நான் எழுத்தாளர் டாப்னியுடன் இரவுவிருந்துக்குச் சென்றபோதுதான் பாட்டியை சந்திக்க நேர்ந்தது. கூடவே எங்கள் நண்பர் லயனலும் வந்திருந்தார். இல்லத்தலைவரான மூத்தசீமாட்டியைச் சந்தித்தது எனக்கும் மகிழ்ச்சியாகவே இருந்தது. அறிமுகம்செய்து வைத்தேன்.
”நீங்கள் ஒரு எழுத்தாளர் என்று கேள்விப்பட்டேன்” திருமதி வேய்ன் சொன்னாள் ”எனக்கு எப்போதுமே இலக்கியவாதிகளைப் பிடிக்கும். பல வருடங்களுக்கு முன்பு நான் மிஸ்டர் தாக்கரேயையும் மிஸ்டர் டிக்கன்ஸையும் சந்தித்திருக்கிறேன்…” அது பாட்டி தன் பேச்சைத்தொடங்கும் முறையாக இருக்கலாமென்று எண்ணிக்கொண்டேன்.
எழுத்தாளர் டாப்னே தன் ஆர்வத்தை வெளிக்காட்டினார்.கிழவி சொன்னாள். ”அவர்கள் எழுதிய புத்தகங்கள் மாதிரி இப்போதெல்லாம் யார் எழுதுகிறார்கள்? உங்களை மாதிரி ஆட்கள் எல்லாம் என்ன எழுதுகிறீர்கள் என்று தெரியாது… ஏனென்றால் நான் இப்போது எதையும் படிப்பதே இல்லை. ஆனால் தாக்கரேக்கும் டிக்கன்ஸ¤க்கும் நிகராக யாருமே இப்போது எழுதுவதில்லை…”
எழுத்தாளர் டாப்னே ஏதோ சொல்ல முனைந்தார். அவருக்கு ஒப்பீடுகள் பிடிக்காது. ஆனால் பாட்டி பேசிக்கொண்டே சென்றாள் ”தனிப்பட்டமுறையில் எனக்கு டிக்கன்ஸைத்தான் பிடிக்கும். காரணம் என் அப்பா இரவுணவுக்குப் பின்பு டிக்கன்ஸைத்தான் எங்களுக்குப் படித்துக்காட்டுவார். அவர் மிகச்சிறப்பாக படிப்பார்….அதன்பின் நான் ஒன்றுமே படித்துப்பார்க்கவில்லை…” பாட்டி பெருமூச்சுவிட்டள் ”இப்போதெல்லாம் அம்மாதிரி குடும்பச்சூழலே இல்லையே”
”ஆமாம்”என்று எழுத்தாளர் டாப்னே உள்ளே புகுந்துவிட்டார் . அவருக்கு எங்கும் தன் கருத்தைச்சொல்வதில்தான் ஆர்வம், எல்லா எழுத்தாளர்களையும்போல. ”…இப்போது எல்லாமே மாறிவிட்டது. இரவு வாழ்க்கை ஓங்கிவருகிறது….இப்போது நகரத்தில் எத்தனை இசைவிடுதிகள் இருக்கின்றன என்று பார்த்தோமென்றால்….” ஆனால் பாட்டி ஒரே சொற்றொடரில் அந்த வாசலை மூடினாள் ”நான் பார்த்ததில்லை” இங்கே கவனிப்பாளனாக இருப்பதுதான் உசிதமோ என்ற எண்ணத்துக்கு எழுத்தாளர் டாப்னே மெல்ல ஆளானார் என்று பட்டது.
