மரக்கார் – இன்றைய வரலாற்றுப்பார்வை.

மரக்கார்- அரபிக்கடலின் சிம்ஹம் படம் நான் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒன்று. ஏனென்றால் இதன் ஒரு வடிவை நான் எழுதியிருக்கிறேன். இன்னொரு தயாரிப்பாளர் மம்மூட்டியை வைத்து இதை எடுப்பதற்காக என்னை அணுகினார். ஒரு பொது வரைவை உருவாக்கினோம். அப்போது நிறைய யோசித்தோம். அதன் பின் அப்படம் கைவிடப்பட்டது.

பிரியதர்ஷன் இயக்கிய இப்படம் ஒரு காட்சிவிருந்து என்பதை மறுப்பதற்கில்லை. ஒரு கடல் கொந்தளிப்புக் காட்சி பிரமிப்பூட்டும்படி எடுக்கப்பட்டுள்ளது. அன்றைய கோழிக்கோட்டின் [அல்லது பேப்பூர்] நகரச் சித்தரிப்பு, கடைசிப் போர்க்காட்சி எல்லாமே மிகச்சிறப்பாக எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் படம் பொதுவாக எதிர்மறை விமர்சனங்களையே பெற்றுவருகிறது. கேரளத்தில் வெற்றிப்படம்தான். வெளியே பெரிய கவனத்தை பெறவில்லை

பதினேழு, பதினெட்டாம் நூற்றாண்டின் இந்திய வரலாறு மிகச்சிக்கலானது. பேரரசுகள் அழிந்து, சிறுசிறு ஆட்சியாளர்கள் அவர்களுக்குள் போரிட்டுக் கொண்டிருந்த காலம். அதற்குள் மதப்பிரச்சினைகள், குலப்பிரச்சினைகள். ஐரோப்பியர் உள்நுழைந்தது அந்த அராஜகச் சூழலைப் பயன்படுத்தித்தான். அது ஓர் வரலாற்று விரிசல். அதை அவர்கள் பிளந்து நுழைந்தனர். அக்காலச் சிக்கல்களை ஆய்வாளர்களே எளிதில் புரிந்துகொள்ள முடியாது.

அன்றைய சிற்றரசர்களுக்கு ஐரோப்பியரின் ஆற்றல், பின்னணி பற்றிய புரிதல் இல்லை. அதற்கான வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் அப்போது ஐரோப்பியருக்கே நாடுபிடிக்கும் எண்ணம் இல்லை.வாய்ப்புகளைக் கண்டபிறகே அவர்கள் அதில் ஈடுபட்டனர்.

உள்ளூர் ஆட்சியாளர்கள் ஒவ்வொருவருக்கும் உடனடி எதிரிகள் இருந்தனர். உதாரணமாக தென்னகத்தை ஆட்சி செய்த விஜயநகரம் தக்காண சுல்தான்களால் அழிக்கப்பட்டது.  அழிந்துபட்ட விஜயநகரத்தின் தளபதிகள் தனித்தனி நாயக்கர் ஆட்சிகளாக நீடித்தனர். தக்காண சுல்தான்களின் தளபதிகளும் குட்டிக்குட்டி நவாபுகளாகவும் சுல்தான்களாகவும் தொடர்ந்தனர். அவர்களுக்குள் கடும் போர் நிகழ்ந்துகொண்டிருந்தது. வரலாற்றுரீதியான அவநம்பிக்கையும் கசப்புகளும் இருந்தன. அவர்கள் ஐரோப்பியரை பொது எதிரியாகக் காண எந்த வாய்ப்பும் இருக்கவில்லை.

விஜயநகரத்தின் மிச்சங்களாக எஞ்சிய நாயக்கர் அரசுகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு குலம். அவர்களில் எவர் பிறரை வென்றனரோ அவர்களே அரசர்களாயினர். ஆகவே அவர்களிடையே கடும் சண்டைகள் நடந்தன. குலங்களே அழிக்கப்பட்டன. மதுரை நாயக்கர்கள் தஞ்சை நாயக்கர்களையும் செஞ்சி நாயக்கர்களையும் அழித்தனர். சித்ரதுர்க்கா, அனந்தபூர் ,காளஹஸ்தி, பேலூர் எல்லாம் தனித்தனியான நாயக்கச் சிற்றரசர்களால் ஆளப்பட்டன. அவர்கள் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டே இருந்தனர்.

தெற்கே விஜயநகரம் இஸ்லாமிய ஆதிக்கத்தை எதிர்த்து நின்றதுபோல வடக்கே மராட்டிய பேரரசு முகலாயர்களை எதிர்த்து நின்றது. ஆனால் மராட்டியர் படைகொண்டு வந்து தெற்கே இருந்த நாயக்கர்களின் அரசுகளை சூறையாடி கப்பம் பெற்றனர். நாயக்கர்களுக்கும் மராட்டியர்களுக்கும் இடையே ஓயாத போர் நிகழ்ந்தது. மராட்டியர் தஞ்சையையும் வடதமிழகத்தையும் கைப்பற்றிக் கொண்டனர்.

