விக்ரமாதித்யனை வகைசெய்வது கடினம் – லக்ஷ்மி மணிவண்ணன்

vikramadhityan wiki page

விஷ்ணுபுரம்வட்டம் இணையதளம்

விஷ்ணுபுரம் விருந்தினர்கள் 2021

1

அவர் மரபின் தொடர் அல்லவா ? என்று ஒருவர் சொன்னாலும் அதனை மறுப்பதற்கில்லை.எல்லா இடங்களிலும் எல்லைகளை மீறுகிறாரே என்றாலும் மறுப்பதற்கில்லை.இரு வேறுபட்ட நிலைகளை வகுக்கவும்,வேறுபடுத்திக் காணவும் தொகுத்துக் கொள்ளவும் உள்ள கருவிகளே நம்மிடமிருப்பவை.நாம் அப்படித்தான் பயிற்றுவிக்கப்பட்டிருக்கிறோம்.அவருடைய கவிதைகளைப் பொறுத்து அவர் எப்போதுமே இருவேறுபட்ட நிலைகளுக்கு இடையில் இருக்கிறார்.இருவேறுபட்ட நிலைகளை மறுப்பதற்கும் அல்லது ஏற்பதற்கும் என தனியே அவரிடம் சிறப்பாக எதுவும் இல்லை.பல தரப்புகளுக்கு மத்தியில் இருந்து அவருடைய கவிதை நம்மை நோக்கி வருகிறது.அது தன்னுடைய தனித்துவத்தைக் கவனி என்றோ,நான் பார்த்ததைப் பார் என்றோ தன்னை முன்வைக்க வில்லை.அவருடைய தரிசனங்களும் கூட தனிப்பட்டவை அல்ல பொதுவானவை.’ விதியை நம்பிய போதும் வெறுமனே இருப்பதில்லை யாரும் “என்கிற எளிய வரியில் எளிய கவிதையும் உள்ளது.அது மிகவும் எளிய தரிசனத்தால் உரு ஆகிறது.இந்த எளிய பழ மொழியை ஒத்த தரிசனம் தனிப்பட்ட ஒருவரிடம் இருந்து வரவில்லை.பொதுவான ஒன்றில் இருந்து அதன் கூட்டான சரடு ஒன்றிலிருந்து கூட்டான மனப்பகுதிக்கு வந்து சேர்கிறது.நம்பி என்னும் விக்ரமாதித்யனின் அருஞ்சிறப்பு இது.அவர் ஒரு மூன்று சீட்டு விளையாட்டுக்காரன் நின்றால் அவனை எந்த அரங்கிலும் கண்டுவிடுவது போல ,அவர் அவருடைய கவிதைகளை நம்மை நோக்கி இழுத்து வருகிறார்.நமது மேஜையில் கொண்டு நிறுத்தப்படுகிற மூன்று சீட்டு விளையாட்டுகாரன் அவருடைய கவிதைகள்.அவருடைய கவிதைகளுக்கு ஞானக்கூத்தன் கவிதைகளைப் போன்றே ஒரு நடனம் இருக்கிறது.அவை நேராகவோ,செங்குத்தாகவோ நம்முடைய வாசிப்பு மேஜையில் நிற்பதில்லை.அதன் நடனத்தையும் சேர்த்து நாம் வாசிக்க வேண்டியுள்ளது.குத்துமதிப்பாகச் சொல்வதெனில் அதுவொரு சமூக நடனம்.

பழக்கத்திற்கு வந்த விஷயங்களே வகைபடுத்துவதற்குத் தோது படுகின்றன.விக்ரமாதித்யன் தமிழில் முன்னுதாரணம் அற்றவர் ஆகவே புதியவர் .மரபிலும் சரி நவீனத்திலும் சரி அவர் புதியவர்.வகைக்குள் வராதவர்.நில்லாதவர்.உள்ள எழுச்சியை கவிதையில் முன்வைத்தவர்.குறிப்பிட்ட விதமான நவீன கவிதைக் கொள்கைகளுக்கு வெளியே கவிதையைத் திரட்டித் தந்தவர்.