பாட்டி உற்சாகமானாள். ”ஆ டிக்கன்ஸ்! மிஸ்டர் டாப்னே உங்களுக்கு தெரியுமோ என்னவோ நான் மிஸ்டர் டிக்கன்ஸ் மிஸ்டர் தாக்கரே இருவரையும் நேரில் பார்த்திருக்கிறேன், பேசியிருக்கிறேன்.எனக்கு இலக்கியவாதிகளை பொதுவாகப் பிடிக்கும். என் மறைந்த கணவர் தொழில்விஷயமாக மாஞ்செஸ்டருக்குப் போனபோது நாங்கள் தங்கியிருந்த அதே ஓட்டலில்தான் மிஸ்டர் டிக்கன்ஸ் தங்கியிருந்தார். ரெஸ்டாரெண்டில் மிஸ்டர் டிக்கன்ஸ் நான் இருந்த மேஜைக்கு மிக அருகே இருந்து சாப்பிட்டார். டோஸ்ட் நன்றாகவே இல்லை. மிஸ்டர் டிக்கன்ஸ் அதை அவருக்கே உரித்தான இலக்கிய நயத்துடன் மரத்தூளுடன் ஒப்பிட்டுப்பேசினார். நல்ல உவமை அது…அப்புறம் அவர் பரிமாறுபவனுக்கு நல்ல தொகையை டிப்ஸாக கொடுத்தார். அப்படிபப்ட்டவர்களை என் கணவர் அள்ளித்தெளிப்பவன் என்று அழகாகச் சொல்வார். அப்போதும் சொன்னார். அப்போது டிக்கன்ஸ் பரிமாறுபவனிடம் என்ன சொன்னாரென்றால்…ஆ, மிக அருமையான ஒரு வார்த்தை…என்ன அது? ‘இதோ–‘ பார்த்தீர்களா, என்ன அருமையான வார்த்தை. அதைப்போய் மறந்துவிட்டேன்”
”பரவாயில்லை” என்றார் எழுத்தாளர் டாப்னே பெருந்தன்மையாக. ”ஆனால் அது அப்படிபப்ட்ட ஒரு வார்த்தை. மிக அருமையானது” என்று கிழவி கன்னத்தில் கையை வைத்து சிந்தித்தாள் ”நான் உன்னிடம் அதைப்பற்றி சொல்லியிருக்கிறேனா?” என்று தன் மகனிடம் கேட்டாள். ”ஆமாம் அம்மா எத்தனையோ தடவை…”என்றார் அவர் அன்புடன். ”நீ அப்பாவைப்பற்றி நிறையச் சொல்லியிருக்கிறாய்…அப்பா அந்தநாளிலே…”
உடனே தலையிட்டு பேச்சை நெடுநாள் பயிற்சியின் விளைவான துல்லியத்துடன் பேத்தி நவோமி நகர்த்திக்கோண்டுபோனார். ஒன்றும்புரியாமல் பாட்டி ஒரு ஸ்தாவரப்பொருளாக மாறி வேடிக்கை பார்த்தபோது எழுத்தாளர் டாப்னே தானாகவே சென்று மாட்டிக்கோண்டார். ”அப்படியானால் தாக்கரே?”என்றார் அவர். பாட்டி உயிர்த்தெழுந்தாள்.
”அது இன்னும் சில வருடங்களுக்கு முன்பு… நாங்கள் ஒரு சொற்பொழிவைக்கேட்கப்போயிருந்தோம். மிஸ்டர் வெய்னும் நானும். கிளம்பும்போதுதான் அந்த பெரியமனிதர் வந்தார். அவரது எழுத்தைப்பற்றி நீங்கள் என்ன சொன்னாலும் அவர் நேரில் பார்த்தால் அபப்டித்தான். என்ன சொன்னேன். மிஸ்டர் தாக்கரே வந்தார். கோட்டை மாட்டியிருந்த இடத்தில் ஒரு சிறு குழப்பம். மிஸ்டர் தாக்கரே என் கோட்டை அவருடையது என்று எடுத்துக்கோண்டுவிட்டார். வெளியே மழை. என் கணவர் பண்பானவர். ஆகவே வைத்துக்கொள்ளுங்கள் தாக்கரே என்று சொல்லிவிட்டார். ஆனால் மிஸ்டர் தாக்கரே பணிவாக ‘இல்லை எனக்கு வேறு ஒன்று இருக்குமே…’ என்றார். எவ்வளவு அழகான சொற்றொடர், இல்லையா?”