இதைப்போலவே இஸ்லாமிய ஆட்சியாளர்களும் ஒருவரோடொருவர் போரிட்டனர். முகலாயர்களுக்கும் தக்காணத்துச் சுல்தான்களுக்கும் தொடர் போர்கள் நிகழ்ந்து பாமினி சுல்தான்கள் அழிந்தனர். தக்காணச் சுல்தான்களில் இருந்து சிதறி உருவானவர்களான ஹைதர் அலியும் திப்பு சுல்தானும் ஹைதராபாத் நவாபுகளுடன் போரிட்டனர். ஆற்காடு நவாப்களை தோற்கடித்தனர். தக்காணத்தின் பாமினி சுல்தால்களின் எச்சமாக மிஞ்சிய இஸ்லாமிய குட்டி நவாபுகள்  ஒவ்வொருவரும் அவ்வாறு தங்களுக்குள் போரிட்டனர்.

இச்சூழலில் ஒரு தரப்பாக உள்ளே வந்தவர்கள்தான் ஐரோப்பியர். அவர்களின் அக்கால நோக்கம் முதன்மையாக வணிக ஆதிக்கம் மட்டுமே. குறிப்பாக கடல் ஆதிக்கம். இந்திய சிறிய அரசர்களுக்கு கடலாதிக்கம் பெரிதாகப் படவும் இல்லை, அவர்கள் துறைமுகத்திற்குச் செல்லும் பாதைகளில் சுங்கம் வசூலிப்பதே போதும் என்றிருந்தனர். ஐரோப்பிய வணிகர்கள் அவர்களின் நாட்டுக்கு வணிகச்செல்வத்தை கொண்டுவந்தனர். அவர்களுக்கு நவீன ஆயுதங்களை விற்றனர்.

ஆகவே இந்தியாவின் சிறிய அரசர்கள் ஐரோப்பியர்களை பயன்படுத்திக்கொண்டு தங்கள் ஆயிரமாண்டுக்கால எதிரிகளை தோற்கடிக்கவே முயன்றனர். அதுவே இயல்பானது. அவர்களில் சிலர் போர்ச்சுக்கல் காரர்களுடன் சேர்ந்துகொண்டனர். சிலர் பிரெஞ்சுக்காரர்களுடனும் ஆங்கிலேயர்களுடனும் சேர்ந்துகொண்டனர். அந்தந்த நேரத்து அரசியல் கணக்கு, அவ்வளவுதான்.

அன்று எந்தச் சிற்றரசருக்கும் எந்த நிலத்தின்மேலும் முழுமையான ஆதரவு இருக்கவில்லை. ஏனென்றால் எவரும் தொன்மையான குல அடையாளம் வழியாகவோ அல்லது ஐதீகநம்பிக்கைகள் வழியாகவோ அரசுரிமை கொண்டவர்கள் அல்ல. அவர்கள் அனைவருமே முந்தைய பேரரசுகளுக்கு கீழே ஒரு சிறிய ஆட்சியாளராக இருந்தவர்கள்தான். ஆகவே எந்த நிலப்பிரபுவும் அரசரை தங்களுக்கு மேல் என முழுமையாக ஏற்கவில்லை. ஒவ்வொரு நிலப்பிரபுவும் வாய்ப்பு கிடைத்தால் தனியாக பிரிந்துபோக நினைத்தனர். தங்களைப்போன்ற மற்ற நிலப்பிரபுக்களுடன் பூசலிட்டனர்.

கோழிக்கோடு சாமூதிரியும் திருவிதாங்கூர் அரசரும் சேரன் செங்குட்டுவனின் வம்சத்தவர்கள் என தங்களை நிறுவிக்கொள்ள முயன்றனர். திப்பு சுல்தான் மணவுறவுகள் வழியாக  தன்னை பாமினி சுல்தான்களின் ரத்தம் என நிறுவ பாடுபட்டார். ஆனால் எவரும் அவர்களை அவ்வாறு முழுமையாக ஏற்கவில்லை. தங்களுக்கு வாய்ப்பு வருமென காத்திருந்தனர்.

இந்த குழம்பிய குட்டையில் மெல்லமெல்ல மேலெழுந்தவர்கள் ஐரோப்பியர். பிரெஞ்சுக்காரர்களும் பிரிட்டிஷாரும் அதில் முதன்மைகொண்டனர். வெள்ளையர்களுக்கு அணுக்கமாக இருந்த அரசர்களே அதிகாரத்தில் நீடித்தனர். பிரிட்டிஷாரை ஆதரித்தவர்கள் கடைசிவரை ஆட்சியாளர்களாக இருந்தனர். இதுதான் வரலாறு.

