சின்ன வீரபத்ருடு ஒரு குறிப்பு

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

வத்ரேவு சி. வீரபத்ருடு 28 மார்ச் 1962 அன்று ஆந்திரப் பிரதேச கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஒரு பழங்குடி கிராமத்தில் பிறந்தவர்.

1985-இல் ஆந்திரா பல்கலையிலிருந்து தத்துவத்தில் முதுகலை பட்டம் பெற்றார். ராஜமுந்திரியில் தொலைதொடர்புத் துறையில் பணியாற்றி பின்னர் 1987-இல் ஆந்திரப் பிரதேச அரசின் பழங்குடியினர் நலத்துறையில் சேர்ந்தார்.

1995 வரை விஜயநகரம், விசாகப்பட்டினம், கர்நூல், அடிலாபாத் ஆகிய மாவட்டங்களின் பழங்குடியினர் நல அலுவலராகப் பணியாற்றினார். 1997 முதல் 2000 வரை ஶ்ரீசைலத்தில் உள்ள ITDA அமைப்பின் திட்ட அலுவலராக இருந்தார். 2008 வரை இணை இயக்குநர் பதவியில் இருந்தபோது பழங்குடியினர் நலத் திட்டங்களின் நிதி ஆலோசனையிலும், திட்டக் கண்காணிப்பிலும் பங்காற்றியுள்ளார். பின்னர் கூடுதல் இயக்குநராக பதவி உயர்வு பெற்று 2016 வரை அத்துறையில் பணியாற்றினார்.

1987 முதல் 2016 முடிய அத்துறையில் பணியாற்றியபோது பழங்குடியினர் கல்வி மேம்பாடு, பழங்குடிப் பகுதிகளில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி, பழங்குடியினர் நலத்திட்டங்களை வடிவமைத்தல், திட்ட அமலாக்கக் கண்காணிப்பு என பலவகையிலும் பங்காற்றியுள்ளார். ஆந்திரப் பிரதேச பழங்குடியினர் கூட்டுறவு நிதிக் கழக (TRICOR) மேலாண் இயக்குநர், பழங்குடியினர் பண்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர், இணைச் செயலர்  APTWREIS (Gurukulam), பழங்குடியினர் மின்சக்தி நிறுவன நிர்வாக இயக்குநர், ஆந்திரப் பிரதேச பழங்குடியினர் சுரங்க நிறுவன மேலாண் இயக்குநர் ஆகிய பதவிகளில் பணியாற்றியுள்ளார்.

திரு வீரபத்ருடு ஒரு எழுத்தாளரும் கூட. ஐந்து கவிதைத் தொகுதிகள், மூன்று இலக்கியத் திறனாய்வுத் தொகுதிகள், சிறுகதைத் தொகுதி ஒன்று, பயணக் கட்டுரைத் தொகுதி ஒன்று வெளியாகியுள்ளன. மேலைத் தத்துவம் குறித்த ஒரு நூலையும், இம்மானுவல் கான்டின் படைப்புகளையும் மொழிபெயர்த்து பதிப்பித்துள்ளார். டாக்டர் ஏபிஜே அப்துல் கலாமின் ஐந்து புத்தகங்களையும் மூன்று காந்திய நூல்களையும் மொழிபெயர்த்துள்ளார்.

பழங்குடிப் பகுதிகளில் அனைவருக்கும் தொடக்கக் கல்வி குறித்து தன் அனுபவங்களை “Konni kalalu: konni melakuvalu” என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார். ஆந்திரப் பிரதேச அரசு இப்புத்தகத்தை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் அளித்து ஆசிரியர்கள் அவசியம் படிக்கவேண்டும் என பரிந்துரைத்துள்ளது.

டாக்டர் கலாமின் “Ignited Minds” நூலின் மொழிபெயர்ப்புக்காக, 2008-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமியின் சிறந்த மொழிபெயர்ப்பு விருதை பெற்றார். தெலுங்கு பல்கலைக் கழக விருதுகள் உட்பட பல விருதுகளையும் பெற்றுள்ளார்.

மான்செஸ்டர் பல்கலையின் ஏழ்மை ஒழிப்புப் பட்டயச் சான்று பெற மலேசியாவின் பொருளியல் குறித்த களப்பணியும் மேற்கொண்டுள்ளார். ஹைதரபாதில் உள்ள Dr. MCRHRD நிறுவனம், காவல்துறை அகாடமி, APHRDI, பாபட்லா, NIRD, ஊரக மேம்பாட்டு நிறுவனம் ஆகியவற்றில் வருகைதரு பேராசிரியராக உள்ளவர்.

நீர்வண்ண ஓவியங்கள் வரைவதில் ஆர்வம் கொண்டவர்.

சின்ன வீரபத்ருடு, கடிதங்கள்-5

சின்ன வீரபத்ருடு கடிதங்கள்- 4

சின்ன வீரபத்ருடு- கடிதங்கள் 3

சின்ன வீரபத்ருடு -கடிதங்கள் 2

சின்ன வீரபத்ருடு – கடிதங்கள்

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-5

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-4

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-3

சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

சின்ன வீரபத்ருடு கவிதைகள்-1

தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

முந்தைய கட்டுரைஇன்று விஷ்ணுபுரம் விழா தொடக்கம்
அடுத்த கட்டுரைஉள்வட்டமா?