வணக்கம் ஜெ,
தாங்கள் நலமாக இருக்க இறைவனிடம் பிரார்த்தனைகள்.
ருபாயியத் எனும் நான்கடிப்பாடல்களும் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட ரூமியின் கவிதைகளும் ‘ரூமியின் வைரங்கள்’ எனும் பெயரில் கஸல் மறுபதிப்பாகியுள்ளது. இத்தொகுப்பில், போகிறபோக்கில் ரமீஸ் பிலாலி இப்படி ஒருவரியை மொழிப்பெயர்த்துள்ளார்.
‘அரை மூச்சின் அளவே இவ்வாழ்வில்
காதலை தவிர வேறு எதையும் விதைக்காதே’
இந்த வரியை படித்துவிட்டு வேறு எதையும் அதற்கு மேல் நினைத்து பார்க்க முடிவதில்லை. சில வினாடிகள் அப்படியே அமர்ந்திருந்தேன். இந்த வரியின் எதிர் பிம்பத்தை கிழக்கு இலங்கை கவிஞர் பாத்திமா மின்ஹா அவருடைய நாங்கூழ் தொகுப்பின் கவிதை ஒன்றோடு பொருத்தி பார்க்க முடிகிறது.
‘நேசமல்லாக்கடலில்
வலைஞனின் கொடுங்கனவு
துடிதுடித்து மாயும் மீன்’
உலகம் முற்றும் அழிந்துவிடும், இறுதியில் இறைவன், தான் மட்டுமே இருக்கும் தனித்த நிலை இஸ்லாமிய நம்பிக்கையில் இருக்கிறது. முற்றுப்பெறாத அன்பின் வடிவம். கருணையின் சுனை. இரக்கத்தின் பேரூற்று. அது வழியாகவே மெய்யன்பர்கள் இறைநேசத்தில் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறார்கள். வைரம் இங்கே ‘இறைநேசத்தில் மெல்ல மெல்ல இறுகிப்போதலை’ குறிக்கிறது. குன்றாத உறுதியும் அழியாப்பற்றும் சுட்டுகிறது.
‘மெளனமே இறைவனின் மொழி
மற்றதெல்லாம் தவறான மொழிப்பெயர்ப்புகளே’
சரியான சூழல் அமைந்தால், ஒரு மரத்துண்டு கல்லாக மாறிவிடும். சில சமயங்களில் மரம் புதைந்து கரியாகி, அந்தக்கரி அழுத்தம், வெப்பம் காரணமாக பல லட்சம் ஆண்டுகள் கழித்து வைரமாகவும் மாறும். மண்ணுக்குள் ஆழமாய் புதைந்த நிலக்கரி, தவத்தின் விளைவாய் வைரமாகிவிட்ட பல பரிணாமங்களையும். குணாதிசயங்களை ஒவ்வொரு கவிதையும் பிரதிபலிக்கின்றன. வைரத்தின் மெளனம், ஒளி, பொறுமை, வலி, தேடல் என ஒரு கெலடோஸ்கோப்பின் வழி உடைந்த வளையல்துண்டுகளின் காட்சிகளாக விரிகின்றன.
‘உன் உள்ளத்தில் ஒளி இருந்தால்
வீடடையும் வழி அறிவாய்’
‘ஒவ்வொரு வீட்டிற்கும் சாளரம் ஆவாய் நீ’
சாளரத்தை பற்றி பேசிவிட்டு, ஓரிடத்தில் இதயத்திலிருந்து மற்றொரு இதயத்திற்கான தெய்வீக பரிபாஷை இது, இதற்கு நடுவில் கதவுகள் எதற்கு சுவரில்லாத இதயத்தில் என்று மனதின் ஆழ்திறப்புகளை நோக்கி ,
‘என்னிடம் வா
உயிரின் ஆழங்களுக்கு அழைத்து
செல்கிறேன்’
என கொக்கிப்போட்டு இழுக்கிறது.
பக்தாத் நகரவீதியில் பல வண்ணமயமான கடைகள் இருக்கின்றன. சர்பத்கள், இனிப்பு பண்டங்கள், பழக்கூடைகள் என சந்தைக்குள் நுழைந்து விதவிதமான கடைகளை கடந்து செல்கிறார்கள் முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி. ஒரு கடையின் மீது மட்டும் அவர்களுக்கு தீரா ஈர்ப்பு. எல்லா இனிப்பு பண்டங்களிலும் பானங்களிலும் ஈக்கள் மொய்த்தாலும் அந்த கடையின் சர்பத் போத்தல்களில் மட்டும் ஈக்கள் இல்லை. கடை உரிமையாளரிடம் ஏன் உங்கள் பானத்தை மட்டும் ஈக்கள் மொய்ப்பதில்லை என கேட்கிறார்கள்
‘தீயை ஈக்கள் மொய்ப்பதில்லை’ என்கிறார்கள் உரிமையாளர் ஹஜ்ரத் ஹம்மாத். பின்னாளில் முகையதீன் அப்துல் காதிர் ஜீலானி பெருந்தகைக்கு ஞானகுருவாகவும் அவர் திகழ்ந்தார்கள்.
மெய்மையான உயிரின் ஆழங்களுக்கு அழைத்து செல்ல இப்படித்தான் சம்பவங்கள் தோற்றுவாயாக அமைந்துவிடும்.
‘நன்மையும் தீமைகளுக்கும்
அப்பால்
உள்ளது ஒரு வெளி’
ஹஜ்ரத் ராபியா பசரியா ஒரு கையில் வாளிதண்ணீரை எடுத்துக்கொண்டு பசரா நகரில் திரிகிறார்கள். பொதுமக்கள் அவர்களிடம் கேட்டார்கள்.
‘கையில் வாளியோடு எங்கே செல்கிறீர்கள்? ‘
‘நரகத்தை அணைக்கத்தான். மனிதர்கள் நரகத்திற்கு பயந்து இறைவனை வணங்குகிறார்கள்’ என கூறினார்கள். ‘வேறு எதற்காக மனிதர்கள் இறைவனை வணங்கவேண்டும் ?
‘வணக்கம், உண்மையான நேசத்தின் விளைவால் அல்லவா இருக்க வேண்டும்’ என்றார்கள்.
‘இறைக்காதலுக்கு வெளியே ஒவ்வொரு காதலும் துன்பமே’
‘வாழ்வின் சாரத்தை எடுத்துக்கொண்டேன்
மற்றவர்களுக்கு எலும்புத்துண்டுகளை எறிந்துவிட்டேன்’
எனும் கவிதை, சூஃபியாக்களின் மைய பேசு பொருளை குறிப்பிடுகிறது. இதையே அஜ்மீர் க்வாஜா மொய்னுதீன் ஷிஸ்தி இப்படி குறிப்பிடுகிறார்கள்.
‘எல்லோரிடத்திலும் அன்பு
யாரிடத்திலும் பகை இல்லை ‘
வெகுநாட்கள் கழித்து, தனது ஞானகுரு டில்லி நிஜாமுத்தீன் மகபூபே இலாஹியை aமீர் குஸ்ரோ சந்திக்கிறார்கள். நிஜாமுத்தீன் அமர்ந்திருக்கும் குதிரையின் குளம்பில் நேசத்தோடு மாறி மாறி முத்தமிடுகிறார் அமீர் குஸ்ரோ.
‘எழுந்திரு ! உன் காதல் முழுமையடைந்துவிட்டது
உன்னை பொருந்திக்கொண்டேன்’ என்கிறார்கள் நிஜாமுத்தீன் மகபூபே இலாஹி.
நன்றி
முகம்மது ரியாஸ்