இதில் வெள்ளையர்களுடன் நின்றவர்கள் அனைவரும் துரோகிகள், வெள்ளையர்களிடம் வீழ்ந்தவர்கள் அனைவரும் தேசத்தியாகிகள் என்னும் ஒற்றைவரியாக வரலாற்றை எழுதிவிட முடியாது. வெள்ளையர்களை எதிர்த்தவர்கள் எல்லாம் சுதந்திரப்போராட்ட வீரர்கள் என வரலாறு எழுதுவது அபத்தம். இந்தியச் சுதந்திரப்போர் காலத்தில் நமக்கு ‘தேசிய வீரநாயகர்கள்’ தேவைப்பட்டனர். அவர்களை வரலாற்றில் இருந்து புனைந்துகொண்டோம். அப்புனைவுக்கும் யதார்த்தத்திற்கும் பெரும் வேறுபாடு உண்டு.

வெள்ளையர் இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தின் குழம்பிய சூழலில் கடற்பிரபுக்கள் அரசர்களின் ஆதிக்கத்தில் இருந்து சுதந்திரம்பெற்று தனியாட்சி நடத்தினர். அவர்கள் ஐரோப்பிய, அரேபிய கப்பல்களைக் கொள்ளையிட்டனர். அவர்களை ஐரோப்பிய கடற்கொள்ளையர் என அழைத்தனர். சிலசமயம் அவர்களின் ஆதரவை அரசர்கள் பெற்றுக்கொண்டனர். ஆனால் அவர்கள் பொதுவாக அரசர்களின் ஆதரவுடன் வெள்ளையர்களால் அழிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் குஞ்ஞாலி மரக்கார்

குஞ்ஞாலி மரக்கார்,

குஞ்ஞாலி என்றால் குஞ்ஞு அலி. குஞ்சு அலி என தமிழில் சொல்லலாம். அவருடைய தாத்தாக்வும் குஞ்ஞாலி என்ற பெயர் கொண்டவர்தான். அவருடைய பின்னணியை சுருக்கமாக இப்படிச் சொல்லலாம்.

இந்தியாவெங்கும் பலநூற்றாண்டுகளாக அரபுக் கடல்வணிகத் தொடர்பு இருந்தாலும் கி.பி பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் அது வலுப்பெற ஆரம்பித்தது. இந்திய அரசர்கள் கடலை ஆதிக்கம் செலுத்த முயலவில்லை. இந்திய அரசர்கள் எவருக்கும் நேரடியாகக் கடற்படை இல்லை. முகலாயர்கள், மராட்டியர்கள், நாயக்கர்கள் எவரும் கடலை ஆளவில்லை.

கேரளம் பதினான்காம் நூற்றாண்டு முதல் வெவ்வேறு நாயக்கர்களின் மறைமுகமான மேலாதிக்கத்தின் கீழ் இருந்தது. மதுரை நாயக்கர்ளுக்கும் வடக்கே இக்கேரி நாயக்கர்களுக்கும் கப்பம் கட்டிய சிற்றரசர்கள் கேரளத்தை ஆட்சி செய்தனர். தெற்கே திருவிதாங்கூரும் கொச்சியும் கொடுங்கல்லூரும் மதுரை ஆதிக்கத்தில் இருந்தன. வடக்கே கோழிக்கோடும் கண்ணனூரும் இக்கேரி நாயக்கர்களால் ஆளப்பட்டன.

கோழிக்கோட்டை ஆட்சிசெய்த அரசர் சாமூதிரி எனப்பட்டார்.. எரநாடு என அழைக்கப்பட்ட கோழிக்கோடு பகுதியில் இருந்த எராடிகள் என்னும் ஒரு நாயர் குழுதான் கோழிக்கோட்டை கைப்பற்றிக்கொண்டு தங்களை சாமூதிரிகள் என்று சொல்லிக்கொண்டு அரசர்களாக ஆயினர். அன்று அது கோழிக்கோடு அருகே உள்ள போப்பூர்தான் முதன்மைத்துறைமுகமாக இருந்தது.

உண்மையில் சாமூதிரிகள் என்னும் பொதுவான தலைமைக் குலத்திற்குள் மேலும் பல குலங்கள் உண்டு. அவர்கள் நம்பியாத்திரிகள் எனப்படுவார்கள். பாலக்காடு அரசர் போன்றவர்கள் அதற்குள் வருவார்கள். இவர்கள் தொன்மையான அரசகுலம் அல்ல. ஆகவே எல்லாரும் இணையானவர்கள். எனவே ஒருவர் இன்னொருவரை ஏற்காமல் எப்போதுமே குடிப்பூசல்தான்.சாமூதிரி கோலத்திரி நம்பியாத்திரி குடிப்பூசல்களை எழுத பல ஆயிரம் பக்கங்கள் தேவைப்படும்.

