அன்புள்ள ஜெ
நேரடியாகவே ஒரு கேள்வி கேட்கவேண்டும். விக்ரமாதித்யன் அவர்கள் தன்னுடைய தடம் இதழ் பேட்டியில் தன்னுடைய சோதிடப்பார்வையை முன்வைத்தே எல்லாவற்றைப் பற்றியும் பேசியிருந்தார். சோதிடம் அவருடைய தொழில் போலவே இன்று இருக்கிறது, ஒரு கவிஞன் எப்படி சோதிடனாக இருக்க முடியும்? உங்களுக்குச் சோதிட நம்பிக்கை உண்டா? நீங்கள் அவரிடம் சோதிடம் பார்த்தது உண்டா?
ஆர்.என்.சேகர்
அன்புள்ள சேகர்,
எனக்கு சோதிடம் மேல் நம்பிக்கை உண்டா இல்லையா என்று சொல்லமுடியாது. ஏனென்றால் நான் சோதிடம் பார்த்துக் கொண்டதில்லை.அந்த வட்டத்திற்குள் செல்லவேண்டாம் என்று நினைக்கிறேன். இன்றுவரை விலகியே இருக்கிறேன்.
ஆனால் சோதிடத்தில் ஆர்வமும் பயிற்சியும் கொண்ட பல நண்பர்கள் எனக்குண்டு. அவர்கள் விக்ரமாதித்யன் அண்ணாச்சி மிகச்சிறந்த, மிகமிக மரபார்ந்த சோதிடர் என்றே சொல்கிறார்கள். குறிப்பாக ஜாதகம் பார்ப்பதிலும், பரிகாரங்கள் சொல்வதிலும் அவருடைய நுண்ணுணர்வை பலர் பாராட்டி கேள்விப்பட்டிருக்கிறேன்.
குறிப்பாக திருமணப் பொருத்தம் பார்ப்பதிலும், திருமணம் சார்ந்த சிக்கல்களுக்கான பரிகாரங்கள் மற்றும் வழிபாடுகள் சொல்வதிலும் அவர் நிபுணர் என்று மாதம் ஒருமுறையாவது எனக்கு அணுக்கமான எவரேனும் சொல்கிறார்கள். முழுக்க முழுக்க சைவம் சார்ந்தது அவருடைய அணுகுமுறை.
எதிர்மறைப் பண்பு அற்றவரும், மானுடர் மேல் இயல்பான அன்பு கொண்டவருமான விக்ரமாதித்யன் அவர்கள் மணநாள் கணிப்பது என்பது ஒரு பெருங்கவிஞனின் வாழ்த்து என்னும் வகையில் மிக முக்கியமானது என்று எண்ணுகிறேன்.
என்னுடைய நண்பர்கள் மூவர் அவரிடம் தங்கள் சிக்கல்களின்போது சோதிடம் கேட்டு பரிகாரம் செய்திருக்கிறார்கள். அவர்கள் அவரால் பயனுற்றனர் என்று உண்மையான மனஎழுச்சியுடன் சொல்லக்கேட்டிருக்கிறேன். அது சோதிடமா அல்லது அவருக்குரிய மானுடரை அவதானிக்கும் கலையா என்றெல்லாம் எனக்கு தெரியாது. என் வரையில் அதற்குள் செல்லவேண்டாம் என்பதே என் கொள்கை.
அவர் இன்று தொழில்முறையாகவே சோதிடம் பார்க்கிறார். ஆனால் மற்ற சோதிடர்கள் போல அதையே நாள்முழுக்கச் செய்வதில்லை. அதன்பொருட்டு எங்கும் செல்வதுமில்லை. அவர் தன் சுவாரசியத்துக்காகவே அதைச் செய்கிறார். அவரிடம் சோதிடம் பார்க்க விரும்புபவர்கள் தென்காசிக்கு அவர் இல்லத்திற்குத்தான் செல்லவேண்டும்.
பல எழுத்தாளர்கள் அவரிடம் ஓசி சோதிடம் பார்த்துக்கொள்வது எனக்குத் தெரியும் . அவர்களில் பலர் முற்போக்குத்திராவிடர்கள். அவர்கள் பார்ப்பதில் பிழையில்லை, அவருக்கான கட்டணத்தை அளிப்பதே முறை என்பதே என் கருத்து. மனிதர்களின் துயர்களும் சஞ்சலங்களும் எல்லையற்றவை.அனைவரும் மனிதர்கள் என்னும் நிலையில் எளியவர்களே.
கவிஞன் சோதிடம் பார்க்கலாமா? கவிஞன் எதையும் செய்யலாம். கமிஷன் மண்டியில் வேலைபார்த்த கவிஞர்கள் உண்டு. அரசியல் தொண்டர்களான கவிஞர்கள் உண்டு.பெரும்பாலான கவிஞர்கள் அரசு ஊழியர்களே. அவற்றையெல்லாம் விட அன்றாடம் மானுடரை, அவர்களின் பாடுகளை அறியுமிடத்தில் இருக்கும் சோதிடம் கவிஞனுக்கு மிக அணுக்கமான தொழில் என்று நினைக்கிறேன்
ஜெ
விக்ரமாதித்யன் [சோதிட அழைப்புகளுக்கு] 9629085708, 9942026089
விக்ரமாதித்யன் ஆங்கில விக்கிபீடியா