தமிழில் நவீன கவிதை உருவாகத் தொடங்கிய குறுகிய காலத்திற்குள்ளாகவே தனிப்பட்ட மனிதனின் அகத்துக்குள் அது பிரவேசிக்கத் தொடங்கி விட்டது.அது ஒரு நவீனத்துவ பண்பும் ஆகும்.அதனால் அதற்கு ஒரு அந்தரங்கத் தன்மையும் உண்டாயிற்று.வெகு விரைவாக அதில் இறுக்கம் பற்றத் தொடங்கியது.அதற்குரிய கவிதைக் கொள்கைகள் வகுக்கப்பட்டுவிட்டன.வகுக்கப்படும் எதற்கும் நிறுவன அரண் உண்டாகிறது.விக்ரமாதித்யன் அதனை பற்றி வெளியில் இழுத்தார்.தன்னை ரத்தமும் சதையுமாக தின்னக் கொடுத்து தன்னுடைய புதிய மொழியால் அதைச் சாதித்தார்.இதனை அவர் சாதித்திராவிடில் என்ன ? அவருடைய வாழ்வு சாத்தியமாகி இராது.வாழ்வை கண்டடைதல் என்பது லௌகீகத்தைக் கண்டடைவதல்ல.திறப்பையும்,விடுதலையையும் கண்டடைவது.மொழியும் கவிதையும் வாழ்வுடன் அவ்வாறான தொடர்புகள் கொண்டவை.எந்த உயரிய கொள்கையிடமும் கவிதையை ஒப்படைக்க இயலாது என்பதற்கு தமிழில் விக்ரமாதித்யனின் கவிதைகள் மட்டுமே சாட்சி.ஐரோப்பிய சாயல் அல்லாத தமிழ் மொழியின் சாயல் கொண்ட சுய மொழி கண்டவர்.அதே சமயத்தில் ஆங்கில மொழியை அப்படியே பல இடங்களில் பயன்படுத்திய கவிஞரும் கூட.தனித்த ஓசை அவருடையது.அவருடைய தனிப்பட்ட பழக்க வழக்கங்கள்,சேட்டைகள் ஆகியவற்றைக் கொண்டு மலையாளக் கவி ஐயப்பனோடு இவரை ஒப்பிட முடியும் ஆனால் இருவருடைய கவிதைகளும் ஒப்பிடவே இயலாத அளவிற்கு வேறுபட்டவை.ஐயப்பனுடையவை

நவீனத்தின் மரபார்ந்த ஐரோப்பிய வகைமையைச் சேர்ந்தவை எனில் விக்ரமாதித்யனுடையவை ஒழுகி வந்த ஐரோப்பிய மரபு சாராத தமிழ் உள்ளமும் மொழியும் அமைந்த நவீன கவிதைகள் .சமகாலத் தமிழில் ஐய்யப்பன் வகைப்பட்ட ஐரோப்பிய வழி நவீன கவிதைக்கு சபரி நாதனை உதாரணமாகச் சொல்லலாம் எனில் அன்ணாச்சியின் வகைக்கு கண்டராதித்தனை உதாரணம் காட்டலாம்