கண்ணனூர் பகுதி கோலத்துநாடு எனப்பட்டது. அதை ஆட்சி செய்தவர் கோலத்திரி எனப்பட்டார். கோலத்துநாட்டு அரசகுலம் ஒப்புநோக்க தொன்மையானது. இவர்கள் வடகேரளத்தில், மங்களூர் முதலான நிலத்தை ஆண்டவர்கள். அவர்கள் கன்னடநாட்டு ஆட்சியாளர்களால் துரத்தப்பட்டு கடைசியில் கண்ணனூரை தலைமையாக கொண்டு ஆட்சி செலுத்தினர். அவர்களும் ஏராளமான உட்குலங்களாக இருந்தார்கள். அவர்களுக்கு கன்னட நாட்டு அரசகுடியினரிடம், குறிப்பாக துவாரசமுத்திரத்தை ஆட்சி செய்த பழங்கால கங்கர்குடியினரிடம் குருதியுறவு உண்டு.

கோழிக்கோடு சாமூதிரி அரசர் தொன்மையான அரசகுடி அல்ல எனினும் அரேபியர்களின் தொடர்பால் பணமும் ராணுவபலமும் வாய்ந்தவரானார். ஆகவே அவர் கொச்சியை வென்றார். கொச்சியின் அரசர் தொன்மையான சேரர்குலம். செங்குட்டுவனின் நாடான கொடுங்கோளூர் கொச்சி அரசரின் ஆட்சியில் இருந்தது. ஆகவே 12 ஆண்டுக்கு ஒருமுறை கொச்சிமேல் படையெடுத்து வந்து திருநாவாய என்னும் ஊரில் ஆற்றின் கரையில் அமர்ந்து பழைய சேர அரசர்களுக்கு வாரிசாக அமைந்து சில சடங்குகள் செய்வார். அதன்வழியாக கொச்சிமேல் தன் சடங்குசார் அதிகாரத்தை நிலைநாட்டிக்கொள்வார்.

இதை கொச்சி அரசரின் படைகள் எதிர்த்து போரிடும். அது ஒரு போர்க்களமாக நிகழும். இதுவே மாமாங்கம் எனப்பட்டது. சோழர்கள் ஒவ்வொரு அரசர் மணிமுடி சூட்டிக்கொள்ளும்போதும் படையுடன் வந்து பாண்டியர்களை வென்று மதுரையின் மணிமுடியைச் சூட்டிக்கொள்வதுபோலத்தான் இது. மாமாங்கம் என்னும் சினிமா இதை ஒட்டி எடுக்கப்பட்டது.

பதினேழாம் நூற்றாண்டு வாக்கில் அரேபியர்கள் தங்களுக்காக கடலோரக் காவல்படைகளை உருவாக்கிக் கொண்டனர். அவர்கள் அரேபிய ரத்தத் தொடர்புள்ள இஸ்லாமியர்கள். காலப்போக்கில் அவர்கள் கடலாதிக்கச் சக்திகளாக உருவாயினர். அந்தக் குடிகளில் ஒன்றில் வந்தவர் குஞ்ஞாலி மரக்கார். அவர்கள் தங்களின் முன்னோர் அரேபியாவிலிருந்து வந்தவர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்கள். அவர்கள் அரபு குருதிமரபினர் என்பது உண்மை. எகிப்தியர் என்னும் பேசும் உண்டு.

1520 முதல் நான்கு குஞ்ஞாலி மரக்கார்கள் இருந்துள்ளனர். குட்டி அகமது அலி, குட்டி போக்கர் [அபுபக்கர்[ ,பட்டு மரக்கார், முகம்மது அலி. பட்டு மரக்காரின் பேரன் கடைசி குஞ்ஞாலி மரக்கார். பட்டு மரக்காரின் காலத்தில் அராபியர்கள் போர்ச்சுகீசியர்களுடன் போரிட்டபோது அவர் அராபியர்களுக்கு உதவினார். அராபியர் போர்ச்சுக்கீசியர்களின் பீரங்கிகளால் தோற்கடிக்கப்பட்டனர். பட்டு மரக்காரின் சிறிய கடற்படை அழிந்தது. அவர் ஒரு சிறுவணிகராக கொச்சியில் குடியேறினார்.

கொச்சியை போர்ச்சுக்கீசியர்கள் கைப்பற்றியபோது பட்டு மரக்காரின் குலம் மீண்டும் கோழிக்கோடு அரசுக்கு உட்பட்ட பொன்னானிக்குச் சென்றது. அங்கே அவர்கள் ஒரு சுதந்திரமான சிற்றரசர் போல ஆட்சி செய்தார்கள். குஞ்ஞாலி அவருடைய வாரிசானார். அவர்கள் ஒரு சிறு கடற்பிரபுக்குடி. அவர்கள் ஐரோப்பியர்களின் கப்பல்களையும் சாமூதிரியின் படகுகளையும் கொள்ளையிட்டார்கள்.

கொச்சியின் அரசர் கோழிக்கோடு அரசரிடமிருந்து பாதுகாப்பு கோரி போர்ச்சுகீசியர்களிடம் சரண் அடைந்தார். போர்ச்சுகீசியர் தங்களை தாக்கக்கூடும் என எண்ணிய கோழிக்கோட்டின் சாமூதிரி அரசர் குஞ்ஞ்சாலி மரக்காரிடம் உதவி கோரினார். அவ்வாறு குஞ்ஞாலி மரக்கார் கோழிக்கோடு சாமூதிரியின் கடற்படைத் தலைவராக ஆனார். அவர்கள் சில கடற்போர்களில் போர்ச்சுகீசியரை வென்றனர்.

