விக்ரமாதித்யனின் ஆன்மிகம் – போகன்

விக்கிரமாதித்தியன் கவிதைகள் பற்றி ஜெயமோகன் எழுதிக்கொண்டிருக்கும் கட்டுரைகளைப் படித்தேன்.முதலிரண்டு பகுதிகளும் கூர்மையானவை.மூன்றாவது பகுதியில் எனக்குச் சில கருத்து வேறுபாடுகள் உண்டு.இதில் அவர் விக்கிரமாதித்தியன் கவிதைகள் ஆன்மீகமற்ற தூய அழகியலைக் கொண்டவை என்கிறார்.அதே கட்டுரையிலேயே பின்பகுதியில் அவர் எழுதியிருப்பதுடன் முரண்படும் அவதானம் இது.ஒப்பிட வண்ணதாசனின் கவிதைகளே ஆன்மீகமற்ற தூய அழகியலைக் கொண்டவை.தற்காலத்தில் இது திருச்செந்தாழை.

விக்கிரமாதித்தியன் கவிதைகளில் அவர் பிறந்த சைவ வேளாள சமூகத்தின் அத்தனை தொன்மங்களும் மனச் சுழல்களும் உள்ளன.கோவில் கோவிலாகச் சுற்றுவது,ஜோதிட ஆர்வம்,சக்தி வழிபாடு,சித்தர் வழிபாடு,திராவிடம் பற்றிய இருதலையான நோக்கு,மெலிதான வைஷ்ணவ வெறுப்பு,காசியின் மீதான பிரமிப்பு எல்லாமே அவரது சைவ வெள்ளாள ஆன்மீகத்திலிருந்து வருகிறவையே.அவர் கவிதைகளிலும் இது தொட்டுத் தொட்டு வந்துகொண்டே இருக்கிறது.உலகம் எப்போதும் எரிந்துகொண்டே இருக்கும் மிகப்பெரிய சுடலைமயானம் என்பது அவர் கவிதைகளிலிருந்து நமக்கு கிடைக்கும் சித்திரம்.இந்த தொனியை ஒட்டிய நிறைய கவிதைகளைத் திரு மந்திரத்தில் காணலாம்.

அவரது தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்கள் அவரது சைவ சித்தாந்த பின்புலம் தரும் இந்த ஆன்மீக தத்துவ தரிசனத்தை இன்னும் கெட்டிப்படுத்தின என்றே தோன்றுகிறது.ஒரு வீழ்ந்துபட்ட வீட்டின் சமூகத்தின் விட்டேற்றியான பார்வையும் பரிகாரங்கள் மூலம் கண்ணுக்குத் தெரியாத பெரிய சக்திகளைப் ப்ரீதிப்படுத்திக் கொண்டே இருக்கும் வாழ்வு குறித்து மிகப்பெரிய அச்ச நோக்கும் அவர் கவிதைகளில் மாறி மாறி வந்துகொண்டே இருக்கின்றன.இந்த இரட்டை நிலையை தமிழில் இப்போது லட்சுமி மணிவண்ணன் மட்டும் அவ்வப்போது எடுத்தாள்வதுண்டு.

விக்கிரமாதித்யன் menial jobs எனப்படும் வேலைகள் நிறைய செய்திருக்கிறார்.ஹோட்டல்களில் சர்வராக வேலை பார்த்திருக்கிறார்.நிரந்தரமான வேலை ஒன்று இல்லை.எப்போதும் பணத்துக்காக இன்னொருவரை எதிர்பார்க்கவேண்டிய நிலையில் இருந்திருக்கிறார்.இது பற்றிய நன்றி,கசப்பு இரண்டுமே அவர் கவிதைகளில் உண்டு. உணவு,குடி பற்றியே அவர் அதிகம் எழுதியிருப்பதற்கு இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இது நிச்சயமாக உண்டு குடி களி கொண்டாடு என்று சாரு நிவேதிதா போன்றவர்கள் சொல்லும் epicureanism அல்ல.’சோற்றைப் பழிக்காதே.அது அடுத்தவேளை வருமா தெரியாது’என்கிற மன நிலையிலிருந்து வருவது.

விக்கிரமாதித்யனால் புதுமைப்பித்தன் போல முற்றிலும் புத்திக்கூர்மையால் தனது கலாச்சார வேர்களிலிருந்து அதன் முட்டுச் சந்துகளிலிருந்து விலக முடியவில்லை. அதற்கு அவர் முயலவும் இல்லை.அதுக்கென்ன செய்றது அது அப்படித்தான் இருக்கிறது என்பது போன்ற தொனி இதுகுறித்து அவர் கவிதைகளில் உண்டு.இதிலிருந்து தப்பிக்க அவர் வண்ண தாசன் போல அழகியலுக்குள் செல்லவில்லை. கலாப்ரியா போல திராவிடத்துக்குள் ஒதுங்கவில்லை.தனக்கு மிக அருகே இருந்த வாழ்க்கையை மட்டுமே எழுதியவர் அவர்.அவர் இன்னமும் ஒரு ஜோதிடராக சித்தராக முயன்றுகொண்டே இருக்கிறார்.பெரும்பாலான சைவ வேளாள ஆண்கள் பிறவி ஈடேற்றம் என்று நினைப்பது இது.இந்தப் பிரயாணத்தை ஒளிவு மறைவின்றி விக்கிரமாதித்யன் தன் கவிதைகளில் பதிவு செய்திருக்கிறார்.

