோக்கி நடைபயண யாத்திரை துவங்குகிறது. பயணம் முழுவதும் கிராமங்கள் வழியேதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குஜராத் வித்யாபீட மணவரான அருண் டுக்டி தலைமையில் “Army of Dawn” என்று அழைக்கப்பட்ட மாணவர் அணி எட்டு எட்டு பேராக இரண்டு குழுக்களாகப் பிரிந்து யாத்திரைக்கு முன்னதாகவே யாத்திரை வழி நெடுகிலும் பயணித்து நடைபயணத்திற்கான அத்தனை முன்னேற்பாடுகளையும் கவனிக்கிறது.
240 கிலோமீட்டர்கள்…25 நாட்கள்…இதயத்தில் பதிந்த பொற்காலடிகள்…
இன்னும் இன்னும் எழுதிச் செல்லவேண்டும் என்ற வேட்கைதான் எழுகிறது. சித்ராம்மாவின் “மண்ணில் உப்பானவர்கள்” நூல் முற்றிலும் விஷூவல்களால் ஆனது. பதினைந்து இருபது வருடங்களுக்கு முன் படித்த “ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகத்”தின் ஹென்றி அமர்ந்து வரும் துரைக்கண்ணுவின் லாரி அந்த மலைப்பாதையில் வளைந்து செல்லும் முதல் காட்சி சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவுத் துல்லியத்தோடு மனதில் பதிந்தது போல், ஜெ-யின் “லங்கா தகனத்”தின் இறுதிக் காட்சியில், அனந்தன் ஆசான் காற்று வீசும் அந்த இரவில், கண்களில் சிவப்போடு, வாலில் பற்ற வைக்கப்பட்ட தீயோடு உக்கிரமாக மரத்துக்கு மரம் தாவுவது வேணுவின் கேமரா கண்கள் வழியாக சிவப்புச் சலனங்களோடு உள்ளிறங்கியது போல், மண்ணில் உப்பானவர்களின் பல காட்சிகளும் ஈர நிலத்தின் மணத்தோடு மனதில் பதிந்தது.
ஒரு காட்சி…
யாத்திரையில் தங்கும் கிராமங்களிலெல்லாம் மக்கள் கூட்டத்தில் காந்தி பேசுகிறார். ஒரு கிராமத்திற்கு வெளியே வயல்பரப்பில் ஆண்களும், பெண்களும், குழந்தைகளுமாய் மக்கள் கூடியிருக்கிறார்கள். இரவு கவியும் பின் மாலை நேரம். மின் விளக்குகளில்லை. ஏற்றப்பட்ட லாந்தர் விளக்குகளின் மென்மையான மஞ்சள் ஒளி. மெலிதாய் வீசும் கோடைக்காற்று. காந்தி தன் மெல்லிய குரலில் பேசிக்கொண்டிருக்கிறார்.
உள்ளுக்குள் ஆழத்தில் எங்கோ ஆன்மீகமான ஒரு தளத்தில் இக்காட்சியைக் காண்பதாகவே என் மனம் எண்ணிக்கொண்டது.
“மண்ணில் உப்பானவர்கள்” தகவல்களால் செறிந்தது. வரலாற்றை நவீன புனைவு மொழியில் நம்மிடம் அணுக்கமாக கொண்டுவருவது. நூற்றுக்கணக்கான சிறுகதைகளும், பல நாவல்களும் முகிழ்க்கும் சாத்தியம் கொண்ட நிலமான அகநியின் “ஆனந்தரங்கப் பிள்ளை தினப்படி சேதிக்குறிப்பு” எனும் பொக்கிஷத்தை இக்கணத்தில் நினைவில் கொள்கிறேன். “மண்ணில் உப்பானவர்க”ளில், தண்டி யாத்திரை குறித்தும் (அதில் பங்குகொண்ட ஆசிரமத்தைச் சேர்ந்த ஆளுமைகளின் விபரங்கள், யாத்திரைக் குழு பயணித்த கிராமங்கள், நாள் வாரியாக பயணத்தில் நடந்த சம்பவங்கள்), தமிழகத்தில் ராஜாஜியின் தலைமையில் நடைபெற்ற உப்புச் சத்தியாகிரக யாத்திரை குறித்தும் (திருச்சியிலிருந்து வேதாரண்யம் வரை 98 பேருடன் 1930 ஏப்ரம் 14-லிருந்து 30 வரை நடைபெற்ற நடைபயண யாத்திரை), மற்றும் இந்தியா முழுவதும் வெவ்வேறு பகுதிகளில் நடந்த உப்புச் சத்தியாகிரகம் குறித்தும், போராட்டத்தில் பெண்களின் பங்கு குறித்தும், தேசிய வாரம் குறித்தும், தாராசனா போராட்டம் குறித்தும் விரிவான குறிப்புகள் இருக்கின்றன.