குஞ்ஞாலி மரக்கார் வடகரை அருகே தனி கோட்டை கட்டிக்கொண்டார். சாமூதிரி அரசரின் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொண்ட தனி ஆட்சியாளராகவே நீடித்தார். அவருடைய அந்த தனியாதிக்கம் கோழிக்கோட்டின் பிற அரசகுலங்களுக்கு ஒவ்வாமையை உருவாக்கியது. குறிப்பாக கோலத்திரிகள் குஞ்ஞாலி மரக்கார் அவர்களுடைய படகுகளை கொள்ளையடித்ததை மறக்கவில்லை. குஞ்ஞாலி மரக்கார் அரேபியர்களின் ஆதரவுடன் கோழிக்கோட்டை கைப்பற்றக்கூடும் என்றும் அஞ்சினர்.

விளைவாகச் சாமூதிரி அரசர் குஞ்ஞாலியிடமிருந்து விலகி போர்ச்சுகீசியர்களிடம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார். குஞ்ஞாலி மரக்காரை போர்ச்சுகீசியர் சாமூதிரியின் உதவியுடன் தாக்கினர். குஞ்ஞாலி சரண் அடைந்தார். அவரை கோவாவுக்கு கொண்டு சென்றனர். அங்கே மதவிசாரணை செய்தனர். அவர் கொல்லப்பட்டார். இதுவே மிகச்சுருக்கமான வரலாறு.

தமிழகத்திலும் அவ்வண்ணம் கடல்பிரபுக்கள் உருவாயினர்.  தமிழக மரைக்காயர்களில் எகிப்து, அரேபிய குருதிவழியினராகிய பல புகழ்பெற்ற குடிகள் உண்டு. அவர்களில் முக்கியமானவர் சீதக்காதி என்னும் சையத் அப்துல் காதர் அவர்கள்.ராமேஸ்வரம் ஆலயத்தின் பிராகாரத்தை ராமநாதபுரம் சேதுபதிக்காக அவர்தான் பொறுப்பேற்று கட்டினார். ராமநாதபுரம் கல்மசூதியையும் கட்டியவர். மாபெரும் வள்ளல். ’செத்தும் கொடுத்தான் சீதக்காதி’ என அவரை படிக்காசுப்புலவர் போன்றவர்கள் பாடியிருக்கிறார்கள்.அவரைத் தன் கடற்படைத் தளபதியாக ராமநாதபுரம் சேதுபதி நியமித்தார். அவர் சேதுபதிக்கு ஆதரவாக நின்று போரிட்டார். சேதுபதி மதுரை நாயக்கர் ஆட்சிக்கு ஆதரவாக நின்றவர்.

மராட்டியத்தில் பேஷ்வாக்களே கடற்பிரபுக்களை  உருவாக்கினர். அவர்களில் முக்கியமானவர் கன்னோஜி ஆங்கரே. அவரை வெல்ல வெள்ளையர் மிகவும் போராடவேண்டியிருந்தது. காரணம், அவர் ஆட்சி செய்த ஜல்ஜீரா என்னும் ஜஞ்சீரா. அங்கே நானும் வசந்தகுமாரும் நாஞ்சில்நாடனும் சண்முகமும் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு சிவாஜியின் நிலம் வழியாக ஒரு பயணத்தைச் செய்தபோது சென்றிருக்கிறோம். கடலுக்குள் நின்றிருக்கும் ஒரு சின்னஞ்சிறு பாறைத்தீவு அது. நான்குபக்கமும் அலைகள் வந்து அறையும் நிலம். அங்குள்ள இனிய ஊற்று ஒன்றினால் அப்பெயர் வந்தது. ஜீரா ஜல். இனிய நீர்.சாண்டில்யனின் ஜலதீபத்தில் கன்னோஜி ஆங்கரே ஒரு கதைநாயகர்.

இந்தக்கதையை ஒரு வாழ்க்கை வரலாறாக எடுப்பதாக இருந்தால் அது மிகமிகப் பொதுவான,ஒரு கோட்டுச்சித்திரமாகவே எடுக்க முடியும். அவ்வளவு சிக்கல் அக்காலகட்டத்தின் வரலாற்றில் உள்ளது. அதுதான் இந்தப்படத்தின் முதல் பிரச்சினை. மிக எளிமையான  ‘கரண்டி ஊட்டல்’ முறையில் அந்தச் சூழலையும் வரலாற்றையும் விளக்கியிருக்கவேண்டும். குறிப்பாக மலையாளிகள் அல்லாதவர்களுக்கு. ஒவ்வொரு கதாபாத்திரமும் திரைக்கதை வழியாக தெளிவான குணச்சித்திரத்துடன் அடையாளப்படுத்தப் பட்டிருக்கவேண்டும்.