எழுத்தாளர் டாப்னே தக்கபடி தலையாட்டினார். நவோமி பேச்சை கடத்திக்கொண்டு சென்றாள். எழுத்தாளர் டாப்னேக்கும் பேச வாய்ப்பு கிடைத்தது. எழுத்தாளராகையால் அவர் பொன்மொழியை சொன்னார் ”திருமணத்தில் உள்ள சிக்கல் என்னவென்றால் பெண்கள் எல்லாம் உள்ளூர அன்னையர். ஆண்கள் உள்ளூர காதலர்கள்”
”என்ன அது?” என்றாள் திருமதி வேய்ன். ”அது ஒன்றுமில்லை அம்மா, பொன்மொழி” என்றார் மகன்.. ”இல்லை அது எனக்கு புரியவில்லை” என்றாள் பாட்டி ”ஒன்றுமே இல்லை அம்மா…சும்மா ஏதோ சொல்கிறார்…நீ சாப்பிடு”
”எனக்கு திருமணங்களைப்பற்றி பேசும் கிண்டல்கள் பிடிப்பதில்லை. அந்தக்காலத்தில் நாங்களெல்லாம் சின்னவயசிலேயே திருமணம் செய்துகொண்டோம். சந்தோஷமாக இருந்தோம். ஏனென்றால் நாங்கள் அதைப்பற்றி யோசிப்பதில்லை. இப்போது எங்கே பார்த்தாலும் ஒத்துப்போகாத தம்பதிகளைப் பற்றி கதை எழுதுகிறார்கள். நீங்கள் அப்படிபப்ட்ட எழுத்தாளர் இல்லை என்று நினைக்கிறேன்”
”இல்லை”என்றார் எழுத்தாளர் டாப்னே ”நான் புத்தகங்கள் எழுதுவதில்லை”. ”பின்னே?” என்றாள் பாட்டி ”அம்மா அவர் ஒரு எடிட்டர்…ஒரு இதழை நடத்துகிறார்” ”நான் எந்த இதழையும் பார்ப்பதில்லை”என்றாள் பாட்டி கறாராக. ”எல்லாமே கெட்டுக்குட்டிச்சுவராக இருக்கிறது. அபத்தமான செய்திகள்…நீங்கள் அம்மாதிரி அபத்தமான செய்திகளை எழுதுவதில்லை இல்லையா?” ”இல்லை இல்லை”என்று எழுத்தாளர் டாப்னே பதறினார்
”எனக்கு இலக்கியவாதிகளைப் பிடிக்கும்….நான் மிஸ்டர் டிக்கன்ஸ், மிஸ்டர் தாக்கரே இருவரையும் பார்த்திருக்கிறேன்… தெரியுமா? ரொம்ப சுவாரஸியமான விஷயம்…” சாப்பாடுச்சபை கொஞ்சம் அதிர்ந்தது என்று பட்டது. எழுத்தாளர் டாப்னே சிலிர்த்துக்கொண்டார்.