காரக் பகதூர் சிங் நேபாளி. ஒரு கொலைக்குற்றத்திற்காக தண்டனை பெற்றவர். தண்டனை முடிந்ததும் அவர் காந்தியின் சபர்மதியில் வந்து இணைந்திருக்கிறார். ஒரு ஏழை நேபாளிப் பெண்ணை ஹீராலால் என்பவன் வன்புணர்வு செய்துவிட, காரக் ஹீராலாலைக் கொன்று விடுகிறார்.
1983 ல், தண்டி யாத்திரை நடந்த வழி முழுதும் மறுபடி பயணம் செய்து, யாத்திரையில் கலந்துகொண்டவர்களில் பலரைச் சந்தித்து யாத்திரைக் குறிப்புகளை பதிவு செய்து வைத்திருக்கிறார் தாமஸ் வெபர்.
தமிழ்நாட்டில் நடைபெற்ற வேதாரண்யம் உப்புச் சத்தியாகிரகத்தில். ராஜாஜியின் தளபதியாக இருந்தவர் சர்தார் வேதரத்தினம் பிள்ளை. இன்றும் பிள்ளையின் பேரர்கள் கேடிலியப்பன் அவர்களும், அவரின் அண்ணாரும் வேதாரண்யத்தில்தான் வசிக்கின்றனர். வேதாரண்ய உப்புச் சத்தியாகிரகம் பற்றி கேடிலியப்பன் அவர்களின் அண்ணார் பேசுவதை, நேரம் கடப்பது தெரியாமல் மணிக்கணக்கில் கேட்டுக் கொண்டிருக்கலாம்.
4.05.1930 திங்கள் நள்ளிரவுக்கு மேல் காந்தி கைது செய்யப்படுகிறார். அவர்களிடம் சிறிதுநேரம் அவகாசம் கேட்டு கரே அவர்களை “வைஷ்ணவ ஜனதோ” பாடலைப் பாடச்சொல்லி பிரார்த்தனை முடித்துவிட்டுத்தான் கிளம்பிச் செல்கிறார் காந்தி.
”உப்பு என்னும் ஆயுதம்” எனும் தலைப்பில் பாவண்ணன் நூலிற்கு மிகச்சிறந்த முன்னுரை அளித்திருக்கிறார். பதினைந்து வருடங்களுக்கு முன் தானும் நண்பர்களும் கலந்துகொண்ட, மகாராஷ்ட்ராவின் விதர்பா பகுதி கிராமங்களின் வழியே நடைபெற்ற நடைபயண யாத்திரை குறித்த (பத்மஸ்ரீ விருதுபெற்ற கல்வியாளர் அனில் குப்தா அவர்கள் ஏற்பாடு செய்திருந்த யாத்திரைப்பயணம்; பாரம்பரிய விதைச் சேகரிப்பாளர், காந்தியவாதி “தாதா நோப்ரேக்டே”யும் பாதயாத்திரையில் கலந்துகொள்கிறார்) அனுபவங்களை சிவராஜ் அண்ணா நெகிழ்ச்சியோடு பதிவு செய்திருக்கிறார்.