அப்படித்தான் அசல் திரைக்கதை எழுதப்பட்டிருக்கிறது. ஆனால் கடைசிப் படத்தொகுப்பில் காட்சிகளுக்கே முக்கியத்துவம் கொடுத்து வெட்டியிருக்கிறார்கள். ஆகவே முதல் ஒருமணிநேரம் என்னவென்றே தெரியவில்லை. வெறும் முகங்களாகவே கதாபாத்திரங்கள் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறார்கள். பெயர்கள் மட்டும் ஒலிக்கின்றன. படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்றது முதன்மையாக இதனால்தான்.

இந்த படம் நேர்மையான, நேரடியான வரலாறாக எடுக்கப்பட்டிருந்தால்கூட ஒரு மதிப்பு இருந்திருக்கும். ஆனால் இத்தனைபெரிய படத்தை, இவ்வளவு உழைப்பு செலுத்தப்பட்ட படத்தை  பிரேவ் ஹார்ட், டிராய் போன்ற படங்களின் காட்சிகளை அப்படியே சுட்டு எடுத்து வைத்திருக்கிறார்கள். அந்தப்படங்கள் இத்தகைய படங்களை பார்ப்பவர்களுக்கு நன்று அறிமுகமானவையும்கூட. அது நம்பகத்தன்மையை வீழ்த்திவிடுகிறது. வரலாறாக ஆகாமல் படத்தை நிறுத்திவிடுகிறது.

அத்துடன் படத்தொகுப்பில் இன்று அடிக்கடி நிகழும் ஒரு பெரும் குளறுபடி இதிலும் உள்ளது. ஆங்கிலப்படப் பாணியில் சரசரவென காட்சிகள் ஓடவேண்டும் என நினைக்கும் படத்தொகுப்பாளர்கள் சிலர் இன்று உள்ளனர். அவர்கள் காட்சிகளை மிகச்சுருக்கமாக வெட்டிவிடுகிறார்கள். ‘ரசிகனுக்கு என்ன விஷயம் என்று தெரிந்துவிடும், அதுபோதும்’ என வாதிடுவார்கள்.

ஆனால் அந்த அதிசுருக்கம் காரணமாக காட்சிகள் தொடங்கி -நிகழ்ந்து- முதிர்ந்து ரசிகனிடம் உணர்ச்சிகரமான பாதிப்பு உருவாவதில்லை. என்ன ஏது என தெரியாமலேயே காட்சிகள் மின்னி மின்னி ஓடிக்கொண்டிருக்கும். இப்படத்தில் இறுதித் திருப்பமாக குஞ்ஞாலி மரைக்காயரை வீழ்த்தும் துரோகத்தின் தொடக்கக் கதை படத்தில் வெறும் இரண்டே நிமிடங்களில் ஒற்றை வசனங்களுடன் ஓடிச்செல்கிறது. மஞ்சுவாரியர் நடித்திருந்தும்கூட அவர் யார், அவருடைய குணாதிசயம் என்ன எதுவுமே பதிவாவதில்லை. இந்த படத்தொகுப்புதான் இந்தப்படத்துடன் உணர்வுரீதியாக ஒன்றாமல் வாசகன் வெறுமே வாய்பிளந்து அமரச்செய்கிறது.

வேற்றுமொழிப் படங்களில் இருந்து பெறும் ‘தூண்டுதல்’ காரணமாக மிக அபத்தமான பல விஷயங்கள் உருவாகிவிடுகின்றன. உதாரணமாக குஞ்ஞாலி மரக்காருக்கு பைரேட்ஸ் ஆஃப் கரீபியன் படத்தில் உள்ள கடற்கொள்ளையரின் தலைமுடிப் பாணியை அளித்திருக்கிறார்கள். மரக்கார் இஸ்லாமியர், அரபுப்பின்னணி கொண்டவர். அவர் அவ்வண்ணம் நீண்ட தலைமுடியுடன் இருந்திருக்க மாட்டார். இளம் மரக்கார் நீண்ட தலைமுடியுடன் இருப்பதும் பிழையே. தலையை மழிப்பதே அவர்களின் வழக்கம். அவருடைய ஆடைகள் எல்லாமே ஸ்பானிஷ் கடற்கொள்ளையர் பாணியில் உள்ளன.

உண்மையில் குஞ்ஞாலி மரக்காரின் வாழ்க்கையின் ஓர் உச்சகட்டத் தருணத்தை, சிலநாட்களுக்குள் நீளும் நிகழ்ச்சிகள் வழியாகச் சொல்லியிருந்தால் அடர்த்தியான ஒரு கதை அமைந்திருக்கும். வாழ்க்கை வரலாறுகளை அப்படித்தான் எடுக்கவேண்டும். வாழ்க்கையின் ஒரு துண்டு போதும் சினிமாவுக்கு. முழு வாழ்க்கையும் தேவையில்லை. இப்போது மிகத்தளர்வான ஒரு திரைக்கதையுடன் வரலாற்றை ஆங்காங்கே தொட்டுக்கொண்டு செல்லும் ஒரு தழுவல்கதையாக உள்ளது மரக்கார். இவ்வளவு பெரிய உழைப்பு இப்படி ஆனது வருத்தமளிக்கிறது.