விக்ரமாதித்யனின் வாசகர்கள் பல திறத்திலானவர்கள் .மேட்டுக்குடியினர் அவர்களில் உண்டு.அவர்களுக்கு அண்ணாச்சியின் கவிதைகளில் வெளிப்படும் அரைமயக்க பித்து நிலை மீது மோகம் உண்டு.அறிவியக்க மேட்டிமை கொண்டோரும் அவரது வாசகர்களாக இருந்தார்கள்.இருக்கிறார்கள். சாதாரணர்களும் உண்டு.சாதாரணமானவனுக்கு அவன் சிக்குண்டு ஒடுங்கும் முட்டுச்சந்தை கவிதைகள் மூலமாக உணர்த்திக் கொண்டேயிருக்கிறார் விக்ரமாதித்யன்.பலசமயங்களில் இருவரும் இணைந்து முட்டுச் சந்தை எட்டிச் சாடுகிறார்கள்.பொது மக்கள் வாசகர்களாக அவருக்கு உள்ளனர்.சூழலின் அறிவு ஜீவிகள்,சக கவிகள்,புனைவு எழுத்தாளர்கள் என பல திறத்தினர் அவர் வாசகர்களில் அடக்கம்.அசோகமித்திரன் தன்னை அவருடைய வாசகன் என குறிப்பிட்டிருக்கிறார்.தமிழ் நவீன கவிகளில் பிற கவிகளுக்கு பன்முக வாசிப்பிற்கான இந்த வாய்ப்பு உண்டானதில்லை.

ஐரோப்பிய முன்மாதிரிகளைக் கொண்ட தமிழ் அறிவு ஜீவிகள் தாங்கள் பேசும் விஷயங்கள் விக்ரமாதித்யனிடம் சென்று எவ்வாறு எதிரொளிக்கிறது என்பதை தனிப்பட்ட உரையாடல்களில் தொடர்ந்து பார்த்துக் கொண்டேயிருந்தார்கள்.அவர்களுடைய உரையாடல்கள் அவரில் மோதி மிகவும் எளிமையாக கீழே விழுந்து நொறுங்கின.இவ்வளவு எளிமையாக அவர்களின் உரையாடல்களுக்கு இடையூறு செய்த தமிழ் கவிகள் வேறு இலர்.அதனாலேயே அவர்களுக்கு ஈர்ப்பும் விலக்கமும் கொண்டவராக அவர் இருந்தார்.அவர்கள் ஐரோப்பிய பிரதிகளை முன்வைக்குந்தோறும் இவர் இங்குள்ள முன்னவர்களை ,பழந்தமிழ் ஆசிரியர்களை முன்வைத்துக் கொண்டிருந்தார்.அவர்கள் சிக்கலாக்குந்தோறும் இவர் எளிமை செய்தார். அவர்கள் இங்குள்ள சமய உள்ளடகங்களை மேல் நிலைச் சமயங்கள்,நாட்டார் தெய்வங்கள் என இரண்டாக பிளக்க முயலும்போது “நாட்டார் தெய்வங்களை வசப்படுத்துவது எளிது;இந்த பெருந்தெய்வங்கள் தான் பிடி கொடுக்காது போக்கு காட்டிக் கொண்டே செல்லும் ” என்கிறார். அவருடைய இந்த கவிதை வரி ஒரு தரிசனமும் கூட.அது அவர்கள் செய்ய வந்த காரியத்தை தலைகீழ் ஆக்கி அவர்களிடமே திருப்பித் தந்தது.அறிவு ஜீவிகளுக்கு இப்படியான பிரச்சனைகள் எனில் புனைவு எழுத்தாளர்களுக்கு ,நவீனத்துவர்களுக்கு அவர் வேறுவகையில் பிரச்சனையாக இருந்தார்.அவர்களால் விக்ரமாதித்யனை வரையறை செய்து கொள்வதில் இடர்பாடுகள் இருந்தன.விக்ரமாதித்யன் பழையவரா புதியவரா என்னும் பிரச்சனை அதில் ஒன்று.சுந்தர ராமசாமி போன்ற நவீனத்துவர்களுக்கு மரபைத் தாண்டித்தானே நவீனம் ,இவரோ நவீனத்தில் இருந்து பின்னுக்குச் செல்கிறாரே என்னும் குழப்பம் .தமிழ் சமூகத்தில் எல்லோருக்கும் பொதுவாக இருந்தது ,அவருடைய பழக்க வழக்கங்கள் சார்ந்த பிரச்சனை.