”மிஸ்டர் டிக்கன்சை நான் மான்செஸ்டரில் ஒரு ஓட்டலில்தான் பார்த்தேன். அப்போது என் அருமைக்கணவரும் இருந்தார். ரெஸ்டாரெண்டில் நாங்கள் சாப்பிடுக்கொண்டிருக்கும்போது மிக அருகே மிஸ்டர் டிக்கன்ஸ் அமர்ந்திருந்தார். டோஸ்ட் நன்றாகவே இல்லை. அப்போது மிஸ்டர் டிக்கன்ஸ் மிக அருமையான ஒரு உவமையைச் சொன்னார். டோஸ்ட் மரத்தூள் போல இருக்கிறது என்று…என்ன ஒரு அருமையான வரி இல்லையா? ஹா ஹா ஹா…அதன் பின் அவர் பரிசாரகனுக்கு நன்றாகவே டிப்ஸ் கொடுத்தார்…. என் கணவர் அப்படிபப்ட்டவர்களை அள்ளிவீசுபவர் என்றுதான் சொல்வார். அப்போது டிக்கன்ஸ் சொன்ன ஒரு வார்த்தை இருக்கிறதே…”இதோ இந்த…” அருமையான ஒரு வார்த்தை…பார்த்தீர்களா, மறந்துவிட்டேன்”
எழுத்தாளர் டாப்னேயின் நெற்றியில் கொஞ்சம் வியர்வை மின்னுவதை நான் கண்டேன். நடுங்கும் விரல்களால் அவர் ஒரு ஸ்பூனை ஒடிக்க முயன்றார்
”பாட்டீ ”என்றார் என்று நவோமி உள்ளே புகுந்தாள் ”உங்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியம் வரப்போகிறது…. அடுத்ததாக ஸ்டிராபெர்ரி ஒயின்!!!” ”இத்தனை சீக்கிரமாகவா?”என்று பாட்டி வியந்தாள். ”நல்லது நாம் சாப்பிடுவோம்….” எழுத்தாளர் டாப்னே ஸ்பூனை கீழே வைத்தார்
பாட்டி கொஞ்சம் சப்பிவிட்டு ”சந்தேகமில்லாமல் இது மிகச்சிறப்பாக இருக்கிறது…”என்றாள். ” கடவுள் இதைவிட நல்ல பெர்ரியை உருவாக்க முடியும், செய்யவில்லை– நல்ல பொன்மொழி. யார் சொன்னது? எங்கள் அப்பா அடிக்கடிச் சொல்வார்…யார் சொன்னது? ” பாட்டி சட்டென்று எழுத்தாளர் டாப்னேயை பார்த்து ”நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்” என்றார்
”நான் ஒரு பத்திரிகை…” எழுத்தாளர் டாப்னே தவறு செய்துவிட்டார். பாட்டி ”ஆ! எனக்கு இலக்கியவாதிகளைப் பிடிக்கும்…” என்றாள் ”பாருங்கள் பேச்சு சுவாரசியத்தில் முக்கியமான விஷயத்தைச் சொல்ல மறந்தேபோனேன். நான் மிஸ்டர் டிக்கன்ஸ், மிஸ்டர் தாக்கரே இருவரையும் நேரில் சந்தித்திருக்கிறேன்…பேசியிருக்கிறேன். உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும்…” பாட்டி உற்சாகமானாள். எழுத்தாளர் டாப்னே ஸ்பூனை மீண்டும் எடுத்தார்.
”தாக்கரே என்னிடம் சொன்னார், ‘இல்லை எனக்கு வேறு ஒன்று இருக்குமே…’ என்னுடைய கோட்டை அவருடையது என்று நினைத்துக்கொண்டார். மழை பெய்துகொண்டிருந்தது….. ” பாட்டி விரிவாகப்பேசினாள்
எழுத்தாளர் டாப்னே பெருமூச்சுவிட்டார்.பாட்டி சொல்லிக்கொண்டே சென்றாள்”மிஸ்டர் தாக்கரே அருமையாகச் சொன்னார். ‘இல்லை எனக்கு வேறு ஒன்று இருக்குமே…’ அதேபோல டிக்கன்ஸையும் நான் நேரில் பார்த்திருக்கிறேன். அறுபதுகளில் மாஞ்செடரில் ஒரு ஓட்டலில்…ரெஸ்டாரெண்டிலே எனக்கு பக்கத்து இருக்கை அவருக்கு…” பாட்டி தொடர்ந்தாள்.
நவோமி ” அது பிஷப் பட்லர் சொன்னது பாட்டி”என்று நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தாள். ”ஆ! ” என்றாள் திருமதி வேய்ன்” மேற்கொண்டு பழங்கள் பழத்தோட்டங்கள் ஒயின்கள் பற்றி பேச ஆரம்பித்தாள். எல்லாமே சுமுகமடைந்தன. அறைக்குள் கொஞ்சம் காற்று வந்தது போல இருந்தது. எழுத்தாளர் டாப்னே கைக்குட்டையால் நெற்றியை ஒற்றியபின் சாப்பிட ஆரம்பித்தார்
எங்கள் நண்பர் லயனல் எந்த அளவுக்கு குரூரமானவர் என்பதை அப்போதுதான் புரிந்துகொண்டோம். அவர் கேட்டார், ” இல்லை பாட்டி, நீங்கள் ஏதாவது எழுத்தாளர்களை நேரில் சந்திருக்கிறீர்களா?”
