சின்ன வீரபத்ருடு கவிதைகள்- 2

  1. சாதாரண வீதியில் சாதாரண பகல்

காலை பத்து மணி, வீதியில் –
முரட்டு கம்பளியில் சுருண்டு கிடக்கும் மரங்கள்.
வெளியில் தெரியும் லோலாக்குகள் போல
எட்டி பார்க்கும் தளிர் இலைகள்.

ஆட்டோக்கள், பெருகும் இரைச்சல்கள்,
பள்ளிக்கு செல்லும் பிள்ளைகள்.
கச்சேரிக்கு சுருதி சேர்த்துக்கொள்வதுப்போல்
அன்றாட வாழ்க்கையின் முதல் அலைவு.

எப்போதும்போலவே இருக்கும் வீதியில்
எப்போதும்போலவே காலடி வைக்கையில் நினைத்துக்கொண்டேன்.
இப்பொழுது நான் இங்கு நடந்துக்கொண்டு இருந்தாலும்
நான் நடப்பது இங்கல்ல என்று.

கடந்து வந்த எத்தனையோ பழைய வழிகளையே
மீண்டும் மீண்டும் கடக்கிறேன் என்று.
எந்த தொன்ம நிலங்களுக்கோ திரும்ப திரும்ப
செல்கிறேன், மீள்கிறேன் என்று

ஒரு சாதாரண வீதியில் ஒரு சாதாரண பகல்,
என் பார்வையை உள்ளுக்கு செலுத்தினேனோ இல்லையோ
எங்கெங்கோ உள்ள வீதிகளில் இருந்து ஏதேதோ காலத்தவர்கள்,
எனக்காக ஓர் உலகை மண்ணுக்கு இழுத்துவிட்டார்கள்.

2. வாழ்க்கை ஒரு பச்சிளம் குழந்தை

இந்த வேளையில் என்னை பார்த்தால் ஆச்சரியப்படுவீர்கள்
எதற்க்காக இத்தனை சுற்றுகள் சுற்றி வருகிறேன் என்பீர்கள்
கரு தரிக்கும் வேண்டுதலோடு புது மணப்பெண்கள்
அரச மரத்தை நூற்றோரு முறை சுற்றிவருவதுப்போல
வாழ்க்கை பலிக்க வேண்டும் என்று இந்த போதி மரத்தை
ஆயிரத்தொருமுறை சுற்றிக்கொண்டு இருக்கிறேன்.
என்னை சுற்றீ காலம் சுழல்கிறது
சுழலும் காலத்தை சுற்றீ
காலாதீதமான ரகசியம் ஒன்றை உள்ளங்கை நெல்லிக்கனியாக்க
நானும் சுழல்கிறேன்

சுற்றுக்கள் நிறைவடைகையில் விதை ஒன்று முளைவிடும்.
என் முனைப்புக்கு ஒரு உருவத்தை அருள்வித்து
அதிகாலை கதிரொளி ஒன்று உயிர் தெளிக்கும்.
மாமரங்கள் சாட்சியாக என் வாழ்க்கை அப்போதோரு
பச்சிளம் குழந்தையாக மாறும்.

பிள்ளையை தொட்டிலில் போடும் நாளில்
அனைவருக்கும் சொல்லி அனுப்புகிறேன்

3 மண்ணுக்கும், சூரியனுக்கும் இடையில்

பனிப்  பிரளயத்திற்கு பின் வெளிப்பட்ட பவளப்பாறைபோல்
கண்டிப்பேட்டை ஏரி கரையில் ஒரு குண்டுமணிக் கொடி. பாடகன்
குரல் எழுப்பிய கணமே ஸ்வரங்கள் தெறிப்பது போல, பழுத்து வெடித்த
ஒவ்வொரு காயும் ஒரு ராக கொத்து, இரத்தின பேழை.வருஷமெல்லாம் நான் கடந்து வந்தவை எத்தனையோ, வெயில்,
மழை, பணி, பிணி, இனிமை, தனிமை… ஆனாலும்
நான் இப்படி செம்மையாக வில்லை.  என் இதயமும்
வெடித்திருக்கலாம்… ஆனால் பழுக்கவே இல்லை என்று தெரிந்துக்கொண்டேன்.

இப்படி ஒரு சீர் மலர்ச்சி நகரத்தில் வேறெங்கும் என் கண்ணில் படவில்லை.
மண்ணுக்கும், சூரியனுக்கும் இடையில் நடந்த உரையாடலெல்லாம்
இந்த கல்வியற்ற கொடி சிறப்பாக எழுதிவிட்டது.  ஒருவேளை, சின்ன  வீரபத்ருடு சின்ன  வீரபத்ருடு-வாகவே வளர்ந்து இருந்தால் இப்படி ஒன்றை எழுதி இருப்பான்.

(* கண்டிப்பேட்டை ஏரி ஐதராபாதுக்கு நீர் அனுப்பும் ஏரிகளில் ஒன்று)

மொழியாக்கம் :ராஜூ

[மொழிபெயர்ப்பாளர் குறிப்பு] குண்டுமணியை தெலுங்கில் ‘குருவிந்த’ என்போம். மேலெல்லாம் செக்க செவேல் என்று இருந்தாலும்…  கீழே மட்டும் சிறு கருமை  இருக்கும் இந்த மணியை ஒரு எதிர்மறை உருவகமாகவே பயன்படுத்துவோம்.  தன்னில் உள்ள  தீமைகளை மறைத்துக்கொண்டு எதிராளியை விரமர்சிப்பவர்களை இப்படி குருவிந்த என்போம்.  ‘குண்டுமணிக்கு தன் குண்டியின் கருப்பு தெரியாதாம்…!’ என்ற அர்த்தத்தில் தெலுங்கல் சொலவடை உண்டு. அந்த எதிர்மறை பிம்பமான மணியை… முழுக்கவே வேறொரு தளத்துக்கு கொண்டு செல்வது மட்டுமல்ல சட்டென்று அதன் படிம மொழியையே மாற்றும் கவிதை இது.

தெலுங்குக் கவிதையின் அறுபதாண்டுகள்-இஸ்மாயில்

விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்:சின்ன வீரபத்ருடு

முந்தைய கட்டுரைநூறு கடிதங்களில் ஓர் உரையாடல்
அடுத்த கட்டுரைகோவை சொல்முகம் வெண்முரசு கூடுகை – 12