தொண்ணூறுகளில் உருவான கவிஞர்கள் பலரின் மூலவர் விக்ரமாதித்யன் என்பேன்.முந்தைய கவிக் கொள்கைகள் தளர்வுற்று பிறிதொரு போக்கு தொண்ணூறுகளில் தொடங்கிற்று.இந்த போக்கே தமிழ் கவிதையில் தனிமனித அகத்துக்கு வெளியே கவிதையை எடுத்து வந்தது.இந்த புதிய போக்குக்கு நவீன கவிதையில் அடித்தளம் அமைத்தவர் ஞானக்கூத்தன் எனில் ஏற்கனவே உருவாகி நின்றவற்றைச் சிதறி ஆனைப்பாதை ஒன்றை உருவாக்கியவர் விக்ரமாதித்யன் தான்.தன்னை,தன் தன்னிலையைச் சிதறிச் சிதறி அவர் உருவாக்கிய ஆனைப்பாதை அது.அடித்துத் துவைத்து தன்னைச் சிதறி ஆனைப்பாதை அமைத்தார் என்கிறீர்களே அப்படியானால் அப்படிச் சிதறியவற்றை அவர் எடுத்துக் கோர்த்தாரா என எவரேனும் கேட்பீரேயாயின் இல்லை என்பேன்.அது ஒரு கவிஞனின் வேலையாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லாதது.

சிகிரட் ஆஷ் அவருடைய கவிதை ஒன்றில் வருகிறது.ஆஷ் டிரே ஒரு கவிதைப் பொருளாக முடியும் என்பதை விக்ரமாதித்யனிடம் தான் நான் கண்டேன்.சிகிரட் ஆஷ் போலவே அவர் கவிதைகளில் தெய்வங்கள் தோன்றினார்கள்.அத்தனை தெய்வங்களும் எழுத்தில் தணிக்கை செய்யப்பட்டிருந்த காலத்தில் அவர் கவிதைகளில் அவர்கள் வந்து முன் தோன்றினார்கள்.தணிக்கையால் தானே, அதற்கு எதிர்வினையாகத்தானே வந்து தோன்றினார்கள் என்றும் தள்ளத் தகாத விதத்தில் அவர்கள் கவிதையில் இயல்பாக அமைந்தார்கள்.அவர்களுக்கு மனிதர்களை விட அதிக முக்கியத்துவம் கொண்ட இடத்தையும் அவர் வழங்கவில்லை.பெரும்பாலும் மனிதனுக்குத் தெய்வங்களின் சாயலும்,தெய்வங்களுக்கு மனிதச் சாயலும் அவர் படைப்பில் உண்டானவை

இப்போது யோசித்துப் பார்க்கும் போது அவருடைய “சேகர் சைக்கிள் ஷாப்”என்கிற கவிதையின் தலைப்புதான் என்னுடைய “சக்தி மசால் ஸ்டோர் “என்கிற கவிதைக்கு அடிப்படையாக இருந்திருக்கிறது என்பது விளங்குகிறது.இதுபோலவே ஷங்கர்ராம்சுப்ரமணியனின் “சிங்கத்துக்குப் பல் துலக்குவது எப்படி ?” என்னும் கவிதை விக்ரமாதித்யனின் ” கூண்டுப்புலிகள் நன்றாகவே பழகி விட்டன ” எனும் கவிதையின் தொடர்.இசையின் பகடி சற்றே கூர்ந்து நோக்கினால் விக்ரமாதித்யனின் மடியில் சென்று சேரும்.

பெருந்தேவி,போகன் சங்கர் என நீளும் எதிர் கவிதை போக்கின், மூலம் ஏதேனும் ஓரிடத்தில் விக்ரமாதித்யனில் கட்டப்பட்டிருப்பதை வாசகர்கள் உணர முடியும்.முதன் முதலாக தமிழில் நவீன கவிதை தன் அக அழுத்தத்தை விக்ரமாதித்யன் கவிதைகளின் மூலமாகவே கீழ் இறக்கி வைத்தது.விக்ரமாதித்யனின் அழுகுரல்களில் கூட பகடி உண்டு.கழிவிரக்கத்தை உறுத்தா வண்ணம் முன்வைக்கத் தெரிந்தவை விக்ரமாதித்யனின் கவிதைகள் மட்டுமே.அவை பொதுவாக மாறிவிடுகின்றன.அவருடைய கவிதைகளில் அவை வேறொன்றாகி விடுகின்றன.