**
முழுக்கோடு ஒய்.எம்.ஸி. ஏ முப்பது வருடம் முன்பு மிகமிக முக்கியமான ஒரு சமூகப்பணி நிறுவனம். அங்கே ஒரு நூலகம். அதில் நான் உறுப்பினராகி நிறைய புத்தகங்களை வாசித்துத்தள்ளிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் தூசு மண்டிய பழைய அடுக்கில் தோல் அட்டைபோட்ட சிறிய புத்தகங்களின் அடுக்கு ஒன்றை கண்டேன். அது அங்கே தங்கியிருந்த ஏதோ வெள்ளையரின் சொந்த நூல்சேமிப்பு. அதில் இருந்த பல எழுத்தாளர்களை கேள்விப்பட்டதே இல்லை. அதில் ஒருவர் இ.வி.லூக்காஸ். அவரது நாலைந்து நாவல்களை நான் படித்தேன். அதில் ஒன்றுதான் Over Bemerton’s.
நான் அப்போது வாசித்த இந்த பதினெட்டாம் நூற்றாண்டு எழுத்துக்கள் என் ஆங்கில அறிவை விருத்திசெய்வதற்கன்றி வேறெதற்கும் பயன்படவில்லை என்றுதான் எண்ணியிருந்தேன். இளமையில் புதிய எழுத்து, மேலும் புதிய எழுத்து என்றுதான் மனம் குதிக்கிறது. இப்போது ஏனோ இவர்களெல்லாம் நினைவில் வந்துகொண்டிருக்கிறார்கள்.
இப்போது இந்தவகை எழுத்து எனக்கு எதை அளித்தது என்று எண்ணிப்பார்க்கிறேன். மொழியை மிக நுட்பமாகவும் அடக்கமாகவும் பயன்படுத்துவதே இலக்கியம் என்றும், நகைச்சுவை அப்போதுதான் சரியாக அமையும் என்றும் இவை சின்னவயதிலேயே எனக்குக் கற்பித்தன. ஆகவே கல்கி பாணி நகைச்சுவைக்கு என் மனம் திரும்பவேயில்லை. இறுக்கம் இல்லாத ஆர்.கெ.நாராயணனின் எழுத்தும் பெரிதாகப்படவில்லை. இரண்டாவதாக, மேலான நகைச்சுவை என்பது மனித இயல்புகளை அவதானிப்பதன்மூலமே வந்துவிடுமென்ற புரிதல்.
1841 முதல் 1992 வரை, பின்னர் 1996 முதல் 2002 வரை லண்டனில் இருந்து வெளிவந்த நகைச்சுவை– விமரிசன இதழான பஞ்ச் உலக இலக்கியத்துக்கு ஆற்றிய பங்களிப்பு என்பது சாதாரண விஷயமே அல்ல.ஹென்றி மாத்யூ என்பவரால் நகைச்சுவைக்கும் கேலிச்சித்திரத்துக்காக தொடங்கிய இவ்விதழ் உலக இதழியலுக்கு ஒரு பெரும் அடிப்படைக் களஞ்சியம். அதன் இலக்கியப் பங்களிப்பை இதனால் பலரும் உணர்வதில்லை. பெரும்பாலான பஞ்ச் எழுத்துக்கள் வெறுமே ‘விருந்துமேஜை நகைச்சுவை’ வகைபப்ட்டவை என்பது உண்மை. ஆனால் மொழியை நுட்பமாக ஆக்கி நவீன உரைநடை உருவாக்கத்துக்கு அவை பெரும் பங்காற்றின. கேலிச்சித்திரம் என்னும் கலையை உருவாக்கி உலகுக்கு அளித்தது பஞ்ச் தான்.
இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உலகம் முழுக்க உரைநடை இலக்கியமும் இதழியலும் உருவானபோது பஞ்ச் இதழின் பாதிப்பு அவற்றில் எல்லாம் இருந்தது. நம்முடைய ஆரம்பகால எழுத்தாளர்கள் எல்லாருமே அந்த எழுத்துக்களின் பாதிப்பு கொண்டவர்கள். பாரதி, புதுமைப்பித்தன் இருவரிலும் அந்தப்பாதிப்பு உண்டு. சின்னசங்கரன் கதை, ஞானரதம் போன்ற பாரதி ஆக்கங்கள் பஞ்ச் வகை எழுத்தே. பிரமராய வாத்தியாரின் இடிப்பள்ளிக்கூடம் அப்படியே பஞ்ச் பாணியில் உருவானது. புதுமைப்பித்தனின் திருக்குறள் குமரேசபிள்ளை போன்ற நடைச்சித்திரங்களும் அவரது வேடிக்கையான நூல்மதிப்புரைகளும் பஞ்ச் பாணி கொண்டவை.
பின்னர் கல்கி,தேவன்,சாவி போன்றவர்களால் அந்த பாணி எளிமையாக்கப்பட்டு மேலெடுக்கப்பட்டது. ஆனந்த விகடன் பஞ்ச் இதழை போலிசெய்து உருவாக்கப்பட்ட இதழ்தான். பஞ்ச் பாணியில் எழுதிய நாடோடி, மேதாவி, துமிலன், புனிதன், ரா.கி.ரங்கராஜன் போன்ற பல எழுத்தாளர்கள் நம்மிடையே இருந்தார்கள்.
பஞ்ச் பாணி எழுத்துக்கு மிகச்சிறந்த உதாரணங்களில் ஒன்று இ.வி.லூகாஸின் இந்தக்கதை. இது அவரது Over Bemerton’s. நாவலின் ஒரு அத்தியாயம். தனிச்சிறுகதையாக பின்னாளில் பிரசுரமாகியது. எட்வர்டு வெரல் லூகாஸ் [ Edward Verrall Lucas] 1868 ஜூன் 26 ல் இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் எல்தாம் ஊரில் பிறந்தவர். 1938 ஜூன் 26 அன்று லண்டனில் மறைந்தார். அவரது நடைதான் அவரை சிறந்த நகைச்சுவையாளராக புகழ்பெறச்செய்த்தது. அடக்கமான பிரிட்டிஷ் நகைச்சுவைக்கு மிகச்சிறந்த உதாரணம் அவர்.
லூகாஸ் எழுதிக்குவித்திருக்கிறார். கிட்டத்தட்ட நூறு நூல்கள். பத்து புனைபெயர்களில் விமரிசனங்கள், குறிப்புகள், மதிப்புரைகள் என்று எழுதிக்கொண்டே இருந்தார். அவர் இன்று அவரது அங்கதக்கட்டுரைகள் மற்றும் சார்லஸ் லாம்ப் பின் வாழ்க்கை வரலாறு ஆகியவற்றுக்காகவே அவர் நினைக்கப்படுகிறார். அடிப்படையில் அவர் இதளாளர். பஞ்ச் இதழில் பணியாற்றியிருக்கிறார். சண்டே டைம்ஸ் இதழில் ‘நாடோடியின் குறிப்புகள்’ என்ற தொடர் பத்தியை எழுதினார்.
இந்தக் கதையில் நான் கவனிக்கும் நுட்பம் ஒன்றுதான், பாட்டியை லூகாஸ் கேலிசெய்யவில்லை. வெறுமே சித்தரிக்கிறார். நகைச்சுவைக்கு அது போதும். ஏனென்றால் மனிதர்கள் மிகமிக வேடிக்கையானவர்கள். எல்லா மனிதர்களையும் காலம் கேலிச்சித்திரமாக ஆக்கிக்கொண்டேதான் இருக்கிறது.
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் பிப் 14 2009
http://en.wikipedia.org/wiki/E._V._Lucas
http://www.archive.org/details/speciallyselecte00lucauoft
http://en.wikipedia.org/wiki/Punch_(magazine)
http://www.punch.co.uk/historyofpunch.html
முந்தைய கதைகள்