***
2006. மும்பையின் பன்வெல் தாண்டி அலிபாக் செல்லும் வழியில் பென் எனும் சிறு நகரத்தில் வசிக்க ஆரம்பித்த ஆண்டு. வேலைக்குச் சேர்ந்த கொய்மலர்ப் பண்ணை பென்னிற்கும் கோபோலிக்கும் நடுவில் இருந்தது. ஐந்தாறு மாதங்களிலேயே நானும், அம்முவும், இயலும் (இயல் அப்போது சிறுமி) ஹிந்தி சரளமாகப் பேசக் கற்றுக்கொண்டோம். மராத்தி முற்றிலுமாகப் புரிந்தது. பண்ணையின் சுற்றுப்புற கிராமங்கள் வாசிவளி, அஸ்டே, கரும்பிலி, ஆராவ், வக்ரூல் நன்கு பரிச்சயமாயின. ஒருநாள் பண்ணை அலுவலகத்தின் மாடியிலிருந்து எதிரில் கொஞ்சம் தூரத்தில் சிறிய குன்றுப் பகுதியிலிருந்த குடியிருப்பு பகுதியைக் காட்டி “அதுதான் “காகோதே”, வினோபா பாவே பிறந்த கிராமம்” என்று உடன் வேலை செய்யும் மானே சொன்னார். (கிருஷ்ணம்மாள் ஆச்சியின் பேத்தி கலாவதி என்னுடன் கோவை வேளாண் பல்கலையில் இளமறிவியல் தோட்டக்கலை படித்தவர்) “அங்கருந்தும் நம்ம பண்ணைக்கு கொஞ்ச பேர் வேலைக்கு வராங்க. கிரீன்ஹவுஸ் மூணுல வேலை செய்யுதே, பூர்ணிமா கெய்க்வாட், அந்தப் பொண்ணு அந்த ஊருதான்” என்றார். பூர்ணிமா கௌசியின் தோழி. இருவரும் பசுங்குடிலில்தான் வேலை செய்தார்கள். கௌசி நான் ஹிந்தி விரைவில் கற்றுக்கொள்ள உதவிய பெண்.
அடுத்த சில நாட்களிலேயே காகோதே-க்குப் போகவேண்டியிருந்தது, பண்ணைக்கு ஒரு மேசனை வேலைக்கு கூப்பிட. பூர்ணிமாவிடம், வேலை முடிந்து மாலை பென்னிற்குப் போகும்போது, வீட்டிற்கு வருவதாகச் சொல்லியிருந்தேன். கௌசியும் உடன் வந்தார். இருட்ட ஆரம்பித்திருந்தது. பூர்ணிமாவின் வீடு சிறிய ஓட்டு வீடு. நான் எதிர்வீட்டு திண்ணயில் உட்கார்ந்துகொண்டேன். “இதுதான் விநோபா வீடு சார்” என்றார் கௌசி. நான் வியப்படைந்து கூர்ந்து வீட்டைக் கவனித்தேன். வீடு புதுப்பிக்கப்பட்டு சமீபத்தில் பெயிண்ட் அடிக்கப்பட்டிருந்தது. “பூமிதான் மூவ்மெண்ட் பத்தி தெரியுமா கௌசி?” என்று கேட்டேன். “படிச்சுருக்கேன் சார்” என்றார். “ஓருநாள் பகல்ல வந்து பார்க்கணும் கௌசி” என்றேன். அங்கு அமர்ந்திருக்கும் பாக்கியம் முன்செய்த புண்ணியங்களால் வாய்த்திருக்கக்கூடும் என்று நெகிழ்வுடன் நினைத்துக் கொண்டேன். நூறு வருட வரலாற்றின் கண்ணி ஒன்று விரிந்து நீண்டு பயணித்து ஆசியால் கட்டுவதை மெலிதாய் உணர்ந்தேன். பூர்ணிமா இஞ்சி போட்ட டீ கொண்டுவந்து தந்தார். “நான் முன்னாடி ஓசூர்-ன்ற ஊர்ல வேலை செஞ்ச கம்பெனிக்குப் பக்கத்திலதான் ராஜாஜியோட பிறந்த வீடு இருந்தது கௌசி. நான் அடிக்கடி அங்க போவேன்” என்றேன்.
இனிமையான, மறக்க முடியாத மாலை அது.
***
“மண்ணில் உப்பானவர்கள்” தமிழுக்கு அவசியமான, இன்றைய தலைமுறைக்கு மிகத் தேவையான ஒரு முக்கியமான நூல். சித்ராம்மாவிற்கு நன்றி. தன்னறத்திற்கும்.
“காந்தி என்றென்றைக்குமானவர். காந்தியம் என்றென்றைக்குமானது”.
வெங்கி
“மண்ணில் உப்பானவர்கள்”
சித்ரா பாலசுப்ரமணியன்
தன்னறம் நூல்வெளி வெளியீடு