“ரத்தத்தில்

கை நனைத்ததில்லை நான்

எனினும்

ரத்தம் சிந்தவைப்பவர்களின் நிழலில்

தங்க நேர்கிறது எனக்கு

 

திருடிப் பிழைத்ததில்லை நான்

எனினும்

திருடிப் பிழைப்பவர்களிடம்

யாசகம் வாங்கி வாழ நேர்கிறது எனக்கு

 

கூட்டிக்

கொடுத்ததில்லை நான்

எனினும்

கூட்டிக் கொடுப்பவர்களின்

கூடத் திரிய நேர்கிறது எனக்கு”

 

இந்த கவிதையை நமது வாழ்வு அடைந்திருக்கும் வினோத தன்மைக்கு சாட்சியமாகக் கொள்ளமுடியும்.தேர்விற்கு அப்பால் வாழ்வு நகர்ந்து செல்வதைக் குறிக்க இந்த கவிதையைக் காட்டிலும் சிறப்பான ஒரு கவிதை தமிழில் இல்லை,ஞானக்கூத்தனின் “சைக்கிள் கமலம்” வேறு ஒரு தளம்.எங்கு வேண்டுமாயினும் யார் வேண்டுமாயினும் முட்டிக் கொள்ள முடியும் என்பதை அகத்திற்கு அது அனுபவமாக்குகிறது.விக்ரமாதித்யனின் இந்த கவிதை அத்துடன் நம்முடைய அற உணர்ச்சிகளை மீள் பரிசீலனை செய்கிறது.அவை பதுங்கி நிற்கும் இடங்களை வெட்டி வீழ்த்தி புதிய ஒன்றாக்குகிறது.ஒரு கொலையாளியும் அவனுக்குத் தண்டனை தரும் நீதிபதியும் சேர்ந்து இந்த கவிதையில் சிறைக்குச் செல்கிறார்கள்.தமிழில் கவிதையில் உருவான அரிய நாடக நிகழ்வுகளில் ஒன்று இந்த கவிதை .கொலையாளி பாலியல் புரோக்கர்,திருடன்,காட்டிக் கொடுப்பவன் என அனைவருக்கும் புனித இடத்தை வழங்கும் கவிதை இது.கவிதையின் இறுதியில் பாபம் படியாதோ ,சாபம் கவியாதோ என ஒரு அப்பாவிக் குழந்தையைப் போல அருகில் நின்று கேட்டு கொண்டிருக்கிறார் ஒரு குழந்தை விக்ரமாதித்யன்

2

 