அத்துடன் ஒன்று உண்டு. நாம் நம் வீரநாயகர்களை கற்பனைசெய்யும்போது அவர்கள் எல்லாருமே வஞ்சத்தால் வீழ்த்தப்பட்டவர்களாக சித்தரிக்கிறோம். அது நம் வாய்மொழிக் கதைமரபின் வழக்கம். தொன்மையான எல்லா கதைகளிலுமே வீரர்கள் துரோகத்தால்தான் வீழ்வார்கள். கட்டபொம்மன் ஆனாலும் சரி, தச்சோளி உதயணன் ஆனாலும் சரி. அத்துடன் நம் தேசிய இயக்கத்தில் நாம் தேசபக்தர்- தேசத்துரோகி என்னும் இருமையை கட்டமைக்கவும் விரும்பினோம். ஆகவே நாட்டார் மரபை ஒட்டி அவ்வாறு புனைந்துகொண்டோம்.

ஆனால் இன்றும் சலிக்காமல் அதே கதையை அப்படியே சொல்லும்போது இந்தியர்கள் என்றாலே ஒரு மாவீரனும் அவனைச்சுற்றி நூறு துரோகிகளும்தான் என்னும் சித்திரம் உருவாகிறது. இப்படங்களைப் பார்க்கையில் இந்தியர்களில் இத்தனை துரோகிகள் இருந்தார்கள், ஆனால் ஐரோப்பியரில் ஒரு துரோகிகூட இல்லை என்ற எண்ணமே ஓங்குகிறது. ஏன் போர்ச்சுகீசிய காப்டனை ஒரு போர்ச்சுக்கீசிய படைவீரன்கூட காட்டிக்கொடுக்கவில்லை? ஏன் குஞ்ஞாலியை அத்தனைபேரும் காட்டிக் கொடுக்கிறார்கள்? அப்படியென்றால் இயல்பாகவே ஐரோப்பியர் நம்மைவிட மாண்பு மிக்கவர்கள்தானே? அவர்கள் நம்மை ஜெயித்ததில் என்ன பிழை? அவ்வாறு ஓர் இளைஞன் இயல்பாகவே கேட்கலாம்.

அத்துடன் அந்த தேசிய வரலாற்று ’டெம்ப்ளேட்’டை அப்படியே இன்று எடுக்கும்போது இன்றைய அரசியல் ஊடே நுழைகிறது. குஞ்ஞாலி மரக்கார் இந்துக்களை கொன்றழித்தவர், அவரைப் பற்றி படம் எடுக்கக் கூடாது என்று கேரளத்தில் இந்துத்துவர் குரலெழுப்பினர். திப்புசுல்தான் பற்றியும் இதே குரல் எழுகிறது. அவர்களை தேசியநாயகர்களாக ஆக்குவதன் எதிர்ப்பக்கம் அது. அவர்களை மதச்சார்பற்றவர்களாக, ஜனநாயகவாதிகளாக, இந்திய தேசத்தின் பக்தர்களாக எல்லாம் கட்டமைக்க வேண்டியிருக்கிறது.

குஞ்ஞாலி மரக்கார் இந்திய கடற்படையின் நாயகபிம்பங்களில் ஒருவர் இன்று. அவர் பெயரில் கடற்படைநிலையம் உள்ளது. ஆனால் அதெல்லாம் சினிமாவைக் கட்டுப்படுத்தவேண்டுமா என்ன? அந்த நாயக பிம்பம் ஓர் அதிகாரபூர்வச் சித்தரிப்பு. அதை அப்படியே எடுத்தால் அதில் என்ன புதிதாக இருக்கப்போகிறது? சினிமா அடுத்தகட்ட வரலாற்றுச் சித்தரிப்பை நோக்கிச் செல்லவேண்டும். இதையே திப்பு சுல்தான், பாலாஜி பாஜிராவ், கன்னோஜி ஆங்கரே, வீரபாண்டிய கட்டபொம்மன் என எவருக்கும் சொல்வேன்.

குஞ்ஞாலி மரக்கார் இந்துக்களை கொன்ற இஸ்லாமிய மதவெறியரா? அல்லது மதச்சார்பற்ற ஜனநாயக வாதியா? இரண்டும் இல்லை, அவர் அக்காலத்தைய எல்லா அரசர்கள், சிற்றரசர்கள், கடற்தலைவர்கள் போன்ற ஒருவர். தன் ஆட்சிக்குள் வந்த இடங்களில் அவர் சட்டம் ஒழுங்கை உருவாக்கினார். அங்கே அவர் இந்துக்களுக்கும் இனிய ஆட்சியாளராகவே இருந்தார். கேரளத்தின் வாய்மொழிக் கதைகளில் அவர் இந்துக்களாலும் போற்றப்படுகிறார். ஆனால் படையெடுத்து சென்ற இடங்களைச் சூறையாடினார். அங்குள்ள இஸ்லாமியர்களையும் கொள்ளையடிக்க தயங்கவில்லை.