ஒரு குமாஸ்தாவால் கவிஞனாக முடியாது என்பது விக்கிரமாதித்தியனின் புகழ்பெற்ற வாக்கியம்.குமாஸ்தாவால் ஒரு ஆன்மீகவாதியாக சாதுவாக பண்டாரமாகவும் ஆகமுடியாது.ஆகவே கவிஞனும் சன்னியாசியும் ஒருவரே என்று விக்கிரமாதியன் கருதுவது அவர் கவிதைகளில் தென்படுகிறது.

அதே நேரம் அன்றாடத்தால் சதா நைந்துகொண்டே இருக்கும் கவி மனதிலிருந்து தப்பிக்கவே அவர் குடியையும் ஆன்மீகத்தையும் மாறி மாறித் தேடிப்போகிறார் என்பதை உணரலாம்.ஒருவேளை இதையே ஜெயமோகன் ஆன்மீகமற்ற அழகியல் என்று சொல்கிறாரா தெரியவில்லை.விக்கிரமாதித்தியன் கவிதைகளில் தத்துவத் தேட்டம் பற்றிய பாசாங்குகள் இல்லை.அவருடைய ஆன்மீகம் சங்கரரின் ஆன்மீகமோ புத்தனின் ஆன்மீகமோ அல்ல.மனதில் எப்போதும் ஏதோ ஒரு வேண்டுதலோடு பழனிக்குப் பாத யாத்திரை செய்கிறவர்களின் ஆன்மீகம்.

ஆனால் ஒரு கவிஞன் வணிகம் செய்யலாம்.ஆன்மீகத்துக்குள் போகலாம்.ஜோதிடம் கற்கலாம்.அரசியலுக்குள் போகலாம்.ஒன்றுக்கு மூன்று கட்டி குடும்ப சாகரத்தில் குதிக்கலாம்.ஆனால் ஒருபோதும் அவனால் ஒரு முழுமையான குடும்பியாகவோ வியாபாரியாகவோ அரசியல்வாதியாகவோ ஜோதிடனாகவோ ஆன்மீகவாதியாகவோ மாறமுடியாது.அவன் எங்கும் தனது poetic sensibility எனப்படும் கவி நுண்ணுணர்வு முள் படுக்கையில் குத்திக்கொண்டே இருக்கும் அன்னியனாய்த் தான் இருப்பான் ஒரு கவிஞனாய்த்தான் எஞ்சுவான் என்பதே விக்கிரமாதியன் கவிதைகளிலிருந்து வாழ்விலிருந்து நாம் பெற்றுக்கொள்கிற பார்வை.

ஒருவகையில் கவிஞனின் துறவும் ஞானமும் ஆன்மீகமும் அவன் பெறக்கூடிய பெறவேண்டிய இறுதித் தரிசனமும் அதுவே.

 

போகன் சங்கர்

 

போகனின் மேற்குறிப்பிட்ட பகுதியை ஒட்டி என் தரப்பை விளக்க விரும்புகிறேன். நான் ஆன்மிகம் என்பது முழுமைநோக்கு. இவ்வுலக வாழ்க்கையை பிரபஞ்சதரினம் ஒன்றின் பகுதியாக ஆக்கும் பார்வை. உலகியல் கடந்த ஒரு நகர்வு. அதை அக்கட்டுரைக்குள் வரையறை செய்திருக்கிறேன்.

விக்ரமாதித்யனின் பக்தி- சோதிடம் போன்றவை முழுக்க முழுக்க உலகியல் சார்ந்தவை. உலகியல் வாழ்க்கையின் சிடுக்குகளுக்கான தீர்வு அல்லத்து பதில் என அவர் கண்டடைபவை அவை. அக்கட்டுரையிலேயே குறிப்பிட்டபடி அவர் தேடுவது ஓர் தெய்வீகக் குடும்பத்தை மட்டுமே.

எப்படியென்றாலும் கவிதைபற்றிய எல்லா பார்வைகளும் சரியானவையே. இப்படி அவர் கவிதைகளை இருகோணத்திலும் பார்ப்பதும் நன்றே

ஜெ

 

 

முந்தைய கட்டுரைதன்னைக் கடத்தல்
அடுத்த கட்டுரைஒழுகிச்சென்ற ஒரு வாரம்