நவீன கவிதை என்பது நவீன வாழ்வோடும் தொடர்புடையது.இன்றைய நவீனம் என்பது பெரும்பாலும் ஐரோப்பிய மயமாதலைக் குறிப்பதே.பொதுவாகப் பார்ப்போமெனில் எந்த காலத்திலும் சமுகம் நவீனமாகிக் கொண்டுத்தான் இருக்கும் .ஏதேனும் ஒரு விதத்தில் அது முன்னதில் இருந்து மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.முன்னகரும்.மனித இயக்கம் அவ்வாறானது.அது எஞ்சியதில் இருந்து கிளைத்து மேலெழவே விரும்புகிறது.கவிதா தேவியும் அவ்வாறு மெலெழ விரும்புபவளே.பழமையில் இருந்து புதுமை நோக்கியே அவள் கால்கள் அடியெடுத்து வைக்கின்றன.அதன் காரணமாகவே கவிஞனும் முன்னடி வைக்கிறான்.அல்லது வைக்க வேண்டியிருக்கிறது.நவீன வாழ்வின் முன்பாக அவன் விரும்பியோ விரும்பாமலோ கொண்டு நிறுத்தப்படுகிறான்.சிக்கலான ஒரு நவீன ரயில் நிலைய வாயில் என இந்த நிலையை உருவகிப்பேன் எனில் விக்ரமாதித்யன் அந்த வாயிலின் அருகே நாற்பதாண்டுகளாக நின்று கொண்டிருக்கிறார்.அதற்கு இணையாக ந.ஜெயபாஸ்கரனும் நின்று கொண்டிருக்கிறார் எனலாம்.யாரும் இங்கே எங்கு வந்திருக்கிறீர்கள் ? நலமாயிருக்கிறீர்களா ? என்றெல்லாம் கேட்க மாட்டார்கள் என்பதை இருவருமே நன்கறிவர்.நடைபாதை அனுமதிச் சீட்டு எடுத்துக் கொண்டு உள்ளேறி செல்லவும் இருவரும் விரும்பவில்லை.ஆனால் விக்ரமாதித்யன் காத்திருந்த அந்த களத்தை தன்னுடைய கவிதைகளால் புதிய விளையாட்டுக் மைதானமாக மாற்றி அமைத்துக் கொண்டார்.அது வழக்கமானவர்களுக்கு ரயில் நிலையமாகவும் அவருக்கு விளையாட்டுமைதானமாகவும் ஆகியது.அதனால் ஜெயபாஸ்கரனிடன் தென்படும் பழமையின் ஏக்கம் விக்ரமாதித்யனிடம் இல்லை.ஒருவிதத்தில் விக்ரமாதியன் கவிதைகளில் இறந்த காலம் இல்லை.நிகழ் நாடகம் மட்டுமே உள்ளது.

விக்ரமாதித்யன் அடிக்கடி தான் உருவாக்கிய இந்த விளையாட்டு மைதானத்தில் இருந்து வீட்டுக்குச் செல்கிறவராக இருக்கிறார்.அங்கே பழைய நினைவு போல ஒரு வீடு இருக்கிறது.ஒரு வெளியேறியவர் திரும்பிச் சென்று அடையமுடியாத வீடு அது.வெளியேறினால் வெளியேறியதுதான்.அவருடைய கவிதைகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் வீடு என்பதும் அவர் வெளியேறிவிட்ட வீடே.அது இதமாகவும் இருக்கிறது.மீண்டும் மீண்டும் வைத்துக் கொள்கிறது,வேறு வேறு விதங்களில் வெளியேற்றவும் செய்கிறது.விக்ரமாதித்யனின் வீடு பௌதீகமானதல்ல .அது அருபமானது.அது தான் உருவாக்கிய விளையாட்டு மைதானத்தின் ஒரு பகுதியாக வால் போல நீண்டிருப்பது.

 

வேறுவிதத்தில் சொல்வதாயின் வாழ்வு ஒரு நவீன கவிஞனை சரியாக ஒரு முட்டுச் சந்தில் கொண்டு நிறுத்துகிறது.நவீன கவிஞன் சரியாக இந்த இடத்தில்தான் நிறுத்தப்படுகிறான்.செய்யுள் செய்பவன் இவ்வாறு நிறுத்தப்படுவதில்லை.அவனுக்கு சீரானதொரு விந்தையை வியப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தால் போதுமானது .வேலை முடிந்துவிடும்.கவிஞனின் வாழ்வைத் திறக்கும் பணி அமைந்திருக்கிறது.அவன் அருகில் சங்குடன் கடவுள் காத்து நிற்கிறார்.திறக்கிறானா இல்லையா என்பதை அவர் பார்த்துக் கொண்டே நிற்கிறார்.இந்த நிலையை அவன் தன்னுடைய கவிதைகளின் வழியாக எப்படி எதிர்கொள்கிறான் என்பதே அவன் ஏற்றிருக்கும் சவால்.பெரும்பாலும் விக்ரமாதித்யன் அண்ணாச்சி கூனிப்படைகள் சேர்ந்து கப்பலக் கவிழ்ப்பது போல தன்னுடைய இரண்டு வரி சின்னஞ்சிறிய கவிதைகளால் இதனைச் சாதித்தார்.அவருடைய குறுங்கவிதைகள் இன்றளவும் தமிழில் அரியவை.மாதிரியற்றவை.கிரகயுத்தம்,நவ பாஷாணம் உட்பட அவருடைய குறுங்கவிதைத் தொகுதிகள் அருங்கொடைகள்.அவருடைய தரிசனங்கள் ஒருங்கே அமைந்தவை அவை.