தென்னக வரலாற்றை தோராயமாக வாசிப்பவர்கள்கூட தமிழகம், கர்நாடகம், ஆந்திர நிலப்பகுதிகளில் மராட்டியப் படைகள் உருவாக்கிய சூறையாடலை, அழிவை காணாமலிருக்க முடியாது. மராட்டியர் இந்துக்கள், இஸ்லாமிய அரசின் எதிரிகள், ஆகவே இந்துக்களின் காவலர் என்பதெல்லாம் நாம் பின்னர் உருவாக்கிக் கொண்ட கற்பிதங்கள். வரலாற்றின் அக்கால இயக்கம் வேறுவகையானது. அதை இனியாவது நாம் கொஞ்சம் புரிந்துகொள்ளவேண்டும்.

சென்ற சில ஆண்டுகளில் வெளிவந்த மாபெரும் சரித்திரப்படங்களின் பொதுவான உணர்வுத்தளம் என்பது நம் தேசிய வரலாற்று இயக்கம் உருவாக்கிய ‘தேசபக்தி’ சார்ந்ததுதான். அந்த உணர்ச்சி நம் வாழ்க்கையின் அன்றாடத்துடன் இணைந்தது அல்ல. அது ஓர் அரசியல் கட்டமைப்பு. ஆகவே அதை மிகைப்படுத்த வேண்டியிருக்கிறது. அதனால் இப்படங்கள் எல்லாமே மிகையான உணர்ச்சிகளுடன் உள்ளன. அந்த உணர்ச்சிகள் இன்றைய பார்வையாளனால் பகிரப்படுவதுமில்லை

அந்த வழக்கமான பார்வையுடன் வரலாற்றை அணுகும்போது திரும்பத்திரும்ப ஒரே ஒரே உணர்வுநிலைகள்தான் கிடைக்கின்றன. பத்மாவதி, பாஜிராவ் மஸ்தானி, சைரா நரசிம்மலு ரெட்டி ஆகிய எல்லா படங்களும் ஏறத்தாழ ஒரே உணர்ச்சிக் கட்டமைப்பு, நாடகீய அமைப்பு கொண்டவை. வழக்கமான பார்வை காரணமாக சலிப்பூட்டும் பாடப்புத்தகத்தன்மை அவற்றில் அமைந்துவிடுகிறது. மரக்காரில் குஞ்ஞாலி மரக்கார் கொலைக்களத்துக்கு கொண்டுசெல்லப்படும்போது எதிர்பார்த்த முடிவை பார்க்கும் சலிப்பை ரசிகன் அடைவதை அரங்கில் காணமுடிகிறது. அத்துடன் அக்காட்சி அப்படியே பிரேவ்ஹார்ட்டின் நகலும்கூட.

நாம் நம்முடைய தேசியவரலாற்றின் ‘டெம்ப்ளேட்டுகளை’ விட்டு வெளியே வந்து வரலாற்றின் உண்மையை துணிந்து பேச ஆரம்பிக்கலாம். உண்மையிலேயே நமக்கு நாடகீயமான, மானுட உச்சங்கள் மண்டிய, தத்துவார்த்தமான ஆழம்கொண்ட வரலாற்றுப்படங்களை உருவாக்க ஏராளமான வாய்ப்புகள் நம் வரலாற்றில் உள்ளன. ஓர் உதாரணம் சொல்லலாம், பழசிராஜா அவர் மனைவியால் காட்டிக்கொடுக்கப்பட்டார் என்று ஒரு பதிவு உண்டு. அந்த மனைவியை அதைச்செய்யவைத்தது என்ன என்ற கேள்வி நம்மை கொண்டுசெல்லும் தொலைவு மிக அதிகம்.

எல்லாமே மிகையுணர்ச்சிகளும் வழிபாட்டுணர்ச்சிகளுமாக கொந்தளிக்கும் தமிழகத்தில் அண்மைக்காலத்தில் ஒரு நவீன வரலாற்று சினிமாவை எடுக்க முடியாது. ஆனால் மலையாளத்தில் முடியும். பழசி ராஜா, மாமாங்கம், மரக்கார்  ஆகிய மூன்று சினிமாக்களிலும் அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டனர் மலையாளிகள். ஆனால் எனக்கு கேரளத் திரைக்கதையாசிரியர்கள் மேல் எப்போதுமே நம்பிக்கை உண்டு. இந்தியாவுக்கு அவர்கள் புதியவழி காட்டக்கூடும்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர்: ஜெய்ராம் ரமேஷ்
அடுத்த கட்டுரைசூல்-கதைகளால் தொடுக்கப்பட்ட கதை