 

“எழுதிச் சலித்தவன்

எழுதுகிறேன்

எழுதிய அயர்ச்சியில்

எழுதுகிறேன்

எழுதி ஓயாது எழுதுகிறேன்

 

எழத வேண்டியதை

எழுதுகிறேன்

 

*

சட்டையைக் கிழி

சந்தோஷம் சந்தோசம்

பாத்திரத்தை உடை

கோபம் தீரும் கோபம் தீரும்

 

*

உடைப்பதும் கிழிப்பதும்

ஒரு மன நோய்

 

மன நோயில்லாத

மனுஷன் யாரு ?

 

*

சாக்லெட்டே சாக்லட்டே

குழந்தைகளுக்குப் பிரியமான சாக்லட்டே

சிகிரட்டே சிகிரட்டே

நேரம் கெட்ட நேரத்தில் தீர்ந்து போகும் சிகிரட்டே

 

*

லௌகீகத் தோல்வி

ஆன்மீகம் திருப்பி

டும் டும் டும்

 

 

*

இந்திரலோகமும்

எப்போதோ பார்த்தாயிற்று

 

சந்திர லோகமும்

சங்கடமில்லாமல் போய்வந்தாயிற்று

 

பாதாள லோகமும்

புகுந்து வெளிவந்தாயிற்று

 

இன்னுமென்ன இன்னுமென்ன

தன் மானம்

மயிரே போயிற்று

 

இந்த இரட்டை வரிகள் கிரக யுத்தம் கவிதைத் தொகுப்பில் உள்ளவை.விக்ரமாதித்யனிடம் ஏமாற்றக் கூடிய எளிமை உண்டு.தன்னில் இந்த எளிமையை எட்டாத ஒருவனுக்கு அவை தன்னைக் காட்டாது .காட்டுவதும் இல்லை.எளிமையாக இருக்கிறீர்களே என்றால் ” ஆமாம் எளிமையாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லிவிடக் கூடியவர் அவர்.

 

சாமி மலையேறி

எங்கே போகும்

 

தேவி மடியில்

விழுந்து கிடக்கும்

 

*

அறியாதவர்களுக்கு

ஆபத்து

கொள்ளிடத்து முளைக் குச்சுகள்

 

*

பரு வெடித்த முகம்

பார்க்க அழகாய்த்தான் இருக்கிறது

*

சிவப்புப் பட்டுக்கு

மஞ்சள் கரை ஜோர்

 

மஞ்சள் பட்டுக்கு

கறுப்புக் கரை பிரமாதம்

 

பட்டோடு படுத்து

புரளுவார்களா யாரும்?

 

*

மாத விடாயை

தீண்டல் என்பது வழக்கு

 

காய்விடுதலென்றால்

கருச்சிதைவு

 

மன நோய்க்கு

கோட்டி

 

சொல்லே கவிதைதான்

சொல்லித்தந்தது

தாம்ரவருணிக் கரை

 

இத்தகைய சின்னச் சின்ன கவிதைகள் கொண்ட விக்ரமாதித்யனின் கவியுலகம் புதுமையான அவருடைய ஒரு முகம் எனில் அவருடைய இருத்தல் பிரச்சனைகளால் ஆன உலகு மற்றொரு முகம்

 

“உணவின் முக்கியத்துவம்

உன்னை விட எனக்கு அதிகம் தெரியும்

 

ஒட்டல்களில் மேஜை துடைத்திருக்கிறேன்

இலையெடுத்திருக்கிறேன்

 

கல்யாண வீடுகளில் போய் பந்திக்கு

காத்துக் கிடந்திருக்கிறேன்

அன்னதான வரிசையில்

கால்கடுக்க நின்றிருக்கிறேன்

 

கோயில் உண்டைக் கட்டிகளிலேயே

வயிறு வளர்த்திருக்கிறேன்

சாப்பாட்டுச் சீட்டுக்கு

அலைந்து திரிந்திருக்கிறேன்

 

மதிய உணவுக்கு மாநகராட்சி லாரியை

எதிர்பார்த்திருந்திருக்கிறேன்

 

சொந்தக்காரர்கள் சினேகிதர்கள்

வீடுதேடிப் போயிருக்கிறேன்

 

சாப்பாட்டு நேரம் வரை இருந்து

இலக்கியம் பேசியிருக்கிறேன்

 

அன்றைக்கு அம்மை ஒறுத்து வந்தாள்

இடையில் வந்த இவள்

 

இன்றைக்கும்

யார் யார் தயவிலோதான்

இருக்க முடியாது யாரும்

என்னைக் காட்டிலும்

சாப்பாட்டு அருமை தெரிந்தவர்கள்”

 

இப்படியான உக்கிரமான முகம் தாண்டி அருள் முகம் ஒன்று அவருகுண்டு.கவிஞனில் எவனுக்கெல்லாம் இந்த அருள் முகம் உண்டோ ,அவர்களிடம் நமக்கு வழங்குவதற்கு என்னவெல்லாமோ இருக்கின்றன.வழங்கிக் கொண்டேயிருக்கிறார்கள்.விகிரமாதித்யன் நம்பியின் கவிதைகளும் வழங்கக் கூடியவை,நான் மடியேந்திப் பெற்றிருக்கிறேன்,ஆகவே எனக்கு அவர் பிற கவிகளில் ஒருபடி மேலே அமர்ந்திருக்கிறார்

 

அருவி

 

யாருக்கும் சொந்தமில்லை

அதனால்

அருவிக்கு யாரும் அன்னியமில்லை

 

விழுவது தவிர்த்து

வேறு லட்சியமென்ன உண்டு அருவிக்கு

 

குளிர்ச்சியும் தெளிவும் அதன்

குணங்களல்ல இயற்கை

 

அரசுகள் மாறுவதும் ஆட்சியாளர்கள் புதிதாக வருவதும்

அதற்கொரு விஷயமேயில்லை

 

அருவியின் எல்லைக்குள் யாரும் செய்தித்தாள் மேய்வதோ

அரசியல் பேசுவதோ இல்லை

 

அருவியிடம் கோபம் கொள்வோர் யாருமில்லை

அவசியமென்ன இருக்கிறது அதற்கு?

 

அருவி வாழ்தல் பயம் அறியாதது

அதனால் சுரண்டல் தெரியாதது

 

அத்வைதம் மார்க்ஸியம் ஸ்டரக்சுரலிசம்

எதுவும் தெரிந்து கொள்ள வேண்டிய ஹிம்சையற்றது அது

 

ஆயிரம் தடவை அருவியில் குளித்தாலும்

யாருக்கும் ஏன்

புத்தி வருவதில்லை?

இந்த கவிதை அருவியைபற்றியான ஒரு கவிதை.ஒருவிதத்தில் நம்மிடம் அவரை யாரனெத் தெரிவிக்கும் அவருடைய கவிதையும் கூட.

முந்தைய கட்டுரைசின்ன வீரபத்ருடு கடிதங்கள்- 4
அடுத்த கட்டுரைசந்திப்புகள், விழாக்கள்